அபிமன்யுவை எதிர்த்து துரியோதனனுக்கு பதில் அளிக்கும் விதத்தில் போரில் வீரம் காட்டினார் துரோணர். எப்படியாவது அவனை வீழ்த்த எண்ணி அதர்ம யுத்தத்தில் ஈடுபட்டார். கர்ணன் யுத்த நெறிக்குப் புறம்பாக பின்னால் இருந்து அபிமன்யூவின் வில்லை முறித்தான். பின்புறமிருந்து தாக்கியவன் யார் என அபிமன்யு திரும்பி பார்த்தபோது துரோணர் அவனின் தேர்க் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார். துரோணர் மீண்டும் புறம்பாக பின்புறத்திருந்து வில்லை துண்டித்தார். அதேமுறையில் கர்ணன் அவனது கேடயத்தைத் தகர்த்தான். மாவீரன் அபிமன்யு குதிரையையும் வில்லையும் வாளையும் கேடயத்தையும் இழந்தாலும் வீரத்தை இழக்கவில்லை.
துரோணர் விட்ட அம்பு அபிமன்யுவின் தேர்க் கொடியை அறுத்தது. கர்ணனின் அம்பு தேர்ச் சக்கரத்தை முறித்தது. துரியோதனனின் ஆயுதம் தேர்ப்பாகனை கொன்றது. துச்சாதனனின் அம்பு அபிமன்யுவை கீழே தள்ளியது. ஜயத்ரதனின் பாணம் அபிமன்யுவின் கரத்தைக் கிழித்தது. ஆனால் எதற்கும் தளராத அபிமன்யூ வாளைக் கையில் ஏந்தி தேரிலிருந்து குதித்து பல நூறு வீரர்களை வெட்டி வீழ்த்தினான். உடம்பெல்லாம் புண்ணாகி குருதி ஒழுக நிராயுதபாணியாக நின்ற அபிமன்யு உடைந்த தன் தேரில் இருந்து தேர் சக்கரத்தை கையில் ஆயுதமாக ஏந்தி தாக்க ஆரம்பித்தான். அப்போது துச்சாதனனின் மகன் பின்னாலிருந்து தன் கதையால் அபிமன்யுவின் தலையில் தாக்கினான். சுருண்டு விழுந்தவன் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் மற்ற மகாரதர்கள் தங்கள் ஆயுதங்களால் வலிமையாகத் தாக்கினார்கள். இறுதிவரை வீரத்தோடு போர் புரிந்த அபிமன்யுவின் தேகத்தை துரோணர், கிருபர், கர்ணன், ஜயத்ரதன் ஆகியோர் செலுத்திய அம்புகள் துளைத்தது. அபிமன்யு தரையில் வீழ்ந்து வீர மரணம் எய்தினான். சரித்திர நாயகன் ஆனான். சொர்க்கம் அவனை வரவேற்றது.
அபிமன்யுவின் வீழ்ச்சியை பற்றி கேள்விப்பட்ட யுதிஸ்டிரர் ஸ்தப்பித்து போனார். வீரம் நிறைந்த அபிமன்யுவினுடைய வீழ்ச்சிக்கு பொறுப்பாளி தானே என்று தன்னைப் பெரிதும் நொந்து கொண்டான். இந்நிலையில் போர் புரிவதை விட மடிந்து போவது மேல் என்னும் உணர்ச்சி அவருடைய உள்ளத்தை வாட்டியது. இந்த நெருக்கடிகள் வியாச பகவான் அங்கு பிரசன்னமானார். மரணம் என்பது வாழ்வின் மற்றொரு பக்கம் என்று அவர் யுதிஷ்டிரனுக்கு எடுத்துக் காட்டி ஆறுதல் வழங்கினார். வாழ்வையும் சாவையும் சமமாக கருதி வாழ்வு என்னும் போராட்டத்தில் மனிதன் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று வியாசர் எடுத்துரைத்தார்.
தென்திசையில் சம்சப்தர்களை ஒழித்துத் திரும்பிய அர்ஜூனன் காதில் இச்செய்தி விழ அவன் மயங்கி விழுந்தான். கண்ணனின் ஸ்பரிசம் பட்டு எழுந்த அர்ஜுனன் மகனின் உடலை கட்டி தழுவி அழுதான். மகனின் மரணத்திற்கு மூலக் காரணம் ஜயத்ரதன் என அறிந்து ஜயத்ரதனை நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வேன் தவறினால் அஸ்தமனமானதும் நான் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவேன். இது கிருஷ்ணன் மீது ஆணை என்று சபதம் செய்தான். அதன் அறிகுறியாக தன் காண்டீபத்திலிருந்து ஒலி எழுப்பினான். கிருஷ்ணர் சங்கு நாதம் செய்தார். இவ்விருவரும் கிளம்பிய ஓலம் எங்கும் பயங்கரமாக எதிரொலித்தது. அவ்வொலிக் கேட்டு அண்ட சராசரமும் அதிர்ந்தன. சூரியன் மறைய பதிமூன்றாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.