ராமாயணம் பால காண்டம் பகுதி -9

விஸ்வாமித்ரரின் கட்டளையை கேட்ட ராமர் நான் கிளம்புபோது எனது தந்தை என்னிடம் விஸ்வமித்ரரின் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று எனக்கு உத்திரவிட்டிருக்கின்றார். உங்கள் கட்டளையை நான் இப்போதே நிறைவேற்றுகின்றேன் என்று தனது வில்லில் இருக்கும் கம்பியை சுண்டினார். வில்லில் இருந்து வந்த சத்தத்தை கேட்டவுடன் இடி இடித்தாற் போல் சத்தமிட்ட தாடகை தனது குகையிலிருந்து வெளிப்பட்டு அங்கு வந்தாள். மானிடர்கள் மூவர் வந்திருக்கின்றார்கள் இன்று நமக்கு நல்ல சாப்பாடு என்று எண்ணி அவர்களை அழிக்க கல் மண் மரம் என கைக்கு கிடைத்த அனைத்தையும் தூக்கி அவர்கள் மீது எறிந்தாள். அப்போது ராமர் லட்சுமனனிடம் நான் இவளின் கைகள் மற்றும் காலை வெட்டி விடுகிறேன் வெட்டியவுடன் இவளால் எங்கேயும் போகமுடியாது என்று கூறினார். இதனை கேட்டதும் பயந்த தாடகை மறைந்திருந்து தாக்க தொடங்கினாள். இவள் கெட்ட எண்ணம் கொண்டவள் இவளிடம் கருணையை காண்பிக்காதே ராமா அவள் மறைந்திருந்து தாக்குகிறாள். இரவில் ராட்சசர்களுக்கு பலம் அதிகமாகிவிடும். ஆகவே விரைந்து அவளை அழித்துவிடு என்று விஸ்வாமித்ரர் ராமனை துரிதபடுத்தினார்.

ராமர் சப்தவேதி என்ற அஸ்திரத்தை எடுத்து விட்டார். அந்த அஸ்திரம் எங்கு இருந்து சப்தம் வருகிறதோ அதை தொடர்ந்து சென்று தாக்கும். மறைந்திருந்த அவளை அஸ்திரம் தாங்கியதும் அங்கிருந்து வானத்திற்கு தாவியவள் பெரிய உருவம் கொண்டு அவர்கள் மீது பாய்ந்தாள். ராமர் விட்ட அம்பு வானத்திலேயே அவள் மார்பை பிளந்து அவளை அழித்துவிட்டது. தாடகை அழிந்ததும் அவளது மந்திர சக்தி அனைத்தும் அழிந்தது. உடனே அந்த பிரதேசம் நந்தவனம் போல ஆகியது. இதனை கண்ட தேவர்களும் முனிவர்கள் உலக நன்மைக்காக செய்யும் பல வேள்விகளை இந்த தாடகை தடுத்து கெடுத்துவந்தாள். ராமரினால் இப்போது தாடகை அழிக்கப்பட்டாள். அனைவருக்கும் மகிழ்ச்சி. ராமனுக்கு அஸ்திர வித்தைகள் அனைத்தும் கற்றுக்கொடுங்கள் ராமரினால் பெரிய காரியங்கள் பின்னாளில் நிறைய நடக்கப் போகிறது என்று விஸ்வாமித்ரரிடம் கூறி விட்டுச்சென்றார்கள்.

விஸ்வாமித்ரர் தனக்கு தெரிந்த எல்லா அஸ்திர சாஸ்திரங்களையும் ராமருக்கு உபதேசித்தார். பின்னர் அஸ்திரங்களை திரும்ப பெரும் மந்திரங்களையும் கற்றுக் கொடுத்தார். அஸ்திர அதிதேவதைகள் அனைவரும் ராமர் முன்பு தோன்றி தாங்கள் அழைக்கும் போது தங்களுக்கு தேவையானதை செய்வோம் என்று உறுதியளித்துவிட்டு சென்றனர்.

விஸ்வாமித்ரர் தன்னுடைய ஆசிரமமான சித்தாஸ்ரமத்திற்கு இருவரையும் அழைத்து வந்தார். ஆசிரமத்திலுள்ள மற்ற ரிஷிகள் அனைவரும் தங்கள் யாகத்தை காக்க ராம லட்சுமனன் வந்ததை எண்ணி மகிழ்ந்தார்கள். யாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் அதிவிரைவில் செய்யத் துவங்கினார்கள். யாகம் துவங்கும் முன் விஸ்வாமித்ரர் ராமரிடம் யாகம் முழுவதும் செய்து முடிக்க ஆறு நாட்கள் ஆகும். அந்த ஆறு நாட்களும் மௌனமுடன் இருக்கவேண்டும். ஆகவே விழிப்புடன் இருந்து காவல் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு யாகத்தை தொடங்கினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.