மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -19

திருஷ்டத்தும்னனை விட்டு அஸ்வத்தாமன் அர்ஜூனனிடம் போர் புரிய துவங்கினான். இருவரும் அவரவர் திறமையை வெளிப்படுத்தினார். இரு கட்சியிலிருந்த போர்வீரர்களும் இருவரும் போர் செய்ததை கவனித்து பார்த்தார்கள். அர்ஜுனனை அழித்து தள்ள அஸ்வத்தாமன் தீர்மானித்தான். மந்திர சக்தி வாய்ந்த அஸ்திரத்தை ஒன்றன் பின் ஒன்றாக அர்ஜுனன் மீது பிரயோகித்தான். அதே மந்திர அஸ்திரங்களை கொண்டு சேனைகளையும் எதிர்த்தான். இதனை கண்ட அர்ஜுனன் அஸ்வத்தாமன் செய்த முறையில்லாத போர் முறையை எதிர்த்தான். தன்னை மந்திர அஸ்திரம் கொண்டு எதிர்ப்பது முறையே. சேனைகளை எதிர்ப்பது முறையல்ல என்று கூறிவிட்டு அனைத்து அஸ்திரங்களையும் அர்ஜுனன் முறியடித்தான். அஸ்வத்தாமனுடைய போர் திறமைகளை அனைத்தும் தோல்வியடைந்தபடி முடிவுக்கு வந்தது. துயரத்துடன் பின்வாங்கினான்.

துயரத்தில் மூழ்கியிருந்த அஸ்வத்தாமனிடம் வியாச பகவான் பிரசன்னமானார். வியாசரிடம் தன்னுடைய நாராயண அஸ்திரம் செயலற்று போனதற்கு காரணம் என்ன என்று கேட்டான். அதற்கு வியாசர் நாராயணனும் நாராயண அஸ்திரமும் ஒன்று தான். நாராயண அஸ்திரம் தனது எதிரியை விடாது. எதிரிகள் அதை எதிர்ப்பதற்க்கு ஏற்ப அதன் வலிமை அதிகரிக்கிறது. கெட்டவர்களை அழிப்பதில் அதற்கு நிகரான ஆயுதம் எதுவும் இல்லை. அதே சமயம் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு கீழே விழுந்து வணங்குகிறவர்களுக்கு நாராயண அஸ்திரம் அனுக்கரகம் செய்யும். கிருஷ்ணனும் அர்ஜுனனும் நாராயணனாகவும் நரனாகவும் உலகுக்கு வந்திருக்கிறார்கள். கேட்டவர்களை தண்டிப்பதும் தர்மத்தை காப்பதும் அவ்விருவருடைய செயலாகும். நாராயண அஸ்திரத்தின் சூட்சுமங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் அறிந்திருந்தான். ஆகையால் அந்த அஸ்திரத்தின் முன்னிலையில் அடிபணியும்படி பாண்டவர்களுக்கு அவன் உத்தரவிட்டான். பாண்டவர்களே பாதுகாக்க கிருஷ்ணன் முன்வந்திருக்கிறான். அவர்களை அழிக்க யாராலும் இயலாது. உன் தந்தை துரோணர் மேலான சொர்க்கத்திற்கு சென்றுள்ளார். சொர்க்கத்திற்கு சென்றவரை குறித்து வருந்தாதே. உன்னுடைய பாசறைக்கு சென்று ஓய்வு எடுத்துக்கொள் என்று வியாசர் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். வியாசர் கூறியது அஸ்வத்தாமனுக்கு ஒருவிதத்தில் ஆறுதல் அளித்தது.

சூரியன் மறைய 15 ம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது. 15 ஆம் நாளில் துரோணர் இழந்ததை குறித்து கௌரவர்களுக்கு வருத்தமாக இருக்கிறது. போர் வீரர்கள் பெரும் துயரத்தில் மூழ்கி இருந்தார்கள். 15 ஆம் நாளில் தங்களுக்கு அனுகூலமாக அமைந்தது குறித்து பாண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தவர்களாக ஓய்வெடுக்க தங்கள் பாசறைக்கு திரும்பினார்கள்.

துரோண பருவம் இந்த பகுதியுடன் முடிவடைந்தது. அடுத்தது கர்ண பருவம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.