பாண்டவர்களுக்கு வெற்றியடையும் அறிகுறி தென்பட்டது. கௌரவர்கள் பக்கம் சேதம் மிகப்பெரியதாக இருந்தது. தெய்வீக இயல்புடன் மண்ணுலகிற்கு வந்திருந்த பீஷ்மர் குருவான துரோணர் மற்றும் கௌரவ சகோதரர்கள் உற்றார் உறவினர்கள் வேந்தர்கள் பலர் துரியோதனனுக்காக உயிர் விட்டார்கள். துரியோதனனுடைய படையின் பெரும் பகுதி அழிந்தது. துரியோதனன் வெற்றி அடையும் அறிகுறி ஏதும் தென்படவில்லை. எப்படியாவது இந்த யுத்தத்தில் வெற்றியடைய வேண்டும் என்னும் பேராசை துரியோதனனை விட்டு அகலவில்லை அழிவு அதிகரிக்க அவனுடைய ஆசையும் அதிகரித்தது. பாண்டவர்களை எப்படியாவது வென்றாக வேண்டும் என்று துரியோதனன் விரும்பினான். அதற்குரிய வழிமுறைகளை பற்றி அன்றிரவு சகவீரர்களுடன் ஆலோசனை செய்தான். சபையினர் அவரவருக்கு தெரிந்த கருத்துக்களை பலவிதமாக தெரிவித்தார்கள்.
சபையினர் முன்னிலையில் அஸ்வத்தாமன் பேசினான். நம் பக்கமுள்ள மகாவீரர்கள் அழிந்து போகவில்லை. இங்கு கூடியுள்ள அனைவரும் சேனாதிபதி பொறுப்பை ஏற்க தகுதி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் முதன்மை வகிப்பவன் கர்ணன். பிறவியிலேயே அவன் பெற்றுள்ள பயிற்சியும் அதன்பிறகு இவன் பெற்றுள்ள பயிற்சியும் ஒன்று சேர்த்து கர்ணனை பீஷ்மருடனும் துரோணருடனும் ஒப்பிட்டு பேசலாம். பீஷ்மரும் துரோணரும் பாண்டவர்களிடம் ஓரளவு அன்பு வைத்திருந்தார்கள். கர்ணனோ பாண்டவர்களை அறவே வெறுப்பவன். துரியோதனுக்கு தன் உயிரையும் தர தயாராய் இருப்பவன். கர்ணனை சேனாதிபதியாக நியமிக்கலாம். கர்ணனை சேனாதிபதியாக நியமித்தால் இனி நடக்கும் யுத்தம் நமக்கு அனுகூலமாக இருக்கும் என்று தனது கருத்தை சொன்னான். அஸ்வத்தாமன் கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனை கேட்ட துரியோதனன் அகமகிழ்வு அடைந்தான். அஸ்வத்தாமன் சொற்படியே நடந்து கொள்ள சம்மதித்தான். கர்ணனிடம் சேனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். கர்ணனும் அதற்கு முழுமனதுடன் சம்மதித்தான். கர்ணன் கௌரவர்களின் மூன்றாவது சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். கர்ணனால் தான் அதிவிரைவில் போட்டியில்லாத சக்கரவர்த்தி ஆகக்கூடும் என்று துரியோதனன் ஆசை கொண்டிருந்தான்.
பதினாறாம் நாள் யுத்தம் துவங்கியது. தன்னுடைய சேனேகளை கர்ணன் மகர வியூகத்தில் அமைத்தான். இரண்டு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட மகர வியூத்திற்கு முன்பு இப்பொழுது அமைக்கப்பட்ட மகர வியூகம் மிகச்சிறியதாக காணப்பட்டது. இதை எதிர்த்து பாண்டவர்களின் சேனை தலைவன் திருஷ்டத்யும்னன் தனது சேனேகளை சந்திர வியூகத்தில் அமைத்தான். பார்ப்பதற்கு அதுவும் சிறியதாக இருந்தது. இரண்டு பக்கங்களும் இருந்த சேனைகள் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டன. மோதுகின்ற முறையில் முதலில் ஒழுங்கு தென்பட்டது. வீரியம் உடையவனாக முன்னேறி வந்த கர்ணன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். அவனிடத்தில் ராஜரீதி தென்பட்டது. கர்ணனுடைய பங்கை பார்த்த கௌரவ கூட்டத்தினர் தாங்கள் பீஷ்மரையும் துரோணரையும் இழந்ததை மறந்து விட்டனர்.