மகாபாரதம் 12. சாந்தி பருவம் பகுதி -3

கிருஷ்ணர் பீஷ்ரிடம் தர்மத்திற்கு உரிய பாங்குகள் அனைத்தையும் தாங்கள் யுதிஷ்டிரனுக்கு எடுத்து புகட்ட வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டுகிறேன் என்றார். அதற்கு பீஷ்மர் தர்மத்தை எடுத்து புகட்டுவதற்கு உங்களைவிட மிக்கவர் யாரும் இல்லை. தாங்கள் முன்னிலையில் வைத்து இந்த விஷயத்தை நான் எப்படி எடுத்து விளக்குவது? மேலும் என் ஞாபக சக்தியும் மங்கி வருகிறது. உடலில் வேதனையும் அதிகரித்து வருகிறது. இந்த உடலை நான் ஒதுக்கித்தள்ள நான் ஆயத்தமாக இருக்கிறேன் என்றார். அதற்கு கிருஷ்ணர் உங்கள் ஞாபக சக்தியை நான் மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். உங்கள் உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட நிலையில் நீங்கள் எப்பொழுதும் இருந்து வருகின்றீர்கள். உங்கள் உடல் வலிமையான ஆற்றலை நெறி பிறழ்ந்து போன ஒரு பேரனுக்கு கொடுத்தீர்கள். உடல் வலிமை ஆற்றலை விட மிகவும் பெரியது அறிவு. தங்களிடம் உள்ள அறிவு தங்களோடு மறைந்து போக கூடாது. அப்படி போனால் நீங்கள் இவ்வுலகிற்கு வந்துள்ள நோக்கமும் நிறைவேறாமல் போகும். ஆகையால் அந்த அறிவை இந்த தகுதி வாய்ந்த மற்றொரு பேரன் யுதிஷ்டிரனுக்கு கொடுத்து உதவுங்கள். அதன் மூலம் இந்த அறிவு இந்த உலகிற்கு சொந்தமாகும். இந்த அறிவு ஞானத்தை கொடுப்பதின் வாயிலாக தாங்களின் பெயர் நிலவுலகில் எப்பொழுதும் நிலைத்திருக்கும். தாங்கள் வழங்குகின்ற ஞானம் நான்கு வேதங்களுக்கு நிகராகும் என்றார் கிருஷ்ணர்.

பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு தர்மத்தை கூற சம்மதம் தெரிவித்தார். யுதிஷ்டிரன் கேட்ட கேள்விகளும் அதற்கு பீஷ்மர் கொடுத்த பதில்களும் சாந்தி பருவம் என்று பெயர் பெறுகின்றது. இவை அனைத்தையும் கற்று உணர்வதற்கு மனிதனுக்கு ஒரு ஆயுள் போதாது அவற்றுள் சில மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது

  1. ஊழ்வினை மிகவும் வலியது முயற்சியால் அதை ஓரளவு மாற்றலாம்.
  2. பரம்பொருளுக்கு நிகரானது சத்தியம். சத்தியத்தை கடைபிடிப்பவன் வாழ்க்கையில் தோல்வி அடைய மாட்டான்.
  3. வாழ்வில் வெற்றியடைய விரும்புகின்றவன் தன்னடக்கம், பணிவு, தர்மம், ஆகியவற்றை கடைபிடித்தல் வேண்டும்.
  4. மானுடன் ஒருவன் மிகவும் கோழை மனம் படைத்தவனாகவோ கல் நெஞ்சம் படைத்தவனாகவோ இருக்க கூடாது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னுடைய பாங்குகளை அவன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
  5. தளர்வுற்று சோம்பலுடன் இருப்பது ஒழுக்கமாகது. அதிலிருந்து கேடுகள் பல உருவாகின்றன.
  6. சோம்பலுடன் இருப்பது துருப்பிடித்து போவதற்கே நிகராகும். உழைப்பின் வாயிலாக உலக வாழ்வு ஓங்குகிறது.
  7. இரக்கமும் கண்டிப்பும் ஒன்றையொன்று சார்ந்திருத்தல் வேண்டும்.
  8. ஒழுக்கமின்மைக்கு இடம் கொடுப்பது மனிதனை வீழ்ச்சியில் கொண்டு சேர்க்கும்.
  9. மனிதனுக்குள் உண்டாகும் வெறுப்பு விஷமாக மாறிவிடுகின்றது.
  10. அன்பு வல்லமை மிகவாய்க்கப் பெற்றது. அன்பு மனிதனை அக்கத்துறையில் எடுத்துச் செல்கின்றது. வீழ்ந்து கிடப்பவனை மீட்டெடுக்கும் வல்லமை வாய்ந்தது அன்பு

யுதிஷ்டிரனுக்கு புகட்டப்பட்ட இந்த கோட்பாடுகள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. இவைகளை மக்கள் கடைபிடிப்பதற்கு ஏற்ப மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். யுதிஷ்டிரனுக்கு பீஷ்மர் புகட்டிய தர்ம சாஸ்திரத்தில் பெரும்பகுதி மோட்ச தர்மத்தை பற்றியதாகும்.

சாந்தி பருவம் முற்றியது. அடுத்து அனுசாஸன பருவம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.