நாகச்சந்திரேஸ்வர்

உஜ்ஜயினி உள்ள நாகசத்திரேஸ்வரர் சிலை 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரமார் கால சிலையாகும். இந்த சிலை நேபாளத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டது. செங்கற்களால் ஆன இந்த சிற்பத்தில் சிவனும் பார்வதியும் நாகத்தின் மீது அமர்ந்திருக்கிறார்கள். விஷ்ணுவைப் போல் சிவன் பார்வதியுடன் பாம்பு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிலை இக்கோயிலை தவிர்த்து வேறு எங்கும் இல்லை. சிவபெருமானை நோக்கி தவம் செய்த நாகராஜருக்கு அவரது தவத்தின் பலனாக இறைவன் அவருக்கு அழியாத தன்மையைக் கொடுத்தார்.

நாகம் அவர்கள் மீது குடை வடிவில் படர்ந்துள்ளது. சிவனுக்கு வலதுபுறம் விநாயகர் இருக்கிறார். இக்கோவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும். இந்த வருடம் முறை ஆகஸ்ட் 9ம் தேதி நாக பஞ்சமி கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாகசந்திரேஸ்வரர் சன்னதி திறக்கப்பட்டு மறுநாள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 12 மணி வரை வழிபடப்பட்டு மீண்டும் சன்னதி மூடப்பட்டது. 1050 ஆம் ஆண்டு பர்மர் மன்னர் போஜ் என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. இதற்குப் பிறகு, சிந்தியாவின் மன்னர் ரானோஜி 1732 இல் மகாகல் கோயில் மற்றும் நாகச்சந்திரேஷ்வர் கோயில் உட்பட முழு அமைப்பையும் புதுப்பித்து பலப்படுத்தினார். உஜ்ஜயினி மாகாளர் கோயிலின் 3 ஆவது தளத்தில் இந்த சன்னதி உள்ளது.

அடிமுடிகாணா அண்ணாமலை

மேலே அன்னப் பறவையாக படைக்கும் கடவுள் பிரம்மா தாழம்பூவுடன் விவாதிக்க கீழே வராக ரூபத்தில் பூமியை பிளந்து ஈசனின் அடியைக்கான காக்கும் கடவுளான விஷ்ணு பயணிக்க தீர்ப்பினை கூற ஜோதி பிழம்பாக எம்பெருமான் ஈசன் காட்சியளிக்கும் தத்ரூபமாக தூணில் வடிக்கப்பட்டுள்ள சோதி வடிவான அடிமுடிகாணா அண்ணாமலை சிற்பம். இடம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படும் ஔஷதீஷ்வரர் கோயிலில் அமைந்துள்ளது.

அக்னி கிரீடத்துடன் ஓடி வரும் சக்கரத்தாழ்வார்

மதுரை திருமோகூர் காளமேகபெருமாள் திருத்தலத்தில் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும் மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர் அக்னி கிரீடத்துடன் ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார்.

சிவனை வழிபடும் கிளி

திருவாருரில் உள்ள திருவீழிமிழலை சிவத்தலத்தில் இன்றும் கிளி சுவாமியை வழிபட்டு செல்வதற்காக அக்காலத்திலேயே தனியாக கட்டுமானத்தில் ஒரு ஓட்டை வைத்திருக்கிறார்கள். இப்பொதும் இந்த ஓட்டை வழியாக கிளி வந்து வழிபட்டு செல்கிறது.

இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள்

ஒரு சமயம் இராமானுஜரின் குருவான பெரிய நம்பிகள் பிராமணர் அல்லாத ஒருவருக்கு ஈமக் கடன்களைச் செய்தார். அதனால் அவ்வூரில் இருந்த பிராமணர்களும் அவரது உறவினர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர். இதைக் கேட்ட இராமானுஜர் குரு காரணம் இல்லாமல் எதனையும் செய்ய மாட்டார். ஆகவே அந்த காரணத்தை தெரிந்து கொள்ள அவர் இல்லம் சென்றார். இராமானுஜர் வந்த காரணத்தை அறிந்து கொண்ட குரு பெரிய நம்பிகள் அதற்கான காரணத்தை கூறினார்.

பிராமணர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட முறைப்படி பிராமணன் ஒருவன் பிராமணன் அல்லாதவனுக்கு ஈமக் கடன்கள் செய்வது என்பது பொருத்தமற்ற செயல் தான். இதனை பிராமணர்கள் வகுத்த விதிகள் ஏற்றுக் கொண்டாலும் அதனை அற நூல்கள் ஏற்றுக் கொள்ளாது. அறம் என்பது என்ன என்று தெரியுமா? சான்றோர்கள் உலகியலில் எவ்வாறு தர்மத்திற்குக்கு ஏற்ப நடந்து கொண்டார்களோ அதுவேதான் அறம் எனப்படும். பறவை குலத்தில் பிறந்த ஜடாயுவுக்கு இராமன் இறுதிச் சடங்கினைச் செய்தான். சத்ரிய குலத்தில் பிறந்த தர்மர் நான்காம் வருணத்தில் பிறந்த விதுரரைப் போற்றி வழிபட்டார். உண்மை பக்தனுக்கு சாதி ஏது? மதம் ஏது? என்னால் ஈமக் கடன்கள் செய்து தீயில் இடப்பட்டவன் என்னை விட பக்தியில் பல மடங்கு சிறந்தவன். அவனுக்கு இறுதிக் கடன் செய்து நான் பெரிய பேற்றினை பெற்றுள்ளேன் என்றார். பெரிய நம்பிகளின் பதிலைக் கேட்டு இராமானுஜர் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று அவரை விழுந்து வணங்கினார்.

லலிதாசனத்தில் சிவனும் பார்வதியும்

புதுக்கோட்டை மாவட்டம் 7ஆம் நூற்றாண்டில் மன்னன் நந்திவா்ம பல்லவன் காலத்தில் குன்றாண்டார் கோவில் குடைவரைக் கோவிலாக கட்டப்பட்டது. இக்கோயில் திருக்குன்றக்குடி என்றும் அழைக்கப்படும். கோவிலின் வலதுபுறத்தில் உள்ள அடிவாரத்தில் சிவபெருமானும் உமையம்மையும் லலிதாசனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள்.