ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 680

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

கந்த சஷ்டி கவசம் கந்த குரு கவசம் என்று எந்த கவசமாக இருந்தாலும் அதை ஒரு மனிதன் தன் சொந்த கவசம் என்று (தனக்காக என்று) எண்ணி பாராயணம் செய்யாமல் பிறர் கஷ்டம் நீங்க பாராயணம் செய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இது போன்ற பாசுரங்களை இறை வழிபாட்டு பாடல்களை பாடியவர்கள் யாரும் தன் கஷ்டம் நீங்க வேண்டும் என்று பாடவில்லை. அதனால் தான் ஆதிசங்கரர் பிட்சை எடுத்தார். தனக்காக அன்னை மகாலட்சுமியை அவர் வேண்டவில்லை. பிறர் வறுமை நீங்கத்தான் வேண்டினார். எனவே இது போன்ற விஷயங்களை பிறர் துன்பம் நீங்க ஒரு மனிதன் பயன்படுத்தினால் பரிதமாகும். அதிலேயே பிறர் நலத்தை பார்ப்பதால் அவன் பாவங்கள் குறைந்து அவனுக்கும் இறையருளால் நலம் கிட்டும்.

ஊர்த்துவ தாண்டவத்தில் சிவபெருமான்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கம்பத்தடி மண்டபத்தின் கிழக்குப் பகுதியின் தெற்குப் பகுதியில் ஊர்த்துவ தாண்டவரின் சிற்பம் உள்ளது. சிவனுக்கும் காளிக்கும் இடையே யார் சிறந்த நடனக் கலைஞர் என்ற போட்டியின் போது சிவன் தனது வலது காலை நேராகத் தன் தலையின் மட்டத்திற்கு தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். சிவபெருமானின் இடது காலுக்கு அருகில் அமர்ந்து மத்தளம் இசைக்கும் நந்திதேவர் சிவாம்சத்துடன் கூடியவர் என்பதை விளக்க 2 கைகள் தலைக்கு மேலே உயர்த்தி இறைவனை வணங்கிய நிலையில் அஞ்சலி ஹஸ்தமாகவும் 2 மத்தளம் வாசிக்கும் நிலையிலும் மொத்தம் 4 கரங்களுடன் உள்ளது. வலதுபக்கம் உடன் காரைக்கால் அம்மையார் உள்ளார். இடம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மதுரை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 679

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

எங்கே சத்தியம் நிரந்தரமாக தங்குகிறதோ எங்கே தர்மம் நிரந்தரமாக தங்குகிறதோ எங்க கருணை நிரந்தரமாக குடி கொண்டிருக்கிறதோ எங்கே பெருந்தன்மை நிரந்தரமாக குடி கொண்டிருக்கிறதோ எங்கே விட்டுக் கொடுக்கும் தன்மை நீடித்திருக்கிறதோ அங்கே இறையருள் இருந்து கொண்டே இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். இறையருளை தக்க வைத்துக் கொள்ள என்ன வழி? என்று பார்த்து அந்த வழியிலே ஒருவன் சென்றால் ஏனைய பிரச்சினைகள் மெல்ல மெல்ல அவனை விட்டு சென்று விடும்.

ராமர் சீதை

ராமரும் சீதையும் சின்முத்திரையில் உள்ளார்கள். பரதன் சத்ருக்கன் அருகே உள்ளார்கள். லட்சுமணன் பணிவாக வணக்கம் செலுத்துகிறார். அனுமான் அன்புடன் ஸ்ரீராமரின் பாதங்களைத் தன் கைகளில் தொட்டு வணங்குகிறார். இடம் சிருங்கேரியில் உள்ள குரு நிவாஸில் இந்த சிற்பம் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 678

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

விதியே ஒருவனை தவறு செய்யத் தூண்டினாலும் பிரார்த்தனையின் பலத்தால் தல யாத்திரையின் பலத்தால் புண்ணிய நதியில் நீராடுகின்ற பலத்தால் தர்ம செயலை செய்கின்ற பலத்தால் ஒரு மனிதன் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு சினமோ வேறு தகாத எண்ணங்களோ எழும் போதெல்லாம் இறை நாமத்தை ஜெபித்து ஜெபித்துத்தான் அதிலிருந்து வெளியே வர வேண்டும். இல்லையில்லை விதிதான் என்னை இவ்வாறு தூண்டுகிறது என்று பலகீனமாக இருந்து விட்டால் அதன் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டும்.

சக்தி பீடம் 10. பகவதியம்மன் – கன்னியாகுமரி

சக்தி பீடத்தில் 10 ஆவது கோயில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் ஆகும். தந்திர சூடாமணி கூறும் அம்மனின் 51 சக்தி பீடங்களில் அம்பாளின் முதுகுப்பகுதி விழுந்த இடமாகும். குமரி சக்திபீடம் என்று அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் இந்தியாவின் தென்முனையில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியப் பெருங்கடல் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எனும் முக்கடல்கள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. அம்பாள் பகவதியம்மன் வேறுபெயர் துர்காதேவி மற்றும் தேவிகன்னியாகுமரி ஆகும். உற்சவ மூர்த்தி தியாகசெளந்தரி பாலசௌந்தரி. புனித தீர்த்தத்தின் பெயர் பாபநாச தீர்த்தம். தனது ஆயுதமாக ஜபமாலையை வைத்திருக்கிறாள். இக்கோவிலின் வழிபாடுகளையும் சடங்குகளையும் சங்கராச்சாரியார் அவர்கள் சங்கரா மடம் மூலமாக நடக்க வழிவகைச் செய்துள்ளார். முனிவர் பரசுராமரால் இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோயில் 2000 ஆண்டு பழமையானதாகும். பகவதியம்மன் கன்னியாகவும் இளமையுடன் குமரியாக உள்ளதால் இந்த ஊர் கன்னியாகுமரி என்று பெயர் பெற்றது.

மகாபாரதம் சங்க நூலான மணிமேகலை புறநானூறு நாராயண உபநிடதம் கிருஷ்ண யஜூர் வேதம் சம்ஹித வைஷ்ணவ வேதங்களில் அம்மன் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது. 1892ல் இராமகிருஷ்ண பரஹம்சருக்கு தேவி ஆசி வழங்கியுள்ளார். சுவாமி பிரமானந்தா (1863-1922) நிர்மலானந்தா (1963-1938) இக்காலகட்டங்களில் பகவதியம்மனுக்கு பணிவிடை செய்துள்ளனர். 1935 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலத்திலிருந்து பல பெண்களை வரவழைத்து பகவதியம்மனுக்கு பூசை செய்ய அறிவுறுத்தப்பட்டார்கள். இவ்வாறு வந்த பெண்களில் ஏழு பெண்கள் குழு மூலம் சாரதா மடம் ஆரம்பிக்கப்பட்டது. கேரளாவில் பாலக்காடு ஒட்டப்பாளையம் என்ற இடங்களிலும் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. 3000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இக்கோயில் வலுவான கல் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் விநாயகர் ஐயப்பன் பால சுந்தரி மற்றும் விஜய சுந்தரி சூரியன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. கோயிலின் பிரதான நுழைவு வடக்கு வாசல் வழியாகும். கோயிலின் கிழக்கு வாசல் பெரும்பாலும் மூடப்பட்டு விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும்.

புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா 10 நாள் மற்றும் வைகாசி விசாகம் 10 நாளும் திருவிழா நடைபெறும். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும். எழுத்தாளர் பெரிபிளசு 1060 – 1080 பகவதியம்மன் பற்றியும் பிரம்மச்சர்யம் பற்றியும் அன்னையின் வழிபாடு பற்றியும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

கன்னியாகுமரி பகவதி அன்னையின் ஒளிமிக்க மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி இருந்த காலகட்டம் அது. மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருவிதாங்கூர் பகுதியில் வசித்த ஒரு பனையேறும் தொழிலாளிக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. ஆறாவதாக பனை தொழிலாளியின் மனைவி கருவுற்றிருந்தார். அந்த பிரசவத்திலும் பெண் குழந்தை பிறந்தது. அதை அவரது மூத்த மகள் தன் தந்தையிடம் வந்து சொன்னாள். ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்தவருக்கு பெருத்த ஏமாற்றம். மீண்டும் மனைவி கருவுற்றிருந்தார். அவரது மனம் இப்போது அடுத்த முறை பெண் குழந்தை பிறந்ததாக தன் மகள் வந்து என்னிடம் சொன்னால் மரத்தில் இருந்து இரண்டு கைகளையும் எடுத்து விட்டு கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்.

தொழிலாளியின் மனைவிக்கு மீண்டும் பெண் பிள்ளையே பிறந்தது. அந்த விஷயத்தை அவரது மூத்த மகள் அவரிடம் சொல்ல வந்தபோது அந்த தொழிலாளி மரத்தை விட்டு கீழே இறங்கியிருந்தார். அதனால் உடனடியாக தற்கொலை செய்து கொள்வது இயலாமல் போனது. வாழ்க்கை வெறுத்துப்போன தொழிலாளிக்கு அருகில் இருந்த புற்று தென்பட்டது. அதற்குள் கையை நுழைந்தார். புற்றுக்குள் பாம்பு ஏதாவது இருந்து கடித்தால் இறந்து போய்விடலாம் என்பது அவரது எண்ணம். புற்றுக்குள் கையை நுழைத்த தொழிலாளியின் கையில் ஏதோ ஒன்று சுடுவது போன்று உணர்ந்தார். சட்டென்று கையை எடுத்தவரின் கையோடு மாணிக்கக் கல் ஒன்று வந்தது. அதைக் கொண்டு போய் மன்னனிடம் கொடுத்தார் அந்த பனை தொழிலாளி. அதைப் பெற்றுக்கொண்ட மன்னன் அவரது குதிரையை அவிழ்த்து விட்டு அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அந்த தொழிலாளியின் பெயரில் எழுதி வைக்கச் சொன்னார். மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார் தொழிலாளி.

அன்று இரவு திருவிதாங்கூர் மன்னனின் கனவில் தோன்றிய சிறு பெண் இன்று காலை பனை தொழிலாளி உன்னிடம் ஒரு மாணிக்கக் கல் கொண்டு வந்து கொடுத்தாரே. அதில் எனக்கு ஒரு மூக்குத்தி செய்து தரக்கூடாதா? என்று கேட்டாள். காலையில் எழுந்ததும் நம்பூதிரிகளை அழைத்து பிரசன்னம் பார்க்கச் சொன்னார் மன்னன். பிரசன்னம் பார்த்ததில் கனவில் தோன்றிய சிறுமி கன்னியாகுமரி பகவதி அம்மன் என்பது தெரியவந்தது. மன்னன் உடனடியாக தன்னிடம் இருந்த மாணிக்கக் கல்லில் ஒரு மூக்குத்தியை செய்து அதை தேவிக்கு சமர்ப்பித்தான். அந்த மூக்குத்தியைத்தான் இன்றளவும் பகவதியம்மன் அணிந்திருக்கிறாள். அந்த மாணிக்கக் கல்லின் ஒளி பன்மடங்கு அதிகமாக இருந்த காரணத்தால் அன்னையின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்கம் என்று நினைத்த கப்பலோட்டிகள் பலரும் விபத்துக்களை சந்திக்க நேர்ந்தது. எனவே ஆலயத்தின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தேவியை தரிசிக்கும் நடைமுறை பழக்கத்திற்கு வந்தது.

கன்னிப் பெண் ஒருத்தியைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது என்ற வரத்தைப் பிரம்ம தேவரிடம் இருந்து பெற்றவன் பாணாசுரன் என்னும் கொடிய அசுரன். அவன் பெற்ற அந்த வரத்தை வைத்துக் கொண்டு தேவர்களையும் முனிவர்களையும் கடுமையாக கொடுமைப் படுத்தினான். தேவர்களும் முனிவர்களும் தங்கள் துன்பங்களை துடைத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவரோ பாணாசுரன் கன்னிப் பெண்ணால் தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றுள்ளான். ஆகையால் உங்களுக்கு அந்த சிவனின் அருகில் அமர்ந்துள்ள பார்வதியால்தான் உதவ முடியும் என்று வழி கூறினார். இதனால் அனைவரும் அன்னை பார்வதியை வேண்டி யாகம் செய்தனர். யாகத்தின் நிறைவில் ரிஷப வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளித்தனர். அம்மையப்பன் இருவரையும் கண்டதும் ஆனந்தக் கூத்தாடினர் தேவர்களும் ரிஷி முனிவர்களும். அவர்களைப் பார்த்து அன்பர்களே தங்களின் குறையை நான் அறிவேன். உங்கள் துயரங்கள் விலகும் காலம் வந்து விட்டது. எனது தேவியானவள் பரத கண்டத்தின் தென்கோடியில் குமரியில் ஒரு கன்னியாக வடிவெடுத்து பாணாசுரனை வதம் செய்து உங்களுக்கு வாழ்வளிப்பாள் என்று ஆசி கூறினார் சிவபெருமான்.

அன்று முதல் அவள் கன்னியாகுமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள். தேவி கடுந்தவமிருக்கும் போது ஒரு நாள் பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால் தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். இத்தகைய தருணத்தை எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில் தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்று அழித்தாள். தேவர்கள் அனைவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். நாரதரும் பரசுராமரும் தேவியை கலியுகத்தின் இறுதி வரை பூமியில் இருக்குமாறு வேண்டினார்கள். இவர்களின் பிரார்த்தனையை தேவி ஏற்றுக் கொண்டாள். பரசுராமர் சமுத்திரத்தில் இந்தக் கோயிலைக் கட்டி தேவியின் சிலையை நிறுவினார். அன்று முதல் கன்னியாகுமாரியில் கன்னிப் பெண்ணாக பகவதி அம்மன் மக்களின் குறைகளை நீக்கி கொண்டிருக்கின்றாள்.

சிருங்கார நரசிம்மர் செஞ்சு லட்சுமி

அஹோபிலம் பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாழும் வனவாசி மக்கள் சமுதாயத்தினர் செஞ்சுக்கள் என்று அழைக்கப் படுகின்றனர். உலக நன்மைக்காக செஞ்சுக்களின் குடியில் பிறந்த லட்சுமியை நரசிம்மர் இங்கு வந்து திருமணம் புரிந்ததாக தல புராணம் கூறுகிறது. செஞ்சுலட்சுமி என்ற திருநாமத்துடன் நரசிம்மரின் நாயகியாக அருள்பாலிக்கிறாள். இடம் அஹோபிலம்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 677

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

நாங்கள் கூறுகின்ற சூட்சுமத்தை யாரும் புரிந்து கொள்ளவேயில்லை. ஒரு மனிதன் தன் தேவை மறந்துவிட்டு பிறருக்கு சேவையையும் பொது நல தொண்டையும் செய்ய துவங்கும் பொழுதே அவன் தேவையை இறைவன் கவனிக்க துவங்கி விடுவார் என்பதே சூட்சுமம். எனவே தன்னைத்தான் தனக்குத்தான் தன் குடும்பத்தைத்தான் பார்ப்பதை விட்டுவிட்டு தான் தான் தான் தான் என்பதையெல்லாம் விட்டுவிட்டு இறைவனைத்தான் அவனின் கருணையைத்தான் இறைவன் அன்பைத்தான் இறையின் பெருமையைத்தான் இறைவன் அருளைத்தான் இறையின் பெருந்தன்மையைத்தான் புரிந்து கொண்டால் இந்தத் தான் ஓடிவிடும். இந்தத் தான் ஓடிவிட்டால் அந்தத்தான் (இறைவன் அருளைத்தான்) தன்னால் வந்துவிடும். அந்தத் தான் வந்துவிட்டால் எந்தத் தானும் மனிதனுக்கு தேவையில்லை.

ஆமை அன்னங்கள்

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கித்ராபூரில் கோபேஷ்வர் கோயில் தூணில் ஒரு ஆமை மற்றும் இரண்டு அன்னங்கள் இந்த சிற்பத்தில் உள்ளது. எல்லா நேரத்திலும் பேசுவது ஆபத்தை தரும் என்ற கருத்தை இந்த சிற்பம் சுட்டிக் காட்டுகிறது.

ஒரு ஏரியில் கம்புக்ரீவா என்ற ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த ஆமைக்கு சகட மற்றும் விகட என்ற இரண்டு அன்னங்கள் நல்ல நண்பர்களாக இருந்தன. அவர்கள் மூவரும் ஒவ்வொரு நாளும் ஏரியின் கரையில் சந்தித்து சூரிய அஸ்தமனம் வரை தங்களது கருத்தைப் பரிமாறிக் கொண்டு ஒருவருக்கொருவர் நட்புடன் இருந்தார்கள். ஓராண்டு மழை பெய்யாமல் ஏரி வறண்டு போகத் தொடங்கியது. ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதைக் கண்டு மூவரும் கவலைப்பட்டார்கள். ஆமையும் அன்னங்களும் தங்களது கருத்தை ஒருவருக்கோருவர் பரிமாறிக் கொண்டார்கள். ஏரியில் உள்ள நீர் அனைத்தும் விரைவில் வற்றிவிடும். வற்றினால் ஆமை பெரிய மிருகங்களிடம் எளிதாக சிக்கிக் கொள்ளும். நீர் வற்றினால் இந்த ஏரியில் ஆமை தொடர்ந்து வாழ முடியாது. அன்னங்களுக்கும் உணவு கிடைக்காது. இனி இங்கு வாழ்வது மிகவும் கடினம். ஆகவே தண்ணீர் நிறைந்த மாற்று ஏரியைத் தேடி பிறகு அங்கு செல்லலாம் என திட்டமிட்டனர். பிரச்சனையை ஆமை அறிந்திருந்தது.

ஆமை தொடர்ந்தது. நீங்கள் முதலில் பறந்து சென்று வேறொரு ஏரியைக் கண்டு பிடியுங்கள். பின்பு நீங்கள் இருவரும் ஒரு குச்சியை பிடித்துக் கொள்ளுங்கள். நான் அந்த குச்சியை எனது வாயால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறேன். அன்னை அங்கே அழைத்துச் சென்று விடுங்கள். பின்பு மூவரும் எப்போதும் போல் அங்கு மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று சொன்னது. இரண்டு அன்னமும் சம்மதித்து அன்னங்கள் தொலைதூர இடங்களுக்கு பறந்து சென்று ஒரு ஏரியை கண்டு பிடித்தார்கள். பின் திட்டப்படி ஆமை இருக்கும் இடம் ஒரு குச்சியுடன் வந்தார்கள். அப்போது அன்னம் ஆமையிடம் எல்லாம் சரியாகத் தெரிகிறது. உங்கள் வாயை சென்று சேரும் வரை இறுக்கமாக மூடிக்கொள்ளுங்கள். நீங்கள் பேசக்கூடாது. இல்லையெனில் நீங்கள் விழுந்து விடுவீர்கள் என்றது. ஆமை குச்சியை வாயால் இறுக்கமாக பிடித்துக் கொண்டது. அவர்கள் பறக்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் மலைகள் பள்ளத்தாக்குகள் கிராமங்கள் காடுகள் ஆகியவற்றின் மீது பறந்து இறுதியாக ஒரு நகரத்தின் மீது வந்தனர். அவர்கள் நகரத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது இந்த விசித்திரமான காட்சியைப் பார்க்க ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். குழந்தைகள் கத்தவும் கைதட்டவும் தொடங்கினர். அதோ பார் இரண்டு பறவைகள் குச்சியின் உதவியால் ஆமையைச் சுமந்து செல்லும் அபூர்வக் காட்சி இது என்று வியந்து பாராட்டினர். ஆமை தான் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதை மறந்து இந்த கை தட்டல்களுக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய மிகவும் ஆர்வமாக இருந்தது. ஆமை தனது நண்பர்களிடம் என்ன ஆச்சு? என்று வாயைத் திறந்தது. ஆமை வாயைத் திறந்த நொடியே கீழே விழுந்து இறந்தது. ஆமை பூமியில் விழுவதை அன்னங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தாங்கள் மட்டும் ஏரிக்கு சென்றது. கதையின் நீதி: எல்லா நேரத்திலும் பேசுவது ஆபத்தை தரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 676

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைஞான தெளிவு வராத வரையில் மனிதனுக்குள் எல்லா விதமான அனாச்சாரங்களும் இருக்கத்தான் செய்யும். அன்றாடம் அமைதியாக அமர்ந்து செய்கின்ற பிரார்த்தனையினாலும் செய்கின்ற முறையான சுவாசப் பயிற்சியினாலும் அகவைக்கு ஏற்றவாறு செய்கின்ற தேக நலத்திற்கு ஏற்றவாறு செய்கின்ற முறையான யோக பயிற்சியினாலும் அமைதியாக வாழ்கின்ற வாழ்க்கை முறையினாலும் கட்டாயம் பாவ வினைகள் குறைக்கின்ற வழி முறைகள் இறையருளால் ஒவ்வொரு மனிதனுக்கும் சுட்டிக் காட்டப்படலாம். அதனை உறுதியாகப் பிடித்துக் கொண்டு மேலேறுவது மாந்தர்களின் கடமையாகும்.