ஆதிகேசவப் பெருமாள் மூலவராக புஜங்க சயனத்தில் மேற்கே பார்த்து வீற்றிருக்கிறார். இடது கையை தொங்கவிட்டு வலது கையில் முத்திரை காட்டி தெற்கே தலை வைத்தும் வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார். ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால் 16008 சாளக்கிராம கற்களை இணைத்து உருவானது. பெருமாள் மேனி கடுசர்க்கரைப் பூச்சால் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு அபிஷேகம் செய்ப்படுவது கிடையாது. அவருக்கு பதிலாக உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. தாயார் மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம் கடல்வாய்த் தீர்த்தம் வாட்டாறு ராமதீர்த்தம் விமானங்கள் அஷ்டாங்க விமானம் அஷ்டாஷர விமானம். பெருமாள் 22 அடி நீளம் கொண்டு காட்சி அளிப்பதால் ஒரு வாசல் வழியாக முழுமையாக தரிசிக்க முடியாது என்பதால் அவரை தரிசிக்க திருத்தலை திருக்கரம் திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ஐம்படையினையும் காணலாம். திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம் திருக்கரம் திருப்பாதம் இவற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும்.
கோவிலின் 5 கலசங்கள் செம்பு தகட்டால் செய்யப்பட்டு அதன் மேல் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தில் 6 நாட்கள் சூரிய கதிர்கள் நேராக கர்ப்பக்கிரகத்தின் உள்ளே மூலவரின் மீது படும். கோவிலில் ஊர்த்துவ தாண்டவம் வேணுகோபாலர் மன்மதர் மற்றும் ரதி தம்பதியர் லட்சுமணன் மற்றும் இந்த்ரஜித் போன்றவர்களின் சிலைகள் உள்ளது. இந்தக் கோவிலின் அமைப்பு மற்றும் கட்டிடக்கலையை ஒரு மாதிரியாகக் கொண்டே திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு நேர் எதிரிலேயே ஆற்றின் அருகாமையில் இன்னும் ஒரு சிறிய இறைவன் லக்ஷ்மி நரசிம்ஹனை வழிபடும் கோவிலும் நிலைகொண்டுள்ளது.
கோவிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருளுகிறார். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனி உள்ளது. பெருமாளின் நாபியில் தாமரையோ பிரம்மனோ கிடையாது. இவரை வணங்கினால் மறுபிறப்பு கிடையாது. கருவறையில் கருடன் சூரியன் பஞ்சாயுத புருஷர்கள் மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார். ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும் புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம். இத்தலம் சேரநாட்டு முறையில் மரத்தால் ஆன தூண்கள் கதவுகள் மற்றும் கூரைகளுடன் கட்டப்பட்டு உள்ளது. கருவறைக்கு முன் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் 18 அடி சதுரமும் 3 அடி உயரத்துடன் ஒற்றைக் கல்லினால் எழுப்பப்பட்டது ஆகும். அதன் சுவர்கள் மட்டுமே 3 அடிகள் தடிமன் கொண்ட பாறையாகும். கி.பி. 1604 ஆம் ஆண்டு இம்மண்டபம் கட்டுவதற்கு வீரரவி ரவிமர்மன் என்ற குலசேகரப் பெருமாள் பொருளுதவி செய்தான். பெருமாள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் வேளையில் ஒற்றைக் கல் மண்டபத்தை யாரும் தொடக் கூடாது என்பது தொன்மரபு. கோவிலின் வெளிப்பிரகாரம் நெடுகிலும் கையில் திருவிளக்கேந்தி நிற்கும் தீபலட்சுமிகளின் சிலை இருபுறமும் உள்ளது. பலிபீட மண்டபத்தின் இருபுறமும் ஒற்றைக் கல்லிலான பல கலைவடிவங்கள் உள்ளன. இவற்றுள் புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் இசையில் மயங்கி தாய்மாறிப் பால் குடிக்கும் விலங்கினக் குட்டிகளின் சிலையும் ஒன்று.
பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால் யாக குண்டத்தில் இருந்து கேசன் கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன் கங்கையையும் தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள் திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் வட்டாறு என அழைக்கப்பட்டது. இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார் மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன. மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும் ஓடியவாறு தரிசித்து கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும் அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பரசுராமனுக்கும் சந்திரனுக்கும் பகவான் தரிசனம் கொடுத்த கோயில். நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.
இக்கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் தமிழ்க் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் அரசர்களைப் பற்றிய குறிப்பும் அவர்களின் ஆட்சிக்காலமும் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி ஆட்சி செய்தவர்கள்
குலசேகரப்பெருமாள் – கி.பி. 644-659
வீரமார்த்தாண்டவர்மா – கி.பி. 510-519
வீரகேரளவர்மா – கி.பி. 519-550
செம்பலாதித்த வர்மா – கி.பி. 612-645
உன்னி கேரள வர்மா – கி.பி. 734-753