வீரபத்திர அஸ்திரத்தைக் கண்டு நடுங்கிய தாரகன் அங்கிருந்து தப்பித்தால் போதுமென ஓட்டம் பிடித்தான். கிரவுஞ்சமலைக்குள் அவன் புகுந்து தன் வடிவத்தை சுருக்கிக் கொண்டு ஒரு குகையில் ஒளிந்திருந்தான். தேவப்படைகள் ஆராவாரம் செய்தன. இருப்பினும் அவனைக் கொன்றாக வேண்டும் என்ற முருகனின் கட்டளை வீரபாகுவை உந்தித்தள்ளவே அவன் கிரவுஞ்ச மலைக்குள் நுழைந்தான். உள்ளே சென்றதும் பொறியில் சிக்கியது போல மாட்டிக் கொண்டான். இவனுடைய வருகைக்காகவே காத்திருந்த கிரவுஞ்சமலை தன் வாசலை மூடிக் கொண்டது. அது தாரகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவ்வாறு நடந்து கொண்டது. ஒரே இருள் கண் தெரியாமல் திண்டாடினான் வீரபாகு. இருப்பினும் தட்டுத்தடுமாறி எங்காவது தாரகன் ஒளிந்திருக்கிறானா என தடவித்தடவி பார்த்தான். அங்கிருந்து வெளியே செல்லவும் முடியவில்லை. முருகா இதென்ன சோதனை. என் வீரச்சரிதம் அவ்வளவு தானா உன் கட்டளையை நிறைவேற்றாமல் தோற்று விடுவேனா உமா தேவியின் புத்திரனே என்ன செய்வது என புரியவில்லையே என முருகனைத் தியானித்தான். உள்ளே சென்ற வீரபாகு வெளியே வராதது கண்டு தேவப்படைகள் வெளியே வருந்தி நின்றனர்.
வீரகேசரியும் லட்சம் பூதகணங்களும் குகைக்குள் புகுந்து வீரபாகுவை மீட்கச் சென்றனர். படைகள் தன்னருகே வந்ததும் கிரவுஞ்ச மலை தன் வாசலை மிகப்பெரிய அளவில திறந்தது. அவர்கள் காற்றினும் வேகமாக உள்ளே புகுந்தனர். அவ்வளவு தான். லட்சம் பேரையும் உள்ளடக்கி வாயை மூடிவிட்டது. எங்கும் இருள். படைகள் திணறின. இதுதான் சமயமென வெளியே நின்ற தேவப் படைகளை அசுரர்கள் துவம்சம் செய்தனர். அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தாரகன் வேறொரு வாசல் வழியாக வெளியேறி விட்டான். அட்டகாசமாக சிரித்தான். வீரபாகுவை ஒழித்து விட்டேன் என ஆர்பரித்து சிரித்தான். அசுரப்படைகள் ஹோவென எழுப்பிய கூச்சல் அந்தப் பகுதியை நிலநடுக்கம் ஏற்பட்டால் போல் நடுங்கச் செய்தது. அப்போது நாரதர் அங்கு வந்தார். சிதறி ஓடிய படையைக் கண்டார். உடனடியாக முருகப்பெருமானைத் தஞ்சமடைந்தார். முருகா நீ இருந்தும் இப்படி நடக்கலாமா தாரகன் உன் தம்பி வீரபாகு வீரகேசரி ஆகியோரை கிரவுஞ்சனிடம் ஒப்படைத்து விட்டான். இப்போது அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியவில்லை. இன்னும் நீ அமைதியாய் இருந்தால் தேவர்களின் இனமே அழிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உன்னையே எந்நாளும் வணங்கும் உன் தொண்டர்களைக் கைவிடலாமா என்றார்.
முருகன் ஆவேசப்பட்டார். வாயுவை அழைத்தார். வாயு பகவானே நீர் உடனடியாக தேரில் குதிரைகளைப் பூட்டு தேர் கிரவுஞ்ச மலைக்கு செல்லட்டும் என்றார். நாரதர் மகிழ்ந்தார். கிரவுஞ்சமலை அடிவாரத்தில் அசுரப்படைகள் ஆர்பரித்துக் கொண்டிருந்தன. ஒளிந்திருந்த தேவர் படை முருகனின் தேரைக் கண்டதும் ஆரவாரம் செய்து வெளிப்பட்டனர். அவர்கள் மனதில் நம்பிக்கை பிறந்தது. தாரகன் ஒழிந்தான் என கூச்சலிட்டனர். தேவர் திடீரென வெளிப்பட்டதையும் சூரியனையும் மிஞ்சும் ஒளியையும் இதுவரை கண்டிராத சுந்தர வதனமும் கொண்ட இளைஞன் ஒருவன் தேரில் ஒய்யாரமாக அமர்ந்திருப்பதை தாரகனும் கவனித்தான். அந்த இளைஞனைப் பார்த்ததும் அவன் மனதில் தானாகவே ஒரு மரியாதை பிறந்தது. ஏனோ அவன் அருகில் சென்று அவனை பார்க்க வேண்டும் என தோன்றியது. அவன் தன் தூதனை அழைத்தான். தூதனே அந்த தேரில் நிற்கும் இளைஞன் இவ்வளவு தேஜசுடன் திகழ்கிறானே இது போன்ற அழகுள்ளவனை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லையே சிவபெருமானின் நெற்றியிலிருந்து கிளம்பும் தீப்பொறிகளை விட அதிக பிரகாசமாக இவன் முகம் விளங்குகிறதே இவனைப் பார்த்தால் கையெடுத்து வணங்க வேண்டும் போல் இருக்கிறதே அழகில் மன்மதன் கூட இவன் அருகே நிற்க முடியாது போல் தோன்றுகிறதே என்றான்.
தூதன் அவனிடம் எங்கள் மாமன்னரே தாங்கள் சொல்வது அனைத்தும் நிஜமே. இவ்வுலகில் இவரை யாரோ என நினைத்து விடாதீர்கள். ஆலகால விஷத்தை உண்டவரும் யாராலும் அணுக முடியாதவரும் மன்மதனை எரித்தவரும் எமனையே உதைத் தவருமான பரமேஸ்வரனின் இளைய புத்திரன். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து அவதாரம் செய்தவன். அவனை வடிவேலன் என்றும் முருகன் என்றும் குமரன் என்றும் கந்தன் என்றும் கடம்பன் என்றும் கார்த்திகேயன் என்றும் இன்னும் பல திருநாமங்களாலும் புகழ்வார்கள் அவனது பக்தர்கள். உடனே தனது தேரை முருகனின் தேர் அருகில் கொண்டு நிறுத்தும் படி சாரதிக்கு உத்தரவிட்டான். முருகனைக் கண்கொட்டாமல் பார்த்தான். ஆறு முகங்கள் 12 கரங்கள் அனைத்திலும் ஒளிரும் ஆயுதங்கள் கமலம் போல் முகம் இத்தனையும் தாரகனைக் கவர்ந்தன. மெய்மறந்து அப்படியே நின்றான்.