தெரியாது என்பதே மிகப்பெரிய ஞானம்.

ஒரு முறை பகவான் ரமண மகரிஷியிடம் பலரும் ஆன்மிகம் சம்பந்தமான பல சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பகவானும் ஒவ்வொன்றாக விளக்கினார். சந்தேகம் தீர்ந்த மகிழ்ச்சியுடன் எல்லாரும் சென்றனர். ஆனால் ஒரே ஒரு பக்தர் மட்டும் தயங்கி அங்கேயே நின்று கொண்டிருந்தார். அவர் அதிகம் படிப்பறிவில்லாதவர். அதனால் மிகுந்த கவலையுடன் பகவானே ஒவ்வொருவரும் ஏதேதோ கேள்விகள் கேட்டனர். நீங்களும் சளைக்காமல் எல்லாருக்கும் பதில் சொன்னீர்கள். ஆனால் எனக்கு எதுவுமே தெரியாது. என்ன கேள்விகள் கேட்பது என்று கூட தெரியாது. என்னைப் போன்ற பாமரர்கள் ஞானம் பெறுவது எப்படி முக்தி அடைவது எப்படி? என்று கண்ணீர் மல்கக் கேட்டார்.

வாஞ்சையுடன் அந்தப் பக்தரைப் பார்த்த பகவான் ஏன் இப்படி நீயாக எதையாவது நினைத்துக் குழப்பிக் கொள்கிறாய்?அவர்களுக்குப் பல விஷயங்களில் குழப்பங்கள் சந்தேகங்கள் இருந்தன. அதைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்டனர். நான் பதில் சொன்னேன். உனக்கு அந்த மாதிரி குழப்பங்கள் ஏதும் இல்லையே! தனக்கு ஒன்றுமே தெரியாது என்று உணர்வதுதான் உண்மையிலேயே மிகப் பெரிய ஞானம். இதை விட வேறென்ன வேண்டும்? எல்லாவற்றையும் ஈசன் பொறுப்பில் விட்டு விட்டு பற்றில்லாமல் உன் கடமைகளைச் செய்து வா. உனக்கு முக்தி கிடைக்கும் என்றார் பகவான். பக்தரும் மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு அகன்றார்.

அமைதி

  1. வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – மந்திரம்
  2. செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – தந்திரம்
  3. தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – அன்பு
  4. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – பக்தி
  5. சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – குண்டலினி
  6. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – கடாட்சம்
  7. அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – யோகா
  8. மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – தியானம்
  9. சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – பிராணாயாமம்.
  10. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் – கோவில்
  11. ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – இசை
  12. உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் – குடும்பம்

நரசிம்மர் 16 திருக்கரங்களுடன்

மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது. கிருதயுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். நரசிம்ம அவதாரத்தை மீண்டும் காண காசியப முனிவர் நாரதர் வருணன் சுகோசன் முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டார்கள். இதற்காக அகத்தியர் ஏற்படுத்திய மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடிப்பின் அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டனர். அந்த தவத்தில் மகிழ்ந்த மகாவிஷ்ணு தான் முன்பு எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி பூதேவிகளுடன் மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் காட்சியளித்தார். கர்ஜனையுடன் காட்சியளித்த பகவானைக் கண்ட முனிவர்களும் தேவர்களும் மெய்மறந்து நரசிம்மரை தரிசித்தனர். திருமால் இந்த அவதாரக் கோலத்திலேயே இவ்விடத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டார். அந்த இடம் சோழர்கள் காலத்தில் சத்திரிய சிகாமணி என்று அழைக்கப்பட்ட தற்போதைய கீழப்பாவூர் ஆகும். இத்தலம் சுமார் 1100 ஆண்டுகள் புராதனச் சிறப்புமிக்கதாகும்.

சுமார் 300 வருடங்களுக்கு முன் இந்த கோவிலில் மாலை வேளைகளில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்கும் என்றும் பிற்காலத்தில் நரசிம்மருக்கு இளநீர் பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகு சாந்த சொரூபமாக மாறி விட்டார் என்றும் வரலாற்று செய்தி இருக்கிறது. இடம் தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாவூர்சத்திரம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ள கீழப்பாவூர் உள்ளது.

விஷ்ணுதுர்க்கை

20 கரங்களில் எண்ணற்ற ஆயுதங்களுடன் சம்ஹாரம் செய்யப்பட மகிஷனின் தலை மீது நிற்கும் விஷ்ணுதுர்க்கை. இடம்: ஸ்ரீவனதுர்கை பீடம் இறைவன்காடு வேலூர் மாவட்டம்.

ஏகமுகலிங்கம்

வெள்ளை சலவை கல்லினால் செதுக்கப்பட்ட ஏகமுகலிங்கம். 9 ஆம் நூற்றான்டில் ஆப்கானிஸ்தானில் இருந்த ஷாஹி சாம்ராஜ்யத்தினால் செதுக்கப்பட்டது. ஷாஹி குடும்பம் குஷான் பேரரசின் வீழ்ச்சியுக்குப் பிறகு காபூல் பள்ளத்தாக்கு மற்றும் காந்தாராவின் பழைய மாகாணத்தை ஆட்சி செய்தது.

கூர்ம அவதாரம்

ராஜஸ்தான் மாநிலம் பூந்தி என்னும் ஊரிலுள்ள ராணிஜி கி பௌரி கிணற்றில் இறங்குவதற்கு மேலே உள்ள சுவரில் விஷ்ணு பகவானின் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதார சிற்பம் உள்ளது.

காளி

இராஜேந்திரசோழர் தனது கலிங்கப் போரின் வெற்றியின் அடையாளமாய் கொண்டு வந்த நிசும்பசூதனியின் அரிய சிற்பம். உதட்டு சாயம் போல தெரிவது குங்கும பூச்சு. இடுப்பில் உள்ளது தற்காலச் சங்கிலி. காலடியில் சும்பன் மற்றும் நிசும்பன். இடம்: செங்கல்மேடு அரியலூர் மாவட்டம்.