குருநாதர் கருத்துக்கள் #5

நன்கென கற்றோர் அறிவுள்ளோர் பாண்டித்யம் உள்ளோர் மகாபாதகங்கள் செய்வது ஏன்?

கல்லாதோர் செய்ய அஞ்சும் (பயப்படும்) பாதகங்கள் இவர்கள் செய்கின்றனர். அப்போது கல்வி எதற்கு என்று ஓர் வினா இங்கு கேட்கப்படுகிறது. கல்வி என்பது இரு வகையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்று அறிவும் ஒழுக்கமும் நலமும் தரும் கல்வி. மற்றொன்று வெறும் தகவல்களை தரும் கல்வியாகும். இத்தகைய தகவல்கள் நன்கென படித்தும் புள்ளி விவரங்களை உணர்ந்தும் சமயங்களில் இதனை கூறியும் எழுதியும் காட்டுவது வெறும் பாண்டித்யம் ஆகும். இத்துடன் ஒழுக்கமும் அறிவும் குறிப்பாக நல்அறிவு சேராது இருந்தால் அது கல்வியே இல்லை. கல்லாதோர் பலர் பெருமளவில் ஒழுக்கமும் அறிவாற்றலும் படைத்து நேர் வழியில் செல்கின்றனர். பாண்டித்யம் மேல் படிப்பு படித்தவர்கள் எல்லாம் பலர் தீய வழிகளிலும் மனம் வக்ர நிலை கொண்டு செயல்படுகின்றனர். இதிலும் நல்லோர் உள்ளனர். கற்றோர்களில் சிலர் தீயவர்களும் உண்டு. கல்லாதோர்களில் பல மகான்களும் உண்டு.

குருநாதர் கருத்துக்கள் #4

கேள்வி: நல்லதோர் விக்னம் தீர்ப்போனை (வினாயகர்) வினாயகர் சதுர்த்தி அன்று மண்ணில் பிம்பம் உண்டாக்கி இதனை பூஜை செய்தபின் சில நாட்கள் கழித்து நீரில் எறிவதும் தசரா காலங்களில் துர்க்கையை மண்ணில் உருவாக்கி பூஜை செய்த பின் நீரில் எறிந்து சமயங்களில் மனிதர்கள் கண்ணீரை விடுகின்றனரே இதன் பொருள் என்ன?

வீட்டில் ஓர் குழந்தை பிறக்க அக்குழந்தை வடிவம் எடுத்ததால் ஆத்மா உண்டு என்று உணர்கிறோம். இது வளர்ந்து படித்து திருமணம் குழந்தைகள் உண்டாகிய பின் இறக்க இதனை சடங்குகளுடன் அக்னியிலோ இல்லை பூமிக்கோ செலுத்துகிறோம். கண்ணீர் தழும்ப திருப்புகின்றோம். இதனை உணர்ந்தால் வினாவுக்கு விடை எளிதாக உணர முடியும். வணங்குவது மூர்த்தியை அல்ல அதைக்குறிக்கும் சக்தியை இதை உணர்த்திடும் வழியாக மூன்று நாள் நன்றாக அதனை பூசித்த பின் சில நாட்கள் கழித்து நீரில் கலந்து விடுகின்றோம். பஞ்ச பூதங்களில் ஒன்றானது அப்பூதமோடு கலந்து விடுகிறது. மண் மண்ணாகி விடுகிறது. இருப்பினும் அச்சக்தி பொதுவாக அங்கு நிரம்பி நிற்கின்றது என அறிந்து கொள்ள வேண்டும். மனிதன் தற்காலிக நிலையை உணர்த்திடவே இச்சடங்குகளை செய்து வருகின்றோம். பஞ்ச பூதங்களில் உருவானது அப்பூதங்களில் கலந்து விடும் என்றும் அதனை ஆட்டுவிக்கின்ற சக்தியானது என்றும் இருக்கும் என்பதை உணர்த்திடவே இத்தகைய ஓர் சிறு நாடகம் நடத்தப்படுகின்றது.

குருநாதர் கருத்துக்கள் #3

தேவையின்றி காரணமில்லாமல் பலர் சினம் (கோபம்) கொள்கின்றனர், இச்சினத்திற்கு காரணத்தை தேடினால் காரணமானது எதிர்பார்ப்பாக இருக்கும். எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் கோபம் பொங்குகிறது, தீர்வு கிடைக்காவிட்டால் ஏசுவதே (திட்டுவதே) நல்ல பொழுது போக்காகின்றது. இவையாவும் எதிர்பார்ப்புகளின் விளைவுகளே இதனை திருத்திட முயற்சிகள் வேண்டும். பணப்பையை விட்டுவிட்டால் எவருக்கேனும் உதவும். கோபத்தை விட்டுவிட்டால் எவருக்கும் உதவாது. இந்நிலையில் கோபத்தினால் பலப்பல வாய்ப்புகள் இழந்து நிற்கும் சூழ்நிலை உருவாகும்.

இந்த கோபத்தை நீக்காவிடில் மன அமைதி குறையும் என்பது மட்டுமல்லாமல் மன அமைதியோடு இறை நாட்டமும் குறையும் என்பது விதியாகும். ஏனெனில் அசையாமல் அளந்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் உள்ள தொட்டியில் இரண்டு சிறு கற்கள் விழுந்தால் அந்த தண்ணீர் மொத்தமாக கலைந்து விடுகிறது. அந்த தண்ணீரின் அளவையும் காணமுடியாது என்பது பொது அறிவாகும். இத்தகைய நிலையில் கோபப்படுகின்றவர்கள் எமது வேண்டுகோளாக கோபத்தை குறைப்பீர்களாக மற்றவர்களை தீட்டுவதால் உங்களின் கர்ம நிலை ஏறுகிறது என்பது மட்டுமல்லாமல் மன நிம்மதியும் இழந்து விடுகின்றீர்கள். வாய்ப்புகள் சென்று விடுகிறது. கோபத்தின் விளைவாக அகங்காரம் அதிகமாகின்றது. ஆதலால் கோபத்தை உறுதியாக தவிர்த்தல் வேண்டும் அன்பர்களே.

குருநாதர் கருத்துக்கள் #2

கேள்வி: நல்ல காரியங்கள் துவங்கும் போது சுபமுகூர்த்தங்களில் துவங்க வேண்டுமா?

பொதுவாக சுபகாரியங்கள் சுபநேரங்களில் நடத்துவது வழக்கமாகி விட்டது. இதனைப் பின் தொடர்வது தவறாகாது. அக்காலங்களில் பொதுவாக குளிகனின் காலங்களில் (குளிகன் சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம்) சுபகாரியங்கள் தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும் இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. நாகனின் (இராகு) காலங்களில் தீயகாரியங்களும் சுபமற்ற காரியங்களும் செய்து கொண்டு இருந்தனர். இக்காலத்தில் அது மாறி நற்காலங்களுக்கு என சில முகூர்த்தங்களும் தீயவைகளுக்கு என சிலதும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எவ்விதம் இருந்த போதிலும் உறுதியாக தம் கர்மங்களை தொடர்ந்து ஓயாது செய்து கொண்டிருப்பவனுக்கு அனைத்தும் நலம் தரும் காலமாகும். இவர்களுக்கு எப்பொழுதும் நல்ல காலமே. ஏனெனில் அவர்கள் உழைப்பினை தெய்வமாகக் கண்டு கொண்டனர். ஓர் சுபகாரியம் நடத்தும் முன் சுபமுகூர்த்தமோ சுபகாலமோ முக்கியத்துவம் காண்பதில்லை. செய்கின்றவரின் மன நிலையைப் பார்த்தல் வேண்டும். எக்காரியத்திற்கு சுபகாரியம் நடைபெறுகிறது. அது சுயநலம் உள்ள காரியங்களா பொதுநலம் உள்ள காரியங்களா என்கின்ற மன நிலையைப் பார்த்துக் கொண்டால் அனைத்தும் நலமே. இருப்பினும் சம்பிரதாயம் என்கின்ற ஒன்றுக்குக் கட்டுப்பட்டு சுபகாரியங்கள் சுபமுகூர்த்தங்களில் செய்வது தவறாகாது.

சுபமுகூர்த்தங்களில் செய்யும் காரியங்கள் எப்பொழுதும் நலம் தருமா?

அவ்விதம் இருக்க வேண்டும் என்பதில்லை. இங்கு முன் கூறியபடி செல்பவனின் மன நிலையே முக்கியத்துவம் காண்கின்றது. நல்ல எண்ணங்களுடன் செய்த அனைத்தும் நல்ல முடிவுகளைத் தரும் என்பது இறைவன் வகுத்த நீதியாகும். இவ்விதம் இருக்க சுபகாரியங்களுக்குச் சமயங்களில் முகூர்த்தம் பார்த்தல் வேண்டும் என்பது தவறாகும். சம்பிரதாயம் என்பன ஒட்டி நல்காரியங்கள் நல்காலங்களில் செய்வது நன்று என்பதை மட்டும் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் உழைப்பை நாடுகின்றவனுக்கு இத்தகைய நேரங்கள் இல்லை. இறைவனை நம்புகிறவனுக்கு எக்காலமும் நலம் தரும் காலமாகும்.

குருநாதர் கருத்துக்கள் #1

9-4-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஒருவன் பிறக்கும் முன்னதாகவே பிறவி எப்படி என்பதும் ஜாதி, குலம் எப்படி என்பதும் மரண நேரம் எப்போது என்பதும் நிர்ணயம் ஆகக் கண்டால் அகால மரணம் என்பதும் நிர்ணயிக்கப்பட்டதா?

மனிதன் பிறக்கும் முன்னதாக செய்து பாக்கியுள்ள கர்ம நிலையே இப்பிறப்பு ஜன்ம ஜாதகம் ஆகும். சென்ற பிறப்பு கர்ம பாக்கிகள் தீர்க்கும் நிலையில் மரண நிலை குறிக்கப்படுகிறது. ஆனால் அதே நிலையில் மனிதன் இருப்பதில்லை. இந்த ஜன்மத்திலும் கர்மங்கள் சேர்த்துக் கொள்வதும் கழித்துக் கொள்வதும் ஆக இருக்கும் பொழுது சமயங்களில் நல்காலங்களில் பொதுவாக நல்காலங்கள் செல்லும் நிலையில் அகால மரணம் அதாவது முன்னதாகவே மரணம் கொண்டுள்ளதை காண்கின்றோம். இக்கால கர்ம வினைகள் கணக்கிட இயலும் என்றால் அந்த மரணமும் நிர்ணயம் செய்திட இயலும்.

இதன் பொருள் என்னவென்றால் அதிகமான ஆண்டுகள் கடினங்கள் காண வேண்டும் என்ற நிலை இருந்த போதும் நல்கர்மாக்கள் அதாவது நல்வினைகள் செய்து கொண்டு இருக்க ஆயுள் நல்ல நிலையில் கடினமின்றி செல்லக்கூடும் என்பதே ஆகும். இதன் வழியாக மறு ஜன்மம் ஒன்று இருந்தால் அப்பிறவியின் பிறக்கும் கால ஜாதகம் ஆனது சிறப்பாகவே அமையக்கூடும்.

முன்னுரை

எமது குருநாதரிடம் பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதில்கள் விளக்கங்கள் மற்றும் கருத்துக்கள் இந்த பக்கத்தில் இடம்பெறும்.