மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -8

பாண்டவர்களை பற்றி பேச்சு ஆரம்பமானதும் கர்ணனுக்கு இதைக் குறித்து பரபரப்பு மிக உண்டாயிற்று ஏனென்றால் பாண்டவர்கள் மறைந்து இருக்கும் காலம் பெரிதும் கடந்து போயிற்று. பாண்டவர்கள் மறைந்து வாழும் காலம் ஓர் வருடத்தில் இன்னும் சில நாட்களே உள்ளது. திறமை வாய்ந்த வேறு சில ஒற்றர்களை உடனடியாக அனுப்பி தீவிரமாக அவர்களைத் தேடிப் பார்க்க வேண்டும் என்று கர்ணன் தெரிவித்தான். பாண்டவர்கள் மறைந்து போயிருக்க மாட்டார்கள் என்றும் அவர்களே கண்டுபிடிப்பது சாத்தியமல்ல என்றும் துரோணாச்சாரியார் தனது கருத்தை தெரிவித்தார்.

துரோணாச்சாரியார் கருத்தை பீஷ்மரும் ஆமோதித்து கிருஷ்ணனுடைய கருணைக்கு பாண்டவர்கள் பாத்திரமாய் இருக்கிறார்கள். பாண்டவர்கள் தர்மத்தை விட்டு பிசகியது கிடையாது. பாண்டவர்கள் தர்மத்தை கடைபிடிப்பதால் அவர்கள் எங்கு வசித்து வருகின்றார்களோ அங்கு சௌபாக்கியங்களும் நிறைந்திருக்கும். அவர்கள் வசித்து வருவதை முன்னிட்டு அங்கு மழை ஒழுங்காக பெய்யும். அவர்கள் வசித்து வரும் இடத்தில் மக்கள் சண்டை சச்சரவு ஏதும் செய்ய மாட்டார்கள் என்று பீஷ்மர் தெரிவித்தார். மேலும் பாண்டவர்களுக்குரிய ராஜ்யத்தை துரியோதனன் தனக்கு சொந்தமாக்கி நன்கு அனுபவித்தாகி விட்டது. ராஜ ரீதியான முறையில் அவர்களிடம் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குரிய நாட்டை அவர்களிடமே ஒப்படைப்பது சரியானதாகும். அப்படி செய்வது துரியோதனுடைய கண்ணியத்திற்கு பொருத்தமானதாக இருக்கும் என்று கூறினார்.

ஒற்றர்களின் புதியதொரு படை நாடு முழுவதும் சுற்றிப்பார்த்து விட்டு விராட நகரை பற்றிய செய்தி ஒன்றை அஸ்தினாபுரத்தில் கொண்டு வந்தார்கள் பெண்பால் ஒருத்தியிடம் முறை தவறி நடந்து கொண்டதற்காக வலிமை வாய்ந்த கீச்சகன் கந்தர்வன் ஒருவனால் கொல்லப்பட்டான் என்பது அந்த செய்தி. அந்த செய்தியைப்பற்றி துரோயோதனன் எண்ணிப்பார்த்தான். கந்தர்வன் என்று சொல்லப்படுவான். நிச்சயம் பீமனாக இருக்கவேண்டும். அந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட பெண் துரௌபதியாக இருக்க வேண்டும். ஆகவே பாண்டவர்கள் மாறுவேடம் பூண்டு விராட நகரில் இருக்கின்றார்கள். அந்த நகரை முற்றுகையிட்டு போர் புரிய வேண்டும். விராட நகரம் தங்களை பாதுகாப்பாக வைத்ததற்கு கைமாறாக பாண்டவர்களும் போருக்கு கிளம்புவார்கள். போருக்கு வராமல் நகரில் மறைந்திருந்தாலும் ஊர் முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்து அவர்களை கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு உடன்படிக்கையின்படி பாண்டவர்கள் மறுபடியும் பன்னிரண்டு வருடகாலம் வனவாசம் செய்ய வேண்டும் என்று எண்ணி விராட நகரை தாக்க முடிவு செய்தான்.

விராட நகரம் மீது எவ்வாறு தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது. விராட நாட்டு அருகில் உள்ள திரிகார்த்த நாட்டு வேந்தனாகிய சுதர்மன் விராட நாட்டை தென்புறத்தில் இருந்து தாக்க வேண்டும். இந்த ஆலோசனைக்கு சுதர்மன் மத்திய நாட்டு மன்னன் என்னுடைய விரோதி எனக்கு ஓயாது உபத்திரவம் கொடுத்து வந்த கீச்சகன் இறந்துவிட்டான். ஆகையால் இப்போது விராடநகரம் வலிவற்று இருக்கிறது. விராட நாட்டை தாக்கி அந்நாட்டுக்குறிய பசுக்களை நான் கைப்பற்றிக்கொள்கின்றேன் என்றான்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -7

விராட நகருக்குள் மக்களிடமும் மன்னரிடமும் விடியற்காலையில் நம்பிக்கை ஒன்று பரவியது. யாராலும் எதிர்க்க முடியாத கீச்சகனை கந்தவர்கள் கொன்றுவிட்டார்கள். இச்செய்தியை குறித்து ஊரார் அனைவரும் நடுநடுங்கினர். சைரந்திரியை கந்தர்வர்கள் பாதுகாத்து வருகின்றார்கள். சைரந்திரிடம் முறை தவறி நடந்து கொள்கிறார்கள் ஆபத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள. ஆராய்ச்சிக்கு எட்டாத அப்பெண் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க அரசனுக்கு துணிவு வரவில்லை. அவளுக்கு சிறதளவும் மனவருத்தம் உண்டாகாதவாறு அவளை வெளியே அனுப்பி விடும்படி அரசியிடம் அரசன் தெரிவித்தான். சகோதரனுடைய மரணத்தைக் குறித்து அரசி சுதேசனா மிகவும் துயரத்தில் ஆழ்ந்நிருந்தாள். அதேவேளையில் சைரேந்திரிக்கு நிகழ்ந்த தௌர்பாக்கியத்தை குறித்தும் அரசி சுதேசனா வருந்தினாள். தனக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்ட திசையை பணிவுடன் சைரேந்திரியிடம் அரசி சுதேசனா தெரிவித்து அவள் மனம் கோணாது நகரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று நயந்து வேண்டிக்கொண்டாள்.

அகதியாக வந்த தன்னை பதினோரு மாதங்கள் தாங்கள் என்னிடம் இரக்கம் மிக வைத்து நன்கு பாதுகாத்து வந்தீர்கள். நான் விமோசனம் அடைவதற்கு கிட்டத்தட்ட ஒருமாதம் மட்டுமே பாக்கியிருக்கிறது. தங்கள் என்னை காப்பாற்றி வருவது என்னுடைய கந்தர்வக் கணவர்கள் நன்றி மிக உடையவர்களாக கவனித்து வருகிறார்கள். தாங்கள் எனக்கு காட்டியிருக்கும் பேரன்புக்கு ஏற்ற கைமாறு ஒன்றை நிச்சயம் அவர்கள் தங்களுக்கு செய்து வைப்பார்கள். மடிந்துபோன தங்களுடைய சகோதரனுக்கு ஏற்ற ஈடு ஏதாவது இருக்குமானால் அதையும் அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். தாயே தங்களுக்கு வேறு எந்த தீங்கும் வந்து விடாது. என் மீது இரக்கம் வைத்து ஓர் மாதம் மட்டும் காப்பாற்றுங்கள் என்று அரசிடம் கேட்டாள். அதற்கு அரசி ஒரு மாதம் முற்றுப் பெறும் வரையிலும் தன்னுடனேயே வைத்துக் கொள்ள சம்மதம் கொடுத்தாள்.

பாண்டவர்கள் எங்கு எப்படி வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு ஏற்ற மிக தகுதி வாய்ந்த ஒற்றர்களை துரியோதனன் நியமித்து இருந்தான். அவர்கள் நாடெங்கும் உள்ள மூலைமுடுக்குகளில் அலசி ஆராய்ந்து பார்த்தனர். பெரிய பட்டணங்களையும் பெரிய ஊர்களையும் கிராமங்களையும் அவர்கள் தேடிப் பார்த்தார்கள். வனந்திரங்களிலும் மலைகளிலும் குகைகளிலும் தேடிப் பார்த்தார்கள் ஆனால் மறைந்து வாழ்ந்திருக்கும் பாண்டவர்களை மட்டும் கண்டுபிடிக்க அவர்களுக்கு இயலவில்லை. ஆகையால் ஒற்றர்கள் அஸ்தினாபுரம் திரும்பி வந்து நாட்டை விட்டு சென்றவர்கள் இறந்து போய் இருப்பார்கள் அல்லது கடல் கடந்து வெளிநாடுகளுக்கு ஓடிப்போய் இருப்பார்கள் என்று உறுதி கூறினார்கள். தங்களுக்கும் தங்கள் அறிவுக்கு எட்டிய இடங்களில் எங்குமே அவர்கள் வாழ்ந்திருக்கும் அறிகுறி ஏதுமில்லை என்று அவர்கள் கூறினார்கள். பாண்டவர்கள் இறந்திருந்தால் உபத்திரவம் முடிந்தது என்று துரியோதனன் எண்ணினான். எனினும் இதுகுறித்து ஆலோசனை செய்ய சபை ஒன்றை கூட்டி ஆலோசனை கேட்டான்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -6

சைரந்திரியின் ஓலத்தை கேட்ட விராட மன்னன் உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியாது. உண்மையான காரணத்தை அறியாது நான் தீர்ப்பளிக்க முடியாது என்றும் சேனாதிபதிக்கும் வேலைக்காரிக்கும் இடையில் இருக்கும் இந்த சச்சரவு அந்தப்புரத்தில் துவங்கியதால் மகாராணி இதனை விசாரித்து வேண்டிய முடிவு எடுக்கட்டும் என்று மன்னன் கூறினான். சைரந்திரி கூறிய அனைத்தையும் அறிந்த சபை உறுப்பினர்கள் கீச்சகனை நிந்தித்தனர். கனகன் வேடத்தில் இருக்கும் யுதிஷ்டிரன் சைரந்திரியிடம் நீ இங்கே இருக்காதே உடனடியாக சுதேசனாவின் அறைக்குச் செல். உனது கந்தர்வக் கணவர்கள் இவ்வளவு பிரச்சனைக்குப் பிறகும் உனது உதவிக்கு விரைந்து வராததால் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்தும் நிலையில் இப்போது இல்லை என நான் நினைக்கிறேன். கந்தர்வர்கள் உனது துன்பத்தை கண்டு உனக்கு அநீதியிழைத்தவனின் உயிரை எடுப்பார்கள் என்றான்.

இந்தச் சொற்களைக் கேட்ட சைரந்திரி கலைந்த கேசத்துடன் கண்கள் சிவக்க சுதேசனாவின் அறையை நோக்கி ஓடினாள். அவளது நிலையைக் கண்ட சுதேசனா சைரந்திரி உன்னை யார் அவமதித்தது நீ ஏன் அழுகிறாய்? யாரால் உனக்கு இந்தத் துயரம் ஏற்பட்டது? எனக் கேட்டாள். நான் உங்களுக்காக மதுவைக் கொண்டு வரச் சென்றேன். என்னிடம் தவறாக நடந்து கொண்டு சபையில் மன்னரின் முன்னிலையிலேயே கீச்சகன் என்னை அடித்தான் என்றாள். இதைக் கேட்ட சுதேசனா நீ விரும்பினால் அவனைக் கொல்லச் செய்கிறேன் என்றாள். அதற்குத் சைரந்திரி கீச்சகன் யாருக்கு அநீதியிழைத்தானோ அவளை பாதுகாக்கும் கந்தர்வர்கள் அவனைக் கொல்வார்கள். இன்றே கீச்சகன் யமனின் வசிப்பிடம் செல்வான் என்பது உறுதி என்றாள்.

சைரந்திரி வல்லாளனை தனியாக சந்தித்து தன்னுடைய பரிதாபகரமான நிலையை தெரிவித்தாள். என்னை காப்பாற்றுங்கள். இல்லாவிடில் நான் தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு வேறு உபாயம் ஏதும் இல்லை என்றாள். பீமன் சிறிது நேரம் சிந்தித்தான். பிறகு சைரந்திரியிடம் கீச்சகனிடம் சமாதானமாக பேசுவதாக பாசாங்கு செய்து நள்ளிரவில் நாட்டிய மண்டபத்திற்கு தனித்து வந்து உன்னை சந்திக்கும் படி அவனிடம் கூறு. அவன் அங்கு வந்ததும் நான் மறைந்திருந்து மற்ற காரியங்களை பார்த்துக் கொள்கின்றேன் என்றான்.

இந்த திட்டத்தை சைரந்திரி ஏற்றுக்கொண்டு மிகத் திறமை வாய்ந்தவளாக கீச்சகனிடம் நடந்து கொண்டாள். அதன் விளைவாக கீச்சனுக்கு மட்டில்லா மகிழ்வு உண்டாயிற்று. ஆர்வத்துடன் நள்ளிரவில் நாட்டிய மண்டபத்திற்குள் அவன் நுழைந்தான். மங்கலான விளக்கொளியில் ஒரு கட்டிலின் மேல் மேனி முழுவதும் ஒரு போர்வையால் மூடப்பட்டு மானிட உருவம் ஒன்று தென்பட்டது. படுத்திருப்பது சைரந்தரி என்று எண்ணிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த பேர்வழியை எழுப்பினான். எதிர்பார்த்ததற்கு மாறாக ராட்சசன் போன்ற ஒருவன் குதித்தெழுந்து வந்து கீச்சகனை தாக்கினான். வந்தவன் சைரந்திரியை பாதுகாக்கும் கந்தர்வர்களில் ஒருவனாக இருக்கும் என்று பயந்து போனான் கீச்சகன். இருவருக்கும் இடையில் மிக பயங்கரமான மற்போர் துவங்கியது. கீச்சகனை பீமன் கொன்றுவிட்டான். அவனுடைய உடலை ஒரு மாமிச குவியலை போன்று பிசைந்து விட்டான். எலும்புத்துண்டுகள் ஆங்காங்கு குவியலோடு கலந்து தென்பட்டன. பிறகு பீமன் நீராடி தன் மேனியில் சந்தனக் குழம்பைப் பூசி கொண்டு அயர்ந்து தூங்க சென்று விட்டான்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -5

விராட நகரத்தில் மகாராணி சுதேசனாவுக்கு சகோதரன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் கீச்சகன். வல்லமை மிகவும் வாய்க்கப் பெற்றவன். அரசனுக்கு மைத்துனன் ஆகையால் அந்நாட்டுக்கு சேனைத் தலைவன் என்ற மிக உயர்ந்த ஸ்தானத்தை வகித்து வந்தான். ஒரு போக்கில் அவனை விராட நாட்டு மன்னன் என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு பலமும் செல்வாக்கும் கொண்டவனாக இருந்தான். பாண்டவர்கள் புரிந்து வந்த வனவாசம் அமைதியாக சென்று கொண்டிருந்தது. அப்போது உபத்திரம் ஒன்று உருவெடுத்தது.

கீச்சகன் தன் சகோதரியாகிய ராணியின் அந்தப்புரத்திற்கு ஒருநாள் உரிமையுடன் சென்றான். அப்போது தற்செயலாக சைரந்திரியைப் பார்த்தான். பார்த்ததும் அவள் மீது காதல் கொண்டான். அந்த வேலைக்காரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறிதேனும் நாணம் இன்றி தன் சகோதரியிடம் அவன் வேண்டினான். அவன் அப்படிக் கேட்பது பொருத்தமற்றது என்று உடன்பிறந்தவள் எடுத்துக் கூறினாள். ஆனால் கீச்சகன் மட்டும் தான் எடுத்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கவில்லை. அந்த வேலைக்காரி 5 கந்தர்வர்கள் பாதுகாத்து காப்பாற்றுகிறார்கள். அவளிடம் வம்பு செய்தாள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று எடுத்துக்கூறி எச்சரிக்கை செய்தும் அவன் அதை பொருட்படுத்தவில்லை. அந்த பெண்ணை தனக்கு உரியவள் ஆக்குவேன் இல்லை என்றாள் அம்முயற்சியில் மடிந்து போவேன் என்று தீர்மானமாக தன் சகோதரியிடம் கூறினான்.

கீச்சகனுடைய மாளிகைக்கு உள்ளே சென்று கொஞ்சம் மதுபானம் கொண்டு வரவேண்டுமென்று சுதேசனா ராணி சைரந்திரிக்கு உத்தரவிட்டாள். இதனை புரிந்து கொண்ட சைரந்தரி வேலைக்காரியாக இருந்த தன்னை காப்பாற்றி அருள வேண்டும் என்றும் தனக்கு பதிலாக வேறு வேலைக்காரியை அனுப்பி வைக்க வேண்டுமென்றும் பரிந்துரை செய்து விண்ணப்பித்தாள். ஆயினும் அவருடைய வேண்டுதல் அங்கீகரிக்கப்படவில்லை. அரசியின் ஆணைக்கு அடிபணிந்து அவள் நடக்க கடமைப்பட்டு இருந்தாள். தன்னை காப்பாற்றி அருள வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்ட சைரந்திரி அரசியின் ஆணைக்கு அடிபணிந்து கீச்சகனின் மாளிகைக்கு சென்றாள்.

சைரந்தரி என்ன நிகழும் என்று எதிர்பார்த்தாளோ அது அப்படியே நடந்தது. அவளைப் பார்த்த உடனே கிச்சகன் தனக்கு இணங்கும்படி அவளை கெஞ்சி கேட்டான். அவனுடைய போக்கு பொருந்தாதது என்று சைரந்திரி எடுத்து விளக்கினாள். ஆனால் கீச்சகனோ அவள் கையை பிடித்து இழுத்தான். வலிமை வாய்ந்த வேலைக்காரி ஒரே குலுக்கில் தன்னை விடுவித்துக் கொண்டு அரசனுடைய மண்டபத்திற்கு ஓடினாள். வெறிபிடித்த அந்த சேனைத்தலைவன் அவளைப் பின்தொடர்ந்து ஓடி சபைக்கு நடுவே அவளை தனது காலால் எட்டி உதைத்தான். இந்நாட்டில் திக்கற்ற பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லையா என்று சைரந்தரி ஓலமிட்டாள். விராட மன்னன் அமைதியாக இருந்தான். அங்கு குழுமியிருந்த அனைவரும் கிச்சனுக்கு நடுநடுங்கி நடந்துகொண்டனர். கனகனும் வல்லாளனும் சபையில் இருந்தனர். ஆனால் ஒர் வருட காலம் தங்களை மறைத்துக்கொண்டு அடங்கிக் கிடக்கும் நெருக்கடிக்கு அவர்கள் கட்டுப்பட்டு இருந்தனர். இந்த பிழையை சரி படுத்த முயன்று தங்களை இன்னாரென்று உலகுக்குக் காட்டிக் கொள்ளும் நெருக்கடியில் அவர்கள் அகப்பட்டுக் கொள்ளலாகாது. நிலைமை இப்படி இருந்தும் வல்லாளன் சிறுது சீற்றம் அடைந்தான். அதை கூறிப்பால் உணர்ந்து கொண்ட கனகன் விரைந்து சென்று சமைப்பதற்கு விறகு பிளக்க வேண்டும் என்று வல்லாளனுக்கு ஞாபகம் ஊற்றினான். அதன் உட்கருத்தை அறிந்து கொண்ட வல்லாளன் அமைதியாக அந்த சபையில் இருந்து வெளியேறினான்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -4

பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியும் 12 வருடகாலம் வனவாசத்தை நல்விதத்தில் பயன்படுத்திக் கொண்டதை முன்னிட்டு பக்குவப்பட்ட மனநிலையில் தாங்கள் வாழ்ந்து வந்திருந்த ராஜ வாழ்க்கைக்கு எதிரான வேலைகளை ஏற்றத்தாழ்வு இல்லாமல் அரண்மனையில் செய்தனர். தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். விராட நகரத்தில் சூத்திர தர்மம் வைசிய தர்மம் ஆகியவற்றை அமைதியாகவும் ஆர்வத்துடனும் நிறைவேற்றினர்.

விராட நகரத்தில் அப்பொழுது விழாக்கள் பல நிகழ்ந்தது. அவைகளில் சிவராத்திரியையொட்டி நடந்த விழாவானது சிறப்புற்று விளங்கியது சுமார் 10 நாட்கள் நடந்த விழாவில் விதவிதமான போட்டி விளையாட்டுகள் நடைபெற்றது. அதற்கு ஏராளமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்திலிருந்தும் தூரத்தில் இருந்தும் போட்டி போடுபவர்கள் பலர் வந்து வந்து சேர்ந்தனர். எங்கிருந்தோ வந்திருந்த மற்போர் வீரன் ஒருவன் மற்றவர்களை எல்லாம் எளிதில் தோற்கடித்தான். விராட நகரத்தில் வசிக்கும் போர் வீரர்கள் வெறும் குழந்தைகளுக்கு நிகர் என்றும் தன்னை தோற்கடிக்க யாருக்கும் இயலாது என்றும் அவன் தன்னை குறித்து பெருமை அடித்துக்கொண்டான். அவ்வாறு அவன் கூறியது விராட மன்னனுக்கு மிகச் சங்கடமாக இருந்தது. அரசனுடைய மனநிலையை அவனுடைய தோழனாக புதிதாக வந்திருந்த கனகன் அறிந்து கொண்டான். அரசனிடம் சென்று தங்களுடைய புதிய சமையல்காரன் வல்லாளன் என்பவன் பல தடவை விளையாட்டிற்காக மல்யுத்தம் புரிவதை பார்த்திருக்கின்றேன். கர்வமே வடிவெடுத்திருக்கின்ற இந்த வீரனுடன் போட்டியிடும்படி வல்லாளனுக்கு ஆணையிட்டு பாருங்கள். ஒரு வேளை இவனை தோற்கடிக்க அவனுக்கு சாத்தியமாகலாம் என்றான்.

அக்கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வல்லாளனை வேந்தன் தன் முன்னிலைக்கு வரவழைத்தான். நீ மற்போர் புரிவதில் திறமைசாலி என்று என்னுடைய தோழன் கூறுகின்றான். கர்வமே வடிவெடுத்திருக்கின்ற அந்த வீரனை மற்போர் செய்து வெல்ல முடியுமா என்று முயற்சி பண்ணிப்பார் என்று கூறினான். இத்தகைய நல்ல சந்தர்ப்பம் தனக்கு வந்து வாய்க்கும் என்று வல்லாளன் எதிர்பார்க்கவில்லை. என் நாட்டின் மன்னனுடைய பெருமையின் பொருட்டு என்னால் இயன்றதை செய்கிறேன் என்று கூறிக்கொண்டு மறுப்போர் மேடைக்கு ஓடினான். அன்றைய விளையாட்டில் வெற்றி வீரனாக விளங்கியவனிடம் தன்னோடு மற்போர் புரியும்படி மரியாதையுடன் வல்லாளன் வேண்டினான். இருவருக்கும் இடையில் யுத்தம் துவங்கியது. இரண்டு சிங்கங்கள் ஒன்றோடொன்று சண்டை போடுவது போன்ற காட்சி தென்பட்டது. வேண்டுமென்றே வல்லாளன் தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தவில்லை. ஆகையால் மற்போர் சிறிது நேரம் தொடர்ந்து நிகழ்வதாயிற்று. தன்னுடைய திறமைகளை விதவிதமான பங்குகளில் காட்டிய பிறகு வல்லாளன் கர்வமே வடிவெடுத்த வீரனை தோற்கடித்தான். மன்னனுக்கு இந்நிகழ்ச்சி மட்டில்லா மகிழ்வை உண்டாக்கியது. நகரவாசிகள் ஆரவாரத்துடன் வல்லாளனுடைய வெற்றியை புகழ்ந்து பாராட்டினார்கள்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -3

காலையிலும் மாலையிலும் அரண்மனையில் பசுக்கள் இருக்கும் பண்ணையை சென்று பார்வையிடுவது மன்னனுடைய வழக்கமாக இருந்தது. ஒருநாள் அரசன் பசுக்களை பார்வையிடும் பொழுது பசுக்களை பற்றி சில கேள்விகள் பசுக்களை பார்த்துக்கொள்பவர்களிடம் கேட்டான். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவன் பசுக்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை தெரிவித்தான். அவன் தெரிவித்த விவரங்கள் பசுக்களை பார்த்துக்கொள்பவர்களுக்கு புரியாதவகைகளாக இருந்தது. பசுக்களை பற்றி அனைத்தும் அறிந்தவனாக தென்பட்டவனிடம் யார் என்று மன்னர் விசாரித்தார். தன் பெயர் தந்திரிபாலன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த பண்ணையில் தனக்கு ஏதேனும் வேலை வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வந்தவனுடைய நடை பாவனைகளை பார்த்து இவன் ஒரு பிராமணன் அல்லது க்ஷத்திரனாக இருக்க வேண்டும் என்று அரசன் எண்ணிக்கொண்டு அவனை மாட்டுப் பண்ணையில் வேலைக்கு நியமித்தார். மாட்டுப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தவன் சகாதேவன்.

சைரந்திரி என்னும் பதத்தின் பொருள் வேலைக்காரி என்பதாகும். சைரந்திரி என்னும் பெயர் கொண்டவளாக திரௌபதி விராட நகரின் வீதிகளில் நடந்து சென்றாள். அவள் கந்தல் துணிகளை அணிந்து கொண்டிருந்தாள். அப்படி இருந்தும் இயல்பாகவே அவளுடைய அழகு மேன்மையானதாக இருந்தது. பாதையில் போய்க் கொண்டிருந்த மக்கள் அவளின் உடைகளை பார்த்து பரிகாசம் பண்ணினார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் அவளைச் சூழ்ந்து வேடிக்கை செய்து கொண்டே பின் தொடர்ந்தனர். அரண்மனை மாடியில் மேல்தட்டில் இருந்த அரசியான சுதேனா வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது சைரந்திரியின் இக்கட்டான சூழல் அரசியின் கண்ணில் தென்பட்டது. தன்னந்தனியாய் போய்க் கொண்டிருந்த பெண்ணின் பரிதாப பரிதாபகரமான நிலை அவருடைய உள்ளத்தை தொட்டது. தாதிமார்கள் சிலரை அனுப்பி அவளை அரண்மனைக்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டான்.

இந்தப் பெண்ணின் பரிதாபகரமான பாங்கும் அவளுடைய கண்களிலிருந்து வந்த கண்ணீரும் அரசியின் உள்ளத்தை தொட்டது. அவள் யாரென்று அரசி விசாரித்தாள். தன்னுடைய பெயர் சைரந்திரி என்றும் தனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவர்களாக இருக்கின்றார்கள் என்றும் ஒரு சாபத்தை முன்னிட்டு ஒர் வருட காலம் நான் அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றேன். ஓர் வருடத்திற்கு பிறகு அந்த சாபத்திலிருந்து நான் விடுதலை பெறுவேன். அதுவரையில் தங்களிடம் நான் எனது பாதுகாப்பை வேண்டுகிறேன் என்றாள். தங்களுக்கு பூ மாலைகள் அழகாக தொடுக்க எனக்கு தெரியும். மிகவும் நேர்த்தியாக தங்களுடைய மேனியை அலங்கரிக்கவும் நான் வல்லவள் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அரசி சிறிது சிந்தித்துப் பார்த்துவிட்டு ஓராண்டுக்கு உனக்கு ஆதரவு தருவதில் எனக்கு சிரமம் ஏதும் இல்லை. ஆனால் உன்னுடைய பேரழகு தான் அதற்கு இடைஞ்சலாக இருக்கின்றது. பருவத்தில் இருக்கும் ஆண்மகன் உன்னுடைய மேனி அழகில் மயங்கிவிடுவான். இங்கிருப்பதால் ஆண்களால் உனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணுகிறேன் என்றாள். தாயே நான் வெளியில் எங்கும் செல்லாமல் தங்களுடைய அந்தப்புரத்திலேயே தங்கி ஆண்களின் கண்களில் முடிந்தவரை படாமல் இருந்து கொள்கிறேன். மற்றொரு விஷயம் என்னுடைய கந்தர்வக் கணவர்கள் வெளித்தோற்றத்தில் இல்லாமல் என்னை காப்பாற்றி வருகிறார்கள். என்னிடம் யாராவது முறை தவறி தீண்டினால் அவனை என் கணவன்மார்கள் கொன்றுவிடுவார்கள் என்றாள். அனைத்தையும் கேட்ட அரசி அந்தப்புரத்தில் அடைக்கலம் புகுந்த அப்பெண் வாசித்திருக்க அனுமதி வழங்கினாள்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -2

அரண்மனைக்கு சென்ற யுதிஷ்டிரன் தன்னுடைய பெயர் கணகன் என்று சொல்லி விராட நகர மன்னனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தான் ஒரு பாண்டித்தியம் பெற்ற பிராமணன் என்றும் பகடை விளையாட்டில் வல்லவன் என்றும் தன்னைப் பற்றி கூறிக்கொண்டு தனக்கு ஏதேனும் வேலை வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் உன்னுடைய நடை உடை பாவனை ஆகியவை நீ ஒரு மேன்மகன் என்பதைத் தெரிவிக்கின்றன. நீ கற்றறிந்தவனாகவே தென்படுகிறாய். ஆகவே என்னுடைய தோழனாக உன்னை என்னோடு வைத்துக் கொள்கின்றேன். அரிய பெரிய விஷயங்களை நீ எனக்கு தெரிவிப்பாய். ஓய்வு வேளைகளில் நீ என்னோடு பகடை விளையாடு என்றான்.

சில நாட்கள் கழித்து பீமன் விராட மன்னனின் முன் தோன்றி தன்னுடைய பெயர் வல்லாளன் என்றும் தனக்கு சமையல் தொழில் நன்கு தெரியும் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தன்னுடைய தொழிலுக்கு அறிகுறியாக தன் கையில் அவன் கரண்டி ஒன்றை வைத்திருந்தான். விதமான பட்சணங்கள் சமைத்து மன்னரை திருப்திப்படுத்த முடியும் என்று அவன் உறுதி கூறினான். மற்றும் நன்றாக மற்போர் புரிந்து மன்னனை மகிழ்விக்க முடியுமென்றும் தெரிவித்து தனக்கு வேலை வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். புதிதாக வந்தவனுடைய கம்பீரமான உடல் அமைப்பை பார்த்து மன்னன் வியப்பு அடைந்தான். இவன் சேனைப்படை ஒன்றுக்கு தலைமை வகிக்கும் தகுதி வாய்ந்தவன் என்று அரசன் எண்ணினான். அரண்மனை மடைப்பள்ளியில் தலைமை சமையல்காரனாக நியமிக்கப்பட்டான்.

தாறுமாறாக உடை அணிந்த பேடு ஒருத்தி அங்கு நின்று கொண்டிருந்தவர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு விராட மன்னன் முன்னிலையில் வந்தாள். பிருஹன் நளா தனது பெயர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். இந்திர லோகத்தில் வசித்த பொழுது அர்ஜுனன் ஒர் வருட காலம் பேடுவாக இருக்கவேண்டுமென்று ஊர்வசி சாபமிட்டாள். அந்த சாபத்தை ஒரு வருட காலம் மறைந்திருந்து வாழும் காலத்தில் பயன்படுத்திக் கொண்டான் அர்ஜுனன். தான் பாடல்கள் பாடுவதிலும் நாட்டியத்திலும் இசைக்கருவிகள் மீட்டுவதிலும் வல்லவள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். உத்திரை என்பவள் விராட மன்னனின் மகளாவாள். அந்த ராஜகுமாரிக்கு லலித கலைகளையும் சொல்லித்தருவதாக கூறினான். சாபத்தினால் பேடு வேடத்தில் இருக்கும் அர்ஜுனனை கண்ட மன்னன் ஆண்மையோடு கூடிய ஆற்றல் மிகப் படைத்தவளாக இவள் தென்படுகிறாள். ஆகையால் இவளை மிகவும் ஜாக்கிரதையாக கவனித்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவள் கேட்ட உத்தியோகத்தை அவளுக்கு அளித்தான்.

விராட மன்னன் தன் அரண்மனை லாயத்திலிருந்த குதிரைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அழகு வாய்ந்த மனிதன் ஒருவன் தன் பெயர் தமக்ரந்தி என்றும் தான் குதிரைகளை பழக்குவதில் மிக வல்லவன் என்று தன்னை அறிமுகப் படுத்தினார். தனக்கு உணவும் உடையும் தங்க இடமும் கொடுத்தால் போதும் என்றும் குதிரையை பார்த்துக்கொள்ளும் வேலை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். வந்தவனின் நேர்த்தியான பாங்கை பார்த்து மன்னன் அவன் கேட்ட வேலையில் அமர்த்திக் கொண்டான். குதிரை லாயத்தில் வேலைக்கு சேர்ந்தவன் நகுலன்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -1

பாண்டவர்கள் யார் கண்ணிலும் படாமல் ஒருவருடம் அக்ஞாத வாசத்தை எப்படி பூர்த்தி செய்வது என்று தங்களுக்குள் ஆலோசனை செய்தார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் ஒரு முடிவு எடுத்தனர். விராட வேந்தன் ஆண்டு வந்த மத்சிய நாட்டுக்குச் சென்று அங்குள்ள விராட நகரில் அரண்மனையில் மாறுவேடம் பூண்டு வாழ்ந்திருக்க அவர்கள் தீர்மானித்தார்கள் அந்நாடு செழிப்புடனும் ஆரவாரம் ஏதும் இன்றியும் அமைதியாக இருந்தது. அந்நாட்டு மன்னனும் அறிவு மிக படைத்தவன். பாண்டவர்களை அவன் மிகவும் நேசித்தான். கௌரவர்கள் மீது அவனுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆகையால் அவனுடைய நாடு பாண்டவர்கள் மறைந்து இருப்பதற்கு பொருத்தமானது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

அர்ஜுனன் தனக்கு தோன்றிய ஒரு அபிப்பிராயத்தை தெரிவித்தான். சகோதரர்கள் நால்வரும் எந்த ஒரு கீழ்த்தரமான பணிவிடைகளை செய்யும் சூழ்நிலை வந்தாலும் செய்யலாம். யுதிஷ்டிரன் மட்டும் தகுதிவாய்ந்த மேலான பதவி ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். ராஜசூய யாக்ஞம் செய்து வேந்தர்களுக்கெல்லாம் வேந்தனான யுதிஷ்டிரன் எந்த நெருக்கடியை முன்னிட்டும் தன்னுடைய தகைமைக்கு கீழான பணிகள் எதையும் செய்யலாகாது என்றான் அனைவரும் அர்ஜூனனின் கருத்தை ஏற்றுக்கொண்டனர். திரௌபதியை பற்றிய விஷயமோ மிகக் கடினமானது. அழகு வாய்ந்த இளம் மாது ஒருத்தி அரண்மனை ஒன்றில் வேலைக்காரியாக அமர்கின்ற பொழுது நினைக்க முடியாத சில நெருக்கடிகளை அவள் சந்திக்கக்கூடும். ஆகையால் ரகசியமாக பீமனும் அர்ஜுனனும் அவளை பாதுகாத்து வரவேண்டும் என தீர்மானித்தார்கள். பிறகு யார் கண்ணுக்கும் புலப்படாமல் பெரும்பாலும் இரவில் அவர்கள் பயணம் செய்து விராட நாட்டு எல்லையை அடைந்தார்கள்.

விராட நகரத்தின் எல்லைப்பகுதியில் இடுகாடு ஒன்று இருந்தது. அங்கு பாண்டவர்கள் போக்குவரத்து இல்லாத இடம் ஒன்றில் தென்பட்ட பழுத்த மரத்தின் மேல்பகுதியில் ஒரு பொந்தை கண்டார்கள். தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் பாண்டவ சகோதரர்கள் அப்பொந்தில் ஒளித்து வைத்தார்கள். பிறகு அம்மரத்தின் மீது பிணம் ஒன்று தொங்க விட்டனர். அதைப் பார்ப்பவர்களுக்கு அங்கு செல்ல பயமும் அருவருப்பும் அடைந்து மரத்தின் அருகில் யாரும் வரக்கூடாது என்று இந்த ஏற்பாட்டை செய்தனர். அதன்பிறகு அவர்கள் தனித்தனியாக பிரிந்து சென்றனர். ஒவ்வொருவரும் தனித்தனியாக அரண்மனைக்குச் சென்று வெவ்வேறு பணிவிடைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டனர். முதலில் யுதிஷ்டிரன் அரண்மனை நோக்கி சென்றான். நடந்து போய்க் கொண்டிருந்த போது தங்களை பாதுகாக்க வேண்டும் என்று துர்காதேவியை பிரார்த்தனை பண்ணி கொண்டான். அவனுடைய பிரார்த்தனைக்கு இணங்கி துர்காதேவி யுதிஷ்டிரனுக்கு காட்சி கொடுத்தாள். ஒரு வருடத்தின் அக்ஞாத வாசத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வீர்கள் என்றும் பிறகு யுத்தத்தில் வெற்றி பெறுவீர்கள் என்றும் ஆசிர்வாதம் செய்தாள்.