கேள்வி: குடும்பத்தில் இருந்தவாரே எவ்விதம் ஆன்மீகம் தொடருதல் வேண்டும்?
என்றும் போல் வாழ்க என எளிதாக யாம் கூறி விடுவோம். பெரிதாக மாற்றங்கள் ஏற்படுத்துதல் அனைத்தும் விடுதல் என்கின்றதால் ஆன்மீக உச்சம் அடைய இயலாது. நாம் ஆன்மீக நாட்டம் உள்ளதால் மற்றவர்களும் ஆன்மீக பாதையில் வருதல் வேண்டும் என எண்ணுவது தவறாகும். இதற்கு அவர்களும் ஆன்மீகத்திற்கு வர வேண்டும் என ஆண்டவனிடம் வேண்டுவது தவறில்லை. இருப்பினும் அவரவர் கர்ம நிலையை தொட்டே அவர்களின் முன்னேற்றம் உண்டாகும். பின்பு எவ்விதம் ஓர் குடும்பத்தில் செல்வது என்றால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களை ஆனந்தப்படுத்த வேண்டும். விசித்திரமாக உள்ளதால்லவா! நாம் மற்றவர்களுக்கு ஆனந்தம் கொடுக்க சந்தோசத்தை கொடுக்க நாம் நாடுவது நமக்கு எளிதாக கிடைக்கும் என்பது ஓர் விதியாகும். இதில் மற்றவர்களின் குணாதிசயங்களை ஆராய்தல் வேண்டாம். ஏனெனில் ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை. இருப்பினும் ஐந்தும் சேர்ந்தாலே கை அசையும்.
இவ்விதமே குடும்பத்தில் அனைத்து அங்கங்களும் தானாக இயங்கி ஓர் கையாக மாறுதல் வேண்டும் என ஆண்டவனை வேண்டிட அவர் கருணையால் அருளால் குடும்பம் ஆன்மீக நிலை அடையும். தீயவர்களாக உள்ளோரும் நல்லவர்களாக மாறி இறையருள் பெறுவர். வால்மீகி என்கின்றவர் எவ்விதம் இராமாயணம் என்கின்ற நூலை எழுதினார் என்பதை சிந்திக்க வேண்டும். வேடம் கட்டி திரிந்த பலர் உண்மையாக துறவம் கண்டனர் என்கின்ற பல கதையும் புராணங்களில் உண்டு. தன்னை ஆக்கிரமிக்க வந்தது சிங்கம் என வில்வ மரத்தின் மீது அமர்ந்து காலை வரை வில்வ இலைகளை கீழே போட்டு விடிந்ததும் நாம் போட்டது சிங்கம் மீது அல்ல சிவலிங்கம் என உணர்ந்தார். அத்தகைய நபருக்கும் இறையருளால் முக்தி கிடைத்தது ஆண்டவனின் அருள் கருணையானது பெரிது. அனைத்தையும் சீராக்க அவரால் முடியும். வேண்டியது பொறுமை ஒன்றும் நமக்கென எதுவும் வேண்டாம் என்ற மனப்பான்மையை வளர்த்திட அனைத்தும் நம்மை வந்து சேரும். அவரவர் வாழ்க்கையில் இக்கொள்கைகள் இவ்விதமுறைகளை கடைபிடித்து வர எங்கும் நலம் அனைத்தும் நலமே.