11 முகம் கொண்ட முருகன்

முருகன் 11 தலை 22 கைகளுடன் அருள்மிகு சுவாமிநாத சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இராமநாதபுரம் குண்டுக்கரை பகுதியில் இக்கோவில் உள்ளது. சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பு முருகன் இத்தலத்துக்கு வந்த முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனே சிவன் சிவனே முருகன். இருவரும் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது மிகச்சிறப்பான அம்சமாகும். கோயிலுக்குள் 18 திருக்கரத்துடன் கூடிய 7 அடி உயர துர்க்கை சிலையும் உள்ளது.

300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த போது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார். ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமி மலையானின் பெயரான சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்

 1. ஆறுமுகம்: ஈசானம் தத்புருஷம் வாமதேவம் அகோரம் சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
 2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம். மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
 3. குமரன்: மிக உயர்ந்தவன். இளமையை எப்போதும் உடையவன். பிரம்மச்சாரி ஆனவன்.
 4. முருகன்: முருகு என்றால் அழகு என்று பொருள். முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
 5. குருபரன் : கு – அஞ்ஞான இருள் ரு – நீக்குபவர். ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும் அகத்தியருக்கும் அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
 6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
 7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
 8. கந்தன்: கந்து – யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் கந்தன் தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
 9. கடம்பன்: கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
 10. சரவணபவன்: சரம் – நாணல். வனம் – காடு. பவன் – தோன்றியவன். நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
 11. சுவாமி: சுவம் – சொத்து. எல்லா உலகங்களையும் எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
 12. சுரேசன்: தேவர் தலைவன் சுரேசன்.
 13. செவ்வேள்: செந்நிறமுடையவன் ஞானச் செம்மை உடையவன்.
 14. சேந்தன்: செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
 15. சேயோன்: சேய் – குழந்தை குழந்தை வடிவானவன்.
 16. விசாகன்: விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
 17. வேலவன் வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக ஞான வடிவாக விளங்கும் வேல் கூர்மை அகலம் ஆழம் என்னும் மூன்றும் உடையது.
 18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
 19. சுப்ரமணியன்: சு – மேலான பிரம்மம் – பெரிய பொருளிலிருந்து நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
 20. வள்ளற்பெருமான்: முருகன் மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும் விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும் வேலின் மூலம் ஞான சக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும் முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
 21. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
 22. மயில் வாகனன்: மயில் – ஆணவம். யானை – கன்மம். ஆடு – மாயை. இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
 23. சோமாஸ்கந்தன்: சிவன் உமை முருகன் மூவர் சேர்ந்த வடிவம் சோமாஸ்கந்தன். உலக நாயகர்களாம் அம்மைக்கும் அப்பனுக்கும் இடையில் முருகன் அமர்ந்த திருக்கோலம். சோமாஸ்கந்தன் ஆனந்தத்தின் வடிவம்.

தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால் இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும். இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

சுயம்பு வேலவன்

வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி நட்சத்திரக் குன்று என்று அழைக்கப்படும் ஊரில் மலை மேல் சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால் சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு லிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இங்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தல கருவறையில் நாகாபரணத்துடன் முருகரும் சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒன்றாக காட்சி தருகிறார்கள். இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சி புராணம் மற்றும் அருணாச்சல புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய புராண வரலாறு உள்ளது. 27 நட்சத்திரங்களும் சிவ சர்பமும் முருகப் பெருமானை வழிபடுகிறார்கள். வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப் பெருமான் அமர்ந்து நித்யம் சிவபூஜை செய்கிறார். 27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் அமைந்திருக்கிறது. எனவே நட்சத்திர கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. மலை மீது உள்ள இக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் 300 உள்ளது.

வேல் விளையாட்டில் வல்லவனான வேலவன் வாழைப் பந்தலில் இருந்து எய்த அம்பு பருவத மலை மீது பாய்ந்தது. அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடு த்து மலையில் இருந்து வழிந்தோடியது. உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி செய்நதி எனும் பெயரும் உண்டு. சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது. எனவே செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரை கண்டீஸ்வரரையும் இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாச நாதரையும் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தார். அதே போல் முருகப்பெருமான் செய்நதியின் வலது கரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி கடலாடி மாம்பாக்கம் மாதிமங்கலம் எலத்தூர் குருவிமலை பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும் இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு ஓரந்தவாடி நார்த்தாம்பூண்டி நெல்லிமேடு மோட்டுப்பாளையம் பழங்கோயில் மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.

முருகப்பெருமான் வழிபட்ட இந்த 14 சிவாலயங்களையும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்விருவரும் ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். ஒரு வருடம் ஆடிக் கிருத்திகைக்கு திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. அதனால் மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன் திருத்தணிக்கு செல்லவில்லை என வருந்த வேண்டாம் நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாக சிவசுப்ரமணிய ஐக்கியத்தில் குடியிருக்கிறேன். சூரியன் சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும் நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கின்றன. எனவே நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட என்னை வந்து சேருங்கள் என இருவர் கனவிலும் முருகர் அருள்புரிந்தார். திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது. குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால் நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது.

அரோகரா

முருகனை வணங்கும் போது அரோகரா என்ற சொல்லுக்கு விளக்கம் என்ன?

அரோகரன் என்பது முருகனின் தூய தமிழ்ப் பெயராகும். அரன் + ஓங்கரன் = அ(ர+ஓ)கரன் = அரோகரன். ஓங்கரனில் இருக்கின்ற “ங்” உச்சரிப்பே நாளடைவில் மழுவி ஓகரன் ஆகிவிட்டது. தமிழ் இலக்கணத்தின்படி ன் எழுத்து இருந்தால் அது விலகி ஆ சேரும். உதாரணமாக முருகன் கந்தன் என்ற அழைக்கும் போது முருகன் என்பதை முருகா என்றும் கந்தன் என்பதை கந்தா என்றும் அழைக்கிறோம். அதுபோலவே அரோகரன் என்பதை அரோகரா என்றும் அழைக்கிறோம்.

அரோகரன் என்றால் பொருள் என்ன?

அரன் என்றால் = சிவன்
ஓங்கரன் = ஓங்காரத்தின் உருவமாக இருப்பவன்

அரோகரன் என்றால் சிவனிடமிருந்து வெளிவந்த ஓங்காரத்தின் வடிவமானவன் என்று பொருள்.

திருச்செந்தூர் முருகன் பழைய புகைப்படங்கள்

உற்சவர்
கோவில் யானை கோவிலுக்குள் நுழையும் காட்சி

திருப்போரூர் கந்தசாமி

திருப்போரூர் கந்தசாமி

முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து நிலம் ஆகாயம் கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கி வெற்றி பெற்றார். அசுரர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று போரிட்டு திருப்போரூரில் வெற்றி கொண்டார். முருகன் யுத்தம் புரிந்த இடம் ஆகையில் யுத்தபுரி என்று அக்காலத்தில் பெயர் பெற்றது. சமராபுரி போரிநகர் என்ற வேறு பெயர்களும் இந்த இடத்திற்கு உண்டு. அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர் புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும் பைரவரின் துணையோடும் கண்டறிந்த முருகப்பெருமான் அசுரர்களை சம்ஹாரம் செய்தார். மறைந்திருந்த அசுரர்கள் முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது. இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலை நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் அமைந்துள்ளது. பல யுகங்களுக்கு முன்னால் நடந்த பிரளயத்தால் ஆறு முறை இங்கு உள்ள முருகன் கோவில் அழிவைச் சந்தித்து இருக்கிறது என்று கோவில் புராண வரலாறு உள்ளது. தற்போது ஏழாவது முறையாக மீனாட்சி அம்மனின் அருளாலும் முருகனின் அருளாலும் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

சிதம்பர சுவாமிகள் சாந்தலிங்க அடிகளின் மாணவர். இவர் மதுரையில் தியானத்தில் இருந்த போது அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது தியானத்தில் மீனாட்சி அம்மன் தோன்றி மதுரைக்கு வடக்கே காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் அமைந்துள்ளது அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து அழகிய திருக்கோயில் நிர்மாணித்து முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டுவா. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்று அருளி மறைந்தார். மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து தற்போது திருப்போரூர் என்று அழைக்கப்படும் இடத்தை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அங்கு இருந்த பனை மரக்காட்டிற்குள் ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் இருந்தது. அதன் அருகில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில் ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார். சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோயிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து சிவாயநம என்று ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோயிலின் தோற்றமும் அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் இங்கே கோவில் கட்ட வேண்டும் இது இறைவன் ஆணை என்பதை உணர்ந்தவர் மனதில் தோன்றிய கோயில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

திருப்போரூர் பகுதியை அப்போது ஆட்சி செய்து வந்த ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது சிதம்பர சுவாமிகள் நவாப் மனைவிக்கு திருநீறு பூச அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோயிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். முருகன் அருளால் தனது மனத்திரையில் தோன்றியபடியே அழகிய திருக்கோயிலை கட்டி முடித்தார் சிதம்பர சுவாமிகள். அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் ஆகும். கோவிலின் அருகில் இருந்த ஒடையை குளமாக மாற்றினார். இக்குளத்தில் இருக்கும் நீரானது இது வரை வற்றியது இல்லை. பனை மரத்தடியில் முருகன் இருந்த பனை பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். நைவேத்தியத்திற்கான அரிசியை இதில்தான் வைத்துள்ளனர்.

கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. பிரதான பூஜைகள் அனைத்தும் ஆமை வடிவத்தின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சுப்பிரமணியர் யந்திரத்திற்கே நடைபெறுகிறது. இந்த யந்திரத்தில் முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின் இந்த யந்திரத்திற்கு அபிஷேகங்கள் பூஜைகள் நடக்கும். பிரம்மாவைப் போல் அவருக்குரிய அட்சர மாலை மற்றும் கண்டிகையும் சிவனைப் போல் வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த முத்திரையும் பெருமாளைப் போல் இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த முத்திரையும் என மும்மூர்த்திகளின் அம்சமாக கந்தசாமி முருகன் அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு எதிரே ஐராவதம் (வெள்ளையானை) வாகனமாக உள்ளது. இந்த கோயிலின் தல மரம் வன்னி மரம் ஆகும். கோவிலின் தெற்கே உள்ள குளத்தின் பெயர் வள்ளையார் ஓடை என்னும் சரவணப் பொய்கை ஆகும்.

கோவிலில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளார். கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர் தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். இக்கோயிலில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் உள்ளார். கொடிமரம் கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது. வள்ளி தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. முருகன் சன்னதி கோஷ்டத்தில் பிரம்மாவின் இடத்தில் பிரம்ம சாஸ்தா (முருகனின் ஒரு வடிவம்) இருக்கிறார். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. முருகன் சன்னதி சுற்றுச்சுவரில் முருகரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. கையில் வில்லேந்தி மயில்மேல் காலை வைத்தபடி சம்ஹார முத்துக்குமார சுவாமிக்கும் இங்கு சிலை உள்ளது. கோயில் பிரகாரத்தில் வான்மீகநாதர் சிவலிங்க சன்னதி உள்ளது. இவருக்கு துணைவியான அம்பாள் பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்க காரணமாக இருப்பதால் இவருக்கான புண்ணிய காரணியம்மன் என்று பெயர். ஓம்கார அமைப்பில் அமைந்த இக்கோயில் சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சன்னதியிலிருந்து பார்த்தால் முன்னால் செல்பவர்களின் முதுகு தெரியாதபடி நுட்பமாக கட்டப்பட்டுள்ளது.

முருகனைப் போற்றி சிதம்பர சுவாமிகள் 726 பாடல்கள் பாடினார். தனது குருவான சாந்தலிங்க அடிகளின் நூல்களுக்கு உரைகள் எழுதி உள்ளார். உபதேச உண்மை உபதேசக் கட்டளை திருப்போரூர் சந்நிதி முறை தோத்திர மாலை திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் முதலியனவும் திருப்போரூர் முருகன் மீது கிளிப்பாட்டு குயில்பாட்டு தாலாட்டு திருப்பள்ளிஎழுச்சி ஊசல்தூது என பல பாடல்கள் பாடியுள்ளார். இவருக்கு கோவிலுக்குள் சன்னதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை வைபவம் நடக்கும். கோவிலின் சாலையின் மறுபுறமுள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர் பாலாம்பிகை கோவிலை வடிவமைத்த சிதம்பர சுவாமிகள் அந்த கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்கபாதை அமைத்து அதில் சமாதி அடைந்தார்.

அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலம் பற்றி பாடல் பாடியுள்ளார். அவர் கந்தசுவாமியை சகல வேதங்களின் வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் சுவாமிக்கு வேதஉச்சியாக சுவாமி என்றும் பெயருண்டு. அனைத்து வேதங்களுக்கும் தலைமையாக இருப்பவர் என்பது இதன்பொருள். கந்தசஷ்டி விழா இங்கு விசேஷமாக நடக்கும். இவ்வேளையில் கஜமுகன் பானுகோபன் சிங்கமுகன் சூரபத்மன் அஜமுகி தாரகன் ஆகிய அசுரர்களை வதம் செய்வார். மாசி பிரம்மோற்ஸவத்தின் போது முருகன் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்யும் வைபவம் நடக்கும். முருகன் வாய் மீது கை வைத்துள்ள சிவனின் மடியில் அமர்ந்து உபதேசம் செய்யும் சிலையும் இங்குள்ளது. இவ்வேளையில் மகாவிஷ்ணு விநாயகர் நந்தி பிரம்மா இந்திரன் ஆகியோரும் உடனிருப்பர்கள்.