ஆன்மீக நெறியில் எவ்விதம் வாழ வேண்டும் என்று ஓர் மகானிடம் கேட்ட கேள்விக்கு எச்சை இலையை போல் இருத்தல் வேண்டும் என்று கூறினார். அதன் அர்த்தம் என்ன?
சாதாரண நிலையில் அவரவர் சற்கர்மங்கள் (தினந்தோறும் செய்யும் செயல்கள்) செய்யும் காலங்களில் தீமை தரும் செயல்கள் எதுவென்றும் நலம் தரும் செயல்கள் எதுவென்றும் நன்கென உணர்ந்து செயல்படுதல் வேண்டும். ஏனெனில் இரண்டும் அதிகரிக்க முடிவினை (பிறவி இல்லாமை) காணாது என்கின்ற ஓர் விதியும் உண்டு. இது குடும்பஸ்தர் தொழில் செய்கின்றவர் அனைவருக்கும் பொருத்தமாகும். ஆகவே சிந்தித்து செயல்படுதல் வேண்டும். நலம் தரும் செயல்களில் ஈடுபடவேண்டும். ஆன்மீக பாதையில் முழுமையாக செல்வோர்க்கு அனைத்தும் இறைவன் வழி என விட்டுவிடுதல் வேண்டும். இதற்காகவே எச்சை இலையை கூறி விட்டார். எச்சை இலையானது காற்று அடித்தால் குப்பையில் செல்லும் வீதியில் செல்லும். ஏன் வீட்டுக்குள்ளும் பறந்து வரும். இந்நிலை போல் இருத்தல் வேண்டும். எங்கு இறைவன் உம்மை தள்ளுகிறானோ அந்நிலையை ஆனந்தத்துடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்பது மட்டும் இல்லாது அதுவும் இறைவனின் கருணை என எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக நிலையில் சூழ்நிலைகளோ இடங்களோ முக்கியத்துவம் அல்ல. பற்று அறுக்கப்படுகின்றது என்றால் எத்தலமும் (இடம்) இறைவன் தலமே. இந்நிலையும் இறைவன் அளித்ததே என ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். இருப்பினும் கலியுகத்தில் பெரும்பாலும் ஆன்மீக நாட்டம் நாடுவோர் அனைத்தும் வேண்டும். பின்பு இறைவனும் வேண்டும் என எண்ணுகின்றனர். அனைத்தும் என்பது இறைவன் அளித்ததே என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.