தாய் தெய்வச்சிலை

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடிக்கு அருகிலிருக்கிறது தாமோட்டூர் கிராமம். இங்குள்ள பசுமை படர்ந்த பயிர் நிலங்களுக்கு நடுவில் கம்பீராக வீற்றிருக்கிறது தாய்தெய்வச்சிலை. கோயில் இல்லை. கோபுரமும் இல்லை. சிலை வழிபாடு நடக்கிறது. 10 அடி உயரம் இருபுறமும் கைகள் போன்ற அமைப்பு வட்டமான தலைப் பகுதியுடன் தாய்தெய்வத்தின் தோற்றம் இருக்கிறது. பெண்களே வளமைக் குரியவர்கள். அதனாலேயே தாய்தெய்வம் என்று சங்க காலத்தில் பெண்களை முன்னிலைப் படுத்தியிருக்கிறார்கள். மூன்றாயிரம் ஆண்டுகள் தொன்மையான இந்தச் சிலை சிந்துசமவெளி நாகரிகத்துக்கு இணையானதொரு பண்டைய கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையோடு ஒத்துப் போவதாக சொல்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள். உள்ளூர் மக்கள் இதை கூத்தாண்டவர் என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.

லிங்க பிள்ளையார்

அரளிப்பட்டி அரவங்கிரிக் குன்றின் குடைவரையின் மண்டபச் சுவர்களில் வடபுறமுள்ள இலிங்கத் திருமேனியில் பிள்ளையார் லிங்கமாக ஒன்றுக்குள் ஒன்றாய் இலிங்க பாணத்தில் உள்ளது. காலம் எட்டாம் நூற்றாண்டு.

சிவநந்தி துர்கா

சாளுக்கியர்களின் முதல் தலைநகரம் மலபிரபா ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. இங்கு சிவநந்தி துர்கா கோவில் உள்ளது. கிபி 6 ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு கிபி 12 ஆம் நூற்றாண்டு வரை இக்கோயில் கட்டப்பட்டது. இங்கு 125 க்கும் மேற்பட்ட கோயில்கள் பல்வேறு வடிவங்களில் உள்ளது. இடம் ஐஹோல் கர்நாடகா.

சாமுண்டி

இயமனின் மனைவி என்பதைச் சுட்டுமாறு இவரது திருவடிக்கீழ் எருமைத்தலை செதுக்கப்பட்டுள்ளது. குடைவரைக் காலச் சாமுண்டிகளில் இவரே அளவில் பெரியவர். படியச் சீவி உச்சியில் கொண்டையிட்ட சடைப்பாரமும் மிகப் பெரிய முகமும் கொண்டுள்ள சாமுண்டியின் செவிகளில் சடல குண்டலங்கள் தோள்களை வருடுகிறது. கொண்டையின் முகப்பில் மண்டையோடு உள்ளது. வலக் கையில் சுரைக் குடுவை உள்ளது. இடம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோளக்குடிக் குடைவரை கோவில். தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான கல்வெட்டுப் பதிவுகளைக் கொண்டுள்ள ஒரே குடைவரை கோயில் கோளக்குடிதான்.

சட்டைநாதர்

பைரவர்களின் தலைமையை ஏற்றவர். இவருக்கு சட்டைநாதர் என்று பெயர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் அபய முத்திரையைக் காட்டி அருள்கிறார். இடது கரத்தில் கபத்தை வைத்திருக்கிறார். இடம் குற்றம்பொருத்தநாதர் கோவில் தலைஞாயிறு திருகருப்பறியலூர் நாகை மாவட்டம்.

சண்டேசர்

சிவபெருமான் சண்டேச அனுக்கிரக மூர்த்தியாக வந்து விசாரசருமருக்கு திருத்தொண்டர்களின் தலைவர் பதவியான சண்டேசுர பதவியை கொடுத்தருளி தனது திருமுடியிலுள்ள கொன்றை மலரை எடுத்து விசாரசருமருக்குச் சூடி அருளினார். சண்டேசுவர பதவியைப் பெற்றமையால் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவரை சண்டேசர் சண்டிகேசுவர் என்றும் அழைக்கப்படுகிறார். இடம் ஸ்ரீராமேஸ்வர கோவில் நரசமங்கலம் சாமராஜ்நகர் தாலுக்கா கர்நாடக மாநிலம்.