சங்கு சக்கர முருகன்

அசுரர்களை அழிக்க சிவன் இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூற முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும் தேவர்களும் முருகருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். அப்போது திருமால் தனது சங்கு சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன் அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கைகளில் கேடயம் வில் அம்பு சாட்டை கத்தி சூலாயுதம் வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகர் கல்யாண சுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அருகில் வள்ளி தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாச்சி ஓம் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும் அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் இங்கு தரிசிக்கலாம். இடம் படிக்காசுநாதர்கோயில் அழகாபுத்தூர்.

மயிலில் முருகர்

முருகன் தன் தெய்வீக வாகனமான மயில் மீது கம்பீரமாக அமர்ந்துள்ளார். தேவந்திரனும் சூரனும் மயில் வடிவம் கொண்டு அவரை வாகனமாகத் தாங்கியதற்கு முன்பாக ஓங்கார (மந்திரம்) மயில் வடிவுடன் அவருக்கு வாகனமாக இருந்து வந்தது. இவ்வகையில் முருகனுக்கு தேவ மயில் அசுர மயில் இந்திர மயில் பிரணவாகார மயில் எனப் பலவிதமான மயில்கள் வாகனமாக இருக்கின்றன. இடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.

புராண முருகர்

மயில் மீது இரு புறமும் கால்கள் போட்டு அமர்ந்த வடிவில் நுக்கேஹள்ளி எனும் இடத்தில் உள்ள ஹொய்சளர் கலைப்பாணி முருகன் சிலை இது. பொதுவாக ஹொய்சளர்கள் மிக அரிதாகவே முருகன் சிலையை உருவாக்கியுள்ளனர். இது 13-ம் நூற்றாண்டு சிலையாகும். இங்கே நமக்கு மிகவும் பரிச்சயமான அழகான வேல் ஒரு கையிலும் மறு கையில் பாசக்கயிறு மற்றொரு கையில் அக்கமாலை நான்காம் கையில் ஹொய்சளர் சிலைகள் அனைத்திலும் இருக்கும் ஒருவித எலுமிச்சைவகைப் பழம் இருக்கிறது. ஆறு முகத்தில் மூன்று முகத்தை காண முடிகிறது. மயிலை அதன் தோகைகளுடன் மிக மிக அழகாக உருவாக்கியுள்ளனர்.

ஆறுமுகன்

தமிழகத்தில் 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் ஆறு தலையும் பன்னிரு கைகளும் மயிலும் முருகன் படிமத்தில் நுழைகின்றன. பின்னர் விஜயநகர நாயக்கர் காலத்தில் ஆறுமுகனை மயில் மீது அமர்ந்த கோலத்தில் காணமுடிகிறது. தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள இச்சிலை சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

முருகர் புராண சிற்பம்

முதல் இரண்டும் புவனேஸ்வரத்தில் வழிபடும் கோவில்களில் உள்ளவை. அடுத்த இரண்டும் ஒடிசா அருங்காட்சியகங்களில் உள்ளவை. காலகட்டம் ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும். கையில் வேல், கழுத்தில் புலிநகம் கோர்த்த சங்கிலி. வாகனமான மயிலின் அழகு கூடிக்கொண்டே செல்கிறது. இடக்கையிலோ வலக்கையிலோ வேல். தலையின் ஜடாமுடி அலங்காரம் மிகத் தனித்தன்மை கொண்டதாக உள்ளது. சன்னவீரம் இல்லை. மூன்றில் பூணூல் உள்ளது. ஒன்றில் இல்லை.