கேள்வி: ஐயனே மகாபாரதத்தை எழுதுவதற்காக விநாயகர் பெருமான் தன் தந்தத்தை முறித்ததாக புராணத்தில் கேட்டிருக்கிறேன் அதன் காரண காரியத்தை விளக்குங்கள்:
வியாச பகவான் ஞான திருஷ்டியிலே அருளிய மகாபாரதத்தை வியாசரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப விரைவாக பதிவு செய்ய வேண்டும் என்றால் அத்தகைய ஆற்றல் இறைவனுக்குத்தான் உண்டு. அந்த இறைவன் அந்த பரம்பொருள் விநாயக வடிவமெடுத்து எழுதியது என்பது உண்மை மட்டுமல்ல. அப்பொழுது எழுதப்பட்ட அந்த சுவடி இன்றும் பூமியிலே இமயமலை சாரலிலே இருக்கிறது என்பது உண்மையோ உண்மை. வால்மீகி எழுதிய அந்த மூல நூலும் இன்னும் இருக்கிறதப்பா. இவைகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆற்றல் மிக்க வியாச பகவான் எண்ணினால் அந்த எண்ணங்கள் அப்படியே அந்த ஓலையில் பதியட்டும் என்றால் பதிவு செய்யப்பட்டிருக்கும் அல்லது வியாசபகவான் என்ன எண்ணுகிறாரோ அவையெல்லாம் அந்த ஓலையிலே பதியட்டும் என்று விநாயகப் பெருமான் எண்ணியிருந்தாலும் அது பதிந்திருக்கும். இருந்தாலும் மனித ரீதியாக ஒரு மனிதன் எப்படி செயல்பட வேண்டும்? ஒரு செயல் என்று வந்துவிட்டால் எல்லாவற்றிலும் இறையாற்றலை பயன்படுத்த தேவையில்லை. தன்னிடம் ஆற்றல் இருக்கிறது என்பதற்காக எல்லா செயலையும் அந்த ஆற்றலை கொண்டு தான் செய்ய வேண்டும் என்பதில்லை என்பதை மனிதனுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக இறைவன் நடத்திய நாடகம்.
இடபம் என்றால் காளை. காளையுடன் இருக்கும் சிவனின் உருவத்திருமேனி இடபாரூடர் என்று வழங்கப்படுகிறது.
ஏறமர் கடவுள் விடையேறிய விமலர் விடையேறுவர் விருஷப வாகனன் பெற்றம் ஊர்ந்தவர்
என்று வேறு பெயர்களும் உள்ளது.
திரிபுர அசுரர்களின் தொல்லை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருந்தது. இனி பொருக்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று நந்தி தேவரின் அனுமதியிடன் சிவபெருமானை தரிசித்தனர். சிவனும் போருற்கு வேண்டிய ஆயுதங்களை தயார் நிலையில் வைக்கும் படி ஆணை இட்டார். ஆயுதங்கள் தயாரானதும் சிவபெருமானும் உமாதேவியும் தரும தேவதையாகிய வெண்ணிற ரிஷப வாகனத்தில் கைலாய மலையை விட்டு இறங்கி வந்தனர். இதனைக் கண்ட அனைவரும் சிவதுதி சொல்லத் துவங்கினர். பின்னர் தேவர்களால் செய்யப்பட்ட தேரினைக் கண்ட சிவபெருமான் ரிஷப வாகனத்தை விட்டு இறங்கி மேரு மலையை வில்லாகக் கொண்டு தேர் ஏறியவுடன் தேரின் அச்சு முறிந்தது. இதனைக் கண்ணுற்ற விஷ்ணு சிவன் பால் கொண்ட அன்பினால் இடப உருவமாகி சிவனைத் தாங்கினான். இதனால் விஷ்ணுவிற்கு தன்னைத் தவிர வேறொருவருக்கும் சிவனைத் தாங்கும் சக்தி இல்லை என்ற தலைகனம் ஏற்பட்டது.
இதனை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவிற்கு பாடம் புகட்ட எண்ணி தன்கனத்தை அதிகப்படுத்தினார். இதனைத் தாங்காத ரிஷப வாகனமாகிய விஷ்ணு இரு செவி இரு கண்கள் மூக்கு போன்றவை பிதுங்கியும் இரத்தம் வடிந்தும் செயலிழந்து தரையில் வீழ்ந்தார். இதனால் தேவர்கள் பயத்துடன் சிவதுதிகளை சொல்லி அவரை சாந்தப்படுத்தினர். விஷ்ணுவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். விஷ்ணுவின் தலைகனம் அழிந்தது. மனம் மகிழ்ந்த சிவபெருமான் பூமியில் இறங்கினார். விஷ்ணுவிடம் என்ன வரம் வேண்டுமென்றுக் கேட்க விஷ்ணுவும் சிவபெருமானின் வாம பாகத்திலிருந்து அவரைத் தாங்கும் சக்தியை தனக்கு கொடுக்க வேண்டும் என வேண்டினார். அதனை நிறைவேற்றிய சிவபெருமான் விஷ்ணுவின் விருப்பப்படி அரியாகிய இடத்தை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏறியமர்ந்தார். எனவே சிவபெருமானுக்கு இடபாரூட மூர்த்தி என்ற பெயர் உண்டானது.
விராதனூர் – மதுரை திருலோக்கி – திருவிடை மருதூர் அருகில் திருத்துறையூர் – பண்ருட்டி குடுமியான்மலை – புதுக்கோட்டை சங்கரன் கோவில் – சங்கர நாராயணர் கோவில் விசயமங்கை – கோவிந்தபுத்தூர் – சுதை வடிவில் உள்ளது. திருக்கோலக்கா – நாகப்பட்டினம் – சுதைவடிவில் உள்ளது. திருப்பழுவூர் – கீழைப் பழுவூர் அரியலூர் – சுதை வடிவில் உள்ளது. திருவான்மியூர் – சுதை வடிவில் உள்ளது. திருவேற்காடு – சுதை வடிவில் உள்ளது.
பெரும்பால சிவன் கோவில்களில் இந்த வடிவம் கற் சிற்பமாகவே காணப்படுகிறது.
கேள்வி: பூமாதேவி தான் இந்த பூமியை தாங்கிக் கொண்டு இருக்கிறாள் என்பது உண்மையா? பூமாதேவி யார்? அவர் எந்த லோகத்தில் இருக்கிறார்?
பூமியை மட்டுமல்ல அண்ட சராசரங்களையும் தாங்கிக் கொண்டிருப்பது இறைவன். இறைவன் தர்மத்தின் வடிவம். எனவே நீ எதை கேட்டாலும் அது இறைவனின் மறுபடிவமாகத்தான் இருக்கும். இதை வேறு வகையாக கூறப்போனால் ஒரு மனிதன் இல்லத்தில் இருக்கும் பொழுது குடும்பத் தலைவன். மகனுக்கு தந்தை. மனைவிக்கு கணவன். அலுவலகம் சென்றால் அவன் அதிகாரி. இப்படி இடத்திற்கு தகுந்தாற் போல் ஒரு மனிதன் தன் நாமத்திலே சில மாற்றங்களை பெறுகிறான் செயலுக்கு ஏற்ப. அப்படி இறைவன் பூமியை தாங்குவதாக நம்பும் பொழுது பூமா தேவியாக போற்றப்படுகிறார் அவ்வளவுதான்.
சிவபெருமான் சந்திரனை தனது தலையில் தரித்த கோலமே சந்திரசேகரமூர்த்தி வடிவமாகும். சேகரன் என்பதற்குக் காப்பவன் என்று பொருள். சந்திரன் முழுதுமாக தேய்ந்து விடாமல் காத்து அருளியதால் இறைவனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.
பிறையோன் பிறை சூடிய பெம்மான் பிறைசூடன் தூவெண்மதிசூடி பிறையன் மதிசெஞ்சடையோன் இந்து சேகரன் – இந்து என்பது சந்திரனின் மற்றொருப் பெயர் மதன சேகரன் – மதனன் என்றாலும் சந்திரனை குறிக்கும் மற்றொரு பெயர். பிறைசூடி மாமதிசூடி
என வேறு பெயர்களும் உள்ளது. சந்திரசேகரர் வடிவம் மூன்று நிலைகளில் இருப்பதாக சுப்பிரபேத ஆகமம் கூறுகிறது.
கேவல சந்திரசேகர் – கேவல என்றால் தனித்து நின்றலாகும். இந்த கேவல சந்திரசேகரர் நிலையில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி தனித்து நிற்கிறார்.
உமா சந்திரசேகர் – இவ்வடிவில் உமையுடன் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி நிற்கிறார்.
ஆலிங்கண சந்திரசேகர்- இவ்வடிவில் சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி உமையை தழுவிய நிலையில் இருக்கிறார்.
நான் முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே இருபத்தியேழுப் பெண்களாகப் பிறந்தது. அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு திருமணம் செய்வித்தார். சந்திரன் திருமணம் நடைப்பெற்ற சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகிக்காமல் தந்தையாகிய தட்சனிடத்தில் கூறினர். தட்சனும் மருமகனை அழைத்து தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி அவர்களுடன் அன்புடன் இருக்கும் படியும் புத்திமதிகள் கூறி அனுப்பி வைத்தார். சிறிது காலத்திற்குப் பின் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது. எனவே மறுபடியும் பெண்கள் தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பம் சகியாது தட்சன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.
சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்து இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனை சந்தித்து தன் குறைகளைச் சொன்னான். நான் முகனோ தன் வேலையில் மகனும் மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை என்று உறுதி கொண்டுள்ளோம். எனவே இக் குறைகளை சிவபெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் எனவே அவரை சரணடையுமாறு சொன்னார். அதன்படி சந்திரன் சிவபெருமானிடம் சரணடைய சிவனும் சந்திரனின் ஒரு கலையை எடுத்து தன் சடையில் வைத்து இனி உன் ஒரு கலைக்கு அழிவில்லை ஆனாலும் தட்சனின் சாபத்தால் தினமொரு கலையாக அழிந்தும் என்னிடம் உள்ளதால் தினமொரு கலையாக வளர்ந்தும் காணப்படுவாய் என அருளாசி கூறினார். சந்திரனைத் தன் சடையில் தரித்ததால் சந்திரசேகரன் ஆனார்.
சந்திரசேகரமூர்த்தியின் திருவுருவம் திருவாரூர் (புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ளது. இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் கோணபிரான் மற்றும் அக்னிபுரீஸ்வரர். பிறை சூடிய சந்திரசேகர மூர்த்தியின் செப்புத் திருமேனிகள் பிள்ளையார் பட்டி திருநெல்வேலி பாபநாசம் தேவதானம் மதுரை வீரபாண்டி கோவிலூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. மேலும் பல புராண கோயில்களில் இவரது திருவுருவம் உள்ளது.
கேள்வி: ஒரு ஜீவன் உடலை விட்டு பிரிந்த பிறகு 12 நாட்கள் காரியங்கள் செய்ய வேண்டும் என்று நியதி இருக்கிறது. தட மாந்தர்கள் இதை எப்படி கடைபிடிக்க வேண்டும் ஐயனே?
பொதுவாக இதை பலவிதமாக கூறலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமாக வழக்கம் இருக்கிறது. இந்த வழக்கத்தை என்னால் மீற முடியவில்லை என்பவரை விட்டுவிடலாம். எம்மை பொறுத்தவரை ஒரு குடும்பத்திலே ஒரு ஆத்மா பிரிகிறது என்றால் அதனால் அந்த குடும்ப உறுப்பினர்கள் மனோரீதியாக கடுமையான உளைச்சல் அடைகிறார்கள் என்றால் அந்த மனம் ஆறுதல் பெரும் அளவிற்கு கால அவகாசத்தை கொடுப்பது தவறல்ல. அங்ஙனம் இல்லாமல் அகவை எனப்படும் வயது அதிகமாகி ஒரு ஆத்மா பிரிகிறது என்றால் பெரிய அளவிலே அந்த குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றால் வழக்கம் போல் அவர்கள் இறை சார்ந்த கடமைகளை செய்யலாம். ஆலயம் செல்லக் கூடாது அங்கு செல்லக் கூடாது இங்கு செல்லக்கூடாது என்பதெல்லாம் நாங்கள் வகுத்ததல்ல.
இவைகள் எதற்காக கூறப்பட்டது? என்றால் ஒரு குடும்பம் ஒருவனை மிகவும் பால்ய வயதில் இழந்து விட்டால் அந்த குடும்பம் அந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தடுமாறும். வேதனைப்படும். அதிலிருந்து அந்த குடும்ப உறுப்பினர்கள் மாறுவதற்கு சில காலங்கள் அவகாசம் வேண்டும். அதுவரை அந்த குடும்ப உறுப்பினர்கள் இயல்பு வாழ்விற்கு வர இயலாது என்பதற்காகத்தான் இதுபோன்ற சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன. இது மனித ரீதியானது. ஆத்மா என்பது நீ கூறுவது போல் படிப்படியாக இத்தனை தினங்கள் அதனை தினங்கள் என்பதெல்லாம் முழுக்க முழுக்க எல்லா ஆத்மாக்களுக்கும் பொருந்தாது. இவையும் வினைப்பயனுக்கேற்ப மாறும். அதாவது உடலை விட்டு பிரிந்த அடுத்த கணமே மறு பிறப்பு எடுக்கக்கூடிய ஆத்மாக்கள் உண்டு. மனித கணக்கிலேயே பல வருடங்கள் கழித்து பிறப்பு எடுக்கக்கூடிய ஆத்மாக்களும் உண்டு. அடுத்த கணமே இறையோடு இரண்டற கலக்கின்ற ஆத்மாக்களும் உண்டு. அடுத்த கணமே தேவர்களாக தேவதைகளாக மாறுகின்ற ஆத்மாக்களும் உண்டு. பாவங்கள் அதிகமாகவும் புண்ணியங்கள் குறைவாகவும் செய்தவர்கள் பெரும்பாலும் அந்த உடலையும் அந்த இல்லத்தையும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். இன்னும் கூறப்போனால் உடலை விட்டு பிரிவதுதான் மரணம் என்கிற நிகழ்வு. இந்த நிகழ்வு தனக்கு நிகழ்ந்ததை அறியாமல் குழப்பத்தோடு அலைவார்கள். இந்த குழப்பத்தை நீக்கி அந்த ஆத்மாவை அல்வழிப்படுத்ததான் இறை வைத்துள்ள சடங்குகள்.
கேள்வி: ஐயனே மனிதர்களாகிய நாங்கள் எந்த விதத்தில் சிறந்தவர்களாக இருக்கிறோம்? தங்களுடைய எல்லையற்ற கருணையை கொண்டு மெய்சிலிர்த்து வியந்து நமஸ்கரிக்கிறோம். இறையும் தாங்களும் எங்களின் மேல் இத்தனை பரிவும் அன்பும் வைத்ததன் காரணம் என்ன?
இறைவன் அருளாலே இதற்கு வேறு விதமாக கூறினால் உனக்கு புரியும். ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்ற நீயோ அல்லது உன்னொத்து இருக்கக் கூடியவர்களோ அதைப் போல் அந்த நிறுவனம் தயாரிக்கின்ற தயாரிப்புகளையும் பிற போட்டி நிறுவனம் தயாரிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்து அவ்வப்போது தன் நிறுவன தயாரிப்புதான் தலை சிறந்ததாக இருக்க வேண்டும் என்றெல்லாம் குழுக்களாகக் கூடி விவாதித்து முடிவெடுப்பதும் தாம் தம் தயாரிப்பு எப்பொழுதுமே தலைசிறந்ததாக இருக்க வேண்டும் என்பதை ஒரு நேர்மையான நிறுவனம் எப்பொழுதுமே விட்டுக் கொடுக்காமல் இருக்கும். தரத்திற்கு ஒரு முன்னுரிமை தரும். பொதுவாக விதிவிலக்குகளாக சிலர் இருக்கலாம். சிலர் குறுக்கு வழியில் அதனை மேம்படுத்தவோ அல்லது தகுதியே இல்லாத ஒரு பொருளை தயாரித்து விட்டு வெறும் விளம்பரங்கள் மூலமாக அதற்கு ஏகப்பட்ட தகுதி இருப்பதாக கூறி கூவி விற்பனை செய்கிற செய்கின்ற தந்திரங்களும் உண்டு. அவற்றை விட்டு விட்டு ஒரு நேர்மையான மனிதன் நடத்தும் ஒரு நேர்மையான நிறுவனம் பெரும்பாலான நேர்மையான மனிதர்களை கொண்ட நிறுவனம் பெரும்பாலும் நேர்மையான ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் நேர்மையாகவே பொருளை தயாரித்து சட்ட திட்டங்களை மதித்து தரமாக இருக்க வேண்டும் என்று விரும்பும். ஆனால் அதனையும் மீறி தயாரிப்பிலேயே குறை வரும் பொழுது அதனை நிவர்த்தி செய்ய நிறுவனம் போராடும். மீண்டும் அது போன்ற தவறுகள் வரக்கூடாது என்று.
இறைவனும் அப்படித்தானப்பா. தான் ஒவ்வொரு படைப்பும் தவறில்லாமல் குற்றமில்லாமல் பிழையில்லாமல் மிக சரியாக திருத்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் படைக்கிறார். அப்படித்தான் பெரும்பாலும் அவரின் ஆதி படைப்பு இருக்கிறது. ஆனாலும் கர்ம வினையும் மாயையும் ஒருவனை நல்லவனாக வாழ விடுவதில்லை. எனவே தான் பொருள்கள் அஃறினை. அதனை திருத்தமாக ஒரு மனிதனோ இயந்திரமோ செய்து விடும். ஆனால் உணர்வு பெற்ற உயிர்களும் குறிப்பாக மனிதர்களும் அப்படியல்ல. அவனை அவ்வப்போது நெறிப்படுத்த வேண்டி இருக்கிறது. நல்வழிப்படுத்த வேண்டி இருக்கிறது. அதற்குதான் இறைவன் மகான்கள் மூலமாக ஞானிகள் மூலமாக தத்துவங்களையும் ஞானக் கருத்துக்களையும் கூறி இது பாவம் இது புண்ணியம் இந்த வழி செல்லலாம் இந்த வழி செல்லக்கூடாது என்றெல்லாம் எப்பொழுதுமே அறிவுறுத்திக் கொண்டேயிருக்கிறார். இப்பணியை இறைவன் எம்போன்ற மகான்கள் மூலமாக எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார். இது ஒரு விளக்கம்.
இன்னொன்று எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ அப்படி வாழ ஒரு மனிதன் தனக்குத்தானே போராடி ஒரு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். நூற்றுக்கு நூறு சத்தியம் பேசுகின்ற தன்மையாலும் நூற்றுக்கு நூறு தர்மத்தை கடைபிடிக்கின்ற தன்மையாலும் தன்னை போராடி மாற்றிக் கொள்ள வேண்டும். பிறரோடு தொடர்பு கொள்கின்ற மனிதன் கூடுமானவரை யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வார்த்தையை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் எந்த ஒரு நியாயமான காரணத்தின் அடிப்படையில் கூட உறவாக இருக்கலாம் நட்பாக இருக்கலாம் பெற்ற பிள்ளையாக இருக்கலாம் உரிமை இருக்கிறது என்பதற்காக அடுத்தவரின் மனம் புண் படும்படியாக (அது நல்லதற்காக கூட இருக்கலாம்) அப்படி ஒருவன் நடந்து கொண்டு விட்டால் அது உடனடியாக யாருக்கும் எந்த ஒரு பலனும் தராவிட்டாலும் பின்னர் அதுவும் ஒரு பாவப் பதிவாக மாறி அவனுக்கு வேறு விதமான துன்பங்களையும் சேர்த்து அழைத்து வருகிறது. எனவே கோடான கோடி உயிர்களிலே பிறந்து இறந்து தன்னைத்தான் உணர முடியாமல் வெறும் ஜடம் போல் வாழ்ந்து மறையும் உயிர் கூட்டங்களிலே சற்றே மனிதனுக்கு ஒரு விதமான வரம் கொடுக்கப் பட்டிருக்கிறது. என்னதான் மனிதன் விதியின் கைப்பாவையாக இருந்தாலும் சற்றே சிந்திக்கும் ஆற்றலும் தரப்பட்டிருப்பதால் இது தக்கது இது தகாதது இவ்வழியில் செல்லலாம் இவ்வழியில் செல்லக்கூடாது என்று ஒரு மனிதனுக்கு புரியும் படியான ஓரளவு சிந்தனையாற்றால் தந்துதான் இறைவன் படைத்திருக்கிறார். ஆனாலும் மனிதன் என்ன எண்ணுகிறான்? உடனடியாக லாபம் தராத எதையும் செய்ய மனிதன் விரும்பவில்லை. நேர்மையாக நடப்பதும் உண்மையை பேசுவதும் எப்பொழுதுமே அறத்தை செய்வதுமாக இருந்தால் உடனடியாக எந்த பலனும் இல்லையே? எப்பொழுதுமே குறுக்கு வழியில் சென்றால் தான் வெற்றி உடனடியாக வருகிறது என்று எண்ணி மேலும் அவன் தவறையே செய்கிறான். தவறு தொடர்ந்து செய்ய செய்ய பாவமாக மாறுகிறது. பாவம் சேர சேர எல்லாவிதத்திலும் அது துன்பமாக மாறி தன்னுடைய பங்கை அளித்துக் கொண்டே இருக்கிறது. சுருக்கமாக கூறப்போனால் இறை ஒரு மனிதனிடம் எதிர்பார்ப்பது மகான்கள் ஒரு மனிதனிடம் எதிர்பார்ப்பது என்ன? தவறு செய்வது இயல்பு. ஏனென்றால் பலகீனம் கொண்ட மனிதன் தவறு செய்யாமல் இருக்க இயலாது. அதனால்தான் மனதை முன்னரே கூறியது போல் வைரம் போல் வைராக்கியம் பெற்ற மனமாக மாற்றிக் கொண்டால் ஒரு மனிதன் தவறு செய்யாமல் இயல்பாக நல்லவனாக வாழக்கூடிய ஒரு நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்ள முடியும். அப்படி செய்ய வேண்டும் என்பதையே ஒவ்வொரு மனிதனிடமும் இறையும் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
சோமாஸ்கந்தர் என்பது சமஸ்கிருத மொழிச்சொல். சோமன் எனும் சிவபெருமான் ஸ்கந்தர் எனும் முருகனுடனும் உமையுடனும் இருக்கும் வடிவம் சோமாஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறது. இளமுருகு உடனுறையும் அம்மையப்பர் சிவனுமைமுருகு என்ற தூய தமிழ் பெயர்களும் உண்டு.
சூரபத்மனின் கொடுமைகள் எல்லை கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாங்க முடியாத விண்ணோர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். வல்லமை பெற்ற தங்கள் மகனால் அவனது வாழ்வு முடிய வேண்டுமென அவர்கள் தங்களது விருப்பத்தினை தெரிவித்தார்கள். சிவபெருமானும் அவர்களுக்காக மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகத்திலுமுள்ள நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளிக்கொண்டு வந்தார். அப்பொறிகள் அகிலமெல்லாம் பரவின. இதனைக் கண்ட தேவர்கள் கலங்கினர். பார்வதி தேவி தனது கொலுசுமணி சிதற அங்கிருந்து கிளம்பினாள். சிவபெருமான் வாயு தேவனையும் அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளை கங்கையில் விடச் சொன்னார். கங்கை அப்பொறிகளை சரவணப் பொய்கையில் சேர்த்தது.
ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களுடனும் பிறந்த இக்குழந்தையை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவியின் கொலுசுமணியில் இருந்து சிதறிய நவரத்தினங்கள் நவ வீரர்களாயின. இதற்கிடையே சரவணப் பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் முன் செல்ல தேவர்கள் பின் தொடர்ந்தன. அங்கு ஆறு குழந்தைகளை பார்வதி ஒன்றாக தூக்குகையில் அவை ஒரே குழந்தையாயிற்று. அந்த ஒரேக் குழந்தை ஆறு முகத்துடனும் பன்னிரு கரங்கள் கொண்டதாகவும் விளங்கியது. ஆறு முகங்களைக் கொண்டதால் ஆறுமுகன் என்றும் கந்தன் என்றும் அழைத்தனர். பின்னர் மூவரும் கயிலை மலையை அடைந்தனர். அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றமே சோமாஸ் கந்த மூர்த்தி ஆகும்.
இந்திரன் அசுரர்களின் துன்பத்தில் இருந்து மீள்வதற்காக திருமாலை வழிபட்டான். அவனுக்கு திருமால் தனது இதயத் தாமரையில் வைத்து வழிபட்டு வந்த சோமாஸ்கந்த மூர்த்தியை வழங்கினார். அதனை இந்திரன் இந்திரலோகத்தில் வைத்து பூஜித்து வந்தான். அதன் பலனாக முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியோடு அசுரர்களை வென்றான். இந்திரன் வைத்திருந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தனக்குத் தரும்படி முசுகுந்த சக்கரவர்த்தி கேட்டார். அதற்கு இந்திரன் இது திருமாலுடையது. அவர் சம்மதம் இல்லாமல் நான் தரமுடியாது என்று கூறினான். இதையடுத்து முசுகுந்த சக்கரவர்த்தி திருமாலை வணங்கி அந்த சிலையை பெறுவதற்கான அனுமதியை பெற்றான். ஆனாலும் அந்தச் சிலையை கொடுக்க மனம் இல்லாத இந்திரன் தேவ சிற்பியைக் கொண்டு அதே போன்று 6 வடிவங்களைச் செய்தான். அதில் சரியான சிலையை முசுகுந்த சக்கரவர்த்தி எடுத்துக் கொண்டார. இதனால் மற்ற சிலைகளையும் அவனிடமே கொடுத்து பூலோகத்தில் வைத்து பூஜிக்கும்படி இந்திரன் அறிவுறுத்தினான். திருமால் இந்திரன் இருவரும் பூஜித்த சோமாஸ்கந்த மூர்த்தியை முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் நிறுவினார். மற்ற ஆறு மூர்த்திகளையும் திருநாகைக்காரோணம் திருநள்ளாறு திருக்காறாயில் திருவாய்மூர் திருமறைக்காடு திருக்கோளிலி ஆகிய தலங்களில் நிறுவி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தார். இத்தலங்கள் சப்த விடங்கத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
குமார சம்பவம் என்ற அற்புதமான காவியத்தை இயற்றிய காளிதாசன் உலகத்துக்கே பெற்றோர்களைப் போல இருக்கும் வகையில் அந்த தோற்றத்தைத் தருகிறார்கள் என எழுதி உள்ளார். குமரகுருபரர் தன்னுடைய நூலான பிறப்பான் திரட்டு என்னும் நூலில் இந்த மூன்று உருவங்கள் சத்வம் தமஸம் மற்றும் ராஜாஸ் என்ற மூன்று குணங்களையும் குறிப்பிடுவதாகவும் சோமஸ்கந்தனை நகிலம்குலவி (குழந்தை) எனவும் எழுதி உள்ளார். குமாரவேல் கந்தபுராணத்தில் சிவன் பார்வதி இருவரின் தோற்றங்களை இரவும் பகலும் எனவும் ஸ்கந்தனை மாலையைப் போன்றது என்று கூறுகிறது. சத் – சக்தி சித் – சிவம் ஆனந்தம் – முருகன். இந்த மூவரின் ஒருங்கிணைந்த வடிவமே சோமாஸ்கந்த வடிவம். உண்மை அறிவு இன்பம் ஆகிய மூன்று இயல்புகளின் ஒருங்கிணைந்த அழகிய வடிவமே சோமாஸ்கந்த வடிவம் என்று தத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள மலைகள் வெள்ளிமலை நீலிமலை மருதமலை உள்ளது. இதில் வெள்ளி மலை சிவன் உருவம். நீலிமலை உமை உருவம். மருதமலை கந்தன் உருவம் என மூன்று மலைகளும் சோமாஸ்கந்த வடிவில் விளங்குவதாக பேரூர்ப் புராணம் கூறுகிறது. மலைகளைப் போல் ஆறுகளில் அலகாபாத்தில் கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கின்றன. இவற்றுள் கங்கை நதி சிவபிரானை ஒத்து செந்நிறமாயும் யமுனை நதி உமையவளை ஒத்ததாய் நீலநிறம் உடையதாயும் சரஸ்வதி நதி கந்தன் நிறத்தினதாய் வெண்மையாகவும் சோமாஸ்கந்த வடிவ அமைப்பில் உள்ளதாக திருவாரூர் நான்மணிமாலை கூறுகிறது. குமரகுருபரரும் இதே கருத்தை கூறுகிறார்.
திருநெல்வேலி நெல்லயப்பர் கோவில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குமரக் கோட்டம் காமாட்சியம்மன் கோயில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பைஞ்ஞீலி குடை வரைக் கோயில் கும்ப கோணத்துக்கு அருகில் உள்ள நாச்சியார் கோயில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கருகாவூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கள்ளி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்தியமங்கலம் பவானீஸ்வரர் திருத்துறைப் பூண்டியில் உள்ள வர்தமானஸ்வரர் கோயில் உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்தர் வடிவம் இலங்கை திருக்கேதீச்சரத்தில் உள்ளது.
ஆகிய கோயில்களிலும் மேலும் பல பழமையான கோயில்களிலும் சோமாஸ் கந்த மூர்த்தி உள்ளார். ராஜ சிம்ம பல்லவர் என்ற இரண்டாம் நரசிம்ம வர்மன் தான் எழுப்பிய சிவாலயங்களில் கருவறையின் உள்ளே சோமாசுகந்த புடைப்புச் சிற்பத்தினை செதுக்கியுள்ளார். சோமாஸ்கந்தமூர்த்தி வடிவத்தை பித்தளை உலோகங்களில் சோழர்கள் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அறுபத்து மூவரில் சிறுதொண்ட நாயனாருக்கு மட்டும் சோமாஸ்கந்த வடிவில் காட்சியளித்துள்ளார் இறைவன்.
சிவபெருமான் வெண்ணீறு பூசிய மேனியுடன் மான் மழு அஞ்சேல் அபயம் தாங்கிய நான்கு கரங்களுடன் சுகாசனத்தில் அமர்ந்திருக்க அருகே உமாதேவி குவளை மலர் ஏந்தி அமர்ந்திருக்க உமையவளை அணைத்தபடி அருட்காட்சி அளிப்பது உமேசமூர்த்தி வடிவமாகும்.
நான்முகன் தன்னுடைய படைத்தல் தொழிலுக்கு உதவியாக நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். திருமாலும் பிரம்மனும் தம்பதியர்களாக இருப்பதைக் கண்ட அவர்கள் நால்வரும் படைப்பு தொழிலை செய்ய விருப்பம் கொள்ளாமல் ஞானத்தினை அடைய விரும்பினார்கள். எனவே ஞானத்தினை கற்க சிவபெருமான் இருக்கும் கையிலை நோக்கி சென்றார்கள். திருமாலும் பிரம்மனும் தம்பதியர்களாக இருப்பது போல் தாமும் உமையுடன் இருப்பதைக் கண்டால் நால்வருக்கும் ஞானம் அடையும் அவர்களின் எண்ணம் ஈடேராது என எண்ணிய சிவபெருமான் தன் அருகே இருந்த உமையையும் சேர்த்து சுற்றியிருந்த அனைவரையும் தன் நெற்றிக் கண்ணால் பார்க்க அனைவரும் எரித்து சிவபெருமானிடம் ஒடுங்கினார்கள். பின் ஞானத்தை தேடி தன்னிடம் வந்த நால்வருடன் தனித்து அமர்ந்து நால்வருக்கும் ஞானத்தினை வழங்கினார். பின்பு தனது இடத்தோளைப் பார்த்தார். அதில் இதுவரை சிவபெருமானோடு ஒன்றியிருந்த உமையம்மை வெளிப்பட்டு சிவபெருமானின் இடப்புறம் அமர்ந்தாள். இருவரும் சேர்ந்து அருள் செய்ய சிவபெருமானிடம் ஒடுங்கிய அனைவரும் வெளிப்பட்டார்கள். அனைவரும் இருவரையும் வணங்கி நின்றனர். இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார்கள். உலகமே செழித்தது. உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் படைத்து காத்து துயர்துடைத்து அனைத்தையும் வாழ வைக்கும் சக்தியாக உமையவள் சிவபெருமானின் இடது பாகத்தில் வீற்றிருந்த கோலத்தைக் கண்டு ஆனந்தப்பட்டனர். சிவபெருமானது பெயரில் உமையவளின் பெயரும் சேர்ந்து உமேச மூர்த்தி ஆனது.
கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயிலில் மூலவர் இம்மூர்த்தியின் திருப்பெயரிலேயே இருக்கிறார். கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிடைமருதூர் கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட பல பழமை வாய்ந்த கோயில்களில் இம்மூர்த்தியின் திருவுருவம் உள்ளது.
கேள்வி: சில சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சிறப்பானது என்று சொல்லப்படுவது பற்றி:
இறைவனை உள்ளன்போடு ஒரு மனிதன் இப்பொழுதெல்லாம் வணங்குகிறானோ எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வணங்குகிறானோ அப்படி வணங்குகின்ற அந்த குணம் கொண்ட மனிதன் மனித நேயத்தையும் மறக்காமல் இருக்கிறானோ மனித நேயத்தோடு தான் கடமைகளையும் சரிவர ஆற்றுகின்றானோ அப்படி வாழ்கின்ற மனிதனுக்கு எல்லா காலமும் பிரதோஷம்தான். எல்லா காலமும் சதுர்த்திதான். எல்லா காலமும் அவனைப் பொறுத்தவரை மார்கழி மாதம்தான். எல்லா காலமும் சிவராத்திரிதான். எல்லா காலமும் நவராத்திரிதான். எனவே இது போன்ற திதியின்படி நட்சத்திரத்தின்படி சில விசேஷங்கள் வகுக்கப்பட்டது. அன்றாவது ஒரு மனிதன் தன் புறக் கடமைகளை விட்டுவிட்டு முழுக்க முழுக்க இறை வழியில் செல்லட்டுமே என்பதற்காகத்தான். எனவே எல்லா தினங்களும் சிறப்பான தினங்களே. ஒரு மனிதனை நடந்து கொள்வதை பொறுத்து.