மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -2

அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் மனித பிறப்பின் கடமைகள், வாழ்க்கையின் தத்துவம், யோக தத்துவங்கள், கர்மங்கள் ஆகிய பலவற்றை எடுத்து விளக்கினார். இவை அனைத்தும் பகவத்கீதை என்று பெயர் பெற்றது. கிருஷ்ணர் கூறிய அனைத்து தத்துவங்களையும் கேட்ட அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தனது விஸ்வரூப தரிசனத்தையும் கொடுத்து அர்ஜூனனின் மனக்குழப்பத்தை போக்கினார். தெளிவடைந்த அர்ஜூனன் யுத்தம் புரிய சம்மதித்தான்.

போர் துவங்கும் நேரத்தில் யுதிஷ்டிரர் தேரிலிருந்து இறங்கினார். தன் போர்க்கருவிகளைக் கீழே வைத்தார். போருக்குரிய கவசங்களை நீக்கினார். எதிரணியிலிருந்த பீஷ்மரை நோக்கிப் போனார். இதைப் பார்த்தவர்கள் வியந்தனர். பீஷ்மரிடமும் குருவானவர்களிடமும் ஆசி பெறவதற்க்காக யுதிஷ்டிரர் செல்கிறான் என்று கிருஷ்ணருக்கு புரிந்தது. துரியோதனன் பக்கம் இருந்தவர்கள் தங்களுடைய படைகளை பார்த்து யுத்தம் புரிய பயந்து யுதிஷ்டிரர் சரணடைய வருவதாக எண்ணினர்.

யுதிஷ்டிரர் பீஷ்மரிடம் சென்று அவரை வலம் வந்து தரையில் வீழ்ந்து வணங்கி போற்றுதற்குரிய பாட்டனார் அவர்களே தங்களை எதிர்த்துப் போர் புரியும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் தர்மம் எப்பக்கம் இருக்கிறது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். தாங்கள் அனுமதித்தால் நான் தங்களை எதிர்த்து போர் புரிகிறேன் என்று யுதிஷ்டிரர் கூறினார். அதற்கு பீஷ்மர் சரியான வேளையில் நீ என்னிடம் வந்ததை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய முழு வல்லமையையும் கையாண்டு கௌரவர்களுக்காக சண்டை போட நான் இசைந்திருக்கிறேன். ஆயினும் இந்த யுத்தத்தில் நீ வெற்றியடைவாய். ஏனென்றால் தர்மத்தின் ஆதரவு உனக்கு எப்பொழுதும் உண்டு. மேலும் கிருஷ்ணன் உன்னை காப்பாற்றி வருகிறான் என்று தனது அனுமதியை கொடுத்தார், அதற்கு யுதிஷ்டிரன் தங்களை யாராலும் தோற்கடிக்க இயலாது அப்படியிருக்க நாங்கள் எவ்வாறு தங்களை வெல்வது என்று யுதிஷ்டிரர் கேட்டான் அதற்கு பீஷ்மர் இந்த ரகசியத்தை வெளியிடுவதற்கான காலம் இன்னும் வரவில்லை. என்னை எதிர்த்து துணிந்து போர் புரிவாயாக வெற்றி உனக்கு நிச்சயம் என்று கூறி ஆசிர்வதித்தார். அர்ஜூனன் மீண்டும் ஒரு முறை பீஷ்மர் காலில் விழுந்து வணங்கி அவரிடம் இருந்து விடைபெற்று துரோணரிடம் சென்றான்.

குரு தேவா போற்றி ஆராதனைக்குரிய ஆச்சாரியாரே தங்களை எதிர்த்துப் போர் புரியும் எண்ணம் எனக்கு இல்லை. ஆயினும் என் கடமையை நான் செய்தாக வேண்டுமென்று தர்மம் என்னை உந்தித் தள்ளுகிறது. அதற்கு அனுமதி பெற தங்களை நாடி வந்திருக்கிறேன் என்றார். அதற்கு துரோணர் என்னை எதிர்த்துப் போர் புரிய என்னுடைய அனுமதியை கேட்டபதன் வாயிலாக நீ நல்ல பாங்கில் நடந்து கொண்டுள்ளாய். என்னை எதிர்த்து போர் புரியும்படி சூழ்நிலை உன்னை தூண்டுகிறது. என் கடமையை நிறைவேற்றுவதில் நான் எனது ஆற்றல் முழுவதையும் நான் கையாண்டாக வேண்டும். ஆனாலும் நீ வெற்றி பெறுவாய் ஏனென்றால் தர்மம் உனக்கு துணையாய் இருக்கிறது. அதற்கு மேல் கிருஷ்ணன் உன்னை காத்து வருகிறார் என்று துரோணர் கூறினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.