பீஷ்மர் துரியோதனனை அருகில் அழைத்தார். அர்ஜூனனின் ஆற்றலைப் பார்த்தாயா தெய்வ பலம் பெற்றவன் இவன். இவனிடம் சிவனின் பாசுபத அஸ்திரம் உள்ளது. விஷ்ணுவின் நாராயண அஸ்திரம் உள்ளது. அது மட்டுமின்றி அனுமனின் ஆற்றலைப் பெற்ற பீமனின் வல்லமையும் உனக்குத் தெரியும். இப்போழுதாவது நீ சமாதானமாய் போய் விடு. அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடு. இப்போர் என்னுடன் முடியட்டும் என்றார். இல்லையென்றால் நீயும் உன் சகோதரர்கள் உனது சேனைகள் அனைத்தும் துடைத்து தள்ளப்படுவீர்கள் என்று எச்சரித்தார்.
துரியோதனன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான். பீஷ்மர் அவ்வாறு கூறியது அவனுக்கு பிடிக்கவில்லை. தனக்கு ஒரு உதவி புரிவதற்கு பதிலாக பாட்டனார் தான் விஷயத்தில் ஏனோ தானோ என்று இருந்து விட்டார் என்று அவன் எண்ணினான். அந்த சூழ்நிலையிலும் பீஷ்மரின் அறிவுரையை துரியோதனன் ஏற்கவில்லை.
பீஷ்மர் யோக சாதனங்களும் தாரணை என்னும் சாதனையை கையாண்டார். காயப்பட்டு இருக்கும் தம் உடம்பிலிருந்து அவர் இப்பொழுது தம்முடைய மனதை பிரித்துக் கொண்டு ஆத்மா தியானத்தில் மூழ்கினார். பத்தாம் நாள் யுத்தம் பீஷ்மரின் வீழ்ச்சியுடன் குருக்ஷேத்திர போரில் மிகப்பெரிய இழப்பாக முடிந்தது. அனைவரும் பிரிந்து சென்றனர்.
நள்ளிரவில் பீஷ்மரின் அருகில் யாரும் இல்லை. அப்போது கர்ணன் ஓடிவந்து அவர் பாதங்களில் வீழ்ந்து அழுதான். ராதையின் மைந்தனான நான் சில சமயங்களில் தங்களுக்கு உண்டான மரியாதையை தர தவறிவிட்டேன். மரியாதை குறைவாக நடந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதான். அது கேட்ட பீஷ்மர் கர்ணா நீ ராதையின் மகன் அல்ல. குந்தியின் மைந்தன் என்று எனக்கு முன்பே தெரியும். சூரிய குமரன் நீ. இதை நாரதர் எனக்கும் விதுரருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். தக்க காலம் வரும் வரை இதனை மறைத்து வைக்கும்படியும் கூறினார். பாண்டவர்கள் உனக்கு எந்தவித தீங்கும் செய்யவில்லை. காரணமின்றி நீ பாண்டவர்களை பகைத்ததால் நானும் உன்னிடம் கோபமாக நடந்துக் கொண்டேன். பாண்டவர்கள் உன் தம்பியர்கள். நீ யார் என்பதை விளக்கி சொல்வதன் மூலம் இந்த யுத்தத்தை நிறுத்த முடியும். உன்னை வெளிப்படுத்திக்கொண்டு பாண்டவர்களுடன் சேர்ந்து தருமத்தைப் போற்று என்றார்.
நான் குந்தியின் மைந்தன் என்பதை கிருஷ்ணன் எனக்கு அஸ்தினாபுரத்திலேயே தெரிவித்தார். நான் துரியோதனனை மிகவும் நேசிக்கின்றேன். என்னை முழுவதுமாக துரியோதனனுக்கே ஒப்படைக்க விரதம் பூண்டிருக்கின்றேன். அவனுக்காக உயிர் துறக்கவும் தயாராக இருக்கின்றேன். துரியோதனனுக்கு எதிராகப் போர் புரிவதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. துரியோதனனை மகிழ்வூட்டும் பொருட்டு பாண்டவர்கள் மீது அவதூறு கூறினேன். என்னை மன்னியுங்கள் என்றான். கர்ணா அறம் வெல்லும் நீ விரும்பியப்படியே செய் என்று கூறிவிட்டு நித்திரையில் ஆழ்ந்தார் பீஷ்மர்.
பீஷ்ம பருவம் இந்த பகுதியுடன் முடிவடைந்தது அடுத்தது துரோண பருவம்.