ஸ்ரீ மண்ணுடையார்

இந்திய கோயில்களில் தங்கமும் விலை மதிக்க முடியாத பொருளும் நிறைய உள்ளது என்று வெளி நாட்டில் இருந்து கொள்ளையடிக்க வந்த கும்பல் ஊர் ஊராகச் சென்று கோயில்களை இடித்து இறைவனது திருமேனிகளை உடைத்தும் பஞ்ச லோக சிலைகளையும் கோயில் சொத்துக்களையும் திருடிக் கொண்டு வந்தது. இப்படி வந்தவர்கள் தமிழகத்தின் உப்பிலியப்பன் கோயிலுக்கும் வந்தார்கள். மண்பாண்டம் செய்யும் குயவர் ஒருவர் இறைவனது திருமேனியைக் காக்க ஸ்ரீ தாயார் ஸ்ரீ பெருமாள் திருமேனிகளை சூளையில் மறைத்து வைத்து சூளையைக் கொளுத்தி விட்டார். கொள்ளையடிக்க வந்த கும்பல் இது என்ன என்று கேட்ட போது இது மண் பாண்டங்கள் செய்யும் சூளை என்று சொன்னார். வந்தவர்கள் சென்ற பின் சூளையின் நெருப்பை அணைத்து திருமேனிகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வைத்தார். இந்தக் குயவருடைய கைங்கர்யத்திற்காக அவருக்கு ஸ்ரீ மண்ணுடையார் என்ற திரு நாமத்தை கொடுத்து பெருமாளை எப்போதும் அவர் வணங்கும்படியான சிலை செய்து பெருமாள் சன்னதிக்கு நேரே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கோயில் பிரசாதம்

இராமானுஜரின் சிறு வயதில் யாதவ பிரகாசர் என்பவர் குருவாக இருந்தார். இவர் தன்னுடைய பல்லலாக்கில் ஒரு நாட்டின் வழியாக சென்று கொண்டிருந்தார். பல்லக்கை இராமானுஜர் உட்பட அவரது சீடர்கள் தூக்கிக் கொண்டு சென்றார்கள். யாதவ பிரகாசர் தனது நாட்டின் எல்லைக்குள் வந்திருப்பதை அறிந்த அந்த நாட்டின் அரசர் அவரை வரவேற்று வணங்கி தன்னுடைய மகளை ஒரு பிரம்மராட்சசன் என்ற பேய் பிடித்திருப்பதாகவும் அந்த பேயை ஓட்டி தனது மகளை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். யாதவ பிரகாசர் அரசரின் வேண்டுகோளை ஏற்று அரசனின் மாளிகைக்கு சென்றார். அங்கு அவரது மகளைப் பார்த்த யாதவ பிரகாசர் அவளுடைய உடம்பிற்குள் இருந்த பிரம்ம ராட்சனைப் பார்த்து இந்த உடம்பை விட்டு ஓடிப்போ என்றார்.

யாதவ பிரகாசரைப் பார்த்து சிரித்த பிரம்ம ராட்சசன் நீ சொன்னால் நான் போக வேண்டுமா? நான் யார் தெரியுமா? நீ யார் தெரியுமா? என்று பேச ஆரம்பத்தது. நீ சென்ற ஜென்மத்தில் ஒரு உடும்பாக பிறந்து ஒரு கோயிலில் கிடந்தாய். கோயிலில் வருபவர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுப்பார்கள். அந்த பிரசாதத்தை அவர்கள் சாப்பிடுவார்கள். அதில் சிதறும் பிரசாதத்தை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவன் நீ. அப்படி வாழ்நாள் முழுவதும் கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்தாய். அதில் புண்ணியத்தை நிரம்ப பெற்றாய். அதில் கிடைத்த ஞானத்தை வைத்து இந்த ஜென்மாவில் மனித பிறப்பெடுத்து வேதம் கற்றுக் கொண்டு பிராமணனாக குருவாக நிற்கிறாய். நான் யார் தெரியுமா? அந்தணனாக பிறப்பெடுத்து அந்தணனாக வாழ்ந்து கோயிலில் வேதம் சொல்லி யாகம் கொண்டிருந்தேன். இறைவனைப் பற்றிய சிந்தனை இல்லாமல் சொல்லில் மந்திரத்தை தவறாக சொல்லியும் பெயரளவிற்கு செயலில் யாகத்தையும் செய்து கொண்டு மனம் போன போக்கில் தவறுகள் செய்து கொண்டு வாழ்ந்தபடியால் பிரம்மராட்சசனாக பிறப்பெடுத்தேன். என்னைப் பொறுத்தவரையில் நீ ஒரு உடும்பு. ஆகவே நீ சொன்னால் நான் போக மாட்டேன். நீ வந்த வழியே திரும்பிப் போ என்றான் பிரம்மராட்சசன். யாதவ பிரகாசர் என்ன செய்தால் நீ இந்த உடம்பை விட்டு செல்வாய் என்று கேட்டார். உன்னுடைய பல்லக்கை சுமந்து கொண்டு வரும் இராமானுஜர் தனது காலை எனது தலையில் வைத்து நீ போ என்றால் நான் சாப விமோசனம் பெற்று இந்த உடம்பை விட்டு சென்று விடுவேன் என்றது. யாதவபிரகாசரும் இராமானுஜரை அழைத்து பிரம்மராட்சனின் தலைமீது காலை வைக்க சொன்னார். உடனடியாக பிரம்மராட்சனும் சாப விமோசனம் பெற்று அரசனின் மகளின் உடம்பை விட்டு சென்று விட்டான்.

கோயில் பிரசாதம் கொடுக்கப்பட்டு அதில் சிந்திய உணவை சாப்பிட்ட ஒரு உடும்பே புண்ணியத்தைப் பெற்று அதன் பலனாக ஞானத்தை பெற்று குருவாக உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார். உடும்பு பிறப்பை விட மேன்மையாக பிறப்பு மனிதப் பிறப்பு. இவர்களுக்கு கோயிலுக்கு செல்வதற்கும் இறைவனுக்கு பிரசாதம் படைப்பதற்கும் அதனை சாப்பிடுவதற்கும் உண்டான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையில் தர்மப்படி வாழ்ந்து தினமும் சிறிது நேரம் ஒதுக்கி கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு கோயிலின் பிரசாதம் சாப்பிட்டு வாழ்ந்தாலே விரைவாக இந்த பிறவிக் கடலை கடந்து இறைவனை அடைந்து விடலாம்.

காஞ்சி புராணம் முன்னுரை

காஞ்சி புராணம் முன்னுரை” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 13-04-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

தர்மம்

சாது ஒருவர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த குளத்தில் இறங்கினார். தண்ணீரை கைகளில் அள்ளும் போது தண்ணீருக்குள் ஒளிந்திருந்த முதலை சாதுவின் கால்களை கவ்விப் பிடித்தது. சாது முதலையை கருணையாக பார்த்தார். முதலை சாதுவிடம் பேசியது. சாதுவே இந்தக் குளம் என் ஆளுகைக்குட்பட்டது. இதில் இறங்குபவர்களை நான் தின்று விடுவேன். இன்று நீங்கள் எனது பசியை போக்க வந்திருக்கிறீர்கள். எவ்வளவு கருணையோடு நீங்கள் என்னைப் பார்த்தாலும் நான் உங்களை விட மாட்டேன் என்றது. அதற்கு சாது முதலையே மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லை. என் குருகுலத்தில் படிக்கும் சீடர்களுக்கு கல்வி இன்னமும் நிறைவுபெறவில்லை. நான் இறந்து விட்டால் அவர்களின் படிப்பு பாதியில் நின்று விடும். அந்தக் கவலைதான் என்னை வாட்டுகிறதே தவிர உயிரை இழப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னை நீ விட்டால் அதற்கு உபகாரகமாக ஏதேனும் இருந்தால் சொல் அதனை செய்கிறேன் என்றார் சாது. யோசித்தது முதலை. சாதுவே உங்களை நான் விடுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் தினமும் சீடர்களுக்கு கல்வி சொல்லிக் கொடுக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இந்த குளத்திற்கு எதிரில் அமர்ந்து கொள்ள வேண்டும். தாகத்தோடு வருபவர்கள் குளத்தில் இறங்க பயப்படுகிறார்கள். அவர்களிடம் குளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்ல வேண்டும். அவர்கள் குளத்தில் இறங்குவார்கள். பிறகு நான் அவர்களை கொன்று தின்று விடுவேன். இதைச் செய்வதாக நீங்கள் சத்தியம் செய்து கொடுத்தால் உங்களை விடுவிக்கிறேன். அதே போல சத்தியத்தை மீறினால் கொடுத்த வாக்கை காப்பாற்றாத பாவம் உங்களை வந்தடையும் என்றது முதலை. சாதுவும் முதலை சொன்னதை ஏற்றுக் கொண்டு முதலைக்கு சத்தியம் செய்து கொடுத்தார். முதலை அவரை விடுவித்தது. அங்கிருந்து புறப்பட்டார்.

சாது முதலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி அடுத்த நாள் குளக்கரைக்கு வந்து எதிரில் அமர்ந்தார். சற்று நேரத்தில் ஒரு மீனவன் வந்து சாதுவிடம் பேசினான். ஐயா நான் மீன் பிடிப்பதற்காக வந்திருக்கிறேன். இந்தக் குளத்தில் வலை வீசினால் அதிகமாக மீன்கள் கிடைக்குமா? என்று கேட்டான். மீன் பிடிப்பவரே இந்தக் குளம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது பெருமை வாய்ந்தது என்று குளத்தை மிகவும் பெருமையாக பேசி தொடர்ந்தார். ஆனால் மீன் கிடைக்குமா என்ற உனது கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இந்தக் குளத்தில் வசிக்கும் முதலையிடம் கேள். உன் கேள்விக்கு முதலையிடம் பதில் கிடைக்கும் என்றார். இந்தக் குளத்தில் முதலை இருக்கிறதா? ஐயோ என்று கத்தியவாறு ஓட்டம் பிடித்தான். இதைப் பார்த்த முதலை குளத்திலிருந்து வெளியே வந்தது. சாதுவே இதுதான் சத்தியத்தை காப்பாற்றுகிற லட்சணமா? நீங்கள் அவனிடம் என்ன சொன்னீர்கள்? அவன் ஏன் ஓடுகிறான்? என்று கோபத்தோடு கேட்டது. முதலையே குளத்தைப் பற்றியும் குளத்தில் உள்ள உன்னைப் பற்றி மிகவும் பெருமையாகத்தான் சொன்னேன். நான் சத்தியத்தை மீறவில்லை என்றார் சாது. சாது தம்மை ஏமாற்றுகிறாரோ என்று சந்தேகமடைந்த முதலை உடனே தன்னுடைய குட்டியை கூட்டி வந்தது. சாதுவே இது என் குட்டி. நீங்கள் வைத்திருக்கும் துணியில் இதை மூட்டையாக கட்டி பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு வருபவர்களிடம் என்ன பேசுகிறீர்கள் என்பதை குட்டி கேட்டு என்னிடம் சொல்லும் என்றது.

சாதுவின் பக்கத்தில் மூட்டையில் குட்டி இருந்தது. அன்று அதன் பிறகு யாருமே அந்தப் பக்கம் வரவில்லை. அடுத்த நாள் ஒரு வழிப்போக்கன் வந்தான். அவன் கையில் ஒரு பை இருந்தது. சாதுவே இந்தப் பையில் தங்க நகைகள் இருக்கின்றன. நான் குளத்தில் குளித்துவிட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன். இந்தக் குளம் குளிப்பதற்கு உகந்ததுதானே? என்று கேட்டான். வழிப்போக்கரே குளத்து நீர் மிகவும் நல்ல நீர். குடிப்பதற்கும் குளிப்பதற்கும் மிகவும் சிறப்பான குளம். நேற்று ஒருவன் இப்படித்தான் தனது பொருளை எனது அருகில் இருக்கும் துணியில் வைத்துவிட்டு குளத்தில் இறங்கினான். அவன் இன்னும் வரவில்லை. குளத்தில் இறங்கியவன் வந்ததும் அவனிடம் கேட்டுக்கொள் என்றார் சாது. என்னது நேற்று போனவன் இன்னும் வரலையா? குளத்தில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஓடினான். இதனை கண்ட தாய் முதலை குட்டியிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டது. கோபத்தோடு சாதுவைப் பார்த்து நேற்று யார் வந்து உங்களிடம் மூட்டையை கொடுத்தது என்று கத்தியது. முதலையே நீ தானே என்னிடம் உனது குட்டியை இந்த துணியில் வைத்து விட்டு குளத்தில் இறங்கினாய். அதன்பின் நீதான் வரவேயில்லையே. குளத்தை பெருமையாகத்தானே சொல்லியிருக்கிறேன். நான் சத்தியத்தை மீறவில்லை என்றார் சாது. அடுத்த நாள் அந்த நாட்டு மந்திரி குளக்கரைக்கு வந்தார். சாதுவைப் பார்த்து இந்தக் குளத்தில் குளிக்க வேண்டும். குளம் பாதுகாப்பானதா? என்று கேட்டார். மந்திரியே இந்த குளத்திற்கு செல்லும் பாதையைப் பாருங்கள். மனிதர்கள் குளத்தை நோக்கி நடந்து சென்ற பாதத் தடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை பாருங்கள். அப்படியானால் இந்த குளத்தில் அதிகமான மக்கள் குளிக்க சென்றிருக்கிறார்கள். ஆகவே இந்த குளம் குளிக்க சிறப்பான குளம் போல தெரிகிறது. ஆனால் குளத்திலிருந்து திரும்பிய மனிதர்களின் பாதத் தடங்களும் சரி சமமாக இருக்கிறதா என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். மந்திரி பார்த்தார். குளத்தை நோக்கிச் சென்ற பாதச் சுவடுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. குளத்திலிருந்து கரைக்குத் திரும்பிய பாதச் சுவடுகள் ஏதுமில்லை. குளத்திற்குள் சென்றவர்கள் திரும்பி வரவில்லை குளத்தில் ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்ட மந்திரி சாதுவிற்கு நன்றி சொல்லி அங்கிருந்து நகர்ந்தார். இதனை கண்ட முதலை குட்டியிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டது.

சாதுவைப் பார்த்து முதலை சாதுவே நீங்கள் சத்தியத்தை மீறிவிட்டீர்கள். குளக் கரையில் அமர்ந்து எனக்கு உணவாக வேண்டியவர்களை காப்பாற்றி கொண்டிருக்கிறீர்கள். இது நியாயமல்ல நீங்கள் வாக்கு மீறி விட்டீர்கள் ஆகவே உங்களை பாவம் வந்து சேரும் என்று கத்தியது. அதற்கு சாது முதலையே உன் பார்வையில் உன் கோபம் நியாயமானது உனது பார்வையில் நான் கொடுத்த வாக்கை மீறியவனாக உனக்கு தெரிகிறது. ஆனால் தர்மத்தின்படியே நான் நடந்து கொண்டேன். தர்மத்துக்கு எதிராக எதையும் சாதுவானவர்கள் செய்யமாட்டார்கள். நான் காப்பாற்ற வேண்டிய தர்மங்கள் இங்கு இரண்டு இருக்கிறது. ஒன்று உனக்கு கொடுத்த வாக்கை தவறாமல் காப்பது. இரண்டு இங்கு வந்தவர்களுக்கு குளத்தைப் பற்றி கேள்வி கேட்கும் போது நான் சொல்லும் பதில் சரியாக இருக்கும் என்று என்னை நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவது எனது கடமை. ஒரே நேரத்தில் இரண்டு தர்மங்களை நான் காப்பாற்றியாக வேண்டும். குளத்தை பெருமையாக கூறி உனக்கு கொடுத்த வாக்கையும் காப்பாற்றினேன். அதே போல் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமான வார்த்தையை கூறி அவர்களையும் காப்பாற்றினேன். ஆக நான் தர்மத்தை மீறவில்லை. என்னை பாவம் அண்டாது என்று சொல்லி முதலைக்கு கொடுத்த வாக்கின்படி மீண்டும் குளத்தின் எதிரே சென்று அமர்ந்து கொண்டார். சாது இருக்கும் வரை தனக்கு உணவு கிடைக்காது என்று உணர்ந்த முதலை தனது உணவிற்கு வேறு இடத்திற்கு சென்று விட்டது.

திருமந்திரத்தில் பக்குவன் அபக்குவன்

திருமந்திரத்தில் பக்குவன் அபக்குவன்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 25-01-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

ராம நாமம்

ஒரு பேரரசர் இருந்தார். அவரது ராஜ்ஜூயத்தின் கீழ் பல சிற்றரசுகள் இருந்தன. அவர் தன் மந்திரியுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அரசருக்கு மந்திரி எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதனால் அவர் எங்கு சென்றாலும் மந்திரியையும் உடனே அழைத்துச் செல்வார். மந்திரிக்கு வேட்டையாடுவதில் விருப்பமில்லை. ஆனாலும் அரசரின் உத்தரவாதலால் அவருடன் சென்றார். மந்திரி மகா பக்திமான். செல்லும் இடமெல்லாம் ராம நாமத்தை பக்தியுடன் சொல்லிக் கொண்டே இருந்தார். காட்டில் இருவரும் நீண்ட தூரம் அடர்ந்த காட்டிற்குள் சென்றும் மிருகங்கள் கண்ணில் படவில்லை. அலைச்சலில் இருவரும் மிகவும் களைத்துப் போனார்கள். கொண்டு வந்த நீரும் காலியானது. இருவருக்கும் பசி ஆரம்பித்தது. அப்போது தூரத்தில் சிறிய குடிசை ஒன்று தெரிந்தது.

அரசர் மந்திரியிடம் நாம் இருவரும் ரொம்ப களைப்பா பசியோட இருக்கோம். அந்த குடிசையிலே போய் ஏதாவது சாப்பிட இருக்கான்னு கேட்டுப் பார்க்கலாம் வா என்றார். மந்திரி அரசரிடம் எனக்கும் பசிதான் மிகவும் களைப்புதான். ஆனால் நான் அங்கு வரவில்லை. இப்போது சூரியன் மறையும் நேரம் நான் ராம நாமம் ஜெபிக்கும் நேரம். ஆகவே நான் இங்கேயே இந்த மரத்தடியில் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னுடைய களைப்பையும் பசியையும் ஆற்றிடும். நீங்கள் சென்று பசியாறி வாருங்கள் என்றார். அரசருக்கு மந்திரி மேல் கோபமாக வந்தது. இருந்தாலும் முதல்லே பசிக்கு ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம் என்று அந்த குடிசைக்கு நடந்து போனார். அது ரொம்ப ஏழ்மையான வீடு. அங்கிருந்த பாட்டியிடம் அரசன் தான் யார் என்றும் தனக்கு உணவு வேண்டும் என்றும் பாட்டியிடம் கேட்டார். அன்று காலையில் சமைத்த உணவை அரசருக்கு பாட்டி கொடுத்தாள். அரசர் திருப்தியாக தனது பசியாரும் வரை சாப்பிட்டார். மீண்டும் பாட்டியை அழைத்த அரசன் இந்த காட்டிற்கு தன்னுடன் மந்திரியும் என்னுடன் வந்தார். அவரும் பசியுடன் மரத்தடியில் இருப்பதால் அவருக்கும் உணவு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். உணவு தீர்ந்து விட்டதாகவும் நான் உடனடியாக சமைத்து கொடுக்கிறேன் என்று சொல்லிய பாட்டி விரைவாக அறுசுவை உணவையும் சமைத்து கொடுத்தார்.