மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -15

பத்தாம் நாள் போர் தொடங்கியது. கௌரவர்கள் அசுர வியூகத்தை வகுத்துக்கொண்டார்கள். பாண்டவர்கள் தேவ வியூகத்தை வகுத்துக்கொண்டார்கள். சிகண்டிக்கு நான்கு பக்கமும் பாதுகாப்புடன் சிகண்டியை முன் நிறுத்தி பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை இல்லாத பாதுகாப்பு பத்தாம் நாள் பீஷ்மருக்கு இருந்தது. இன்று பீஷ்மரை எப்படியாவது வெற்றி பெற்று விடவேண்டும் என்று பாண்டவர் பாசறையில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அர்ஜூனன் உணர்ச்சிவசப்பட்டு கலங்கி நின்றான். தான் சிறுவயதில் பீஷ்மரின் மடியில் அமர்ந்து விளையாடிய நேரங்களை கண்ணீருடன் நினைவு கூர்ந்தான். தன் அன்பிற்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய பீஷ்மரை கொல்ல போகிறோமே என்று வேதனை அடைந்தான். காண்டீபத்தை தொட அவன் மனமும் கைகளும் மறுத்தன. நாம் தோற்றாலும் பரவாயில்லை கங்கை புத்திரரை கொல்ல மட்டேன் என்று கிருஷ்ணரையும் அண்ணன்களையும் தழுவி அழுதான்.

அப்போது கிருஷ்ணர் அர்ஜுனா பீஷ்மரின் சாபம் முடியும் நேரம் நெருங்கிவட்டது. அவர் முக்தி அடைய போகிறார். நீ அவரை கொல்லபோவதில்லை அவருக்கு உன் கைகளால் முக்தி கொடுக்க போகிறாய். உன் பாசத்திற்குரிய தாத்தாவிற்கு நீ கொடுக்க போகும் மிக பெரிய பரிசு இது அர்ஜூனா. எடு காண்டீபத்தை மோக்ஷத்தை கொடுத்து அவரை வழி அனுப்பு அவரின் ஆசி என்றும் உன்னோடு இருக்கும் என்று அர்ஜுனனுக்கு பீஷ்மரின் பிறப்பு ரகசியத்தை மீண்டும் ஒரு முறை சொல்லி முடித்து தனது சங்கை ஊதினார். அர்ஜுனன் தெளிவானான். காண்டீபதில் நானேற்றினான். நானை சுண்டிவிட்டான். அதன் ஒலி எட்டு திக்கிற்கும் சென்றடைந்தது.

போரில் அன்றும் பீஷ்மர் தன் அம்புகளை காற்றென செலுத்தி கொண்டிருந்தார். பாண்டவர்களுக்கு சவாலாக நின்றார். பாண்டவர்களின் வெற்றியை தடுக்கும் ஒரே ஒரு மாபெரும் சக்தியாக இருந்தார். இந்த நிலையில் சிகண்டியின் தேர் பீஷ்மருக்கு எதிரில் நின்றது. அதற்கு அருகில் அர்ஜுனனின் தேர் நின்றது. கிருஷ்ணரின் முகத்தில் அமைதியான புன்னகை. அதை பார்த்த பீஷ்மர் மனதில் ஆனந்தம். கிருஷ்ணரை வணங்கி நின்றார். தன் முடிவை அறிந்த பீஷ்மர் கடைசி முறையாக தன் வில்லை கையில் ஏந்தினார். பல ஆண்டுகளாக ஆயிரம் ஆயிரம் வீரர்களை கொன்று வெற்றி கொண்டு தோல்வியே இல்லாத மகாராதனாக தான் விளங்கியதற்கு காரனமாய் இருந்த தன் வில்லை தொட்டு அதற்க்கு இறுதி வணக்கத்தை வீரத்தோடு தெரிவித்தார்.

சிகண்டி பீஷ்மர் மீது ஆயுதம் எடுத்து போர் புரிய ஆயத்தமானான். சிகண்டி சிவனிடம் பெற்ற வரத்தின் விளைவாக பீஷ்மரால் ஆயுதம் எடுத்து போர் புரிய இயலாமல் போனது. பீஷ்மரின் வில்லை அர்ஜுனன் உடைத்தான். அவருடைய வேலாயுதத்தை நொறுக்கினான் அவருடைய கதாயுதத்தை தூளாக்கினான். எதிரில் சிகண்டி ஆயுதம் தாங்கி நின்று கொண்டிருந்ததால் ஆயுதம் இன்றி பீஷ்மர் ஒடுங்கிப் போனார்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -14

கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என்னை அழிக்க இயலும். நான் ஆயுதம் தாங்கி இருக்கும்போது கிருஷ்ணரால் மட்டுமே அழிக்க இயலும். ஆனால் அர்ஜுனனுக்கு என் ஆயுதம் செயலற்று இருக்கின்ற பொழுது தான் என்னை கொல்ல இயலும். இறைவன் அருளால் நான் அளப்பரிய ஆற்றல் படைத்தவனாக இருக்கின்றேன். நான் போரில் புறமுதுகு காட்டி ஓடுபவரோடோ ஆயுதம் இல்லாதவரோடோ பெண்களிடமோ பேடுவுடனோ போரிட மாட்டேன். பெண்பால் ஒருத்தி நான் ஆயுதம் தாங்கி போர் புரிந்து கொண்டிருக்கும் பொழுது என்னை எதிர்த்து வந்தால் அப்போது என் ஆயுதங்கள் பயனற்றுப் போகும். இதுவே என் போர் திறமையை பற்றிய மர்மம். அர்ஜுனன் இதை பயன்படுத்திக் கொள்வாயாக என்றார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு காசிராஜன் தனது குமாரிகளின் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அம்பா அம்பிகா அம்பாலிகா என்ற கொண்ட மூன்று ராஜகுமாரிகளை பலாத்காரமாக நான் தூக்கி கொண்டு போய் விட்டேன். நம்முடைய குரு வம்சத்திற்கு அவர்களை மகாராணியாக அமைப்பது என் நோக்கமாக இருந்தது. அவர்கள் மூவரில் மூத்தவளாகிய அம்பா சால்வ மன்னனை மணந்து கொள்ள தீர்மானத்திருப்பதாக விஷயத்தை எடுத்துரைத்தாள். ஆகையால் அவளை தக்க பாதுகாப்புடன் சால்வ மன்னனிடம் அனுப்பி வைத்தேன்.
ஆனால் வேற்றுவனால் கொண்டு செல்லப்பட்ட பெண்ணை அம்மன்னன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான்.

தனக்கு நேர்ந்த கதியை தெரிவிக்க அவள் மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு திரும்பி வந்து அவளுடைய வாழ்க்கையை பாழடித்துவிட்டதாக என் மீது குற்றம் சாட்டினாள். என்னை யாராலும் வெல்ல முடியாது என்பதை அறிந்த அவள் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து என்னை யுத்தத்தில் அழிப்பதற்கான வரத்தை கேட்டு பெற்றாள். சென்ற ஜென்மத்தில் அவளுக்கு அதற்கான யுத்தகாலம் வராத காரணத்தினால் என்னை அழிக்க இந்த ஜென்மத்தில் துருபத மன்னனின் மகளாக பிறப்பெடுத்தாள். பெண்ணாக பிறந்து பின் ஆணாக மாறி சிகண்டி என்ற பெயரில் பேடுவானாள்

இந்த ஒன்பது நாள் யுத்தத்தில் சிகண்டியை நேருக்கு நேர் சந்திக்காமல் நான் சமாளித்து வந்தேன். பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டியை முன் நிறுத்தி நாளை என்னுடன் போரிடு. சிகண்டியின் முன் என் ஆயுதங்கள் பலனன்றி போய்விடும். அப்போது நீ என்னை எதிர்த்துப் போர் செய். வெற்றி கிட்டும் என்றார். நீங்கள் அனைவரும் உங்கள் ராஜ்யத்தை மீட்டெடுத்து அமைதியாக வாழ்ந்து இருப்பீர்களாக என்று ஆசீர்வாதம் வழங்கினார். பீஷ்மர் வழங்கிய ஆசீர்வாதங்களை பாண்டவர்கள் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்கள். தம்மை தோற்கடிப்பதற்கான ரகசியத்தை அவர் வெளியிட்டது பாண்டவர்களுக்கு புதியதொரு உற்சாகத்தை உண்டு பண்ணியது. தனது முடிவு நெருங்கி விட்டதை பீஷ்மர் உணர்ந்து மகிழ்ந்தார். அம்பாவின் சாப விமோசனம் கிடைக்க போகும் பீஷ்மரை மனதார வாழ்த்தி மெல்லிய புன்னகை பூத்தார் கிருஷ்ணர். அந்த புன்கையின் அர்த்தம் பீஷ்மருக்கும் கிருஷ்ணருக்கும் மட்டுமே அன்று புரிந்திருந்தது. பீஷ்மர் கூற்றைக் கேட்ட பாண்டவர்கள் அமைதியாகப் பாசறைக்குத் திரும்பினர். அடுத்தநாள் பீஷ்மரிடம் சிகண்டியை முன்னிறுத்த கிருஷ்ணர் திட்டம் வகுத்தார்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -13

ஒன்பதாம் நாள் யுத்தம் துவங்கியது. பீஷ்மர் சர்வதோபத்ர வியூகம் வகுத்தார். திருஷ்டத்துய்மன் அதற்கேற்ப திரிசூல வியூகம் வகுத்தான். திரிசூலத்தின் மும்முனைகளிலும் பாண்டவர்களின் சிறந்த வீரர்களான அர்ஜுனன் திருஷ்டத்துய்மன் பீமன் என்று முறையே நின்றனர். நகுல சகாதேவ சகோதரர்கள் பின்புற சுவராக நின்றனர். திருஷ்டத்துய்மனால் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட வியூகம். பீஷ்மருக்கு எதிராக சரியான நேரத்தில் சரியான நபர்களுடன் அமைக்கப்பட்டது. திருஷ்டத்துய்மன் போர் வியூகம் வகுப்பதில் பீஷ்மருக்கு இணையானவன் என்பதை நிரூபித்தான். அர்ஜுனன் இருக்கும் போது திருஷ்டத்துய்மனை படை தளபதியாக கிருஷ்ணர் அறிவித்ததின் காரணத்தை யுதிஷ்டிரர் இப்போது அறிந்தார்.

அபிமன்யுவிற்கும் அலம்பசனுக்கும் பெரும்போர் நடந்தது. மாயாவியான அலம்பசனின் அணைத்து மாயங்களும் அபிமன்யுவிடம் தோற்றது. அவனோ மாயப்போர் புரிந்தான். எங்கும் இருள் சூழும்படி அம்பு மழை பொழிந்தான். அபிமன்யூ மாயத்தை மறைக்கும் மாற்றுப் படையால் மாயையை விலக்கி அலம்புசனைத் தாக்கினான். அலம்புசன் போர்க்களம் விட்டு ஓடினான். அன்றைய போரில் அபிமன்யு துரியோதனன் சகோதரர்களில் மூவரை கொன்று அர்ஜுனனின் பிம்பமாகவே காட்சியளித்தான்.

துரோணர் அர்ஜூனனை எதிர்த்தார். குருவும் சீடன் என எண்ணவில்லை சீடனும் குரு என எண்ணவில்லை. துரோணரின் அம்புகள் அனைத்திற்கும் தன் வில்லால் பதில் அளித்தான் அர்ஜுனன். ஆனாலும் அவன் கவனம் முழுவதும் பீஷ்மரை வெற்றி கொள்வதில் மட்டுமே இருந்தது. பின்பு பாண்டவர்கள் ஒன்று கூடிப் பீஷ்மரை எதிர்த்தனர். பீஷ்மரை அசைக்க முடியவில்லை. அன்று பாண்டவர்கள் படையில் கடும் சேதத்தை பீஷ்மர் விளைவித்தார். கௌரவர்கள் அனைவரும் அழிந்தாலும் பீஷ்மர் ஒருவர் மட்டும் அவர்களை வெற்றி பெற செய்துவிடுவார் என்பதை பாண்டவர்கள் உணர்ந்தனர். சூரியன் மறைய ஒன்பதாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

அன்று இரவு கிருஷ்ணரும் பாண்டவர்களும் சபையில் கூடி யுத்தத்தின் நிலைமையை விமர்சனம் பண்ணினார்கள் தொடர்ந்து 9 நாட்கள் யுத்தம் முடிந்தது. இரு பக்கங்களிலும் எண்ணிக்கையில் அடங்காத போர்வீரர்கள் மடிந்து போய்விட்டார்கள். இதற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. பீஷ்மரை வென்றால் மட்டுமே இந்த யுத்தம் முடிவுக்கு வரும். ஆயுதத்துடன் இருக்கும் அவரை அழிக்க கிருஷ்ணனுக்கு மட்டுமே சாத்தியம். கிருஷ்ணர் ஆயுதம் தொடமாட்டேன் என்ற வாக்குப்படி அது சாத்தியம் இல்லை. பீஷ்மரை தோற்கடிக்க அர்ஜூனன் உறுதி பூண்டிருந்தான். ஆயுதத்துடன் இருக்கும் பீஷ்மரை தோற்கடிக்கும் வழி அர்ஜூனனுக்கு தெரியவில்லை. பாண்டவர்கள் கிருஷ்ணரை வணங்கி. இதுவரை நடைபெற்ற போரில் பீஷ்மரை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை வெளியிட்டனர். நீண்ட யோசனைக்குப் பின் அவரை வெல்வது குறித்து பீஷ்மரையே கேட்க முடிவெடுத்தனர்.

பீஷ்மர் இருக்குமிடம் அனைவரும் சென்று வணங்கினர். கிருஷ்ணரை பீஷ்மர் பக்திபூர்வமாக வரவேற்றார். பீஷ்மர் பாண்டவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று தழுவிக் கொண்டார். பின் அர்ஜூனன் பிதாமகரே போர் தொடக்கத்திற்கு முன் எங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என வாழ்த்தினீர்கள். தங்களை வென்றால்தானே எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டோம். தங்களைத் தோற்கடிப்பது எப்படி என்று கேட்டான்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -12

பீமனின் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பீமன் ஒருவனே நான்கு திசைகளிலும் சுழன்றான். அவன் திரும்பும் திசை எங்கும் கௌரவர்கள் மாண்டனர். பீமனை தாக்க துரியோதனன் தனது தம்பிகள் 24 பேரை மூன்றாக பிரித்து அனுப்பினான். அவர்களில் முதல் எட்டு பேரை கை கால்களை உடம்பில் இருந்து பிய்த்து எடுத்து தலையை கதாயுதம் கொண்டு நசுக்கியும் கொடூரமாக கொன்றான். பின்பு பீமன் யனைப் படையை அழித்தான். கௌரவர்கள் அவனை கண்டு அஞ்சினர். இதை கண்டு துரியோதனனும் சஞ்யனின் மூலம் கேட்டு அறிந்த திருதிராட்டிரனும் வருந்தினர். கௌரவர்கள் படை தோல்வி மேல் தோல்வி கண்டது.

கடோத்கஜன் கௌரவ வீரர்கள் பலரைக் கொன்றான். துரியோதனனை எதிர்த்து கடும் போர் செய்து அவன் தேரை அழித்தான். அவன் மார்பில் அம்புகளைச் செலுத்தினான். கடோத்கஜன் போர் வலிமைக் கண்டு துரோணர் கடோத்கஜனைத் தாக்கினர். பீமன் கடோத்கஜனுக்கு உதவிட விரைந்தான். துரோணரை தாக்கி அவரின் தேரை முறித்தான். கடோத்கஜனை காப்பாற்றும் முயற்சியில் பீமன் மேலும் துரியோதனனின் தம்பியர் எட்டு பேரை கொன்றான்.

தனது தம்பிமார்கள் கொன்ற பீமனை கொல்லும்படி பீஷ்மரிடம் துரியோதனன் நயந்து வேண்டினான் ஆனால் தம்மால் பாண்டவர்களை கொள்ள இயலாது என்று பீஷ்மர் கூறிவிட்டார். சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு பீமன் துரியோதனின் சகோதரர்கள் மேலும் 8 பேரை வெட்டித் தள்ளினான். எட்டாம் நாள் மட்டும் பீமன் துரியோதனன் தம்பியர் பதினாறு பேரைக் கொன்றிருந்தான். ஆக இதுவரையில் பீமன் துரியோதனனின் சகோதரர்கள் 24 பேரை கொன்று விட்டான். துரியோதனன் மீண்டும் பீஷ்மரிடம் எப்படியாவது பாண்டவர்களை கொன்றதாக வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டான். பீஷ்மர் மீண்டும் துரியோதனனிடம் தனது பழைய கருத்தை எடுத்துரைத்தார். கிருஷ்ணன் பாண்டவர்களை பாதுகாத்து வருகின்றான். மண்ணுலகத்தாரும் விண்ணுலத்தாரும் ஒன்று கூடினாலும் பாண்டவர்களை அழிக்க முடியாது. ஆனால் துர்புத்தியே வடிவெடுத்த துரியோதனனுக்கு மட்டும் இக்கருத்து விளங்கவில்லை தான் கையாண்டு வந்த செயல் முற்றிலும் சரியானது என்று மனப்பூர்வமாக நம்பினான்.

அர்ஜுனன் பீஷ்மர் மீது சரமாரியாக அம்புகள் எய்து திணறடித்தான். இந்திரன் தன் வேலைகளை நிறுத்திவிட்டு அன்று அர்ஜுனன் போர் செய்வதை கண்டு தன்னை மறந்தான். யானைகள் சரிந்தன குதிரைகள் மடிந்தன காலாட்படைகள் அழிந்தன. திரும்பிய திசை எங்கும் பாண்டவர்களின் வெற்றி ஆராவாரம் தெரிந்தது. துரியோதனன் செய்வது அறியாமல் திகைத்தான். தர்மம் தலை தூக்க தொடங்கியது. சூரியன் மறைய எட்டாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -11

நகுலனும் சகாதேவனும் சேர்ந்து சல்லியனை எதிர்த்து போரிட்டனர். சல்லியன் வில்வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன் சல்லியனை சாய்க்க நகுல சாகாதேவ சகோதரர்கள் கடுமையாக போராடினர். சல்லியனும் துரிதமாக தன் ஆயுதங்களை பயன்படுத்தினான். சகாதேவன் தன் ஈட்டியால் சல்லியனின் தேரை தாக்கினான். அவன் ஈட்டி பாய்ந்து வருவதை கண்டு சல்லியனின் குதிரைகள் மிரண்டு தடுமாறி ஓட அவைகளை அடக்கினான் சல்லியன். நகுலனோ தன் வாள்திறமையால் சல்லியனின் வில்லை வென்றான். சகாதேவனை சல்லியனின் அம்புகள் தாக்காதவாறு தன் வாழ்சுழற்சியால் அவற்றை தடுத்தான். சல்லியன் தன் இரு மருமகன்களின் போர் திறமையை கண்டு வியந்தான். இறுதியில் மூவரும் சோர்ந்தனர். சல்லியன் மயங்கி நிராயுதபாணியாக தான் தேரில் சாய்ந்தான். தர்மத்தின் படி சல்லியனை கொல்லாமல் உயிர் வாழ விட்டனர் நகுல சகாதேவ சகோதரர்கள்.

கடுமையாய் இருந்த ஏழாம் நாள் போர் சூரியன் மறைய முடிவுக்கு வந்தது. அத்தனை போர் வீரர்களும் போராடி களைத்து போய் இருந்தனர் அன்று இரவு கிருஷ்ணனின் புல்லாங்குழல் வேணுகானம் அனைவருக்கும் அமைதியையும் ஆறுதலையும் கொடுத்தது. அன்று கௌரவர்களுக்கு நடந்த இழப்புகளை அடுத்த நாளில் சரி செய்ய வேண்டும். பாண்டவர்களின் படைகளை சிதறடிக்க வேண்டும் என்று கௌரவர்கள் ஆலோசித்து முடிவு செய்தனர்.

எட்டாம் நாள் பீஷ்மர் தனது சேனைகளை ஊர்மி வியூகத்தில் அமைத்தார். அது கடல் போல் பெரியதாக காட்சி அளித்தது. பீஷ்மருக்கு போட்டியாக தன் படையின் சிறந்த வீரர்களின் தொகுப்பை கொண்டு சிருங்கடக வியூகத்தை திருஷ்டத்துய்மன் வகுத்தான். அது பார்க்க இரண்டு கொம்புகள் போன்று காணப்பட்டது. மிகவும் வலுவான இந்த வியூகம் பகைவரின் வியூகம் எதுவானாலும் அதைச் சிதறச் செய்யும் ஆற்றல் உடையது. அர்ஜுனனும் திருஷ்டத்யும்னனும் வியூகத்தின் தலை பகுதியில் நின்றனர். தருமர், சிகண்டி, அரவான் இடது புறத்திலும் பீமன் மற்றும் கடோத்கஜன் வலது புறத்திலும் இருந்தனர். நகுல சகாதேவ சகோதரர்கள் அபிமன்யு துருபதன் ஆகியோர் வியூகத்தின் பின்புற சுவராக இருந்தனர்.

துரியோதனன் படை தளபதிகளிடம் கோபம் கொண்டான் ஆகையால் கௌரவ படைகள் சீற்றடுடன் போர் புரிந்தனர். பாண்டவ படைகள் ஏழாம் நாள் கிடைத்த வெற்றியினாலும் இரவு கிருஷ்ணர் கொடுத்த வேணுகானதினாலும் உற்சாகத்துடன் போர் செய்தனர். கௌரவ படையின் விகர்ணன் துச்சாதனன் தேர்கள் மற்றும் குதிரைகளை யுதிஷ்டிரர் மற்றும் சிகண்டிகை தூள் தூள் ஆக்கினர். விகர்ணனும் துச்சாதனனும் பின்வாங்கினார்கள். மற்றொரு புறம் நகுல சகாதேவ சகோதரர்களும் அபிமன்யுவும் சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், சகுனி, சகுனியின் மகன் உல்லூகன், சல்லியன், பர்பரிகன், பூரிசிரவஸ் ஆகியோரை கலங்கடித்தனர். அபிமன்யுவின் ஆற்றல் வெளிப்பட தொடங்கியது. பாண்டவர்களின் படையில் அபிமன்னு என்பவனின் மிகபெரிய ஆற்றல் மெதுவாகவும் அதே சமயம் வலிமையாகவும் உருவாகிகொண்டிருப்பது அன்று கௌரவர்களுக்கு தெரிய வந்தது.

Image may contain: 3 people

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -10

பீஷ்மரும் பாண்டவர்களின் படை தளபதியான திருஷ்டத்துய்மனும் நேருக்கு நேர் போரில் சந்தித்தனர். வில் வித்தையில் தான் குருவையே தோற்கடித்தவர் பீஷ்மர் என்பதால் அவரின் ஆற்றல் என்ன என்பதை திருஷ்டத்துய்மன் நன்கு அறிவான். சாமர்த்தியமாக அவரை தாக்காமல் அவருடைய அனைத்து தாக்குதலையும் தடுத்து பீஷ்மரை சோர்ந்து போக வைத்தான்.

அர்ஜுனனும் துரோணரும் நேருக்கு நேர் சந்தித்தனர். அர்ஜூனனை பார்த்து துரோணர் அர்ஜுனா நீ என்னை வென்றால் அதனால் பெருமை எனக்கு தான். தயங்காமல் உன் அம்புகளை செலுத்து இது உனக்கும் எனக்கும் நடக்கும் போர் அல்ல. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர். வீழ்வது நானாக இருப்பினும் வெல்வது தர்மமாக இருக்க வேண்டும். நான் என் ஆற்றலை குறைத்து யுத்தம் செய்ய மாட்டேன் என் முழு ஆற்றலுடன் போர் செய்வேன். என்னை நீ இந்த போரில் வென்றால் நீ வில்லுக்கு விஜயன் என்று பெயர் பெறுவாய். வில்லுக்கு விஜயன் என்ற புகழ் உன்னை சேரட்டும் என்று ஆசி வழங்கினார். குருவின் ஆசியோடு அம்புகளை செலுத்தினான் அர்ஜுனன். அம்புகள் காற்றை கிழித்து கொண்டு பாய்ந்தன. அக்னி மற்றும் வாயு அஸ்திரங்களை செலுத்தினான். துரோணரும் அதற்க்கு ஈடாக போர் புரிந்தார். இருவரின் ஆயுதங்கள் தீர்ந்து போகும் நிலையில் இருவரும் சோர்ந்தனர். கிருஷ்ணர் அர்ஜுனரிடம் இன்று நீ புரிந்த யுத்தம் தான் துரோணரின் தலைமை சீடன் என்பதை உலகிற்கு தெரிவித்தது என்று கூறி ஊக்கம் அளித்தார்.

நகுலனும் சகாதேவனும் காலாட்படைகளை சிதறடித்தனர். நகுலனின் வாள் சுழர்ச்சியும் சகாதேவனின் ஈட்டியும் போர் களத்தில் புயலை உருவாகியது. அன்றிய போரில் சகாதேவன் வீசிய ஈட்டிகளின் எண்ணிக்கை 17485. ஆறாம் நாள் போரில் பாண்டவர்களின் கை ஓங்கி இருந்தது. அர்ஜுனன் துரோணர், பீமன், துரியோதனன், பீஷ்மர், திருஷ்டத்துய்மன், நகுலன் சகாதேவன் என அனைவரும் சோர்ந்திருந்த நிலையில் மாலையில் சூரியன் அஸ்தமித்தான். ஆறாம் நாள் போர் முடிவிற்கு வந்தது.

ஏழாம் நாள் யுத்தத்திற்கு அனைவரும் தயாரானர்கள். ஆறாம் நாள் போரில் சோர்வடைந்த துரியோதனன் அடுத்த நாள் காலை பீஷ்மரிடம் முறையிட்டான். எனது அச்சமும் சோர்வும் என்னை விட்டு அகவில்லை. உங்கள் உதவி இல்லாமல் நான் எப்படி வெற்றி பெறுவேன் எனக் கெஞ்சிக் கேட்டான். பீஷ்மர் என்னால் முடிந்த அளவிற்கு போர் செய்து கொண்டு தான் இருகிறேன் என்று கூறினார்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -9

ஐந்தாம் நாள் யுத்தம் தொடங்கியது. பீஷ்மர் தனது சேனையை மகர வியூகத்தில் அமைத்தார். வியூகம் வடிவத்தில் முதலை போன்று இருந்தது. அதை எதிர்த்து திருஷ்டத்யும்னன் தனது சேனேயை சியேன வியூகத்தில் அமைத்தான். வியூகம் வடிவத்தில் பருந்து போன்று இருந்தது. அன்றைக்கு நிகழ்ந்த யுத்தத்திற்கு சங்குல யுத்தம் என்று பெயர். அத்தனை பேரும் அவனவனுக்கு ஏற்ற எதிரியைத் தாக்கி போர் புரிவது சங்குல யுத்தம் ஆகும். யுத்தம் ஆரம்பிக்கும் போது துரியோதனன் துரோணரைப் பார்த்து குருவே நீங்கள் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள். உம்மையும் பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன் என்றான். அதற்கு துரோணர் பாண்டவரிடம் பகை வேண்டாம் என ஏற்கனவே பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை. ஆயினும் என்னால் இயன்ற அளவு போரிடுவேன் என்றார்.

அர்ஜுனன் ஆயிரக்கணக்கான வீரர்களை வீழ்த்தினார் அவனை எதிர்த்து பயந்தவர்கள் சுடர்விட்டு எரியும் தீயில் பாய்ந்து விட்டில் பூச்சிகள் போன்று மடிந்தார்கள். யுத்தத்தில் பல ஆயிரம் பேர் மாண்டனர். சாத்யகியும் பீமனும் துரோணருடன் சண்டையிட அர்ஜூனன் அஸ்வத்தாமனுடன் போரிட்டான். அபிமன்யூ துரியோதனனின் மகன் லட்சுமணனுடன் போரிட்டான். சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது. பாண்டவ மற்றும் கௌரவர்களின் சகோதர இழப்பின்றி யுத்தம் முடிந்தது.

ஆறாம் நாள் போரில் திருஷ்டத்துய்மன் னது சேனையை மகர வியூகத்தில் அமைத்தான். பீஷ்மர் கிரௌஞ்ச வியூகத்தில் அமைத்தார். ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர். பீமன் அன்று சிறப்பாக போரிட்டான். பகைவர்களைக் கொன்று குவித்தான். யானை படைகள் இவன் ஆற்றல் கண்டு மிரண்டது. குதிரை படைகள் தெறித்து ஓடின. பீமன் தன் கையில் இருக்கும் கதாயுதத்தை சுழற்றும் வேகமும் அதில் இருந்து எழுந்த ஓசையும் பலராமனின் சீடன் என்பதை நிருபித்தான். பீமனின் கதாயுதம் இவ்வொரு முறை நிலத்தில் மோதும் போதும் நிலம் அதிர்ந்தது. இதை கண்ட கௌரவ படைகள் அச்சத்தின் உச்சியில் இருந்தனர். அவன் ஆற்றலும் போர் வெறியும் அன்று எல்லை அற்று இருந்தது. பீமனை பார்த்த பீஷ்மர், துரோணர், கிருபர் அனைவரும் இப்படியும் ஒருவர் போர் செய்ய முடியுமா என்று மனதிற்குள் பீமனை பற்றி பெருமை கொண்டனர். துரோணர் இவன் என் சிஷ்யன் என்று கூற அதற்க்கு பீஷ்மர் அவன் என் பேரன் என்று பெருமை கொண்டார். இடையில் கிருபரோ உங்கள் அனைவருக்கும் முன்பு நான் தான் குல குரு ஆதலால் அந்த பெருமை என்னை சேரும் என்று போர்களத்தில் கூற மூவரும் நகைத்து கொண்டனர். பின்பு அவனும் தங்கள் எதிர் அணியில் ஒருவன் என்பதை உணர்ந்து மீண்டும் ஆயுதம் ஏந்தி போரினை தொடர்ந்தார்கள்.

துரியோதனன் பீமனுடன் போர் புரிய நெருங்கினான். அதைக் கண்ட பீமன் துரியோதனா நீ இங்குத்தான் இருக்கிறாயா உன்னைப் போர்க்களம் எங்கும் தேடி அலைந்தேன். இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது என்று கூறி அவன் தேர்க்கொடியை அறுத்துத் தள்ளினான். இருவருக்கும் பெரும் போர் மூண்டது. இருவரும் தங்களின் கதாயுதத்தால் சண்டை போட்டனர். கதாயுதங்களின் சத்தம் இடியன ஒலித்தது. இருவரின் கதாயுதங்களில் இருந்து வந்த நெருப்பு பொறிகள் பகலில் மின்னல் போல் தெரித்தது.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -8

அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் நாள்தோறும் நீ எனக்கு யுத்ததில் நடக்கும் செய்திகளை எடுத்துக் கூறுகின்றாய். யுத்தம் செல்லும் போக்கில் போனால் என் மகன் எவ்வாறு வெற்றி பெறப்போகிறான். இன்று எனது மகன்கள் 8 பேரை பீமன் கொன்று விட்டான். இது எனக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்றான். அதற்கு சஞ்சயன் உண்மையை எடுத்துரைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விபத்தை நீங்களாகவே வரவழைத்துக் கொண்டார்கள் என்றான்.

நான்காம் நாள் போரின் முடிவில் இரவில் துரியோதனன் மிகவும் துன்பத்தில் மூழ்கியவனாக இருந்தான் அவனால் தூங்க முடியவில்லை பீஷ்மருடைய கூடாரத்திற்கு மெதுவாக நடந்து சென்றான். பீஷ்மரிடம் சென்ற துரியோதனன் நீங்களும் துரோணரும் கிருபரும் இருந்தும் என் தம்பியர் 8 பேர் மாண்டார்கள். பல வீரர்கள் உயிர் இழந்தனர். பாண்டவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று வருத்தத்துடன் கேட்டான். அதற்கு பீஷ்மர் இது குறித்து பலமுறை உன்னிடம் எச்சரிக்கை பண்ணியிருக்கிறேன். போரில் பாண்டவர்களே வெற்றி பெருவார்கள். நீ தோல்வியடைவாய். பாண்டவர்களுடன் சமாதானமாகப் போவதே நன்று என பலமுறை வற்புறுத்தியும் இருக்கிறேன்.

பாண்டவர்களிடம் நீ வைத்திருக்கும் பகைமையும் அநீதியுமே உன்னை கீழ்நிலைக்கு இழுத்துச் செல்கின்றன. பாவி ஒருவனை மண்ணுலகும் விண்ணுலகும் ஒன்று கூடினாலும் காப்பாற்ற முடியாது. பாண்டவர்கள் தர்மத்திலிருந்து இம்மியளவும் பிசகாதவர்கள். ஆகையால் கிருஷ்ணன் அவர்களை காப்பாற்றி வருகின்றான். எங்கு கிருஷ்ணர் உள்ளாரோ அங்கு தர்மம் இருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது. கிருஷ்ணனோ நாராயணனுடைய அவதார மூர்த்தி. உலகிலுள்ள கயவர்களை எல்லாம் அழித்துத்தள்ள அவன் தீர்மானிக்கின்றான். நீ புரிந்துள்ள பாவச்செயலின் விளைவிலிருந்து நீ தப்பித்துக் கொள்ளமாட்டாய் இது உண்மை. பாண்டவர்களுடன் நீ சமாதானம் செய்து கொள். இல்லையேல் நீயும் அழிந்து போவாய். இப்பொழுதும் கூட நிலைமை தலைக்கு மேல் போய்விடவில்லை. நீ தீர்மானித்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவகாசம் இருக்கிறது என்றார். துரியோதனன் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தான். பிறகு அவருடைய கூடாரத்தை விட்டு அவன் கிளம்பி சென்றான். இரவெல்லாம் அவனுக்கு உறக்கம் இல்லை. ஆனால் தன்னை தானே திருத்தி அமைத்துக் கொள்ளும் எண்ணம் அவனுக்கு வரவில்லை.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -7

அர்ஜூனன் கிருஷ்ணரின் செயலை கண்டு மனம் பதறினான். ஓடோடி கிருஷ்ணரின் காலைப் பிடித்துக் கொண்டு நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும். நீங்கள் ஆயுதம் ஏந்தி போரிட மாட்டேன் என்று சொல்லியிருக்கின்றீர்கள். என்னை உற்சாகப்படுத்த இச்செயலை செய்கின்றீர்கள் என்று எண்ணுகிறேன். என்னுடைய வல்லமை முழுவதையும் இப்போதே யுத்தத்தில் பயன்படுத்துகிறேன் என்று உறுதி கூறுகிறேன். சினம் வேண்டாம் என வேண்டினான். கிருஷ்ணரின் ஆவேசம் தணிந்தது. அர்ஜூனன் கிருஷ்ணரிடம் நீங்கள் தேரில் ஏறிக் கொள்ளுங்கள். என் கடமையை நான் செய்கிறேன் என்னை எதிர்ப்பவர்கள் இன்று மடிந்தார்கள் என்று கூறினான். கிருஷ்ணரும் தேரில் ஏறி மீண்டும் சாரதி உத்தியோகத்தை கையில் எடுத்துக்கொண்டார்.

அர்ஜூனன் கடுமையான போரை மேற்கொண்டான். அவனின் காண்டீபம் இடியென முழங்கியது. யானைகள் சாய்ந்தன. குதிரைகள் வீழ்ந்தன. காலாட் படையினர் சரிந்தனர். ஆவேசத்தோடு அர்ஜூனன் போர் புரிந்தான். அவனை எதிர்த்து நின்ற பாட்டனாருக்கு அவன் செயல் பரம திருப்தியை உண்டு பண்ணியது. போர் வீரர்கள் அர்ஜுனனுடைய வீரத்தை பார்த்து திகைத்து நின்றனர். அன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 16,000 தேர்ப் படை வீரர்கள் அர்ஜூனனால் துடைத்து தள்ளப்பட்டனர். இந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு யானைகளும் குதிரைகளும் காலாட்படை களைந்து ஒழிக்கப்பட்டன. சூரிய அஸ்தமனமாயிற்று. மூன்றாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது. அன்று இரவெல்லாம் இருகட்சிகாரர்களும் அர்ஜுனனுடைய வீரத்தை பற்றிய பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான்காவது நாள் பீஷ்மர் தம்முடைய சேனைகளை வியாளம் என்ற வியூகத்தில் அமைத்தார். ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் பீஷ்மர் போர் புரிந்தார். அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் அவ்வனுமானின் பேராற்றலுடன் அர்ஜுனன் போரிட்டான். பாண்டவர்கள் பக்கத்தில் அர்ஜுனனுடைய செல்வன் அபிமன்யுவுடன் பூரிசிரவசு, அஸ்வத்தாமா, சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர். அர்ஜூனனுக்கு ஏற்ற மகனாக அவன் போர் புரிந்ததை பார்த்த போர் வீரர்கள் பெரு வியப்படைந்தனர். பாண்டவர்களுக்கு சேனாதிபதியாக இருந்த திருஷ்டத்யும்னன் சால்வனுடைய மகனின் தலையை இரண்டாகப் பிளந்தான். அதை முன்னிட்டு எதிரியின் படைகளில் பெரும் குழப்பம் உண்டாயிற்று. பீஷ்மரும் அர்ஜுனனும் பராக்கிரத்துடன் போர் புரிந்தார்கள். மற்றோரிடத்தில் பீமனிடம் துரியோதனனும் அவனது தம்பிகளும் வீராவேசத்துடன் சண்டையிட்டனர். துரியோதனனுடைய தம்பிகள் 8 பேரை பீமன் கொன்றான். தன் கதையால் யானைகளை வீழ்த்தினான். பீமனுடைய மைந்தனாகிய கடோத்கஜன் சென்ற இடங்களில் எல்லாம் எதிரிகளின் படைகளை துடைந்நு தள்ளினான். அவன் புரிந்த பயங்கர போர் எதிரிகளை நடுங்கச் செய்தது. துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர். பலர் மாண்டனர். சூரிய அஸ்தமனமாயிற்று. நான்காம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -6

துரியோதனன் தெளிவு பெற்ற பின்பு அவனை பத்திரமாக வேறு இடத்திற்கு அனுப்ப பீஷ்மர் முற்பட்டார். அப்போது துரியோதனன் பீஷ்மரைப் பார்த்து பாட்டனாரே இது வரைக்கும் நடந்த யுத்தத்தை பார்த்தால் இன்னும் தங்களுடைய முழு பலத்தை கையாளாமல் இருக்கின்றீர்கள் என்று எனக்கு நன்கு தெரிகிறது. பாண்டவர்கள் பக்கம் நீங்கள் அதிக பாசம் வைத்து இருக்கின்றீர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அந்த பாசத்தினால் என்னை நட்டாற்றில் கைவிட்டு விட்டீர்கள். இதுபற்றிய உங்களுடைய கருத்தை உள்ளபடி எனக்கு முழுமையாக தெரிவியுங்கள் என்றான். அதற்கு பீஷ்மர் முதலிலேயே நான் உனக்கு எச்சரிக்கை செய்து இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். என்னுடைய ஆற்றல் முழுவதையும் உனக்காக பயன்படுத்துவேன். ஆனாலும் இந்த யுத்தத்தில் நீ வெற்றியடைய மாட்டாய் என்று கூறிவிட்டு ஊக்கம் படைத்தவராக பீஷ்மர் போர்க்களத்தில் பிரவேசித்தார். பாண்டவர் படைகள் முழுவதையும் துடைத்து அழிக்க அவர் எண்ணம் கொண்டார். அவர் புரிந்த உயிர்ச்சேதம் அளப்பரியதாக இருந்தது.

அர்ஜூனனிடனும் பீமனிடமும் போரைத் தொடர்ந்தார். பீஷ்மர் கோபத்துடன் செய்த விற்போரில் அர்ஜூனனும் பீமனும் அவரை எதிர்த்து சமாளிக்க முடியாமல் திணறினார்கள். பீஷ்மரை எதிர்த்துப் போர் செய்வதை மறந்த அர்ஜூனன் பீஷ்மரை பார்த்து வியப்பில் ஆழ்ந்தான். தன்னை மறந்து நின்ற அர்ஜூனனை பார்த்து கிருஷ்ணர் சினம் கொண்டார். பாட்டனாரை எதிர்த்து நீ உன்னுடைய முழு வல்லமையை காட்டி யுத்தம் செய்யவில்லை. அர்ஜூனா என்னவாயிற்று உனக்கு? பீஷ்மரையும் துரோணரையும் வெல்வேன் என்றாயே அதை மறந்து விட்டாயா என்றார். உற்சாகம் அடைந்த அர்ஜூனன் தனது ஒரு அம்பால் பீஷ்மரின் வில்லை முறித்தான். பீஷ்மர் வேறு அம்பை எடுத்து எட்டு திசைகளிலும் அர்ஜூனன் மீது அம்புகளைச் செலுத்தி மறைத்தார். பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன. ஆனால் அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கிருஷ்ணர் உணர்ந்தார்.

அர்ஜூனனைப் பார்த்து பாட்டனார் மீது வைத்த பாசத்தின் விளைவாக ஒருவேளை இப்படி செய்கிறாயா என்ற கிருஷ்ணன் அர்ஜூனனை தேரிலிருந்து கீழே இறங்கி விட்டார். கிருஷ்ணர் கையில் சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு தானே ஆயுதம் ஏந்தி பீஷ்மரை அழிக்க தீர்மானம் பண்ணினார். பேராற்றல் படைத்த சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணர் கையில் ஏந்தினார். பாண்டவப் படைகளை அழித்துக்கொண்டிருந்த கொண்டிருந்த பீஷ்மரை நோக்கி கிருஷ்ணர் விரைந்து சென்றார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அங்கு திடீரென்று காட்சி மாறியது. கிருஷ்ணருடைய சக்கரத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது. பீஷ்மர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. கிருஷ்ணரை பார்த்து பீஷ்மர் என்னை அழித்து தள்ளிவிடுங்கள். நான் உயிரோடு இருந்தால் பாண்டவப் படைகளில் ஒரு பகுதியும் மிஞ்சாது. அதுவே என் தீர்மானம். தாங்கள் என்னை அழித்தால் அது நான் செய்த பாக்கியம் ஆகும் என்ற பீஷ்மர் கிருஷ்ணனைப் பார்த்து வணங்கி புகழ்ந்து தோத்திரம் செய்து இறைஞ்சினார்.