மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -4

துரோணர் யுதிஷ்டிரரை சிறைப்பிடித்து விடுவாரோ என்னும் பயம் பீமனுக்கு ஏற்பட யுதிஷ்டிரர் இருக்கும் இடத்திற்கு பீமன் வந்தான். அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன். அவைகளை பந்தாடினான் பீமன். அபிமன்யூவும் கௌரவர் படையை எதிர்த்து போராடினான். இன்றும் அவன் துரியோதனனின் ஐந்து தம்பிகளை கொன்று அர்ஜுனனை கௌரவித்தான். அவன் ஆற்றல் கண்டு அர்ஜுனன் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றான். துருபதன், சிகண்டி, கடோத்கஜன், சுவேதன், ஆகியோர் கர்ணனை கவனிக்கும் படி திருஷ்டத்துய்மன் வியூகம் வகுத்திருந்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். கர்ணன் ஒரு மாவீரன். அவன் ஆற்றல் சாதாரணமானதல்ல என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும் தங்கள் முழு திறனை கொண்டு அவனை எதிர்த்தனர். கடோத்கஜன் அரக்கியின் மகன் என்பதால் மாயங்கள் அறிந்தவன். அவன் செய்த மாயங்களை கர்ணன் சூரிய அஸ்திரம் கொண்டு சுலபமாய் தகர்த்தான். இவர்கள் நால்வரின் தாக்குதலையும் ஒருவனாய் நின்று எதிர்த்தான். இதை கண்ட அர்ஜுனனும் வியந்தான்.

பகதத்தன் எனும் மன்னன் சுப்ரதீபம் என்னும் யானையில் வந்து பீமனுடன் போரிட்டான். அந்த யானை பீமனின் தேரை தகர்த்தது. பின் பீமனை தன் துதிக்கையால் பற்றி தூக்கி எறிய முற்பட்டது. பீமன் அதன் பிடியிலிருந்து தப்பி அதன் மர்மஸ்தானத்தை தாக்கினான். அந்த வேதனையிலும் அது பீமனை மிதித்துத் தள்ளப் பார்த்தது. ஆயினும் பீமன் அதனிடமிருந்து தப்பினான். பின் அந்த யானை அபிமன்யூவின் தேரைத் தூள் தூளாக்கியது. சாத்யகியின் தேரும் அதே நிலையை எட்டியது. யானையின் அட்டகாசத்தை அறிந்த அர்ஜூனன் அதனைக் கொல்ல விரைந்து வந்தான் அர்ஜூனன் பகதத்துடன் கடும் போர் புரிந்தான். அர்ஜூனன் எய்த ஒரு அம்பு யானையின் கவசத்தைப் பிளந்து மார்பில் ஊடுருவியது. யானை வீழ்ந்து மாண்டது. ஆத்திரம் அடைந்த பகதத்தன் சக்தி ஆயுதத்தை அர்ஜுனன் மீது செலுத்தினான். கிருஷ்ணன் அதை தன் மார்பில் தாங்கியதால் அர்ஜுனன் உயிர் பிழைதான். பின் அர்ஜூனன் செலுத்திய அக்னி அஸ்திரம் மாவீரன் பகதத்தனைக் கொன்று வீழ்த்தியது.

பின்னர் அர்ஜூனன் திருதிராட்டிர மன்னனின் மைத்துனர்களான அசலன் விகுஷன் ஆகியோரைக் கொன்றான். சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான். அர்ஜூனன் ஒளிமய கணையால் அந்த இருளைப் போக்கினான். சகுனி பயந்து வேறிடத்திற்கு நகர்ந்தான். யுதிஷ்டிரரை பிடித்துவிடலாம் என்ற துரோணரின் கனவு தகர்ந்தது. கௌரவர்கள் கலங்க பாண்டவர்கள் மகிழ சூரியன் மறைய பன்னிரன்டாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

அன்றைய போரில் நடந்தவற்றை கண்டு சினம் கொண்ட துரியோதனன் துரோணரிடம் சென்று கடுமையாகப் பேசினான். யுதிஷ்டிரரைப் பிடிக்கும் வாய்ப்பை தவற விட்டீர்கள். எனக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டீர். நீர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றான். இதனால் கோபம் அடைந்த துரோணர் துரியோதனா உனக்கு பலமுறை சொல்லியுள்ளேன். அர்ஜூனனைப் போரில் வெல்ல முடியாது. போர்க்களத்தில் அவன் எப்படி யுதிஷ்டிரரைப் பாதுகாத்தான் என்று நீ பார்த்தாய். நாளை நான் உன்னதமான வேறு ஒரு போர் முறை ஒன்றைக் கையாளப் போகிறேன். அர்ஜூனனை நீ எப்படியாவது யுதிஷ்டிரனிடமிருந்து பிரித்து வெளியே கொண்டு செல் என்றார். துரோணரின் பேச்சில் துரியோதனனுக்கு நம்பிக்கை வர அங்கிருந்து சென்றான்.

தொடரும்………

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.