ராமாயணம் பால காண்டம் பகுதி -3

புத்திர காமேஷ்டி யாகத்தை முறையாக செய்வது மிகவும் கடினமானது. கிரியா என்ற செயல்கள் அதில் அதிகமாக உள்ளது. இம்மியளவு யாகத்தில் தவறு செய்தாலும் யாகம் தனது பலனை தராது. அதற்குரிய நியதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றார் வசிஷ்டர். இதனை கேட்ட தசரதர் இந்த யாகத்தை முறையாக யாரால் செய்ய இயலும் என்று கேட்டார். காசிபர் என்னும் முனிவருக்கு விபண்டகர் என்னும் முனிவர் மகன். அவருக்கு சிவபெருமானே புகழும்படி சகலகலைகளிலும் கற்றுணர்ந்த புதல்வன் சிருங்கரிஷி என்பவர் உண்டு. அவரை இங்கு வரவழைத்து இந்த புத்திரகாமேஷ்டி யாகத்தை அவரது சொல்படி நடத்துவாயாக என்று வாழ்த்தினார் வசிஷ்டர்.

உரோமபதன் என்ற அரசனின் நாட்டில் சிருங்கரிஷி இருப்பதை அறைந்த தசரதன் அவரை முறையாக தன் நாட்டிற்கு அழைத்துவர தனது மந்திரி சுமத்திரனோடு சென்றார். தன் நாட்டிற்கு தசரதர் வருவதை அறிந்த உரோம்பதன் நாட்டின் எல்லைக்கே சென்று தசரதனை வரவேற்று விருந்தளித்தான். தசரதர் வந்த காரணத்தை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்ட உரோம்பதன் தானே சிருங்கரிஷியை அயோத்தி நகருக்கு அழைத்து வருவதாக வாக்களித்தார். தசரதர் சென்ற பின் சிருங்கரிஷி இருக்கும் இடத்திற்கு வந்த உரோமபதன் அவருக்கு உபசாரங்கள் செய்தான். இதனை கண்ட சிருங்கரிஷி வந்த நோக்கம் என்ன என்று கேட்டார். தாங்கள் தமக்கு ஒரு வரம் தர வேண்டும் என்று உரோமபதன் கேட்டுக்கொண்டான். தந்தோம் என்ன வேண்டும் கேள் என்றார். அசுரர்களால் துன்பப்பட்ட இந்திரனுக்கு உதவி செய்த தசரதரின் நாட்டிற்கு சென்று அவருக்கு புத்திர காமேஷ்டி யாகத்தை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான் உரோமபதன். வரம் தந்தோம் உடனே கிளம்புவோம் என்ற சிருங்கரிஷி உரோம்பதனுடன் அயோத்தி நோக்கி கிளம்கினார்.

உரோம்பதன் அனுப்பிய ஒற்றன் சிருங்கரிஷி அயோத்திநகர் வருவதை தசரதனுக்கு தெரியப்படுத்தினான். அதனை கேட்ட தசரதர் அயோத்தி நகருக்கு மூன்று யோசனை தூரம் (ஒரு யோசனை தூரம் என்பது தோராயமாக 15 கிமீ தூரம் ஆகும்) சென்று முரசு வாத்தியங்கள் ஒலிக்க மலர்கள் தூவி முனிவரின் அடிபணிந்து தனது வரவேற்றான். அரண்மணைக்கு வந்த சிருங்கரிஷி தசரதரை பார்த்து வசிஷ்டரை குலகுருவாக கொண்ட உன்னே போன்ற அரசர்கள் யாரும் இல்லை என்று வாழ்த்தி யாகத்திற்கு செய்ய வேண்டிய நியதிகளையும் ஒழுக்கங்களையும் விரதங்களையும் கூறினார். அவரின் ஆணைக்கு உப்பட்ட தசரதரும் அவரது மனைவியர்களும் அதற்கான விரதங்களையும் நியதிகளையும் கடைபிடிக்க ஆரம்பித்தனர்.

யாகம் செய்யும் யாக பூமியை உழுது விதிப்படி திருத்தியமைத்தார்கள். யாக சாலையில் ஆகவானீயம், தக்ஷ்ணாக்கினி, காருகபத்தியம் என மூன்று விதமான யாக குண்டங்கள் கட்டப்பட்டன. வேதம் ஓத யாக குண்டங்களில் புத்திர காமேஷ்டி யாகத்திற்கு தேவையான ஆகுதி பொருட்கள் அனைத்தும் நெய்யுடன் போடப்பட்டது. யாகம் தொடர்ந்து 12 மாதங்கள் நடந்தது. யாகம் உச்சநிலை அடைந்ததும் யாக நெருப்பில் இருந்து பிராகாசமூர்த்தி ஒருவர் மேலே கிளம்பி வந்தார். அவர் கையில் கலசம் ஒன்று இருந்தது. அதை அவர் தசரதரிடம் கொடுத்துவிட்டு மறைந்தார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -2

தசரதமன்னனுடைய வாழ்வில் அனைத்து சம்பத்துக்களும் இருந்தாலும் அவருடைய மனதில் குறை ஒன்று இருந்தது. அவருக்கு திருமணம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் மகப்பேறு வாய்க்கவில்லை. அதைப்பற்றிய துயரம் அவர் மனதில் அறித்துக்கொண்டிருந்தது. இந்த குறையை முன்னிட்டு அனைத்து மகிழ்ச்சிகளும் பயனற்றவைகளாக தசரத மன்னனுக்கு தெரிந்தது. மகப்பேறு ஒன்றை நாடி அவரின் உள்ளம் தவித்துக்கொண்டிருந்தது.

அயோத்தி மாநகரில் தசரதன் அரசவையில் இருந்தான் இப்போது குலகுருவான வசிஷ்டர் அரசவைக்கு வந்தார். அவரை அடிபணிந்த தசரதன் வழிவழியாக எங்கள் குலத்திற்கு தாயும் தந்தையாய் உயர்ந்த கடவுளாய் இருப்பவர் நீங்களே என்று போற்றி வணங்கி தக்க மரியாதை தந்து வரவேற்று அவருக்குத்தக்க ஆசனம் தந்து அமரவைத்தான். பின்பு அவரிடம் எனக்கு முன்னால் தோன்றிய சூரிய வம்சத்து அரசர்கள் அனைவரும் எல்லா நன்மைகளும் பெற்று அரசாட்சி செய்து இவ்வுலகை காத்து வந்தனர். நான் இவ்வுலகை அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து இவ்வுலகை காத்து வந்தேன். பெருந்தவம் புரியும் முனிவர்கள் வேள்விகள் செய்யும் அந்தணர்கள் வரை எவ்வித குறையுமில்லாமல் நலமுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனக்குப்பின் இந்த நாட்டை ஆள வாரிசு இல்லை. ஆகையால் அவர்கள் அனைவரும் பெருந்துன்பத்தில் சிக்கக்கூடும் என்று என் மனம் மிகவும் வருந்துகிறது. எனக்கு வாரிசு கிடைக்க என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கூறவேண்டும் என்று வசிஷ்டரிடம் கூறினான். தசரதர் கூறிய அனைத்தையும் கேட்ட வசிஷ்டர் பிற்காலத்தில் தசரதருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தன் தவவலிமையால் அறிந்துகொள்ள கண்களை முடி பின்வருவனவற்றை கண்டார்.

இலங்கையில் வாழும் அசுர அரசனான ராவணன் தேவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தை கொடுத்துவந்தான். மனிதனைத்தவிர எந்த மூர்த்தியாலும் கொல்லமுடியாது என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றிருந்தான். தேவர்கள் அசுரர்கள் கொடுக்கும் துன்பத்தை தாங்க முடியாமல் பிரம்மாவிடம் முறையிட்டார்கள். பிரம்மாவும் தேவர்களுடன் சேர்ந்து வைகுண்டத்திற்கு சென்றனர். திருமாலிடம் தங்கள் குறைகளை முறையிட்டு தங்களை காக்குமாறு தேவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைக்கேட்ட திருமால் தான் தசரத சக்கிரவர்த்திக்கு மகனாக பிறக்கப்போவதாகவும் ஆதிஷேசன், சங்கு, சக்கரம் ஆகியவை எனக்கு தம்பிகளாக பிறக்கப்போகிறார்கள். விரைவில் அரக்கர்களை அழிப்பதாக வாக்குறுதி அளித்தார். இதனை ஞானதிருஷ்டியில் கண்ட வசிஷ்டர் தசரதனிடம் வருத்தப்படவேண்டாம். புத்திர காமேஷ்டி என்னும் வேள்வியை குறையின்றி செய்தால் உன் கவலை தீரும். ஏழு உலகையும் காக்கும் வலிமையுள்ள மகன் பிறப்பான் என்றார்.

இதைக்கேட்ட தசரதர் பெருமகிழ்ச்சி அடைந்து வசிஷ்டரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். புத்திர காமேஷ்டி வேள்வியை எப்படி செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறுங்கள். உடனே அதற்கான ஏற்பாட்டை செய்கிறேன் என்றான்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -1

புண்ணிய கங்கை நதிக்கு வடக்கே கோசல ராஜ்யம் மிகப்பெரியதாக இருந்தது. அந்த ராஜ்யத்திற்குள் சராயு நதி ஒடிக்கொண்டிருந்தது. கங்கையின் உப நதி சராயு நதியாகும். கோசல ராஜ்யத்தை ஆண்டு வந்த அரசர்கள் அனைவரும் சூர்ய குலத்தை சேர்ந்தவர்கள். இந்த வம்சத்தில் மனுச்சக்கரவர்த்தி, இக்ஷ்வாகு மன்னன், மந்தாதா, சிபிச்சக்கரவர்த்தி, சகரர், பகீரதர், நகுஷன், ரகு, அஜன் ஆகிய மன்னர்கள் மேன்மை தாங்கிய மன்னர்களாக மிளிர்ந்திருந்தனர். கோசல ராஜ்யத்திற்கு அயோத்ய பட்டணம் தலைமை நகரமாக இருந்தது. அயோத்ய என்ற சொல்லுக்கு யுத்தத்தில் அசைக்க முடியாதது என்று பொருள். அக்காலத்தில் இந்த நகரம் யாரிடமும் எவ்விதத்திலும் தோல்வி அடைந்தது இல்லை.

சூர்ய குலத்து அரசர்களுள் அஜமகா ராஜனுக்கும் இந்துமதிக்கும் மகனாகப்பிறந்த தசரத சக்கரவரத்தி கோசல ராஜ்யத்தை ஆண்டுவந்தார். தசம் என்றால் 10 என பொருள்படுகிறது. ரதம் என்பது தேரை குறிக்கிறது. தசரதன் என்னும் பெயர் ஒரே நேரத்தில் 10 தேரை வழிநடத்த வல்லவன் என்ற பொருள்படுகிறது. தசரத சக்கரவரத்தி ஆண்சிங்கத்தை ஒத்த உடல் வலிமையை பெற்றிருந்தான். இவருக்கு கௌசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள்.

மன்னன் ஒருவனிடம் இருக்க வேண்டிய மாண்புகள் அனைத்தும் தசரத சக்கரவரத்தியிடம் இனிது அமைந்திருந்தது. நெடுங்காலம் செங்கோல் தாங்கி ஆட்சி புரிந்துவந்தார். அவர் ஆட்சியில் தருமம் தழைத்தோங்கியது. தடுக்க முடியாத பாங்கில் போர் வாய்த்த போது அதை தசரத சக்கரவரத்தி திறமையுடன் சமாளித்தார். தேவர்களின் நலனுக்காக அசுரர்களை எதிர்த்து போர்புரிந்த சிறப்பை தசரத சக்கரவரத்தி பெற்றிருந்தார். போர் இல்லாத காலத்தை குடிமக்களை நலனுக்காக நன்கு பயன் படுத்திக்கொண்டார். தம்முடைய குடிமக்களை தந்தையின் பாங்கில் நன்கு பராமரித்து வந்தார். குடும்ப காரியம் ஆனாலும் நாட்டிற்கான காரியம் ஆனாலும் சான்றோர்களையும் முனிவர்களையும் அணுகி அவரகளுடன் நன்கு ஆலோசித்து அதன் பிறகே முடிவு செய்வார். இவருக்கு உதவியாய் இருந்த மந்தரிகள் அனைவரும் ஆட்சித்திறமை வாய்க்கப்பெற்றவர்களாக இருந்தார்கள்.

நான்கு வேதங்களைக்கொண்டு வேதியர்கள் இயற்றும் வேள்விகளில் இருந்த வந்த புகைகள் வானத்தில் மேகக்கூட்டம் போல் காட்சியளிக்கும். நாட்டில் பருவமழை சரியான அளவிற்கு பொழிந்து நாடு செழிப்புடன் இருந்தது. குடிமக்கள் நன்கு கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். ஒழுக்கத்திலும் நன்கு நிலை நின்றவர்களாக இருந்தார்கள். குடிமக்கள் நாட்டின் செல்வத்தை வளர்ப்பதில் ஊக்கம் மிகப்படைத்த உழைப்பாளிகளாக இருந்தார்கள். அனைவரின் உள்ளத்திலும் ஆனந்தம் குடிகொண்டு திருப்தி நிறைந்திருந்தது. தசரத சக்கரவரத்தியின் ஆட்சியில் மனிதர்களின் முயற்சியும் தெய்வ சம்பத்தும் ஒன்று கூடி பூலோக வைகுண்டம் போல் கோசல ராஜ்யம் காட்சி கொடுத்தது. கோசல நாட்டின் வளம் காரணமாக வறுமை என்பதே இல்லை. ஆகையால் தானதர்மங்களும் தனியாக இல்லை. அனைவரும் சத்தியத்தை கடைபிடித்து பொய் பேசாத காரணத்தால் உண்மை என்ற ஒன்று தனியாக இல்லை. நாட்டில் கள்வர்களே இல்லாத காரணத்தால் காவலர் என்ற ஒருவர் தேவையற்றவராக இருந்தார்.

ராமாயணம் முன்னுரை

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே.

தர்மம் எப்பொழுதெல்லாம் அழிந்து அதர்மம் தலையெடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம்.

தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுத்த போது பகவான் அவதரித்த வரலாற்றை கூறுபவை இதிகாசங்களாகும். இதிகாசம் என்பது கதை அல்ல. சமஸ்கிருதத்தில் இதி என்பதற்கு இப்படி என்றும் காசம் என்பதற்கு நடந்தது என்றும் அர்த்தம். இதிகாசம் என்றால் மரபுவழி வரலாற்று கதை என்றும் பெரும்காவியம் என்றும் பொருள் உண்டு. இதிகாசங்கள் இரண்டு 1. ராமாயணம் 2. மகாபாரதம். ராமாயணம் என்னும் பெயர் ராமன் மற்றும் அயணம் என்னும் சொற்களின் கூட்டாகும். அயணம் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயணம் அல்லது வழித்தடம் என்னும் பொருளுடையது. இதனால் ராமாயணம் என்பது ராமனின் பயணம் அல்லது அவன் வாழ்ந்த வழி என்னும் பொருளைக் குறிக்கிறது. மூல நூலான வால்மீகி ராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும் பிற நாடுகளின் மொழிகளிலும் ராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. வடமொழியில் வால்மீகி இயற்றிய ராமாயணத்தை பின்பற்றி யோக வசிஷ்டர் எழுதிய வசிஷ்ட ராமாயணம், ராமசர்மர் எழுதிய அத்யாத்ம ராமாயணம் மற்றும் வால்மீகி பெயரால் அழைக்கப்படும் அற்புத ராமாயணம் ஆனந்த ராமாயணம் என நிறைய நூல்கள் உள்ளது. தமிழில் கம்பர் எழுதினார். இது கம்ப ராமாயணம் எனப்படுகின்றது. இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர். கம்போடியாவின் கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய்லாந்தின் தாய் மொழியில் உள்ள ராமாக்கியென் (ராமகீர்த்தி) தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியில் எழுதப்பட்ட இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் ராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

இந்தியாவில் வால்மீகி, கம்பன், துளசிதாஸ், எழுத்தச்சன், அஸ்ஸாமிய, வங்காள, சமண ராமாயணங்கள் பல கிடைக்கின்றன. இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளில் ராமாயணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. திரு. ஏ.கே. இராமானுஜம் 1991 இல் எழுதிய ஆங்கில கட்டுரை 300 ராமாயணங்கள் என்பதில் குறிப்பிடப்பட்டவை தவிர மேலும் பல ராமாயண நூல்கள் பிற்காலத்தில் பழைய நூலகங்களிலிருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன. ராமாயணம் மொத்தம் எத்தனை உள்ளது என்று முழுமையாகச் சொல்லிவிடமுடியாது. இதற்கு காரணமாக ஏன் ராமாயணத்தில் இத்தனை வகைகள் தோன்றியது என்று எண்ணினால் அக்காலத்தில் புராணங்களும் இதிகாசங்களும் தலைமுறை தலைமுறையாக செவிவழிச் செய்தியாகவே பரிமாறப்பட்டிருக்கின்றன. யோகிகள் மகான்கள் எழுதிய நூல்கள் தவிர்த்து மற்ற அனைத்து ராமாயணங்களும் அவரவர்களுக்கு புரிந்தவைகளை அவரவர்கள் விருப்பம் போல் எழுதியிருக்கலாம். ஆகவே தான் யோகிகள் மகான்கள் எழுதிய ராமாயண காவியத்திற்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை. மற்றவர்கள் எழுதியதிற்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் ஓர் காலகட்டத்தில் சமணர்கள் சைவம் வைணவத்தை அழித்து தங்கள் சமண மதத்தை பரப்புவதற்காக வரலாற்று காவியங்கள் சிலவற்றை வேண்டுமென்றே திரித்து மொழி பெயர்த்திருக்கின்றார்கள் என்றும் வரலாறு உள்ளது. அதன்படியும் பல ராமாயண கதைகள் உருவாகியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

ராமாயணம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. ராமாயண நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகளும் விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைகள் அரசுகள் போன்றவற்றையும் ஆய்வுநோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தை வால்மீகியால் படைத்திருக்க முடியாது என்பது தெரிகிறது. ராமாயண இதிகாசம் வாழ்வியல் நன்நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன் தலைவனாக எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதையும் தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு நிலைகளையும் ஒன்றுபோல எதிர்கொண்டு சமயத்துக்குத் தக்கபடி நடந்து தனது சொந்த இன்ப துன்பங்களுக்கு அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு கட்டத்தில் இது தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்ட மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் அவதார வரலாறும் ஆகும். மகாபாரத காவியத்தின் வன பருவத்தில் ராமாயண நிகழ்வுகளை மார்க்கண்டேய முனிவர் யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்திருக்கின்றார். வால்மீகி ராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவையாவன பின்வருமாறு:

  1. பால காண்டம்: ராமன் மற்றும் அவரின் உடன்பிறந்தோரின் பிறப்பு, கல்வி, திருமண காலத்துப் பகுதி.
  2. அயோத்தியா காண்டம்: ராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துப் பகுதி.
  3. ஆரண்ய காண்டம்: ராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்த காலத்துப் பகுதி.
  4. கிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் ராமனது வாழ்க்கை காலத்துப் பகுதி.
  5. சுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய காலத்துப் பகுதி.
  6. யுத்த காண்டம்: ராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய காலத்துப் பகுதி.
  7. உத்தர காண்டம்: ராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.

இந்த ராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளிலிருக்கும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர்.

கம்பன் சோழ நாட்டில் கும்பகோணத்தில் உள்ள தேரெழுந்தூரில் கி.பி. 1180 ஆம் ஆண்டு ஆதித்தன் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரின் குடும்பத்தின் வறுமை காரணமாக பணக்கார விவசாயி ஒருவருக்கு தத்து கொடுக்கப்பட்டார். இவர் சிறு வயதில் காளி கோவில் கம்பத்தின் கீழ் கிடந்ததால் கம்பர் எனவும் இவரது குருவின் கம்பங்கொல்லையை காவல் காத்தமையால் கம்பர் எனவும் அழைக்கப்பட்டார். கம்பர் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மிகவும் புலமை பெற்ற மாபெரும் கவிஞன். கம்பனின் வறுமை நிலையில் ஆதரவுக்கரம் நீட்டியவர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். தனது புலமையை மெய்பித்து இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னரின் அவைத் தலைவராக உயர்வு பெற்றார். குலோத்துங்க சோழ அரசன் கம்பரிடம் ராமாயணத்தை தமிழில் மொழி பெயர்க்குமாறு ஆணையிட்டார். கம்பர் வால்மீகி ராமாயணத்தை எப்படி தமிழில் தொடங்குவது என்ற குழப்பத்தில் இறைவனை நோக்கித் தியானித்திருந்த போது இறைவனே அவருக்கு அசீரரியாக உலகம் யாவையும் என்று முதலடி எடுத்துக் கொடுத்து பாடச் சொன்னார். அதை வைத்துக்கொண்டு

உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடையா ரவர்
ஆண்டவ ரன்னவர்க் கேசர ணாங்களே.

விளக்கம்: உலகங்கள் எல்லாவற்றையும் தாமே இருக்கும்படியாக உருவாக்கியும் காலம் வரும்வரை அது நிலைத்து நிற்கும்படி காப்பாற்றியும் காலம் முடிந்ததும் அழித்தும் என்று எப்போதும் முடியாத திருவிளையாடலை மீண்டும் மீண்டும் அளவில்லாமல் விளையாடிக்கொண்டே இருக்கிறவர்தான் ஆண்டவர் அவரை நாங்கள் சரணடைகிறோம். என்று முதல் பாடலை இறை வணக்கமாகப் பாடி ஆரம்பித்து கம்பர் ராமாயணத்தை தமிழில் எழுதி முடித்தார்.

வால்மீகி முனிவரின் ராமாயணத்தை தமிழில் எழுதிய கம்பர் இதனை வடமொழியில் ஸ்ரீராமர் கதையை வகுத்து வான்புகழ் கொண்ட வால்மீகி முனிவரின் நூலை நான் தமிழ்ப் பாவினால் பாடியிருக்கின்றேன் என்று தனது பாடலின் வழியே கூறுகின்றார். தாம் இயற்றிய இந்நூலிற்கு கம்பர் முதலில் ராமகாதை என்றே பெயரிட்டிருந்தார். பிற்காலத்தில் ராமாயணம் பலரால் தொகுக்கப்பட்டதால் கம்பரின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது. கம்பர் இந்த நூலை இயற்றிய பிறகு எண்ணற்ற ராமாயண நூல்கள் படைக்கப்பட்டன. தமிழில் பலவித ராமாயண நூல்கள் தோன்றுவதற்கு கம்பராமாயணம் தூண்டுதலாக இருந்தது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தக்க ராமாயணம், குயில் ராமாயணம், ராமாயண அகவல், கோகில ராமாயணம், அமர்த ராமாயணம், ராமாயணக் கீர்த்தைகள், பால ராமாயணம் என்று பல நூல்கள் பிற்காலத்தில் தோன்றியது.

கம்பர் தனது ராமகாதையை தொல்காப்பிய நெறிப்படி வல்லினம் மெல்லினம் இடையினம் என்று காட்சிக்கு ஏற்ப தனித்தனியாக பிரித்து சந்தத்தோடு பாடல்களில் தமிழை பயன்படுத்திய பெருமைக்குரியவர் ஆவார். உதாரணமாக அரக்கி ஒருத்தி நடந்து வரும் காட்சியில் வல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அழகான பெண் நடந்து வரும் காட்சியில் மெல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். குதிரை வரும் காட்சிகளில் குதிரையின் காலடி சத்தம் வருவது போல வார்த்தைகள் வைத்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அதனை படிக்கும் போது குதிரை சத்தம் ரிதத்துடன் வருவது போலவே இருக்கும். கம்பரின் காவியத்தை படித்த 14 மொழிகளில் அறிஞரான மகாகவி பாரதியார் தான் கண்ட கவிஞர்களில் கம்பரைப்போல் வள்ளுவரைப்போல் இளங்கோவைப்போல் வேறு யாரையும் கண்டதில்லை என்று இந்த மூன்று தலைசிறந்த கவிஞர்களில் கம்பரை முதலாவதாகக் குறிப்பிட்டு கூறுகிறார்.

கம்பர் ஒரு நரசிம்ம உபாசகர். நரசிங்க பெருமாளின் தீவிர பக்தர். தான் எழுதிய ராமகாவியத்தை ஸ்ரீரங்கம் கோவிலில் நரசிம்மர் சன்னதி முன்னிலையில் அரங்கேற்ற நினைத்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் பண்டிதர்கள் மற்றும் புலவர்களிடம் தன் வேண்டுதலை முன் வைத்தார். அதற்கு அவர்கள் தில்லையில் இருக்கும் மூவாயிரம் தீட்சிதர்களிடம் அனுமதி பெற்று சான்று ஓலையை வாங்கி வந்தால் இங்கு அரங்கேற்ற அனுமதிக்கிறோம் என்றார்கள். தில்லை சென்ற கம்பர் அங்கிருந்த தீட்சிதர்களிடம் ஸ்ரீரங்கம் கோவிலைச் சேர்ந்தவர்களின் வேண்டுகோளைக் கூறி தாம் இயற்றிய ராமகாவியத்தைச் சரிபார்த்து சான்று தர வேண்டும் என்று கேட்கிறார். அவர்களோ நாங்கள் மூவாயிரம் தீட்சிதர்களும் ஒன்றாகக் கூடுவது அவ்வளவு எளிதானது அல்ல. பலர் பல இடங்களில் இருப்பார்கள் ஒருவர் குறைந்தாலும் ஓலையில் முத்திரை பதிக்கப்படாது. ஆகவே வீண் முயற்சி செய்யாதீர்கள். உமது ஊருக்கே சென்றுவிடுங்கள் என்றனர். கம்பர் மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். தன்னுடைய ராமகாதையை அரங்கேற்ற முடியவில்லையே என்று வருத்தப்பட்டு பாடல்கள் சில அந்தாதிகளாக எழுதினார்.

ஒருநாள் இரவு நித்திரையில் கம்பனின் கனவில் இறைவன் தோன்றி உடனே தில்லை செல்க என்றார். விழித்த கம்பர் உடனே தில்லை விரைந்து செல்கிறார். அங்கு மூவாயிரம் தீட்சிதர்களும் ஓர் இடத்தில் ஒன்று கூடி இருப்பதை கண்டார் கம்பர். ஆச்சரியத்துடன் அருகில் சென்ற போது ஒரு தீட்சிதரின் மகன் பாம்பு தீண்டி இறந்ததால் துக்கம் விசாரிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டார். இறைவனின் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்து தாம் எழுதிய ராமகாதையின் ஓலைக் கட்டிலிருந்து நாகபடலம் பாடல்களின் ஒரு ஓலைச் சுவடியை எடுத்து இறந்து கிடந்த அச்சிறுவனின் நெஞ்சில் வைத்து அப்பாடலை இறைவனை நினைத்துக் கொண்டு பாடினார். உடனே அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். கூடியிருந்த தில்லை அந்தணர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இவர் பாடலின் ஆற்றலைக் கண்ட அனைவரும் ஒரே முகமாக ஒப்புக்கொண்டு அரங்கேற்றத்திற்கான ஒப்புதல் ஓலை அளித்தனர். அதை வாங்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பிய கம்பர் ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் வீற்றிருக்கும் தனது இஷ்ட தெய்வமான நரசிம்மர் பெருமாள் முன்பு தனது ராமகாவியத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.

ராமகாதையைக் கேட்ட ஸ்ரீரங்கத்துப் புலவர்கள் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் இரண்ய வதைப் படலம் இல்லை ஆனால் நீங்கள் எழுதி இருக்கின்றீர்கள். ஆகவே இது ராமாயணத்தோடு சேராது என்பதால் இங்கே அரங்கேற்றம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு கம்பர் தமக்கு இறைவனே அடி எடுத்து கொடுத்து எழுத வைத்திருப்பதால் அதைத் தன்னால் மாற்ற இயலாது என்றும் உங்களுடைய சந்தேகத்திற்கு இறைவன்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். அதற்கு அவர்கள் அப்படி என்றால் இரண்ய வதைப் படலத்தை மட்டும் முதலில் அரங்கேற்றுங்கள் இறைவன் அடியெடுத்துக் கொடுத்தது உண்மையாக இருந்தால் இறைவனே வந்து சாட்சி சொல்லட்டும் அதன்பிறகு நாங்கள் முழு ராமகாதையை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். உடனே கம்பர் ஸ்ரீநரசிம்ம பெருமானை மனதில் வைத்து வேண்டிக்கொண்டு இரண்ய வதைப் படலத்தை ஆரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார். பாடலின் நடுவே இரண்யன் ஆரடா சிரித்தார் என்ற கேட்பது போலக் காட்சி வரும் போது மண்டபத்தின் தூணில் இருந்த நரசிம்மர் கடகடவென பெரிய சிரிப்பொலியுடன் கர்ஜனை செய்து கம்பரின் கூற்று உண்மை என ஆமோதித்து தலையாட்டினார். இந்த அதிசயத்தை பயத்தோடு கண்ட புலவர்கள் அனைவரும் கம்பரின் ராமகாதையை ஏற்றுக்கொண்டனர். அங்கு சிரித்த நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பார்கள். இவர் தாயார் சன்னிதி அருகில் தனி சன்னிதியில் இப்போதும் இருக்கிறார். இவரது கையில் சங்கு மட்டும் இருக்கிறது சக்கரம் இல்லை. இன்றும் ராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடமான இம்மண்டப மேடையைக் காணலாம்.

வால்மீகி ராமாயணம் கம்பராமாயணத்தின் மூலமாக இருந்தாலும் கம்பர் அவற்றை வரிக்குவரி மொழி பெயர்ப்பு செய்யவில்லை. அந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் அப்படியே இருந்தாலும் முழுமையாக வால்மீகி ராமாயணம் போல் கம்ப ராமாயணத்தை இயற்றவில்லை. வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ராமரின் உணவு பழக்கமும் ராவணனின் திறமையும் ராவணன் சீதையைத் தொடாமல் இருந்த நெறியையும் கம்பராமாயணத்தில் காணலாம். கம்பர் தனக்கே உரித்தான பாணியில் வால்மீகி ராமாயணத்தின் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச் சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர் தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.

கம்பராமாயணம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களில் 123 படலங்களுடன் ஏறத்தாழ 22000 பாடல்களையும் உடையது. காண்டம் என்பது பெரும் பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய உத்திர காண்டம் என்னும் பகுதியை கம்பரின் சீடராகிய ஒட்டக்கூத்தர் இயற்றியுள்ளார்.

கம்பர் தம் ராமாயணத்தைப் பால காண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில் விடை கொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன், விபீஷணன் மற்றும் வானரர் முதலியோர்க்கு பரிசுகள் கொடுத்து ராமர் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு ராமர் பல்லாண்டு மனுநெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி ராமாயணத்தைக் கம்பர் நிறைவு செய்து விட்டார். அதன்பின் நிகழ்வுகளாக சீதையைக் குறித்து சந்தேகமாகப் பேசிய ஒரு குடிமகனின் ஆதங்கத்தைத் தீர்க்க வேண்டிய அரச தர்மத்தினால் ஐந்து மாத கர்ப்பிணியான சீதையை ராமன் லக்குமணனைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிடும்படி கூறுவது காட்டில் சீதைக்கு வால்மீகி ஆசிரமத்தில் லவன் மற்றும் குசன் எனும் இரட்டைக் குழுந்தைகள் பிறப்பது ராமர் செய்த அசுவமேத யாகத்தில் உபயோகிக்க வேண்டிய குதிரைகளை லவ-குசர்கள் கட்டி வைத்தது சத்துருக்கனன், பரதன் மற்றும் லக்குமணராலும் வெல்ல முடியாத லவ-குசர்களை ராமரே நேரில் வந்து பார்த்து போரிடுவது பின்னர் தம்மக்கள் என்பதைத் தெரிந்து கொண்டு லவ-குசர்களை அயோத்திக்கு அழைத்து செல்வது சீதை பூமாதேவியை வேண்டிக் கொள்ள பூமி பிளந்து பூமாதேவியுடன் அவள் சேர்வது போன்ற செய்திகளை தான் எழுதிய உத்தர காண்டம் மூலம் ஒட்டக்கூத்தர் விளக்கிக் கொடுத்துள்ளார்.

அருணாசல கவிராயர் என்பவர் ராமாயணம் சராசரி மனிதருக்கும் புரிய வேண்டும் என்று ராமகாவியத்தை தெருக்கூத்து நாடகம் போல் இயற்றினார். தான் எழுதிய ராம நாடகத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அங்கு உள்ள புலவர்களிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு அவர்கள் இக்கோவில் ரங்கநாதர் கோவில் ஆகையால் நீங்கள் ரங்கநாதரை பற்றி பாடினால் அனுமதி தருகிறோம் என்று கூறுகிறார்கள். அதற்கு அருணாசல கவிராயர் ஒத்துக்கொண்டு பாட ஆரம்பிக்கின்றார். ஏன் பள்ளி கொண்டீரய்யா என்று ரங்கநாதர் பள்ளி கொண்டிருப்பதை பாடலின் முதல் வார்தையாக ஆரம்பித்து பின்பு ராமரைப் பற்றியே பாடுகிறார். விஸ்வாமித்திரர் தங்களை காட்டுக்கு அழைத்துச் சென்றாரே அங்கு பட்ட கஷ்டங்களை நினைத்து படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? பெண்ணாக இருக்கும் தாடகை என்னும் அரக்கியை அம்பு விட்டு கொன்று விட்டோமே என்று வருத்தப்பட்டு படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? ஜனகர் கொடுத்த சிவதனுசை முறித்து விட்டோமே என்ற வருத்தத்தில் படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? பரசுராமர் வில்லோடு வந்த போது அதனை உடைத்தீர்களே அதனை நினைத்து படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? சீதையுடன் காட்டில் நடந்து சென்றீர்களே அந்தக் களைப்பில் படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? கங்கையில் குகனுடன் ஓடத்தில் சென்றீர்களே அந்த உடல் அசதியில் படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? என்று முதல் இரண்டு அடியை மட்டும் ரங்கராதரை பற்றி பாடி மீதி அனைத்தும் ராமரைப் பற்றியே பாடித் தனது ராம நாடகத்தை அரங்கேற்றம் செய்தார் அருணாசல கவிராயர்.

விஷ்ணு புராணம், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரலாற்று உண்மை உள்ளதா என்ற இந்து பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் பதில் கூறியுள்ளார். ஒரு வரலாற்று உண்மை புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம். ராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி அவை ராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியது இல்லை. ஆனால் அவை உயர்ந்த கருத்துக்களை மனித இனத்தின் முன் வைப்பதால் அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்களாகக் கருத வேண்டும். எந்தப் புராணமானாலும் அதிலுள்ள தத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும். அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா கற்பனையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை. மனித இனத்திற்கு தர்மத்தை போதிப்பதே புராணங்களின் நோக்கம். ராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு அவன் மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் ராமாயணம் படித்தால் மனம் பக்குவப்பட்டு உடன் பிறந்தோர்களிடம் வேற்றுமை மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும் அதனால் உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுக்கும் தன்மை அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று சொல்லியிருக்கின்றார். முப்பதே வினாடிகளில் சொல்லி ராமாயணத்தை முழுவதுமாக சொல்லி முடிக்கிற மாதிரி அழகான ஒன்பதே வரிகளில் அருளியிருக்கிறார் மஹா பெரியவர்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்

அனைவரும் ராமாயணம் படித்து ராம காவியத்தை அறிந்து ஆனந்தத்துடன் இருப்போம்.

வால்மீகி வரலாறு

தேவலோகத்தில் வருண பகவான் தன்னுடைய குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நாராயண நாமத்தை சொல்லிக்கொண்டு நாரதர் அங்கு வந்தார். வருண பகவானோ நாரதர் வருவதைக் கவனிக்காமல் குழந்தையுடனே விளையாடிக் கொண்டிருந்தார். நாராயண நாமத்தை கவனிக்காத வருணன் மேல் கோவம் கொண்ட நாரதர் நீ உன் குழந்தையை பிரிவாயாக என்று சாபமிட்டார். நாரதரிடம் தன்னை மன்னிக்கும் படியும் சாப விமோசனம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டான் வருணன். அதற்கு நாரதர் இந்தச் சாபம் ஒரு வரம் இக்குழந்தை பூலோகத்தில் பிறந்து பிற்காலத்தில் விஷ்ணுவின் அவதாரப் புராணத்தை ஒரு இதிகாசமாகப் படைக்கும் என்று வாழ்த்திவிட்டு சென்றார். அக்குழந்தையே பிற்காலத்தில் வால்மீகி என்ற பெயர் பெற்று ராமாயணத்தை படைத்தார்.

மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு ஒன்பதாவது குழந்தையாக வருண் பிரசேதாஸ் என்பவர் பிறந்தார். அந்த வருண் பிரசேதாஸிற்கு ரிக்சன் என்கிற ரத்னாகர் பத்தாவது குழந்தையாகப் பிறந்தார். ரத்னாகர் தனது மிகவும் ஏழ்மையான குடும்பத்தைக் காப்பாற்ற வழி தெரியாமல் திருட ஆரம்பித்தான். காட்டு வழியில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்துக் கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய ஜென்ம காரணத்தினால் நாரதர் ரத்னாகர் இருந்த காட்டு வழியே வந்தார். அவர் வருவதைப் பார்த்துவிட்டு கத்தியை எடுத்துக் கொண்டு அவர் அருகில் சென்றான். அவரை அருகில் சென்று பார்ததுமே அவன் மனதில் சிறிது சாந்தம் ஏற்பட்டது. அவரிடம் யார் நீங்கள்? எங்கு வந்தீர்கள்? இருப்பதையெல்லாம் கீழே வைத்துவிட்டு பேசாமல் ஓடிப்போங்கள் என்றான். அதற்கு அவர் என்னிடம் ஒன்றுமே இல்லை நான் நாராயண மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு பகவானை வணங்கிக் கொண்டு இருக்கின்றேன். எனக்கு எதுவும் தேவை இல்லை. சதா பகவத் தியானத்திலேயே ஆனந்தமாக இருக்கின்றேன் என்றார். அதற்கு ரத்னாகர் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் சாந்தமாக ஆனந்தமாக இருக்கின்றீர்கள். ஆனால் உங்களிடம் ஒன்றும் இல்லை என்கின்றீர்கள். நான் நிறைய கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றான்.

நீ இப்படி சேர்த்து வைத்த பணமெல்லாம் பண மூட்டை இல்லையப்பா இதெல்லாம் பாவ மூட்டை. இதற்காக நரகத்தில் கஷ்டப்படுவாய். இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு சொர்க்கம் நரகம் என்று உள்ளது. இங்கே நல்ல வாழ்க்கை வாழ்ந்து புண்ணிய காரியங்கள் செய்தால் சொர்க்கம் செல்வார்கள். பாவச் செயல்கள் செய்தால் நரகத்திற்கு செல்வார்கள். நரகத்தில் பலவிதமான தண்டனைகளைப் பெற்று அவதிப் படவேண்டியிருக்கும் என்றார் நாரதர். நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என் மனைவி குழந்தைகளுக்காகத் தானே செய்கிறேன். அவர்கள் எல்லோரும் என்னுடைய பாவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்றான் ரத்னாகர். அப்படியானால் நீ அவர்களைப் போய் கேட்டுக் கொண்டு வா என்றார் நாரதர். முனிவரே தப்பித்துப் போக முயல்கிறீரா இதெல்லாம் என்னிடம் முடியாது என்றான். இல்லையப்பா நீ வேண்டுமானால் என்னைக் கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டுச் செல். அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் என்றார் நாரதர். ரத்னாகர் யோசித்துப் பார்த்தான். இந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து நாரத முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான்.

ரத்னாகர் அவனின் வீட்டுக்கு வந்து தன் அப்பா அம்மா மனைவி மற்றும் குழந்தைகளிடம் நான் நிறைய பாவம் செய்துவிட்டதாக ஒரு முனிவர் சொல்கிறார். அந்த பாவங்களை எல்லாம் நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்கிறீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள் நாங்கள் எதற்காக உன் பாவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்? நீ நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியதுதானே? நீ ஏன் பாவ வழியில் சம்பாதிக்கின்றாய்? குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய கடமை. அதற்கு நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியது உன்னுடைய தர்மம். அதை விட்டு விட்டு தவறான வழியில் சம்பாதிப்பது உன் தவறு. அதனால் உன்னுடைய பாவத்தை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதைக் கேட்டவுடன் ரத்னாகருக்கு அகக்கண் திறந்துவிட்டது. திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் ரத்னாகர். ஓடி வந்து நாரதரின் காலில் விழுந்து சுவாமி நீங்கள் சொன்னது சரிதான் என்று கண் கலங்கியபடியே நாரதரின் கட்டுகளை அவிழ்த்து விட்டான். சுவாமி நீங்கள் சொன்னபடி என் மனைவி குழந்தைகள் பெற்றோர் என எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள் என்றான். அதற்கு நாரதர் அவர்கள் சொன்னதில் தவறில்லையே? மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல்வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்றார் நாரதர். ஆமாம் சுவாமி அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும் என்றான். நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் இராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே. இராம நாமத்தை ஜபம் செய்வது எல்லாப் பாவத்தையும் போக்கும் என்றார் நாரதர்.

ரத்னாகருக்கு ராம என்ற சொல் வாயில் நுழையவில்லை. இதனை பார்த்த நாரதர் அங்கிருக்கும் மரத்தை காட்டி இது என்ன மரம் என்று கேட்டார். இது மரா மரம் என்றான். நீ இந்த மரத்தின் பெயரான மரா என்பதைச் சொல்லிக் கொண்டிரு அது போதும் என்றார். நீங்கள் சொன்னபடியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று வணங்கி நின்றான். நாரதரும் அவனை ஆசீர்வசித்து விட்டுத் தன் வழியே சென்றார். அவர் போனபின் ரத்னாகர் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா மரா மரா என்று ஜபிக்க ஆரம்பித்தான். நாளடைவில் அது ராம ராம ராம என்று மறுவி ஒலித்தது. ரத்னாகர் இரவு பகலாய் பசி தாகத்தை மறந்து ராம ராம ராம என்று ஜபம் செய்து கொண்டே சமாதி எனும் நிஷ்டையில் இருந்தான். அசையாமல் அவன் இருந்ததால் நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான்.

சில காலம் கழித்து சப்தரிஷிகள் அந்தப் பக்கம் வந்தார்கள். அங்கே ராம நாம ஜபம் ஒரு புற்றுக்குள்ளிருந்து ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு அதற்குள் இருப்பவரை தங்களின் ஞானக்கண்ணால் பார்த்து வால்மீகி என்று அழைத்தனர். சமஸ்கிருதத்தில் வால்மீகி என்றால் புற்றுக்குள்ளிருப்பவன் என்று பெயர். அவர்களின் அழைப்பினால் தவம் கலைந்து புற்றிலிருந்து ரத்னாகர் வால்மீகியாக வெளியே வந்தார். இடைவிடாத ராம நாம ஜெபத்தின் பயனால் நீங்கள் ஒரு மகரிஷியாகிவிட்டீர்கள். இன்றிலிருந்து உமக்கு வால்மீகி என்று பெயரே நிலைக்கும். ராம நாமத்தின் மகிமையை உங்கள் மூலமாக இந்த உலகம் தெரிந்துக் கொள்ளும் என்று கூறி ஆசீர்வதித்தனர். அவரும் ரிஷிகளை நமஸ்கரித்து விட்டு பின் ராம நாமத்தையே ஜபித்துக் கொண்டு ஒரு ஆசிரமத்தை தமஸா நதிக் கரையில் கட்டிக் கொண்டார். அவரிடம் சிஷ்யர்கள் எல்லாம் வந்து சேர்கிறார்கள். வால்மீகி தன்னுடைய தவத்தினால் ராமனின் வரலாற்றை தனது ஞானதிருஷ்டியில் கண்டார். இப்படிப்பட்ட குணாதிசயங்களோடு ஒரு மனிதன் இந்த உலகத்தில் இருப்பானா என்று அவருக்கு சந்தேகம் வந்தது.

ஒரு நாள் நாரதர் அவரது ஆசிரமத்திற்கு வருகிறார். அவரை வரவேற்ற வால்மீகி தன்னுடைய ஞான திருஷ்டியில் கண்ட மனிதனை பற்றி நாரதரிடம் கேட்கின்றார். இந்த உலகில் சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா என்று நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர் உண்டு அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த தசரத மன்னனின் குமாரர் ஸ்ரீராமர் என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராம சரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப இராமாயணம் எனப்படும். இதுவே வால்மீகி ராமாயணத்தின் முதல் சர்கம் ஆகும்.

ஒரு நாள் வால்மீகி முனிவர் தமஸா நதியில் குளிக்க செல்கிறார். அப்போது அங்கு இரண்டு அன்றில் பறவைகள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டு இருக்கின்றன. அப்போது வேடன் ஒருவன் அம்பால் ஒரு அன்றில் பறவையை அடித்துவிடுகிறான். ஒரு பறவை இறந்தவுடன் இன்னொரு பறவை தன்னுடைய ஜோடி பறவை இறந்த துக்கத்தில் ஓலமிட்டது. பறவையின் துக்கத்தை கண்ட வால்மீகி தன் ஞான திருஷ்டியில் கண்ட ராமனும் இப்படி தானே சீதையை பிரிந்து துக்கப்பட்டிருப்பான் என்று எண்ணி திரேதாயுக விஷ்ணுவின் அவதாரமான ராமாயண இதிகாசத்தை 24000 சுலோகங்கள் கொண்டதாக முழுமையாக இயற்றினார். யோக வாசிஷ்டம், அத்புத ராமாயணம், கங்காஷ்டகம் ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டவையே.

வால்மீகி இயற்றிய ராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய ராமாயணமும் அதன் பாத்திரங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள் விவரிக்கப் பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள் அரசுகள் போன்றவற்றை ஆய்வு நோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என்று தெரிந்து கொள்ளலாம். நான்கு வரிகள் கொண்ட சுலோகங்களால் எழுதப்பட்டுள்ள வால்மீகியின் ராமாயணத்திலிருந்து ஒரு வரியைக் கூட மாற்ற முடியாது அல்லது புதிதாக இடைச் செருகல் என்று சேர்க்க முடியாது என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு.

பல முனிவர்கள் வால்மீகி என்கிற இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர் எழுதிய பாடல்கள் மூலம் அவர் பிற்காலத்தவர் என்று தெரிந்து கொள்ளலாம். திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வால்மீகநாதர் சந்நிதியும் வேறுபாடான திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வால்மீகி என்ற பெயரில் பல முனிவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதற்குச் சான்றாகும்.