அக்னி கிரீடத்துடன் ஓடி வரும் சக்கரத்தாழ்வார்

மதுரை திருமோகூர் காளமேகபெருமாள் திருத்தலத்தில் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும் மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர் அக்னி கிரீடத்துடன் ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார்.

சிவனை வழிபடும் கிளி

திருவாருரில் உள்ள திருவீழிமிழலை சிவத்தலத்தில் இன்றும் கிளி சுவாமியை வழிபட்டு செல்வதற்காக அக்காலத்திலேயே தனியாக கட்டுமானத்தில் ஒரு ஓட்டை வைத்திருக்கிறார்கள். இப்பொதும் இந்த ஓட்டை வழியாக கிளி வந்து வழிபட்டு செல்கிறது.

இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள்

ஒரு சமயம் இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள் பிராமணர் அல்லாத ஒருவருக்கு ஈமக் கடன்களைச் செய்தார். அதனால் அவ்வூரில் இருந்த பிராமணர்களும் அவரது உறவினர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர். இதைக் கேட்ட இராமானுஜர் குரு காரணம் இல்லாமல் எதனையும் செய்ய மாட்டார். ஆகவே அந்த காரணத்தை தெரிந்து கொள்ள அவர் இல்லம் சென்றார். இராமானுஜர் வந்த காரணத்தை அறிந்து கொண்ட குரு பெரிய நம்பிகள் அதற்கான காரணத்தை கூறினார்.

பிராமணர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட முறைப்படி பிராமணன் ஒருவன் பிராமணன் அல்லாதவனுக்கு ஈமக் கடன்கள் செய்வது என்பது பொருத்தமற்ற செயல் தான். இதனை பிராமணர்கள் வகுத்த விதிகள் ஏற்றுக் கொண்டாலும் அதனை அற நூல்கள் ஏற்றுக் கொள்ளாது. அறம் என்பது என்ன என்று தெரியுமா? சான்றோர்கள் உலகியலில் எவ்வாறு தர்மத்திற்குக்கு ஏற்ப நடந்து கொண்டார்களோ அதுவேதான் அறம் எனப்படும். பறவை குலத்தில் பிறந்த ஜடாயுவுக்கு இராமன் இறுதிச் சடங்கினைச் செய்தான். சத்ரிய குலத்தில் பிறந்த தர்மர் நான்காம் வருணத்தில் பிறந்த விதுரரைப் போற்றி வழிபட்டார். உண்மை பக்தனுக்கு சாதி ஏது? மதம் ஏது? என்னால் ஈமக் கடன்கள் செய்து தீயில் இடப்பட்டவன் என்னை விட பக்தியில் பல மடங்கு சிறந்தவன். அவனுக்கு இறுதிக் கடன் செய்து நான் பெரிய பேற்றினை பெற்றுள்ளேன் என்றார். பெரிய நம்பிகளின் பதிலைக் கேட்டு இராமானுஜர் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று அவரை விழுந்து வணங்கினார்.

லலிதாசனத்தில் சிவனும் பார்வதியும்

புதுக்கோட்டை மாவட்டம் 7ஆம் நூற்றாண்டில் மன்னன் நந்திவா்ம பல்லவன் காலத்தில் குன்றாண்டார் கோவில் குடைவரைக் கோவிலாக கட்டப்பட்டது. இக்கோயில் திருக்குன்றக்குடி என்றும் அழைக்கப்படும். கோவிலின் வலதுபுறத்தில் உள்ள அடிவாரத்தில் சிவபெருமானும் உமையம்மையும் லலிதாசனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள்.

வீராசன தட்சிணாமூர்த்தி

ஒரு காலை மடித்தும் மற்றொரு காலை தொங்கவிட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தி இந்த சிற்பத்தில் வலது காலை முயலகன் மீது ஊன்றி தனது இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். இக்கோலத்திற்கு வீராசன தட்சிணாமூர்த்தி என்று பெயர். வலது செவியில் மகர குண்டலமும் இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழே அமர்ந்துள்ள சீடர்கள் வழக்கமான அஞ்சலி முத்திரையுடன் அமர்ந்திருப்பார்கள். இந்த சிற்பத்தில் சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். இடம்: திரிசூலநாதர் கோவில். திரிசூலம் சென்னை.

ஏலவார்குழலி

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்சுவரர் கோவில் வரலாற்றை விளக்கும் தூணில் உள்ள சிற்பம். ஒரு முறை சிவபெருமான் கைலாசத்தில் யோகத்தில் இருந்த போது பார்வதி தேவி ஈசனின் இரண்டு கண்களை விளையாட்டாக மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியன் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. நிலைமையைக் கண்ட பார்வதிதேவி தான் பெரும் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு வேண்டினாள். ஈசனோ செய்த தவறுக்குத் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறி பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து தன்னை நோக்கிக் கடுந்தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தைக் கேட்க ஈசன் காஞ்சிபுரம் ஸ்தலத்திற்குப் பார்வதிதேவியை அனுப்பினார். ஏலவார்குழலி என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் வந்து மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தைப் பிடித்து வைத்து அக்னியின் நடுவில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தின் வலிமையைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் தன் தலையில் சூடிக் கொண்டிருக்கும் கங்கையை தேவி தவம் செய்யும் இடத்தில் பாயுமாறு செய்தார். கங்கை வெள்ளமாகப் பாய்ந்து வர தான் பிடித்து வைத்திருந்த லிங்கம் கரைந்து விடும் என்று அஞ்சிய தேவி லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவ பெருமான் தேவிக்குக் காட்சி தந்து அவள் பாவத்தை மன்னித்து அருளி திருமணம் செய்து கொண்டார். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்.

வேணுகோபாலன்

கிருஷ்ணரின் மிக நுட்பமான சிற்பம். கூர்ந்து கவனித்தால் தெரியும். பிரபாவளியில் விஷ்ணுவின் அனைத்து 10 அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளன. 1000 ஆண்டுகள் பழமையான சிற்பம். இடம் லட்சுமி நரசிம்மர் கோவில் ஹரனஹள்ளி ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

மகிஷாசுரமர்தினி

எருமை வடிவில் உள்ள அரக்கனை அழிக்கும் துர்கை. உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இச்சிலை தற்போது அமெரிக்காவில் பிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 8 ஆம் நூற்றாண்டு.