ஞானம்

கௌரவர்களின் தலைநகராக இருந்த அஸ்தினாபுரம் நகருக்கு கிருஷ்ணர் வந்தார். பலர் தங்களுடைய வீட்டிற்கு அழைத்தும் அங்கெல்லாம் போகாமல் விதுரனின் வீட்டுக்குச் சென்றார் கிருஷ்ணர். தன்னுடைய வீட்டிற்கெல்லாம் கிருஷ்ணர் வரமாட்டார் என்றிருந்த விதுரரின் வீட்டிற்கு திடீரென்று வந்த கிருஷ்ணரைப் பார்த்ததும் நிலை தடுமாறினார் விதுரர். இங்கும் அங்குமாக ஓடி என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்தார். கிருஷ்ணரை இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது? என்று எண்ணிய விதுரர் ஓடிப் போய் ஓர் ஆசனத்தை எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்து விட்டு அந்த ஆசனத்தை நன்றாக தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே அதில் அமரச் சொன்னார். கிருஷ்ணர் சிரித்தபடியே நின்றார். ஏதேனும் சாப்பிடக் கொடுக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே அடுப்படிக்கு ஓடினார். கண்ணில் பழங்கள் தென்பட்டன. அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு கிருஷ்ணரிடம் வந்து கிருஷ்ணா இப்போது என்னிடம் இருப்பது இவை மட்டுமே மறுக்காமல் சாப்பிடுவாயாக என்று கேட்டுக் கொண்டார்.

விதுரர் படபடப்போடேயே காணப்பட்டார். அவரது சிந்தனையில் தான் துரியோதனனின் உப்பைச் சாப்பிடுகிறோம். அவன்தான் தனக்குச் சோறு போடுகிறான். பாண்டவர்களுக்காக கிருஷ்ணர் தூது வந்தபோது மிகப்பெரிய பள்ளம் தோண்டி அதன் மேல் கம்பளம் விரித்து அந்தக் கம்பளத்தின் மீது ஆசனத்தை வைத்திருந்தான் துரியோதனன். கிருஷ்ணர் அந்த ஆசனத்தில் அமர்ந்ததும் கீழே விழுவார். அவரை சிறை பிடிக்கலாம் என்று திட்டம் வைத்திருந்தான் துரியோதனன். இப்படிப்பட்ட கீழ்மையான எண்ண் கொண்ட துரியோதனனின் சாப்பாட்டில் வளர்ந்த நாம் அவனைப் போலவே சிந்தனை கொண்டு சுயநினைவின்றி கிருஷ்ணரை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோமோ அந்த ஆசனத்தில் ஊசியைச் செருகி வைத்து இம்சிக்கச் செய்திருக்கிறோமோ துரியோதனின் சாப்பாட்டை சாப்பிட்ட எனக்கு அவன் புத்தியானது நம்மையும் அறியாமல் வந்திருக்குமோ எனப் பதைபதைத்தார் விதுரர். விதுரருக்கு எவ்வளவு பெரிய ஞானம். இந்த ஞானியின் கலக்கத்தைக் கண்டு ரசித்த கிருஷ்ணர் விதுரா என்னைக் கண்டதும் நீ படுகின்ற உன் கலக்கமே என் பசியை ஆற்றிவிட்டது என்றார்.

இறைவனுக்காக பூஜை செயல்களில் ஈடுபடும் போது தன்னையும் அறியாமல் தவறு ஏதேனும் செய்து விடுவோமோ நடந்து விடுமோ என்று எண்ணத்தில் இறைவனைத் தவிர வேறு சிந்தனையில்லமால் சிரத்தையுடன் இருக்க வேண்டும். இப்படி இருப்பவர்களே ஞானியாகத் திகழ்கிறார்கள். இறைவன் இவர்களுக்கே முதன்மையில் அருள்கிறார் அரவணைக்கிறார் ஆட்கொள்கிறார் என மகாபாரதத்தில் அற்புதமாக விளக்குகிறார் வேதவியாசர்.

கண்ணனின் குரு தட்சணை

கண்ணனும் பலராமரும் சாந்தீபனி என்ற குருவிடம் கல்வி கற்றார்கள். இருவரும் அறுபத்து நான்கே நாட்களில் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்று முடித்தார்கள். குருகுல வாசத்தைப் பூர்த்தி செய்து கொண்டு கிளம்பும்போது குருநாதரிடம் உங்களைக் குருவாக அடைந்ததை எங்கள் பாக்கியமாகக் கருதுகிறோம். உங்களுக்கு நாங்கள் குரு தட்சணையாக என்ன தர வேண்டும்? என்று இருவரும் கேட்டார்கள். அதற்கு குரு கண்ணா உங்களைப் போன்ற ஒரு மாணவன் கிடைக்க நானல்லவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்? நீயும் பலராமனும் மாணவர்களாகக் கிடைத்ததே எனக்குப் பெரிய தட்சணை என்று சாந்தீபனி பதிலளித்துக் கொண்டிருக்கையில் அவரது மனைவி சுவாமி ஒரு நிமிடம் என்று அவரை உள்ளே அழைத்தாள். அறைக்குள் வந்த அவரிடம் சுவாமி கண்ணனிடம் குரு தட்சணைை வேண்டாம் என்று சொல்லாதீர்கள் இந்தப் பலராமனும் கண்ணனும் அறுபத்து நான்கே நாட்களில் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றிருக்கிறார்கள். எனவே இவர்கள் அசாத்தியமான செயல்களையும் சாதிக்கும் வல்லமை பொருந்தியவர்கள். எனவே இறந்து போன நம் குழந்தையை மீட்டுத் தருமாறு அவர்களிடம் கேளுங்கள் என்றாள்.

கண்ணனால் இதனை செய்ய இயலுமோ இயலாதோ என்ற ஐயத்துடன் வெளியே வந்த சாந்தீபனி கண்ணா பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நான் என் குடும்பத்தோடு கடலில் குளிக்கச் சென்றிருந்த போது என்னுடைய ஒரே மகன் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். அவனை உன்னால் மீட்டுத்தர முடியுமா? என்று கேட்டார். மகா குருவே உங்களுக்காக இதைக் கூடச் செய்யமாட்டேனா? உங்கள் மகனுடன் திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கண்ணன் கடலரசனைக் காண புறப்பட்டான். கடல் அரசனிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கண்ணன் கேட்ட போது பஞ்சஜனன் என்ற ஓர் அசுரன் கடலுக்குள் இருக்கிறான். அவன்தான் அந்தச் சிறுவனை விழுங்கியிருப்பான் என்று கைகாட்டினான் கடலரசன். உடனே பஞ்சஜனனோடு யுத்தம் செய்து அவனை வீழ்த்தினான் கண்ணன். பஞ்சஜனனின் எலும்புகளால் உருவானதுதான் கண்ணன் கையில் ஏந்தியிருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு. அவனது வயிற்றுக்குள் கண்ணன் தேடினான். ஆனால் சாந்தீபனியின் மகன் அவன் வயிற்றில் இல்லை. அடுத்து வருணனிடம் சென்ற கண்ணன் சாந்தீபனியின் மகனைக் குறித்து வினவ அந்தச் சிறுவன் யமலோகத்தில் இருக்கிறான் என்றார் வருண பகவான். யமலோகத்துக்குச் சென்றான் கண்ணபிரான். தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துக் கண்ணன் சங்கநாதம் செய்தவுடன் யமன் கண்ணனின் திருவடிகளில் வந்து விழுந்தான். பரந்தாமா என்னைத் தேடி நீங்கள் வரவேண்டுமா? அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே என்றான். தன் குருவின் மகனைக் குறித்துக் கண்ணன் கேட்க இங்கு தான் இருக்கிறான் என்று சொன்ன யமன் அவனைக் கண்ணனிடம் ஒப்படைத்தான். அந்தச் சிறுவனைச் சாந்தீபனியிடம் அழைத்து வந்து குருதட்சணையாகச் சமர்ப்பித்தார் கண்ணன்.

இதை திருமங்கையாழ்வார் தன் திருவாய் மொழியில் பாடலாக பாடியுள்ளார்.

முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்த
அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர்
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி
நந்து வாரும் பைம் புனல் வாவி நறையூரே

என கண்ணனின் புகழை பாடுகிறார்.