
நால்வர் காட்டிய பாதை




மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு வருண் பிரசேதாஸ் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். வருண் பிரசேதாவிர்க்கு ரத்னாகர் பத்தாவது குழந்தையாக பிறந்தார். ரத்னாகர் பிறந்தவுடன் அவருடைய தந்தை மரணமடைந்தார். பெற்றோர்களை இழந்த ரத்னாகர் காட்டிற்கு சென்றார். காட்டிலுள்ளவர்கள் ரத்னாகரை வளர்த்தார்கள். ரத்னாகர் வயிற்றுப் பிழைப்பிற்காக திருட ஆரம்பித்தார்.
ஒரு தடவை கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் நாரதர் மாட்டிக்கொண்டார். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டு நாராயண நாராயண என்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் இவனைப் பார்த்து யாரப்பா நீ. உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு அவன் நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும் என்றான். அப்பா நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குத் பதில் சொன்ன பிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொண்டு போகலாம். நீ யாருக்காக இந்த கொடுமையான கொள்ளையும் கொலையும் செய்கிறாய் என்று கேட்டார். வேறு யாருக்காக என் மனைவி மக்கள் இவர்களுக்காகத்தான். அவர்கள் தானே என் எல்லா சுக துக்கங்களிலும் என்னுடன் இருக்கிறார்கள். எனக்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள். அப்படியா உன் பாவங்களில் அவர்கள் பங்கேற்பார்களா? சொல் என கேட்டார். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரைக் கொடுப்பதாய் சொன்னதில்லை தான். ஆனால் என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை. உன் பாவங்களில் அவர்கள் பங்கு கொள்வார்களா? அதனை முதலில் கேட்டுப்பார். அதிலென்ன சந்தேகம். நான் கொள்ளையடித்துக் கொண்டு வருவதைப் பங்கு கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள். அதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டாயா? இல்லையே அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்கிறேன் நான். நீ அதை இல்லையென்று நிரூபிக்க முடியுமா? ஆகா முனிவரே தப்பித்துப் போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம் முடியாது. இல்லையப்பா நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. போய் அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும். ரத்னாகர் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான்.
திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் அவன். ஓடி வந்தவன் முனிவரின் காலில் விழுந்து சுவாமி நீங்கள் சொன்னது சரிதான் என்று கண்கலங்கிய படியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். என்னப்பா நடந்தது. சுவாமி நீங்கள் சொன்ன படி நான் போய் என் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் எங்களை காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள். அவர்கள் சொன்னதில் தவறில்லையே. மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல் வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. ஆமாம் சுவாமி அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும் நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே சுவாமி என்ன நாமம் அது? ராம நாமம் என் வாயில் நுழையவில்லையே சுவாமி. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன? இதுவா சுவாமி. இது மரா மரம். நீ இந்த மரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. அது போதும். ஆகட்டும் சுவாமி. நீங்கள் யார் என்று இன்னும் சொல்லவில்லையே என் பெயர் நாரதன். திரிலோக சஞ்சாரி என்றும் சொல்வார்கள். நல்லது சுவாமி. நீங்கள் சொன்ன படியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று வணங்கி நின்றான்.
நாரதரும் தன் வழியே சென்றார். அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா மரா மரா என்று ஜபிக்க ஆரம்பித்தான். அது ராம ராம ராம என்று ஒலித்தது. நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. அந்த ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான். அவர் தவம் முடிந்த பின் புற்றிலிருந்து வெளியே வந்தார். புற்றிலிருந்து வந்ததால் வால்மீகி என்று அழைக்கப் பட்டார். வால்மீகி முனிவரின் தன் ஆசிரமத்தை தமசா நதிக்கரையில் அமைத்தார். ஒருநாள் நாரதர் அங்கு வந்தார். அவருக்கு உபசாரங்கள் செய்து வரவேற்ற பிறகு வால்மீகி முனிவர் அவரை நோக்கி நாரதரே இந்த யுகத்தில் முப்பத்திரண்டு கல்யாண குணங்களும் பொருந்திய நேர்மையான் சத்தியம் தவறாத வீர தீர பராக்கிரமசாலியான புருஷன் யாராவது இருக்கிறானா? என்று கேட்டார். அதற்கு நாரதர் ராமபிரானுடைய வரலாற்றை முழுவதுமாக வால்மீகிக்கு எடுத்துரைத்தார். நாரதர் இறுதியில் விடைபெற்று சென்றபின் வால்மீகி தனது சீடர் பரத்வாஜருடன் தமசா நதிக்கரைக்குச் சென்றார்.
நதிக்கரையில் உல்லாசமாக அமர்ந்திருந்த ஒரு ஜோடி நாரைகளைப் பார்த்தார். அவற்றின் அந்தரங்க அன்புப் பிணைப்பினைக் கண்டு ரசித்தவாறே அவர் நீராடுகையில் எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு ஆண் நாரையின் மீது பாய்ந்து அதன் உயிரைக் குடித்தது. அதைக் கண்ட பெண் நாரை துக்கம் தாளாமல் ஓலமிட்டது. இதைக் கண்டு மனம் பதறிய வால்மீகி அம்பை எய்த வேடனை மிகுந்த சீற்றத்துடன் நோக்கி இதயமற்ற அரக்கனே என்ன காரியம் செய்து விட்டாய் நீ? வாழ்நாள் முழுதும் நீ அமைதியின்றி தவிப்பாய் என்று உணர்ச்சி வசப்பட அவருடைய வாயிலிருந்து வந்த சொற்கள் அவரையறியாமலே ஒரு கவிதை வடிவில் வெளிவந்தன. ஆசிரமத்திற்குத் திரும்பி வந்த பிறகும் அவருடைய படபடப்பு அடங்கவில்லை. சற்று நேரத்தில் பிரம்மா வால்மீகியைக் காணவந்தார். பிரம்மாவை விழுந்து வணங்கி வால்மீகி நின்ற போது பிரம்மா வால்மீகி என்னுடைய அருளினால் உனக்கு கவிதை பாடும் திறமை உண்டாகி விட்டது. ராமபிரானது வரலாற்றை இதற்கு முன் நீ கேட்டு இருக்கிறாய். அதை நீ காவியமாக இயற்று. இந்த உலகம் இருக்கும் வரை அவை காவியமாக நிலைத்திருக்கும் என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். பிரம்மாவின் அருளினால் வால்மீகி ராமாயணத்தை இயற்றினார். த்ரேதாயுக அவதாரமான ஸ்ரீராமபிரானின் வரலாற்றைச் எழுதினார். வால்மீகி 24000 ஸ்லோகங்களைக் கொண்ட ராமாயணத்தைப் படைத்தார்.
யோகவாசிஷ்டம்
அத்புத ராமாயணம்
கங்காஷ்டகம்
ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.
வால்மீகி இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய இராமாயணம் அதன் பாத்திரங்கள் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள் விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள் அரசுகள் போன்றவற்றை ஆய்வு நோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது. இது கி.மு 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளது. நான்கு பாதங்கள் கொண்ட செய்யுளில் வால்மீகியின் காவியத்தில் ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது. இடைச் செருகல் செய்ய முடியாது என்பது மகாகவி பாரதியின் வாக்கு.

பதினேழாம் நாள் யுத்தம் ஆரம்பித்தது. இருபக்க வீரர்கள் அனைவரும் அணிவகுத்து நிற்க சங்கநாதங்களும் போர் முரசுகளும் முழங்க சீறிப் புறப்பட ஆயத்தமாய் இருந்தனர். முதல் நாள் போரை ஒப்பிடுகையில் பதினேழாம் நாள் வீரர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பாகமாய் குறைந்திருந்தது. போர் ஆரம்பிக்கையிலேயே கர்ணனுக்கும் தேரோட்டியான சல்லியனுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இன்று பாண்டவர்களை வெல்வது உறுதி என்றான் கர்ணன். உடன் சல்லியன் உன் தற்பெருமையை நிறுத்தி வீரத்தை போர்க்களத்தில் காட்டு என்றான் சல்லியன். தேவாதி தேவர்களையும் அசுரர்களையும் வென்ற எனக்கு அர்ஜூனனை வெல்வது எளிது என்றான் கர்ணன். வீண் தற்பெருமை வேண்டாம். உன் வீரம் நான் அறிவேன். சிவனுடன் போர் புரிந்தவன் அர்ஜூனன். சித்திரசேனன் என்னும் கந்தர்வனுடன் போரிட்டு துரியோதனனை மீட்டவன் அவன். அப்போது நீ எங்கே போனாய் கர்ணா. விராட நகரில் பசுக்களை மீட்ட போது அர்ஜூனனுக்கு பயந்து ஓடியவன் நீ. உத்தரன் தேரோட்டிய போதே பீஷ்மரையும் துரோணரையும் வென்றவன் அர்ஜூனன். இப்போது கிருஷ்ணர் தேரோட்டும் போது சற்று எண்ணிப்பார். உன் ஆணவப் பேச்சை நிறுத்தி ஆற்றலை செயலில் காட்டு என்றான் சல்லியன். யுதிஷ்டிரரிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன் வேலையை ஆரம்பித்தான் சல்லியன்.
கர்ணனின் யுத்த ஆரம்பம் கௌரவர்களுக்கு உற்சாகத்தையும் பாண்டவர்களுக்கு அச்சுறுத்தலையும் தந்தது. அவனது ரதத்தை வீரர்கள் இருபுறமும் இருந்து காத்தனர் கர்ணன் சென்ற வழி எல்லாம் எதிரிக்கு அழிவை தந்தது. பாண்டவ படைகள் நிலை குலைந்தது. அவன் வீரத்தைக் காண ஒவ்வொரு கௌரவ படை வீரர்களுக்கும் உற்சாகம் கிளம்பியது. சல்லியனின் திறமையில் கர்ணனின் ரதம் யுத்தகளம் எங்கும் சுற்றி சுழன்று அடிக்கும் சூறாவளியாய் எட்டுத் திக்கும் விஜயம் செய்து ஜெயம் தந்தது. ஆரம்பத்தில் கர்ணனின் ஊக்கத்தை கெடுத்த சல்லியனும் கர்ணனின் திறமை கண்டு உண்மையான வீரனை நான் இங்கே கண்டேன். அவன் மீது பெரும் மதிப்பு கொண்டேன் என உள்ளத்திலே எண்ணினான். கர்ணனின் கண்ணசைவில் அவன் எண்ணம் புரிந்து களத்தை அவனுக்கு சாதகமாக்கினார் சல்லியன்.
பாண்டவர்களின் தரப்பில் சிறந்த வீரர்களாகக் கருதப்பட்ட பானதேவன், சித்திரசேனன், சேனவிந்து, தபன் மற்றும் சூரசேனனை எளிதில் வீழ்த்தினான் கர்ணன். மாவீரர்கள் ஐவரை கர்ணன் கொன்றதை கண்டவுடன் அவனுடன் போரிட பாண்டவர் தரப்பில் இருந்து திஷ்டத்துய்மன் சாத்யகி பீமன் மற்றும் சிகண்டி என அத்தணை பேரும் சேர்ந்து ஒருவனான கர்ணனை எதிர்த்தனர். அனைவரையும் எதிர்க்கொண்டான் கர்ணன். கர்ணனுக்கு துணையாய் வந்த சேனையை பீமன் அழிக்கத் தொடங்கினான். இருவருக்கும் இடையே கடும் யுத்தம் நடந்தது. பீமன் கடுமையாய் தாக்கினான். சிறிது நேரத்திற்கு பின் கர்ணன் பீமனால் தாக்குண்டு மயங்கி தேரில் விழுந்தான். அன்றைக்கு பீமன் போர்க்களத்தில் யமனைப் போலக் காட்சி தந்தான். சல்லியன் கர்ணனை போர்க்களத்தில் இருந்து வெளியேற்றிச் சென்றான். களம் பீமனின் கைக்குள் வந்தது. எங்கு நோக்கினும் ரத்த வெள்ளம். கர்ணன் களத்தில் இல்லாதது பாண்டவர்களுக்கு தகுந்த நேரமாய் மாறியது.



மத்தியப்பிரதேச மாநிலத்தின் நரசிங்கப்பூர் மாவட்டத்தில் உள்ள கதர்வாரா நகரிலுள்ள டமரு காட்டி சிவலிங்கம்.

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் நால்வரால் பாடல்பெற்ற இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜப்பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்தது. இக்கோவிலில் இறவாத பனை, பிறவாத புளி, புழுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலதுகாது மேல் நோக்கிய நிலையில் இறப்பது. என ஐந்து அதிசயங்கள் உள்ளது.
இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற பட்டீஸ்வரர் இங்கு அமைதியாகத்தான் காட்சித்தருகிறார். முன்பு இக்கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அப்போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும். அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள பாம்பு புற்றின் மீது பாலை சொறியும். இதைப்பார்த்த ஒருவன் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும் போது கிடைத்தவர் தான் பட்டீஸ்வரர். பட்டீஸ்ரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும் கொம்பு முட்டிய தழும்பும் இருந்திருக்கின்றது.
ஒரு முறை மன்னன் திப்புசுல்தான் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான். கோவில் அதிசயத்தையும் சிவலிங்கம் அடிக்கடி அசையும் என்றும் இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். இதை நம்பாமல் சிவலிங்கத்தின் மீது கை வைத்துப் பார்த்திருக்கிறான் மன்னன் திப்புசுல்தான். அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன. நெருப்பின் மீது கைகள் வைப்பதுபோல் உணர்ந்து துடித்திருக்கிறான். கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி இறைவனை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான். கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான். ஹதர் அலியும் நிலங்களை மானியங்களாக தந்திருப்பதாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன.


கர்ணன் நள்ளிரவில் துரியோதனனை மீண்டும் சந்திக்க சென்றான். எல்லா விதத்திலும் அர்ஜுனனுக்கு மிக்கவனாக நான் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன். ஆயினும் அர்ஜூனன் யுத்தத்தில் சிறப்பான போர்வீரனாக மிளிர்வதற்கு காரணம் கிருஷ்ணன். அர்ஜூனனுக்கு சாரதியாக கிருஷ்ணன் அமைந்திருப்பதால் தான் அவன் நன்கு சமாளிக்கிறான். நீ எப்படியாவது சல்லியனை சரிப்படுத்தி எனக்கு சாரதியாக இருக்க உதவி புரிய வேண்டும். சல்லியன் எனக்கு சாரதியாக அமைந்தால் அது நான் செய்த பாக்கியம் ஆகும். இந்த யுத்தத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று கர்ணன் துரியோதனனிடம் கூறினான். அதிகாலையிலேயே எழுந்த துரியோதனன் சல்லியனிடம் சென்று அவன் முன்னிலையில் அடியற்ற மரம் போல் அவன் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். தங்களின் அந்தஸ்திற்கு நிகரானவன் கர்ணன் இல்லை. அர்ஜுனனை வெல்ல நீங்கள் கர்ணனுக்கு தேரோட்டும் பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொண்டால் நமது வெற்றிக்கு சாதகமாக அமையும் என்று வேண்டி கேட்டுக்கொண்டான்.
கடும் கோபம் கொண்ட சல்லியன் துரியோதனா நான் ஒரு அரசன். கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன். என் நிலை இறங்கி நான் அவனுக்கு தேர் ஒட்டுவதா என்று கடிந்தான். துரியோதனனோ நீங்கள் கர்ணனை விட மேலானவர் தான். நான் தங்களை அவமதிக்கவில்லை சல்லியரே. கர்ணன் அஸ்திரங்கள் உபயோகத்தில் அர்ஜுனனை விட மேலானவன். தாங்கள் ரதம் செலுத்துவதிலும் குதிரைகளை கட்டுக்குள் வைப்பதிலும் கிருஷ்ணருக்கு நிகரானவர். கிருஷ்ணன் அனைவருக்கும் முதலானவன். அவனை யுத்தத்தில் வெல்ல யாராலும் இயலாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அர்ஜூனனுக்கு சாரதியாய் கிருஷ்ணர் இருக்கிறான். நீங்கள் கிருஷ்ணருக்கு சமமான திறமை வாய்ந்தவர். தாங்கள் கர்ணனுக்கு ரதம் ஓட்டினால் உங்களுக்கு அது அவமானம் தராது. மாறாக பேரையும் புகழையும் தான் தரும் என்று நயவஞ்சக வலை விரித்தான்.
போர் ஆரம்பிக்கும் முன்பாக பாண்டவ படைக்கு ஆதரவாக போரில் கலந்து கொள்ள வந்த சல்லியன் துரியோதனனின் விருந்து உபசரிப்பால் ஏமாற்றப்பட்டு கொடுத்த வாக்கினால் கௌரவர்களுக்கு போரிட சென்றவன். இதை அவன் யதிஷ்டிரரிடம் கூறிய போது சல்லியனின் நிலை அறிந்து கௌரவர்களுக்காக போர் செய்ய அனுமதித்தார். அப்போது யதிஷ்டிரர் ஒரு உதவியை சல்லியனிடம் கேட்டார். கர்ணனுக்கு சல்லியன் தேரோட்டியாக வரும் நிலை வரும் போது கர்ணனும் அர்ஜுனனும் போர் புரிய நேர்ந்தால் அப்போது அர்ஜுனனை பாராட்டியே பேச வேண்டும். இது கர்ணனின் மனஆற்றலை குன்றச் செய்யும் என்பதே அந்த உதவி. நிச்சயம் செய்வதாக வாக்களித்தார் சல்லியன். யுதிஷ்டிரரிடம் கொடுத்த வாக்குப்படி இப்போது சல்லியனுக்கு சூழ்நிலை அமைந்தது. மேலும் சல்லியன் தன்னை கிருஷ்ணருனுடன் ஒப்பிட்டு பேசியதால் மனம் மகிழ்ந்தார். கர்ணனுக்கு தேரோட்ட ஒரு நிபந்தனையோடு அதற்கு ஒப்புக்கொண்டார்.
யுத்தத்தில் கர்ணன் தவறு செய்தால் கண்டிப்பேன். அந்த நேரம் நான் என்ன சொன்னாலும் கர்ணன் அதைக் கேட்டுக்கொள்ள வேண்டும். என்னை அவமதிப்பது போல் அவன் நடந்தால் நான் அவனுக்கு சாரதியாய் இருக்க மாட்டேன். இதற்கு சம்மதம் எனில் கர்ணனுக்கு தேர் ஓட்ட நான் சம்மதிக்கிறேன் என்றார். துரியோதனனும் கர்ணனும் அவரின் நிபந்தனைக்கு ஒப்புகொண்டதால் சல்லியன் கௌரவ போர் தளபதியான கர்ணனுக்கு தேரோட்டி ஆனார்.



மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மஹாதேவ் ஆலய சிவலிங்கம்.

பாண்டவ சகோதரர்களில் நகுலனை எதிர்த்து கர்ணன் யுத்தம் செய்தான். இருவருக்கும் இடையில் யுத்தம் துவங்கியது. எடுத்த எடுப்பிலேயே ஒருவர் வில்லை மற்றவர் ஒடித்துத் தள்ளினர். இருவரும் இரண்டாவது வில்லை எடுத்தனர். நகுலனின் இரண்டாவது வில்லை கர்ணன் ஒடித்தான். பிறகு அவனுடைய குதிரைகளையும் தேரோட்டியையும் அழித்தான். அதைத் தொடர்ந்து நகுலன் இப்பொழுது தரையில் நின்று கொண்டிருந்தான். நகுலன் தனது வாளை வெளியில் எடுத்தான். அக்கணமே வாளை கர்ணன் துண்டித்தான். நகுலனுடைய கேடாயம் கதை ஆயுதங்கள் அனைத்தையும் கர்ணன் ஒடித்தான். இப்போது நகுலன் ஆதரவற்றவனாக நின்றான். வெற்றி வீரனாக கர்ணன் அவனை புன்சிரிப்புடன் பார்த்தான். நகுலன் தலைகுனிந்து தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி நின்றான். கர்ணன் அவனை சமாதனப்படுத்தி வீரியத்துடன் திரும்பிப் போகுமாறு புத்திமதி கூறினான். நகுலனை கர்ணன் கொன்றிருக்கலாம். ரகசியமாக தன் தாய் குந்திக்கு கொடுத்திருந்த வாக்குறுதியின்படி நகுலனை அவன் கொல்லவில்லை.
யுதிஸ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் யுத்தம் நடந்தது. இருவரும் சிறிதேனும் சலிப்படையாமல் யுத்தம் செய்தனர். மழை பெய்வதற்கு நிகராக இருவரிடத்திலும் இருந்து அம்புகள் வெளியே பாய்ந்தன. நெடுநேரத்திற்கு பிறகு யுதிஷ்டிரன் ஒரு பயங்கரமான அம்பை எடுத்து துரியோதனன் மீது எய்தான். துரியோதனன் தள்ளாடி கீழே விழுந்தான். மற்றுமொரு அம்பை யுதிஷ்டிரன் துரியோதனன் மீது எய்திருந்தால் துரியோதனனை கொன்றிருக்கலாம். பீமன் துரியோதனனை கொல்வதாக சபதம் செய்தது யுதிஷ்டிரனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. உடனே துரியோதனனே விட்டுவிட்டு யுதிஷ்டிரன் அங்கிருந்து சென்றான். சூரியன் மறைய பதினாறாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.
பதினாறாம் நாள் நடந்த யுத்தத்தை குறித்து துரியோதனன் அதிருப்தி அடைந்தான். நகுலனை கர்ணன் கொன்றிருக்கலாம் ஆனால் அதற்கு நேர்மாறாக விளையாட்டு போராட்டத்தை கர்ணன் புரிந்தான். இது குறித்து துரியோதனன் கர்ணனிடம் புகார் எதுவும் கூறவில்லை. மாறாக கர்ணனை பெருமைபடுத்தி பேசினான். கர்ணா அர்ஜூனனுடைய மரணம் எல்லா பிரச்சினைகளையும் நீக்கி வைக்கும். இச்செயலை செய்ய வல்லவன் நீ ஒருவனே தயவு அர்ஜூனனை கொல்வதில் உன் கருத்தை செலுத்து. நாம் முன்னேற்றம் அடைவதும் அழிந்து போவதும் இப்போது உன் கைவசத்தில் இருக்கிறது என்று கூறினான். இதனைக்கேட்ட கர்ணன் நாளை அர்ஜூனனை கொல்வேன் என்று சத்தியம் பண்ணுகிறேன். இல்லை என்றால் அம்முயற்சியில் நான் உயிர் துறப்பேன் என்று துரியோதனனிடம் தீர்மானமாக கூறிவிட்டு உறங்க சென்றன். கர்ணனுக்கு உறக்கம் வரவில்லை. அவனுடைய நிலஉலக வாழ்க்கையில் அன்றைய இரவு தான் கடைசி இரவு என்ற கருத்து அவனுடைய உள்ளத்தில் எழுந்தது. அடுத்த நாள்தான் மடிந்து போவது உறுதி என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உதித்தது. ஆனாலும் அவன் மடிவதற்கு அஞ்சவில்லை.


