விஸ்வாமித்ரர் தலைமையில் அனைவரும் கங்கை நதிக்கரையை அடைந்தனர். விஸ்வாமித்ரரிடம் கங்கை எப்படி மூவுலகிலும் ஓடுகிறது. கங்கையின் வரலாற்றை கூறுமாறு ராமர் கேட்டுக்கொண்டார். ஹிமவானின் மூத்த பெண் கங்கா தேவி. இளைய பெண் பார்வதி தேவி என்று சொல்லி கங்கா தேவியின் கதையை சொல்ல விஸ்வாமித்ரர் ஆரம்பித்தார். ஆதிகாலத்தில் அயோத்தியை ஆண்ட இசுவாகு குலத்தில் சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனை வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2 வது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அசுவமேதயாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். அப்போது இந்திரன் யாக குதிரையை மறைத்து வைக்க குதிரையை தூக்கிச்சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். அந்த குதிரையை தேடிச்சென்ற சகரரின் புதல்வர்கள் ஆறுபதாயிரம் பேரும் கபிலரின் ஆசிரமத்தில் குதிரை இருப்பதை கண்டு கபிலரை திட்டியதுடன் அவரை துன்புறுத்த துவங்கினார்கள். கோபமடைந்த கபில மகரிஷி அவர்களை சபித்து சாம்பலாக்கி விட்டார். அனைத்தையும் அறிந்த சகரர் மன்னன் கபிலரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாககுதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் அவர்கள் சாப விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுமாறும் தன் குதிரையை எடுத்துச்செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபிலமகரிஷி குதிரையை எடுத்துச்செல்ல அனுமதி கொடுத்து மேலுலகத்தில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோசம் கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சகரர் குதிரையை எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் நாட்டின் அரச பதவியை ஏற்றுக்கொண்டார். அவனுக்குப்பின் அவனது புதல்வன் பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக்கொண்ட போது தமது முன்னோர்கள் ஆறுபதாயிரம் பேருக்கு நடந்ததை தெரிந்துகொண்டார். பின்பு நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் கடும் தவம் இயற்றினான். இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்து ஆலோசனை வழங்கினார்.
பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக்கொண்டான். அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள். நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்துவிட்டனர். பகீரதன் மஹாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.