பெரிய பாவம் எது? ஏன்?

ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்து தங்களின் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை அடைய வழி காட்டுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள். ஒருவன் ஞானியிடம் சுவாமி நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு பரிகாரம் உண்டா? இந்த பிறவித் துன்பத்திலிருந்து விடுபட ஏதேனும் வழிகள் இருக்கிறதா? என்று வருத்தத்தோடு கேட்டான்.

அடுத்தவன் ஞானியிடம் நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள் சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். என்னை தண்டிக்கும் அளவுக்கு இவை ஒன்றும் பெரிய பாவங்கள் இல்லை. ஆகவே எனக்கு விரைவில் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபட வழி சொல்லுங்கள் என்று தான் தவறு செய்து விட்டோம் என்ற வருத்தம் கூட இல்லாமல் கேட்டான்.

ஞானி முதல் கேள்வி கேட்டவனிடம் நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கி வா என்றார். இரண்டாவது கேள்வி கேட்டவனிம் நீ போய் ஒரு கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா என்றார். இருவரும் அவ்வாறே செய்தனர். முதல் நபர் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான். இப்போது ஞானி இருவரிடமும் தாங்கள் இந்த கற்களை எங்கிருந்து கொண்டு வந்தீர்களோ சரியாக அந்த இடத்திலேயே திரும்பப் போட்டு விட்டு வாருங்கள் என்றார். முதல் நபர் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான். இரண்டாமவன் தயக்கத்துடன் இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்? என்று கேட்டான்.

ஞானி சொன்னார். இந்த காரியம் முடியாதல்லவா? அவன் பெரிய தவறு செய்தான். அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் கேட்டு வந்திருக்கிறான். கல்லை எடுத்த இடத்திலேயே போட்டு விட்டு வந்தது போல அதற்கான வழியை செய்து விரைவில் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபடுவான். நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. செய்த தவறை உணர்ந்து வருத்தப்பட்டு அந்த தவறுக்கும் மேலான நன்மைகளை செய்தால் மட்டுமே உனக்கு நன்மை நடக்கும். அதுவரை உனக்கு பிறவித் துன்பத்தில் இருந்து விடுதலை என்பது மிகவும் கடினம் என்றார்.

பஞ்ச விருட்ச பஞ்ச முக விநாயகர்

மருதமலை முருகன் கோயில் அருகில் ஒரே இடத்தில் வளர்ந்துள்ள அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என பஞ்ச விருட்ச பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கின்றார். இவரது ஐந்து முகங்களும் ஒரே வரிசையில் உள்ளது.

குருநாதர் கருத்துக்கள் #45

கேள்வி: குருவை எவ்விதம் அணுகுதல் வேண்டும்?

விசுவாசம் என்கின்ற நிலையில் அணுகுதல் வேண்டும். விசுவாசம் என்பதற்கு மறுபெயர் நம்பிக்கை. நம்பிக்கையானது பிரதானமாக எல்லாவித உறவிலும் எல்லா நிலையிலும் காண்கிறோம். நாளை நாம் இருக்கப் போகின்றோம் என்கின்ற நம்பிக்கையுடன் செயலாற்றுகின்றோம். நாளை நமக்கு எது வேண்டுமோ அது கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் செயல்படுகின்றோம். இவ்விமிருக்க நாம் நல்வழியில் சீடனாக அமைந்து நல்வழியில் நமக்கு குரு அருள் புரிவார் என்கின்ற நம்பிக்கையுடன் விசுவாசம் நிலைத்திட அனைத்தும் பெற்றிட இயலும். இரண்டாவதாக எண்ணம் போல் வாழ்க நாம் எவ்விதம் எண்ணுகின்றோமோ அவ்விதமே வாழ்வோம் எண்ணம் சிறிது பழுது பட்டு போனாலும் அவ்விதமே நமது வாழ்க்கையும் அமையும் என்பதை மறக்காமல் வாழுதல் வேண்டும்.

குருநாதர் கருத்துக்கள் #44

கேள்வி: வேள்விகள் என்பதெல்லாம் வெறும் செலவினம் தானே? அப்பொருள்கள் யாவும் நல்வழிக்கு உபயோகப் படுத்தலாமே?

வேள்விக்கு உபயோகிக்கும் பொருட்கள் வீணாவதில்லை. ஆண்டவனுக்கு நாம் கொடுக்கும் பொருட்கள் அனைத்தும் அவருக்கு எதுவும் தேவையில்லை என்கின்ற போதிலும் நாம் நமது திருப்திக்கென சிறிது அளிக்கின்றோம். உதாரணமாக ஒன்று கூறினால் விடை எளிதாக புரியும். விவசாயி ஒருவன் தானியங்களை விதைக்கும் காலத்தில் அது ஏன் தூவுகின்றான் அது வெறும் செலவு தானே மக்கள் பட்டினியாக இருக்க இவ்விதைகள் உதவுமே என எண்ணினால் அது தவறாகும். விதைகள் விதைத்தால் தான் உணவு உண்டாகும் என்பதை உணருதல் வேண்டும். இவ்விதமே நாம் சிறிதாக வேள்வியில் அளிக்கும் பொருட்கள் இறைவனின் அருள் பெறுவதற்கு உதவுகிறது. இத்தகைய அருளால் பல நன்மைகள் உண்டாகிறது. பெறும் நன்மைகள் உண்டாகின்றது. உதாரணமாக நல்ல மழை விளைவாக தானியங்கள் அமைதியின் விளைவாக பொருளாதார முன்னேற்றங்கள் என்பதெல்லாம் கிடைக்கக்கூடும். வேள்விக்கு உபயோகிக்கும் பொருட்கள் சிறிதே. கிடைக்கும் இறையருள் பெரிதே.

சரஸ்வதி தேவி

பத்மாசனத்தில் தலையில் கிரீடத்துடன் காதில் வட்டமான குண்டலங்களுடன் கழுத்து மார்பு தோள்பட்டை கைகள் மற்றும் கால்களில் அலங்கார அணிகலன்களுடன் அமர்ந்திருந்து அருள்பாலிக்கிறாள். இடம் கங்கைகொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டம்.

குருநாதர் கருத்துக்கள் #43

கேள்வி: இறைவன் மட்டும் தான் சத்தியம் (உண்மை) என்றும் மற்ற அனைத்தும் அசத்யம் அநித்யம் (உண்மை இல்லாதது) என்கின்றதை பெரியோர்கள் கூறியுள்ளனர். அவ்விதமிருக்க வேதங்களும் அநித்யம் அசத்யம் என்றும் எடுத்தல் வேண்டுமா?

வேதங்கள் இறைவனின் கீழ்நோக்கும் முகமான ஐந்தாம் முகத்திலிருந்து வெளிவந்தாக கருதப்படுகின்றது. தெய்வத்தின் வாக்கு தெய்வம் போல் என்றும் நித்யமாகவே இருக்கும் என்கின்றதால் வேதங்களும் நித்யமானதே. அசத்யமாக இருப்பதை வைத்து சத்யத்தை உணருதல் இயலும். இதற்கு உதாரணமாக தூக்கத்தில் கனவில் ஓர் காட்சி காண அதில் புலி ஒன்று நம்மை விரட்டுவதாக கண்டு கொண்டால் அந்நேரத்தில் அக்காட்சியானது முழுமையாக உண்மையாகவே தோற்றம் அளிக்கும். நமக்கு பயம் தோன்றி சட்டென்று எழுந்து ஒடத் தோன்றும். முழித்தால் அது கனவு என உணருவோம். இருப்பினும் அக்காலத்தில் நடைபெற்றது நமக்கு உண்மையாகவே தோன்றியது அல்லவா? இவ்விதம் இங்கிருக்கும் பொய்யான உலகத்தில் காணும் தோற்றங்கள் அனைத்தும் சட்டென்று நாம் முழிக்கும் போது இவையாவும் உண்மையல்ல உண்மையென்பது ஆண்டவன் ஒன்றே என்கின்ற ஓர் நிலை உண்டாகும். இருக்கும் போது அதுவே உண்மையாக தோன்றும் மறைந்த பின் இவையாவும் இல்லை என்றும் நித்யமானது இறைவன் ஒன்றே என நாம் கூறுவோம். இந்நிலையில் வேதங்கள் இறைவனின் வாக்கு என்கின்றதால் அதிலிருந்து நாம் கற்க வேண்டியதை அனைத்தும் கற்று இறைவனை அடைந்தால் பின்பு அது ஒன்றே சத்தியமாகிறது இதற்கே நமது முயற்சிகள் வேண்டும்.

ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி

பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடிக்கொண்டு அவரது தவத்தை விளையாட்டாக கலைத்தார். இதனால் உலகம் முழுவதும் இருளாக மாறியது மற்றும் உலகின் அனைத்து செயல்பாடுகளும் நின்றது. மிகவும் கோபமடைந்த சிவன் பார்வதிதேவியை பூமியில் பிறந்து மீண்டும் அடையும்படி சபித்தார். வேகவதி ஆற்றின் அருகே உள்ள ஒரு பழமையான மாமரத்தடியில் மணலில் ஒரு லிங்கம் அமைத்து சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி கடும் தவம் செய்து கொண்டிருந்தாள். அருகில் உள்ள வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிவலிங்கத்தை மூழ்கடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவனிடம் பக்தி கொண்ட பார்வதி தன் உயிரை விலையாகக் கொடுத்தும் லிங்கத்தைப் பாதுகாப்பதற்காகத் தழுவினாள். பார்வதியின் இந்த சைகை சிவபெருமானைத் தொட்டது. அவர் நேரில் வந்து அவளை மணந்தார். இடம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம்.

குருநாதர் கருத்துக்கள் #42

கேள்வி: மார்கழி மாதத்தில் நல்காரியங்கள் செய்யாதது ஏன்? அதனை ஏன் பீடை மாதம் என்று அழைக்கின்றனர்?

மார்கழி மாதமானது பீடை மாதம் அல்ல. அது பீடம் மாதம் என்று கூறுதல் வேண்டும். தெய்வங்கள் குறிப்பாக சக்தியை பீடத்தில் அமர்த்தி வழிபடும் காலம் மார்கழி மாதம் என்பதை உணர்தல் வேண்டும். மார்கழி மாதத்தில் தெய்வ காரியத்தை தவிர வேறு காரியம் செய்யக்கூடாது என பெரியோர்கள் கருதினர். அதற்காக நல்காரியங்கள் செய்யாதீர்கள் மற்ற காரியங்கள் யாதும் செய்யாதீர்கள் தெய்வ வழிபாட்டில் மட்டும் அமருங்கள் என்றால் மனிதன் கேட்க மாட்டான். இத்தகைய நிலையில் பீடம் என்பது சிறிதாக மாறி பீடை மாதமாக மாறி விட்டது. இது ஒன்றே இதற்கான விளக்கம் தெய்வ நல்காரியங்கள் தெய்வ காரியங்கள் செய்யும் காலம் என்பதால் மற்ற காரியங்கள் செய்யாதீர் என்பதே இதற்கு விளக்கமாகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாகவே இக்காலம் மண்டல காலம் என அழைக்கப்பட்டும் ஐயப்பன் வழிபாடுகள் நடக்கின்றன. இந்நிலையில் அக்காலத்தில் தெய்வ காரியங்கள் தெய்வ நல்காரியங்கள் எடுத்துச் செய்வீர்களாக.

சிறிய சிவன் சன்னதி

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் உள்ள கோயில் வளாகத்தின் வடக்குப் பகுதியில் நீரழி மண்டபம் போன்ற கிணறு போன்ற அமைப்பில் உள்ள சிறிய சிவன் சன்னதி. ரிஷபம் மீது சிவன் அமர்ந்திருக்கிறார். தரை மட்டத்தில் இருந்து சுமார் 4 அடிக்கு கீழே உள்ளது.