சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 21 வது தேவாரத்தலம் திருநீடூர். மூலவர் சோமநாதர், அருள்சோமநாதேஸ்வரர், நிருத்தகானப்பிரியர், கானநிர்த்தனசங்கரர், பத்ரகாளீஸ்வரர், கற்கடேசுவரர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, ஆலாலசுந்தரநாயகி, வேயுறுதோளியம்மை. அம்பாள் வேயுறு தோளியம்மையை சூரியன் வழிபட்டுள்ளார். எனவே இவளுக்கு ஆதித்ய அபயவராதம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. தலமரம் மகிழ மரம் தீர்த்தம் செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம் உட்பட 9 தீர்த்தங்கள் உள்ளது. மூலவருக்கு மேல் உள்ள விமானம் இருதளம் எனப்படுகிறது.
ஊழிக் காலத்திலும் இக்கோவில் அழியாமல் நீடித்திருக்கும் ஆகையால் நீடூர் என்று பெயர் பெற்றது. இவ்வாலயத்திற்கு ராஜகோபுரமில்லை. கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மேற்புறத்தில் ரிஷபாரூடனர், முருகர், விநாயகர் ஆகியோரின் வண்ண சுதையாலான திருமேனிகள் உள்ளது. வாயிலைக் கடந்தவுடன் தலமரம் மகிழம் உள்ளது. நந்தி, பலிபீடம் மற்றும் கொடிமரம் உள்ளது. இந்த ஆலயம் இரண்டு பிரகாரங்களைக் கொண்டுள்ளது. பிரகாரத்தில் சிவலோகநாதர், கைலாசநாதர், காசிவிஸ்வநாதர், ஆனந்த தாண்டவமூர்த்தி, சின்மயானந்த விநாயகர், முருகன், சப்தகன்னியர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது. நடராஜர் சுதை வடிவில் தனியே இருக்கிறார். கருவறையின் கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, பிரம்மா, அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர் மற்றும் துர்க்கை உருவங்கள் உள்ளன. அம்பாளின் சன்னதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும் சனீஸ்வரரையும் தரிசிக்கலாம். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. கோயிலுக்கு வெளியே பத்ரகாளியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் விநாயகரே பெரியவர் பழையவர் புனிதமானவர் என்ற 3 நிலைகளில் இருக்கிறார். இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர் செல்வமகா விநாயகர் சிவானந்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார். இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப்பயனால் அடுத்த பிறவியில் நண்டாக பிறந்தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் பெற நாரதரிடம் ஆலோசனை கேட்டான். அவர் இத்தலத்தில் சிவனை வழிபட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி தன்மசுதன் இங்கு வந்து காவிரி ஆற்றில் நீராடி சிவனை வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி கொடுத்து தனக்குள் ஐக்கியமாவதற்கு வசதியாக லிங்கத்தில் துளையை ஏற்படுத்திக் கொடுத்தார். நண்டு வடிவில் இருந்த அசுரன் லிங்கத்திற்குள்ளே சென்று ஐக்கியமானான். நண்டு சென்ற துளை தற்போதும் லிங்கத்தில் இருக்கிறது. ஆடி மாத பவுர்ணமி தினத்தில் இங்கு சிவனுக்கு கற்கடக பூஜை நடக்கிறது.
ஒருசமயம் இந்திரன் பூலோகத்திற்கு வந்தபோது சிவபூஜை செய்ய விரும்பினான். அருகில் லிங்கத்தை தேடியும் கிடைக்கவில்லை. எனவே காவிரி ஆற்றின் மணலை அள்ளி லிங்கமாக பிடித்து பூஜை செய்தான். பின் சிவனது நடன தரிசனம் வேண்டி ஒரு பாடலை பாடினான். மகிழ்ந்த சிவன் அவனுக்கு நடனக்காட்சி அருளினார். எனவே இவருக்கு கானநர்த்தன சங்கரன் என்றும் பெயர் உண்டு. பாடலுக்கு இறங்கி ஆடிய தேவர் என்பது இதன் பொருள். பூஜை முடிந்தபின்பு இந்திரன் லிங்கத்தை அப்படியே விட்டு சென்றுவிட்டான். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. லிங்கத்தில் இந்திரனின் விரல் தடம் இருப்பதை இப்போதும் காணலாம். கிருத யுகத்தில் இந்திரனும் திரேதா யுகத்தில் சூரியனும் துவாபர யுகத்தில் பத்திரகாளியும் கலியுகத்தில் நண்டும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்,
தன் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஈசன் அடியார்கட்கு உதவியும் பல்சுவை விருந்தளித்து வழித்தொண்டாற்றிய முனையடுவார் நாயனார் அவதரித்து தொண்டு செய்து முத்தி பெற்ற தலம். இங்கு முனையடுவார் நாயனாரின் கைகூப்பியவாறு உள்ள திருமேனி உள்ளது. வடமலை நாரணக்குடை மன்னர் என்பவரால் இயற்றப்பட்ட திருநீடூர் தல புராணம் 14 சருக்கம் 400 பாக்களுடன் மிக அரிய செய்திகளைக் கொண்டுள்ளது. சோழ மன்னர்களில் முதல் குலோத்துங்கன், இரண்டாம் ராசராஜன், மூன்றாம் ராசராஜன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன. முதற்குலோத்துங்கன் காலக் கல்வெட்டுப் பாடலால் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள உமையொடு நிலாவின பெருமானுக்கு மிழலை நாட்டு வேள்கண்டன் மாதவன் உத்தம விமானத்தை அமைத்த செய்திப் பெறப்படுகிறது. 3 வது ராசாதிராசன் காலத்திய கல்வெட்டில் இவ்வூர் ராஜசிகாமணி சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்திரன், சூரியன், காளி, நண்டு, சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர், திருநாவுக்கரசர் திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமியுடன் இணைத்துப் போற்றிப் பாடியுள்ளார். திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.











































































