கிருஷ்ணன் கர்ணனிடம் யாசகம் கேட்கும் அந்தணனாக சென்று யாசிக்கிறார். கர்ணனோ என்னிடம் இப்போது இருப்பது என் உயிர் மட்டுமே. இல்லை என்று என்னை கூற வைக்காமல் என் உயிரை யாசகமாக பெற்று என்னை பெருமை அடைய வையுங்கள் வேண்டாம் என்று சொல்லி என்னை சிறுமை படுத்திவிடாதீர்கள் என்று கூறினான். அதற்கு கிருஷ்ணன் கர்ணா நீ செய்த தர்மத்தின் பலனை எல்லாம் எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடு அதுபோதும் என்கிறார். கர்ணனும் மறு மொழியின்றி இறப்பிலும் இன்முகத்தோடு தான் செய்த தான தர்மத்தின் பலனை எல்லாம் தன் உதிரம் மூலம் கிருஷ்ணருக்கு தாரை வார்த்துக் கொடுத்தான். பின் கிருஷ்ணன் தன் விஸ்வரூபத்தை காட்டி அழியா புகழோடு நீ முக்தியையும் பெறுவாய் என்று வாழ்த்தினார். கர்ணன் தன் இரு கைகளை கூப்பி பரந்தாமனை வணங்க அப்போது அர்ஜூனன் எய்த அம்பு கர்ணனின் கழுத்தை துண்டித்தது. கர்ணனின் உடலில் இழுந்து ஒளி ஒன்று சொர்கத்தை நோக்கி சென்றது. கர்ணன் வீர மரணம் அடைகிறான். நட்புக்கு இலக்கணமாய் வீரத்திற்கு உதாரணமாய் கொடுத்த வாக்கிற்கு பீஷ்மமாய் வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளலாய் வாழ்ந்த கர்ணன் சரித்திர நாயகனாய் மண்ணில் சாய்ந்தான். சூரியன் மறைய பதினேழாம் நாள் யுத்தம் முடிவிற்கு வந்தது.
கர்ணன் மாண்ட நிமிடமே போர் தொண்ணூறு சதவிகிதம் முடிந்தது. பிறகு நடந்த போர் வெறும் சடங்குக்காகவே நடக்கிறது என்பதை துரியோதனன் உணர்ந்தான். தனது பிரியமான 99 தம்பியர்களை இழந்தான். பீஷ்மர் குரு துரோணரை இழந்தான். உயிரினும் மேலான நண்பன் கர்ணனை இழந்தான். மனம் வருந்தினான். செய்வதறியாமல் தவித்தான். இவ்வுலகவாழ்வில் இனி பயன் ஒன்றுமில்லை என்ற உணர்ச்சி அவனுக்கு உண்டாயிற்று. ஆதிக்கத்திலும் உலக ஆட்சியிலும் அவன் படைத்திருந்த பேராசை நிரந்தரமாக அவனைவிட்டு அகன்று போயிற்று. இவ்வுலகில் இனி வாழ்ந்து இருக்க அவன் விரும்பவில்லை. அதிவிரைவில் மறுமையை அடைந்து தன் தோழர்களோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். கௌரவர்கள் கூட்டத்தில் ஒரே துயரம். பாண்டவர்களுடைய கூட்டத்தில் ஒரே மகிழ்ச்சி பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்கு காரணம் கிருஷ்ணருடைய கிருபை என்று யுதிஷ்டிரர் அனைவரிடமும் கூறினார்.
கர்ண பருவம் முடிந்தது. அடுத்து சல்லிய பருவம்.