சக்தி பீடத்தில் 2 ஆவது கோயில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலாகும். இந்த ஊரின் பெயர் பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. காஞ்சியில் அனைத்துக் கோவில்களுக்கும் நடுநாயகமாக காமாட்சி அம்மன் கோவில் விளங்குகிறது. தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் நாபி (தொப்புள்) விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது. இக்கோவிலின் மிக அருகிலுள்ள ஆதி காமாட்சி கோவில் ஆதி பீட பரமேஸ்வரி கோவில் காளிகாம்பாள் கோவில் ஆதி பீடேஸ்வரி கோவில் அனைத்தும் சேர்ந்தே சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காமாட்சி அம்மன் கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது. இவ்வூரில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள். தலமரம் செண்பகம். தீர்த்தம் பஞ்ச கங்கை. 70 கிலோ எடை கொண்ட தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.
துர்வாசர் இவர் சிறந்த தேவி பக்தர். லலிதாஸ்தவ ரத்னம் என்ற நூலை இயற்றியவர். இவரே இப்போதுள்ள அம்மனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர். இவருக்கே அம்மன் முதன்முதலில் காட்சி தந்திருக்கிறார். வேத வியாசர் காமாட்சியை பிரதிஷ்டை செய்தவர் என்ற கருத்தும் உள்ளது. காஞ்சி என்றாலே காமாட்சிதான் என்று சொல்லும்படி காமாட்சி அம்மனால் மகிமை பெற்ற ஊர் காஞ்சி. கா என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும் நிறைவேற்றுபவள் என்பதாலும் அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டது. தந்திர சூடாமணி நூலில் உள்ளபடி தேவியின் பெயர் தேவகர்பா அல்லது கீர்த்திமதி ஆகும். காமாட்சி என்ற பெயருக்கு கா என்றால் சரஸ்வதி. மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள் காமாட்சி ஆவாள். காமாட்சி இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும் மலர்க் கணைகளையும் மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள். இங்கு நான்கு கரம் கொண்டு அவற்றில் பாசம் அங்குசம் அபய ஹஸ்தம் கபாலம் கொண்டு அருளாட்சி நடத்துகிறாள்.
முன்னொரு காலத்தில் பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான். அந்த வரங்கள் அளித்த சக்தியாலும் ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால் அதிக துன்பமுற்ற தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குத்தான் உள்ளது என்று கூறி அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.
அன்னை பராசக்தி தேவி காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் கிளி வடிவம் கொண்டு ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தாள். தேவர் களும் முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள். அவர்களின் துன்பத்தைக் கண்டு மனமிரங்கிய அன்னை பந்தகாசுரனைக் கொன்று அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம் பந்தகாசுரன் கயிலாயத்தில் ஒரு இருண்ட குகையினுள்ளே இருப்பதை அறிந்து அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை பதினெட்டுக் கரங்களில் பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக உக்கிர உருவம் கொண்டாள். பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும் மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து அவனது தலையை அறுத்து ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி தான் தவம் செய்த காஞ்சிபுரம் வந்தடைந்தாள்.
உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் பயத்தில் நடுங்கினார்கள். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை உடனே அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில் புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள். அத்தரிசனம் கண்டு மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த தேவர்களும் முனிவர்களும் அவளைப் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள். அப்போது அன்னை அவர்களைப் பார்த்து காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை 24 தூண்களாகவும் நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்பும்படி கூறியதுடன் இந்த இடத்தில் கன்றுடன் கூடிய பசு தீபம் ஆகியவை இருக்கட்டும் என்று அருளினாள். அதன்படி தேவர்களும் செய்து அழகிய பீடத்தை அமைத்தார்கள். கதவை மூடிவிட்டு வெளியில் இருந்து அன்னையைத் துதித்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் கதவுகளைத் திறந்த போது அன்னை காமாட்சியாக அவர்களுக்கு தரிசனம் தந்தாள். இப்படி அன்னை காமாட்சியாக காட்சி தந்த நாள் கிருத யுகத்தில் சுவயம்புவ மன்வந்த்ரம் ஸ்ரீமுக வருடம் பங்குனி மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை திதியுடன் கூடிய பூரம் நட்சத்திரம் ஆகும்.
காமாட்சி அம்மன் கோயிலின் உள்ளே பிரகாரங்களும் தெப்பக்குளமும் நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக் கோயிலின் கருவறையில் காமாட்சியின் உருவம் அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளது. அம்பிகையின் வலப் புறத்தில் ஒற்றைக் காலில் பஞ்சாக்னி நடுவில் நிற்கிறாள். காமாட்சியின் முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஶ்ரீசக்ரத்தில் ஶ்ரீ என்பது லட்சுமியின் அம்சம் ஆகும். காமாட்சி இங்கு பரப்ரஹ்ம ஸ்வரூபினி என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால் உக்ர ஸ்வரூபினி என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால் எட்டாம் நூற்றாண்டில் இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார். காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன் அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதி கொண்டிருக்கின்றனர். கருவறை அருகே ஆதிசங்கரின் சன்னதி உள்ளன. கோவிலில் காமாட்சி 5 வடிவங்களில் வழிபடப்படுகிறார்.
- காமாட்சி – காமாட்சி கோவிலின் முக்கிய தெய்வம். இந்த சிலை காயத்ரி மண்டபத்திலிருந்து சன்னதியின் உள் கருவறையின் மையத்தில் அருள் பாலிக்கிறாள். காமாட்சி ஐந்து பிரம்மாக்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய நான்கு கைகளிலும் ஒரு கயிறு கோடு கரும்பு வில் மற்றும் மலர் அம்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறாள். சிலை பத்மாசனத்தில் அமர்ந்து தென்கிழக்கு முகமாக அமர்ந்திருக்கிறாள். காமாட்சியின் தத்துவத்தை பிரதிபலிக்கும்படி இங்கு உள்ள மண்டபத்தை வானவர்கள் கட்டினார்கள். மண்டபத்தின் நான்கு சுவர்கள் நான்கு வேதங்களைக் குறிக்கும். மண்டபத்தில் உள்ள இருபத்தி நான்கு தூண்கள் காயத்ரி மந்திரத்தின் இருபத்தி நான்கு எழுத்துக்களைக் குறிக்கும்.
- தப காமாட்சி – காமாட்சியின் இந்த வடிவத்தை பிரதான சிலைக்கு வலதுபுறம் மற்றும் பிலா வாயிலுக்கு அருகில் காணலாம். பார்வதி சிவனிடமிருந்து பிரிந்து வாரணாசி அல்லது ஹொரநாட்டில் அன்னபூர்ணேஸ்வரியாக முதலில் தோன்றி பின்னர் காத்யாயன முனிவரின் ஆலோசனையின்படி காஞ்சிபுரத்திற்கு வந்து வேகவதி ஆற்றின் அருகே உள்ள மாமரத்தடியில் சிவனை ஏகாம்பரேஸ்வரராக வணங்கி அவரை மணந்ததாக புராணங்கள் கூறுகின்றன .
- அஞ்சனா காமாட்சி – அரூப லட்சுமி (உருவமற்ற லட்சுமி) என்றும் அழைக்கப்படுகிறாள். அவளுடைய சன்னதி பிரதான சிலையின் இடதுபுறத்தில் வடக்கு நோக்கியும் சௌபாக்ய கணபதி சன்னதிக்கு முன்னும் அமைந்துள்ளது. புராணத்தின் படி லட்சுமி ஒரு சாபத்தின் காரணமாக இந்த இடத்தில் தனது இழந்த அழகை மீண்டும் பெற விஷ்ணுவின் அறிவுரையின் படி தவம் செய்தாள்.
- சுவர்ணா (தங்க) காமாட்சி – தெலுங்கில் பங்காரு காமாட்சி என்றும் அழைக்கப்படும் இந்த தெய்வத்தின் சன்னதி இரண்டாவது பிராகாரத்தில் அமைந்துள்ளது. காமாட்சியின் மூன்றாவது கண்ணிலிருந்து சிவனின் மனைவியாக ஏகாம்பரேஸ்வரராக சேவை செய்ய இந்த வடிவத்தை உருவாக்கியது. சிவனை மணந்த பிறகு அவள் ஏலவார்குழலி தேவி என்று அழைக்கப்பட்டாள். மூல விக்கிரகம் இன்று தஞ்சாவூரில் காணப்படுகிறது . முஸ்லீம் படையெடுப்புகளை அடுத்து காமாட்சிதாசரால் தங்க சிலை தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போதைய சிலை பஞ்சலோகத்தால் ஆனது. இது 5 உலோகங்களின் கலவையாகும்.
- உற்சவ காமாட்சி – ஊர்வலங்களின் போது வெளியே கொண்டு வரப்படும் உற்சவ காமாட்சியின் சன்னதி இரண்டாவது பிராகாரத்தில் அமைந்துள்ளது. சிலையின் இருபுறமும் சரஸ்வதி மற்றும் லட்சுமி சிலைகள் உள்ளன. பெரும்பாலான சமயங்களில் தெய்வங்கள் மற்றும் தெய்வங்கள் பொதுவாக அவர்களின் துணைவியருடன் வந்தாலும் காமாட்சி சிவனை விட சக்தி வாய்ந்தவள் என்பதால் இங்கு சிவனுக்கு சன்னதி இல்லை. பண்டாசுரனை அழிக்க நெருப்பில் இருந்து தோன்றிய திரிபுர சுந்தரி பிரம்மாவால் காமாட்சி என்ற பெயரில் உலகுக்கு காட்சியளித்தார்.
மகாவிஷ்ணுவின் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்வர் பெருமாள் திருக்கல்வனூர் திவ்ய தேசம் காமாட்சி அம்மனின் கருவறைக்கு அருகில் 7 முதல் 10 ஆம் நூற்றாண்டின் ஆழ்வாரால் சிறப்பு பெற்ற விஷ்ணுவின் கோயில் இருந்தது. இக்கோயில் சிதிலமடைந்ததால் அங்குள்ள தெய்வம் இப்போது காமாட்சி அம்மன் கோவிலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கோயில் விமானத்தின் மேல் சிற்பங்கள் உள்ளன. பெருமாளின் சன்னதி காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தின் அருகிலேயே இருக்கிறது. இந்த கோயிலில் துண்டீர மகாராஜா சன்னதி உள்ளது. இங்கு ஆட்சி செய்த ஆகாசபூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவன் காமாட்சியை நாள் தோறும் மனமுருகி வழிபட்டு வந்தான். இவனது பக்திக்கு மகிழ்ந்த காமாட்சி தனது மகன் கணபதியையே மன்னனுக்கு மகனாக கொடுத்தாள். கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்ற பெயருடன் அவதரித்தார். ஆகாசராஜனுக்கு பிறகு துண்டீரரே ஆட்சியும் செய்தார். துண்டீரர் ஆட்சி செய்த காரணத்தினால் தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. துண்டீர மகாராஜா காமாட்சியை வணங்கிய நிலையில் காமாட்சி சன்னதிக்கு எதிரே உள்ளார்.
மகா பெரியவா தம்முடைய அருளுரையில் மாயைக்குக் காரணமான பிரம்ம சக்தி காமாட்சி தேவி. அவளே ஞானமும் அருள்பவள். அனைத்துக்கும் அவளுடைய கருணைதான் காரணம். மாயைகள் பலவற்றை அவள் நம்முடைய வாழ்க்கையில் நிகழ்த்தினாலும், அவற்றில் இருந்து விடுவிக்கிற கருணையும் அவளிடம் பூரணமாக உள்ளது. மாயையினால் நாம் உண்டாக்கிக்கொள்கிற கஷ்டங்களுக்கும் துக்கங்களுக்கும் காரணம் நம்முடைய இந்திரியங்களும் மனதும்தான். இந்திரிய சுகங்களின் வழியில் நம்முடைய மனதைச் செலுத்தி நம்முடைய ஆத்ம சுகத்தை மறந்து விடுகிறோம். பஞ்சேந்திரியங்களும் மனமும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றுக்குக் காரணம் மாயை. அந்த மாயையே இவற்றைச் சுத்தப்படுத்தி இந்திரிய விகாரங்களில் இருந்தும் மன சஞ்சலங்களில் இருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காகவே அம்பிகை காமாட்சியாக வருகிறாள் என்று அருளி உள்ளார். மேலும் காமக் கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும் புஷ்ப பாணமும் இருக்கும். இவை இரண்டையும் காமாட்சி வைத்திருப்பதன் காரணம் மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள். பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கை வரிசையை காட்டதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்றும் காஞ்சி பெரியவர் கூறுகிறார்.
அயோத்தியை ஆட்சி செய்த தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இத்தகவல் மார்கண்டேய புராணத்தில் உள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஞானிகள் அம்பிகையைப் போற்றி ஸ்லோகங்களை இயற்றி இருக்கிறார்கள். கிருதயுகத்தில் துர்வாசரரால் 2000 ஸ்லோகங்களாலும் திரேதாயுகத்தில் பரசுராமரால் 1500 ஸ்லோகங்களாலும் துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால் 1000 ஸ்லோகங்களாலும் கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 ஸ்லோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன். மூக கவியின் மூக பஞ்சசதீ துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் ஆகியவைகளும் உள்ளது. புகழ்பெற்ற சங்க காலத்தைப் போற்றும் பண்டைய தமிழ் இலக்கியமான பெருநாற்றுப்படையில் இந்த பழமையான கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னர் தொண்டைமான் இளந்திரையன் இக்கோயிலைக் கட்டினார். இத்திருக்கோவிலில் 1841, 1944, 1976, 1995 ஆகிய வருடங்களில் கும்பாபிஷேம் நடத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது திருக்கோவில் முழுவரும் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சியம்பதியை சக்தியின் தலைமைப் பீடம் என்றே போற்றுகிறது காஞ்சி புராணம்.