அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் நாள்தோறும் நீ எனக்கு யுத்ததில் நடக்கும் செய்திகளை எடுத்துக் கூறுகின்றாய். யுத்தம் செல்லும் போக்கில் போனால் என் மகன் எவ்வாறு வெற்றி பெறப்போகிறான். இன்று எனது மகன்கள் 8 பேரை பீமன் கொன்று விட்டான். இது எனக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்றான். அதற்கு சஞ்சயன் உண்மையை எடுத்துரைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விபத்தை நீங்களாகவே வரவழைத்துக் கொண்டார்கள் என்றான்.
நான்காம் நாள் போரின் முடிவில் இரவில் துரியோதனன் மிகவும் துன்பத்தில் மூழ்கியவனாக இருந்தான் அவனால் தூங்க முடியவில்லை பீஷ்மருடைய கூடாரத்திற்கு மெதுவாக நடந்து சென்றான். பீஷ்மரிடம் சென்ற துரியோதனன் நீங்களும் துரோணரும் கிருபரும் இருந்தும் என் தம்பியர் 8 பேர் மாண்டார்கள். பல வீரர்கள் உயிர் இழந்தனர். பாண்டவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று வருத்தத்துடன் கேட்டான். அதற்கு பீஷ்மர் இது குறித்து பலமுறை உன்னிடம் எச்சரிக்கை பண்ணியிருக்கிறேன். போரில் பாண்டவர்களே வெற்றி பெருவார்கள். நீ தோல்வியடைவாய். பாண்டவர்களுடன் சமாதானமாகப் போவதே நன்று என பலமுறை வற்புறுத்தியும் இருக்கிறேன்.
பாண்டவர்களிடம் நீ வைத்திருக்கும் பகைமையும் அநீதியுமே உன்னை கீழ்நிலைக்கு இழுத்துச் செல்கின்றன. பாவி ஒருவனை மண்ணுலகும் விண்ணுலகும் ஒன்று கூடினாலும் காப்பாற்ற முடியாது. பாண்டவர்கள் தர்மத்திலிருந்து இம்மியளவும் பிசகாதவர்கள். ஆகையால் கிருஷ்ணன் அவர்களை காப்பாற்றி வருகின்றான். எங்கு கிருஷ்ணர் உள்ளாரோ அங்கு தர்மம் இருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது. கிருஷ்ணனோ நாராயணனுடைய அவதார மூர்த்தி. உலகிலுள்ள கயவர்களை எல்லாம் அழித்துத்தள்ள அவன் தீர்மானிக்கின்றான். நீ புரிந்துள்ள பாவச்செயலின் விளைவிலிருந்து நீ தப்பித்துக் கொள்ளமாட்டாய் இது உண்மை. பாண்டவர்களுடன் நீ சமாதானம் செய்து கொள். இல்லையேல் நீயும் அழிந்து போவாய். இப்பொழுதும் கூட நிலைமை தலைக்கு மேல் போய்விடவில்லை. நீ தீர்மானித்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவகாசம் இருக்கிறது என்றார். துரியோதனன் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தான். பிறகு அவருடைய கூடாரத்தை விட்டு அவன் கிளம்பி சென்றான். இரவெல்லாம் அவனுக்கு உறக்கம் இல்லை. ஆனால் தன்னை தானே திருத்தி அமைத்துக் கொள்ளும் எண்ணம் அவனுக்கு வரவில்லை.