பீமனின் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பீமன் ஒருவனே நான்கு திசைகளிலும் சுழன்றான். அவன் திரும்பும் திசை எங்கும் கௌரவர்கள் மாண்டனர். பீமனை தாக்க துரியோதனன் தனது தம்பிகள் 24 பேரை மூன்றாக பிரித்து அனுப்பினான். அவர்களில் முதல் எட்டு பேரை கை கால்களை உடம்பில் இருந்து பிய்த்து எடுத்து தலையை கதாயுதம் கொண்டு நசுக்கியும் கொடூரமாக கொன்றான். பின்பு பீமன் யனைப் படையை அழித்தான். கௌரவர்கள் அவனை கண்டு அஞ்சினர். இதை கண்டு துரியோதனனும் சஞ்யனின் மூலம் கேட்டு அறிந்த திருதிராட்டிரனும் வருந்தினர். கௌரவர்கள் படை தோல்வி மேல் தோல்வி கண்டது.
கடோத்கஜன் கௌரவ வீரர்கள் பலரைக் கொன்றான். துரியோதனனை எதிர்த்து கடும் போர் செய்து அவன் தேரை அழித்தான். அவன் மார்பில் அம்புகளைச் செலுத்தினான். கடோத்கஜன் போர் வலிமைக் கண்டு துரோணர் கடோத்கஜனைத் தாக்கினர். பீமன் கடோத்கஜனுக்கு உதவிட விரைந்தான். துரோணரை தாக்கி அவரின் தேரை முறித்தான். கடோத்கஜனை காப்பாற்றும் முயற்சியில் பீமன் மேலும் துரியோதனனின் தம்பியர் எட்டு பேரை கொன்றான்.
தனது தம்பிமார்கள் கொன்ற பீமனை கொல்லும்படி பீஷ்மரிடம் துரியோதனன் நயந்து வேண்டினான் ஆனால் தம்மால் பாண்டவர்களை கொள்ள இயலாது என்று பீஷ்மர் கூறிவிட்டார். சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு பீமன் துரியோதனின் சகோதரர்கள் மேலும் 8 பேரை வெட்டித் தள்ளினான். எட்டாம் நாள் மட்டும் பீமன் துரியோதனன் தம்பியர் பதினாறு பேரைக் கொன்றிருந்தான். ஆக இதுவரையில் பீமன் துரியோதனனின் சகோதரர்கள் 24 பேரை கொன்று விட்டான். துரியோதனன் மீண்டும் பீஷ்மரிடம் எப்படியாவது பாண்டவர்களை கொன்றதாக வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டான். பீஷ்மர் மீண்டும் துரியோதனனிடம் தனது பழைய கருத்தை எடுத்துரைத்தார். கிருஷ்ணன் பாண்டவர்களை பாதுகாத்து வருகின்றான். மண்ணுலகத்தாரும் விண்ணுலத்தாரும் ஒன்று கூடினாலும் பாண்டவர்களை அழிக்க முடியாது. ஆனால் துர்புத்தியே வடிவெடுத்த துரியோதனனுக்கு மட்டும் இக்கருத்து விளங்கவில்லை தான் கையாண்டு வந்த செயல் முற்றிலும் சரியானது என்று மனப்பூர்வமாக நம்பினான்.
அர்ஜுனன் பீஷ்மர் மீது சரமாரியாக அம்புகள் எய்து திணறடித்தான். இந்திரன் தன் வேலைகளை நிறுத்திவிட்டு அன்று அர்ஜுனன் போர் செய்வதை கண்டு தன்னை மறந்தான். யானைகள் சரிந்தன குதிரைகள் மடிந்தன காலாட்படைகள் அழிந்தன. திரும்பிய திசை எங்கும் பாண்டவர்களின் வெற்றி ஆராவாரம் தெரிந்தது. துரியோதனன் செய்வது அறியாமல் திகைத்தான். தர்மம் தலை தூக்க தொடங்கியது. சூரியன் மறைய எட்டாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.