வீராசன தட்சிணாமூர்த்தி

ஒரு காலை மடித்தும் மற்றொரு காலை தொங்கவிட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தி இந்த சிற்பத்தில் வலது காலை முயலகன் மீது ஊன்றி தனது இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். இக்கோலத்திற்கு வீராசன தட்சிணாமூர்த்தி என்று பெயர். வலது செவியில் மகர குண்டலமும் இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழே அமர்ந்துள்ள சீடர்கள் வழக்கமான அஞ்சலி முத்திரையுடன் அமர்ந்திருப்பார்கள். இந்த சிற்பத்தில் சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். இடம்: திரிசூலநாதர் கோவில். திரிசூலம் சென்னை.

ஏலவார்குழலி

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்சுவரர் கோவில் வரலாற்றை விளக்கும் தூணில் உள்ள சிற்பம். ஒரு முறை சிவபெருமான் கைலாசத்தில் யோகத்தில் இருந்த போது பார்வதி தேவி ஈசனின் இரண்டு கண்களை விளையாட்டாக மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியன் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. நிலைமையைக் கண்ட பார்வதிதேவி தான் பெரும் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு வேண்டினாள். ஈசனோ செய்த தவறுக்குத் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறி பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து தன்னை நோக்கிக் கடுந்தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தைக் கேட்க ஈசன் காஞ்சிபுரம் ஸ்தலத்திற்குப் பார்வதிதேவியை அனுப்பினார். ஏலவார்குழலி என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் வந்து மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தைப் பிடித்து வைத்து அக்னியின் நடுவில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தின் வலிமையைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் தன் தலையில் சூடிக் கொண்டிருக்கும் கங்கையை தேவி தவம் செய்யும் இடத்தில் பாயுமாறு செய்தார். கங்கை வெள்ளமாகப் பாய்ந்து வர தான் பிடித்து வைத்திருந்த லிங்கம் கரைந்து விடும் என்று அஞ்சிய தேவி லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவ பெருமான் தேவிக்குக் காட்சி தந்து அவள் பாவத்தை மன்னித்து அருளி திருமணம் செய்து கொண்டார். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்.

வேணுகோபாலன்

கிருஷ்ணரின் மிக நுட்பமான சிற்பம். கூர்ந்து கவனித்தால் தெரியும். பிரபாவளியில் விஷ்ணுவின் அனைத்து 10 அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளன. 1000 ஆண்டுகள் பழமையான சிற்பம். இடம் லட்சுமி நரசிம்மர் கோவில் ஹரனஹள்ளி ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

மகிஷாசுரமர்தினி

எருமை வடிவில் உள்ள அரக்கனை அழிக்கும் துர்கை. உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இச்சிலை தற்போது அமெரிக்காவில் பிலடெல்பியா கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 8 ஆம் நூற்றாண்டு.

ருத்ர பாஸ்கரன்

சூரியனின் மேல் இரண்டு கைகளும் ஈசனின் ஆயுதங்களான திரிசூலமும் வாசுகியும் கீழ் இரு கைகளிலும் இரண்டு தாமரை மலர்களை ஏந்தியுள்ளார். கவசம் மற்றும் காலணிகளை அணிந்துள்ளார். அருகில் தனது தேரோட்டியான அருணா கால்களுக்கு இடையில் அமர்ந்துள்ளார். அவரது வலதுபுறம் எழுதுகோல் மற்றும் புத்தகத்தை பிங்கலாவும் இடதுபுறத்தில் தண்டி தண்டாவும் உள்ளனர். இந்த வடிவ சிற்பம் கோவில்களில் காணப்படுவது மிக அரிது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த சிவபெருமான் ருத்ர பாஸ்கரன் என்று அழைக்கப்படுகிறார். இடம் போபால் மண்ட்சூர் பகுதியில் உள்ள மாநில தொல்பொருள் அருங்காட்சியகம்.

இரட்டைக் கோயில்

ஸ்ரீ மல்லிகார்ஜுனா கோவில் மற்றும் ஸ்ரீ மல்ல கோவில் என்ற இரட்டைக் கோயில்கள் ஒன்றாக இருக்கிறது. இக்கோயில் அசலேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு முக்கிய கோவில்கள் மற்றும் மூன்று சிறிய மண்டபங்கள் உள்ளன. இந்த இரட்டைக் கோயிலின் இரண்டு கர்ப்ப கிரகங்களுக்கும் பொதுவான மண்டம் உள்ளது. மண்டபத்தின் வடக்கிலும் தெற்கிலும் நுழை வாயில்கள் உள்ளன. கிழக்கு சன்னதியின் உள்ளே சிவலிங்கம் உள்ளது. ஒரு பெரிய நந்தி கிழக்கு சன்னதிக்கு எதிரே உள்ளது. கிழக்கு சன்னதி இரண்டிலும் முதன்மையானதாக இருக்கிறது. மேற்கு சன்னதி தற்போது காலியாக உள்ளது. இந்தக் கோயில் கிபி 1054 இல் கட்டப்பட்டது. அனந்தசயனா விஷ்ணுவின் சிற்பம் உள்ளது. கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் சுடி. இக்கோயில் கல்வெட்டுகளில் சுண்டி என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

ஜைன யக்ஷினி சக்ரேஸ்வரி தேவி

ஸ்ரீ ரிஷவநாத தீர்த்தங்கரரின் தேவி ஷாஷனாதேவி ஆவார். பொன்னிறமான இவர் இருபது கரங்களுடன் ஒவ்வொரு கரத்திலும் ஒரு ஆயுதத்தை ஏந்திக் காட்சியளிப்பார். மேல் இரு கரங்களில் இரண்டு சக்கரங்களை ஏந்தியவாறும் திரிசூலம், வஜ்ரம், வாள், கோடரி, சக்கு, சக்கரம், மணி, வில், அம்பு, கயிறு, யானைத் தேகம் அக்ஷரமாலை மற்றும் கமண்டலம் ஆகியவற்றை ஏந்தியவாறு அருள்பாலிக்கிறாள். இத்தேவதையின் வாகனம் கழுகு.

கலிங்கத்தின் காந்திரஷ்ருங்கா என்பது அதிகம் அறியப்படாத ஜெயின் பாரம்பரிய பல பழங்கால பொருட்கள் உள்ள தளம். அங்கு தான் இத்தேவதை அமர்ந்துள்ளார்.

சதுர்புஜ மகாவிஷ்ணு

ஹரியும் சிவனும் வேறில்லை என்பதை உணர்த்தும் விதமாக ஆவுடையார் மீது அமர்ந்திருக்கும் பெரிய திருவடியான கருடன் மேல் சங்கு சக்கரம் கதம் ஏந்திய வண்ணம் சதுர்புஜ மகாவிஷ்ணு அமர்ந்துள்ளார். இடம் சங்கு நாராயணன் கோவில் பக்தபூர் மாவட்டம். காத்மாண்டு நேபாளம்.

அனுமன்

சோழர் காலத்தைச் சேர்ந்த வாயு புத்திரன் அனுமனின் செப்புத் திருமேனி. வானர குலத்தைச் சேர்ந்த மன்னன் சுக்ரீவனின் ஆலோசகர் அனுமன். தென்னிந்தியாவின் சோழ சாம்ராஜ்யத்தை சேர்ந்த இந்த அனுமனின் கலைநயமிக்க சிற்பம் தற்போது அமெரிக்காவில் உள்ள தி மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் இல் உள்ளது. காலம் 11ஆம் நூற்றாண்டு.