சுழலும் லிங்கம்

ஒருசமயம் அவ்வைப்பிராட்டி சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால் களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. அவ்வையிடம் வந்த பார்வதி அவ்வையே உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள். இதைக்கேட்ட அவ்வை சிரித்தார். அம்பிகையிடம் தாயே என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள் அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன் என்றார். அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது.

இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது. இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும் சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல இருக்கும் என்பது தான் அதிசயம். கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பி விடும். மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிவலிங்க ஓவியத்துக்கு மானசீகமாக அபிஷேகம் செய்வதாக கற்பனை செய்தபடியே வழிபட்டால் அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.

பதஞ்சலி முனிவர்

பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும் ஒருவர். தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர்

நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம். என்கிறார்.

இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றி வரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும் மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார். இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது. குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றார் ஒரு சீடர். உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம் துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம் என்றார். குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா? என்று கேட்டார் இன்னொரு சீடர். பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்றார் பதஞ்சலி முனிவர்.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே என்று கண்ணீர் வடித்தார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனை நாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார் பதஞ்சலி. படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.

பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் எழுதிய மூன்று நூல்கள்: யோகத்தினை விளக்கும் யோக சாஸ்திரம், மொழி இலக்கணமான மஹாபாஷ்யம், ஆயுர் வேத்மாகிய சரகம் என்ற ஆத்திரேய சம்ஹிதை. மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்திருக்கின்றார். இராமேஸ்வரம் 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்று. இந்த ஆலயத்திற்குள் தான் இருக்கிறது பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதி மூலவரை தரிசித்துவிட்டு அவரின் சன்னிதானத்தை கடந்து பர்வதவர்தினி அம்மனை தரிசித்து விட்டு சுற்றி வரும்போது அடுத்த பிரகாரத்தில் வலது பக்கத்தில் ஒரு சந்நிதி இருக்கும். அதற்குள் ருத்ராட்ச மாலைகள் நிறைந்திருக்கும் மிகவும் அமைதியான சூழல் இருக்கும். ருத்ராட்சத்தால் ஒரு சமாதி முழுதும் நிறைந்திருக்கும். அதுதான் பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.

சோமசுந்தரப் பெருமான்

சிற்றரசர்களால் வணங்கப்பட்டு நீதிநெறியுடன் குபேரனைப் போல் அரசாட்சி செய்து வந்தான் பாண்டிய நாட்டை ஆண்ட விக்கிரமபாண்டியன். தன் தந்தையின் உத்தரவுப்படி கோயில் கட்டி வெகு சிறப்பாக தினந்தோறும் பூஜை செய்து வந்தான். நாடும் பிணியற்று சுபீட்சமாக இருந்து வந்தது. எங்கும் மகிழ்ச்சியும் திருவிழா பூஜையும் தொடர்ந்த வண்ணமிருந்தது. அப்போது காஞ்சியை சோழன் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பாண்டியன் மீது ஏகப்பட்ட பொறாமை. பாண்டியனை எப்படியாவது வென்றாக வேண்டும் என்றே அவன் மூளை சிந்தித்த வண்ணம் இருந்தது. இதற்காக சக்கியம், கோவர்த்தனம், கிரெளஞ்சம், திரிகூடம், அஞ்சனம், விந்தியம், ஹேமகூடம், காஞ்சி குஞ்சரம் என எட்டு மலைகளிலுமுள்ள எட்டாயிரம் சமணர்களுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பி வரச்செய்தான். அவர்கள் காஞ்சிபுரம் வந்து மன்னனைச் சந்தித்தனர். மன்னன் தலையை மயில்முடி தோகையால் தொட்டு வருடி வாழ்த்தினார்கள். அப்போது அவர்களிடம் நான் பாண்டிய நாட்டை ஜெயிக்க விரும்புகிறேன். விக்கிரம பாண்டியனைப் போரினால் வெல்ல முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆதலால் ஆபிசாரப் பிரயோகம் செய்வித்துத் தான் விக்கிரமனை வீழ்த்த வேண்டும் என எண்ணியுள்ளேன். பாண்டியனை அழிக்க கைங்கரியம் செய்து உதவீனீர்களானால் நாட்டில் சரி பாதி இராஜ்ஜியத்தை உங்களுக்கு தருகிறேன் என ஆசை வார்த்தைகளால் உயர்த்தினான் சோழன்.

சமணர்கள் சைவர்களின் விரோதிகள். சோழ மன்னன் இவ்வாறு சொன்னதும் அவர்கள் பாலாற்றின் கரையில் கூடி பெரிய பெரிய ஓம சாலைகளையும் ஹோமகுண்டங்களையும் அமைத்தனர். ஹோம குண்டத்தில் நச்சு மரங்களின் கட்டைகளை வார்த்தனர். தீ வளர்த்து வேம்பு எண்ணெயில் தோய்த்த உப்பாலும் நல்லெண்ணெயில் ஊறச்செய்த மிளகாய்களையும் இட்டனர். விலங்குகள் பறவைகள் இவற்றின் ஊனாலும் ஹோமங்களை செய்தனர். யாகத்தின் பலனாய் மேகங்கள் கூடி இடி இடித்தது, இடி புறப்பட்ட இடைவெளியினுல் துதிக்கையில் ஒரு உலக்கையைத் ஏந்திகிக் கொண்டு பெருத்த யானையொன்று பெரும் பிளிறலுடன் தோன்றி வந்தது. யானை அடியெடுத்து நடந்து வந்தபோது பூமியின் பரப்பளவு நடுங்கியது. அது அதன் காதுகளை சிலிர்த்த போது மேகங்கள் கலைந்து அலைந்து விலகின. தந்தங்களால் மலையைப் பிளந்து கொண்ட வண்ணம் யாகசாலையில் ஹோமம் செய்து கொண்டிருந்த சமணர்களின் அருகே வந்து நின்றது. நீ சென்று மதுரையையும் அதன் அரசனையையும் அழித்துவிட்டு வருவாயாக என யானையிடம் ஏவினார்கள் சமணர்கள். மீண்டும் பேரொலியை பிளிறிய வண்ணம் புறப்பட்டது. இச்சத்தத்தினைக் கேட்ட மற்ற மிருகங்கள் மிரண்டு விலகியோட யானை தென் திசை நோக்கி விரைவாக ஓடியது. செய்தியறிந்தான் விக்கிரமன். உடனே ஆலயத்திற்கு ஓடிச் சென்றான். ஈசனிடம் முறைசெய்து வேண்டினான். மகா மேருவை வில்லாக ஆக்கினாய், மகாவிஷ்ணுவை அம்பாக தேர்வு செய்தாய், பூமியைத் தேராக உருக்கிருக்கிக் கொண்டாய், வாசுகியை நாணாக்கினாய், வேதங்கள் நான்கினையும் குதிரைகளாக்கினாய், பிரம்ம தேவனைத் தேர்ப்பாகனாகக் கொண்டாய், இப்படியெல்லாம் செய்து முப்புரத்தையும் எரிக்கப் புறப்பட்ட மகாதேவனே, இத்தனையுடன் புறப்பட்ட உனக்கு சமணர் அனுப்பிய யானை உனக்கொரு பொருட்டா, என்னையும் மதுரை மக்களையும் நீயின்றி எவர் காப்பார்? எனப் பலவாறு வேண்டி தொழுது முறையிட்டழுதான்.

மன்னா என அசரீரி ஒலித்தது. வெளிச்சுவரின் உட்புறம் கீழ் பக்கமாக பதினாறு கால் கொண்ட அட்டாள மண்டபமொன்றை அதிவிரைவில் கட்டி முடி. வில் வீரனாக வந்து நீ கட்டிய அம்மண்டபத்தின் மேலமர்ந்து கொண்டு யாம் யானையை வதை செய்வோம் என அசரீரி கூறக் கேட்கவும் மன்னன் அகமகிழ்ந்தான். உடனடியாக போர்க்கால அடிப்படையில் மண்டபத்தை கட்டி முடித்தான். அதன் மேல்தளத்தில் இரத்தினத்தால் இழைத்த பொற் பீடமொன்றையும் நிறுவி வைத்தான். கருமை நிறத்துடன் சிவப்பு பட்டுடுத்தி பதினாறு வயதோனவனாய் இடுப்பில் கத்தியுடனும் இடக்கையில் நாணேற்றிய வில்லுடனும் வலக்கையில் கூரான அம்பைத் தாங்கியவாறும் காதுகளில் சங்குக் குண்டலங்களுடனும் கழுத்தில் முத்தாரமுமாய் பீட உச்சியில் ஒரு வில் வீரனாகத் தோன்றி நின்றார் இறைவன். எதிரே யானை நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட சுவாமி விட்ட அம்பு விர்ரென பாய்ந்து யானையின் உயிரை ஒரு நொடியில் மாய்த்தழித்து விட்டது. அந்த இடமே ஆனைமலை எனப் பெயர் பெற்றது. பிரகலாதன் தவம் செய்து சித்தி பெற்ற இடமும் கூட இதுதான். பாண்டியன் வீரன் உருவிலிருந்த ஈசனைப் பலவாறு துதித்து விட்டுப் பட்டென்று ஈசனது இரு கால்களையும் சிக்கென்று பற்றிக் கொண்டான் பாண்டிய மன்னன். எப்பேற்பட்ட சங்கடங்களையும் சட்டென நீக்க இங்கேயே எழுந்தருள வேண்டும் எனவும் விண்ணப்பித்தான். இறைவனும் அப்படியே இருப்பதாக வாக்களித்தார். விக்கிரமபாண்டியன் வேண்டுகோளுக்கிணங்க பதினாறு கால அட்டாள மண்டபத்தில் அட்டாள வீர மூர்த்தியாய் காட்சி கொடுக்கின்றார் சோமசுந்தரப் பெருமான்.]

இல்லறம் நல்லறம்

செல்வந்தன் ஒருவன் தன் மாளிகையில் உறவுகளை எல்லாம் உதறிவிட்டு தாசிப் பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். அவ்வழியே வந்த ஞானி அவனை எதிரில் சந்தித்தார். ஞானி செல்வந்தரிடம் உனது மனைவி மக்கள் உறவுகள் அனைவரையும் விட்டு இங்கு ஏன் இருக்கிறாய் என கேட்டார் சுவாமி என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. விளை நிலங்களும் ஏராளமாக உள்ளது. உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. எவரிடமிருந்தும் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை எனப் பெருமையடித்துக் கொண்டான்.

புன்சிரிப்போடு அதைக் கேட்ட ஞானி வா சற்று தூரம் நடந்துவிட்டு வரலாம் என்றார். கடுமையான வெயிலில் போக வேண்டுமா என தயங்கினாலும் ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான். சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த செல்வந்தன் ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த நிழலும் தென்படவில்லை. ஞானி கேட்டார் என்ன தேடுகிறாய்? நாம் சற்று இளைப்பாற ஏதாவது நிழல் இருக்கிறதா எனப் பார்த்தேன். ஏன் உன் நிழல் உள்ளதே அதில் நீ ஒதுங்கிக்கலாமே? சுவாமி என் நிழலில் நான் எப்படி இளைப்பாற முடியும்? என்னப்பா இது நீ யாரையும் எதையும் சார்ந்து வாழத் தேவையில்லை உன் செல்வங்களே உன்னைக் காப்பாற்றும் என்று சற்று முன்புதானே கூறினாய்? இப்போது உன் நிழலே உனக்கு உதவவில்லை என்கிறாயே? என்றார். ஏராளமான செல்வம் இருக்குன்னு கர்வத்தில் யாரையும் உதாசினபடுத்தாதே. இருக்கும் பொழதும் இறக்கும் பொழுதும் நம் நலம் விரும்பிகள் நாலு பேர் நிச்சயம் நமக்கு தேவை. வெறும் செல்வத்தால் மட்டும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. உறவுகளையும் நல்ல நட்புகளையும் மதித்து இணைத்து வாழ கற்றுக்கொள் என்றார். செல்வந்தன் உண்மையை உணர்ந்தான். மனைவி மக்களுடன் இணைந்தான்.

Image result for ஞானி செல்வந்தன்

முக்தி

நாரதர் மிகப்பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். ஒரு நாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவனைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தவம் செய்ததால், அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன. அவன் நாரதர் அந்த வழியாகப் போவதைப் பார்த்ததும் நாரதரிடம் எங்கே செல்கிறீர்கள் என்றான். நான் சொர்கத்திற்குச் செல்கிறேன் என்றார் நாரதர். அப்படியானால் ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான் அவன். நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரைக் கண்டு நாரதரே எங்கே செல்கிறீர் என்று கேட்டான். நாரதரோ நான் சொர்கத்திற்குச் செல்கிறேன் என்றார். அப்படியானால் ஆண்டவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று நீங்கள் தெரிந்து வரவேண்டும் என்று அவனும் கேட்டுக்கொண்டான். நாரதர் சென்றுவிட்டார்.

சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார். உடலைச் சுற்றிப் புற்று வளர்ந்திருந்த மனிதன், நாரதரே என்னைப் பற்றி பகவானிடம் கேட்டீரா என்றான். ஆம் என்றார் நாரதர். பகவான் என்ன சொன்னார் என்று கேட்டான் அவன். நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று பகவான் கூறினார் என்றார் நாரதர். அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன் இன்னும் நான்கு பிறவிகளா எல்லாம் வீணாகிப் போனதே என்று கூறி புற்றை உடைத்து எழுந்து சென்றுவிட்டான். நாரதர் அடுத்த மனிதனிடம் சென்றார். பகவானிடம் கேட்டீரா நாரதரே என்றான் அவன். ஆம் கேட்டேன் அந்தப் புளியமரத்தைப் பார் அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் பகவான் என்று நாரதர் கூறினார். அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே என்று கூறினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது மகனே இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன் என்று கூறியது. அவனது விடா முயற்சிக்குக் கிடைத்த வெகுமதி அது. அத்தனைப் பிறவிகளிலும் பாடுபட அவன் தயாராக இருந்தான். எதுவும் அவனைத் தளரச் செய்யவில்லை. அந்த வைராக்கியமே அவனை முக்திக்கு அழைத்துச் சென்றது. தினம் கடவுளை வணங்குவேன் எத்தனை துயர் வந்தாலும் கடவுளை நாம ஜபம் செய்யாமல் இருக்க மாட்டேன். கோவிலுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன் என வைராக்கியத்தோடு ஆண்டவனிடம் சரண் அடைய வேண்டும்.