ஏகாதசி விரதம்

சூரிய வம்சத்து அரசர் ருக்மாங்கதன் நீதி நெறி முறைப்படி நல்லாட்சி நடத்தி வந்தார். அவர் பெருமாள் மீது கொண்ட அளவுக்கடந்த பக்தியினால் ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்து வந்தார். அத்துடன் தன் நாட்டு மக்களும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதன் காரணமாக அனைத்து மக்களும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து வந்ததால் அந்நாட்டில் இறந்த அனைவரும் சொர்க்கத்தையே அடைந்தனர். எமலோகத்திற்கு ஒருவர் கூட செல்லவில்லை. எமதர்மன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டான். அவர் மோகினி எனும் ஒரு அழகிய பெண்ணை சிருஷ்டித்து நீ போய் ருக்மாங்கதனின் ஏகாதசி விரதத்தை சோதித்துவா என அனுப்பினார்.

மோகினியின் மோக வலையில் அகப்பட்ட அரசர் தன்னை மணம் செய்து கொள்ள வேண்டினார். மோகினியோ நான் என்ன சொன்னாலும் அதை கேட்டு நடக்க வேண்டும். மறுக்கக் கூடாது என நிபந்தனை விதித்தாள். மன்னர் ஒப்புக் கொள்ள திருமணம் நடந்தது. மோகினியுடன் மன்னர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாலும் வழக்கம் போல் அரசனும் அந்நாட்டு மக்களும் ஏகாதசி விரதத்தை கடைபிடித்து வந்தனர். ஏகாதசி விரதத்தை நிறுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தாள் மோகினி. ஒருநாள் மன்னர் மோகினியுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த போது ஏகாதசி விரதம் பற்றிய அறிவிப்புக்கான முரசொலி கேட்டது. அதைக் கேட்டதும் மன்னர் உடனே எழுந்து ஆலயத்திற்கு புறப்பட தயாரானார். மோகினி அவரைத் தடுத்து மன்னா என்னை மணம் செய்து கொள்ளும் போது என் விருப்பப்படி நடப்பேன் என்று சொன்னீர்கள். கொடுத்த வாக்கின்படி இப்போது நீங்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க கூடாது என்றாள். மோகினி ஏகாதசி விரதத்தின் பேரில் எனக்குள்ள விருப்பத்தை நீ அறிவாய். ஆகையால் அதை தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார். அப்படியானால் உங்கள் மகனின் தலையை வெட்டிக் கொடுங்கள் எனக் கேட்டாள் மோகினி. அதைக்கேட்ட மன்னர் மனம் கலங்கி அவளிடம் வேறு எதையாவது கேள் என மன்றாடிப் பார்த்தார். மோகினி ஒப்புக் கொள்ளவில்லை. கொடுத்த வாக்கின்படி இரண்டில் ஏதேனும் ஒன்றை கொடுத்தே ஆகவேண்டும் என்று உறுதியாக நின்றாள்.

மன்னரின் மகன் நடந்தவற்றை அறிந்து தந்தையே பூமியில் ஜனனம் எடுத்து விட்டாலே மரணம் நிச்சயம் என்றோ போகக் கூடிய என் உயிர் என் தந்தையின் கொள்கைக்காக போகிறதென்றால் எனக்கு சந்தோஷமே வெட்டுங்கள் என் தலையை. என்னுடைய ஏகாதேசி விரதத்தின் பலனாக நான் இறந்தவுடன் நிச்சயமாக சொர்க்கம் செல்வேன் என்றான். வேறு வழியின்றி மன்னர் தன் மகனை வெட்ட துணிந்த போது நாராயணன் ருக்மாங்கதனுக்கு காட்சியளித்து அருள் புரிந்தார். இளவரசன் உயிர் பிழைத்தான். தன் எண்ணம் பலிக்காததால் மோகினி அங்கிருந்து விலகி பிரம்ம தேவனிடம் சென்றடைந்தாள். ஏகாதசி விரதத்தின் மீது ருக்மாங்கதன் கொண்ட நம்பிக்கையே அவனுக்கு வந்த இடர்களை தவிடு பொடியாக்கி அவனை காத்தது.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -28

பரதன் தன்னுடன் வந்த கூட்டத்துடன் முதலில் கங்கை கரையை அடைந்தான். சுமந்திரன் பரதனிடம் இங்கு தான் ராமர் ரதத்தில் இருந்து இறங்கி என்னை அயோத்தி திரும்பி செல்லுமாறு உத்தரவிட்டார். கரைக்கு அப்பால் இருக்கும் பிரதேசத்தின் தலைவராக குகன் என்பவர் இருக்கின்றார். அவரிடம் கேட்டால் ராமர் செல்லும் பாதையை காட்டுவார் என்று கூறினான்.

கங்கை கரைக்கு எதிர்புறம் இருந்த குகன் அக்கரையில் பெரும்படை தங்கியிருப்பதை பார்த்தான். தன் அருகில் இருப்பவர்களிடம் பெரும் படை ஒன்று அக்கரையில் இருக்கிறது அவர்கள் இக்கரைக்கு வர முயற்சி செய்வது போல் தெரிகிறது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் நம்முடன் இருப்பவர்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று உத்தரவிட்டான். குகனின் கண்களுக்கு அந்த கூட்டத்தின் கொடி தென்பட்டது. அக்கொடி அயோத்தி நாட்டின் கொடி என்பதை அறிந்த குகன் ராமருக்கு சொந்தமான ராஜ்யத்தை அடைந்தது மட்டுமல்லாமல் ராமரை கொல்லவும் பெரும் படையுடன் வந்திருக்கின்றான் பரதன் என்று அவன் மீது சந்தேகம் அடைந்தான் குகன். தன்னுடன் இருந்தவர்களிடம் நம்முடைய அனைத்து வீரர்களையும் ஆயுதங்களுடன் போருக்கு தாயார் நிலையில் இருக்க சொல்லுங்கள். நல்ல எண்ணத்துடன் இவர்கள் ராமரை தேடி வந்தால் கங்கை கரையை கடக்க இவர்களுக்கு உதவி செய்வோம். ராமரை கொல்லும் எண்ணத்துடன் வந்திருந்தால் இவர்கள் கங்கையை கடக்க விடக்கூடாது. இங்கேயே தடுத்துவிட வேண்டும் என்று தனது சகாக்களுக்கு உத்தரவிட்டான் குகன். பரதனின் மன நிலையை அறிந்து கொள்ள சிறிய படகில் குகன் பரிசுப்பொருட்களுடன் பரதனை சந்திக்க சென்றான்.

குகன் படகில் வருவதை பார்த்த சுமந்திரன் பரதனிடம் வருபவர் இப்பிரதேசத்தின் தலைவர். இவரது பெயர் குகன். ராமரிடம் நிறைய அன்பு வைத்திருப்பவர். நம்மை வரவேற்க வருகின்றார். இவருடைய குலத்தவர்களுக்கு அக்காட்டின் அனைத்து இடங்களும் மிகவும் நன்றாக தெரியும். ராமர் சென்ற இடத்தை இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவரின் ஆலோசனைப்படி சென்றால் விரைவாக நாம் ராமர் இருக்கும் இடம் சென்று அடையலாம் என்றான். நதியை தாண்டிய குகன் பரதனுக்கு வணக்கம் செலுத்தினான். எனது பொருள்கள் எல்லாம் உங்களுடையதாக பாவித்து என்ன வேண்டும் என்று கேளுங்கள். தங்களது தேவையை என்னால் இயன்ற வரை நிறைவேற்றுகின்றேன். ராமரின் தம்பியான தங்களுக்கு பணி செய்வது எனது பாக்கியம் என்றான் குகன். அதற்கு பரதன் ராமரை தேடி வந்திருக்கின்றோம். அவர் இருக்கும் இடத்திற்கு நாங்கள் அனைவரும் செல்ல வேண்டும். எங்களுக்கு கரையை கடக்க உதவி செய்து ராமர் தற்போது இருக்கும் இருப்பிடம் எங்கே இருக்கிறது. எப்படி செல்ல வேண்டும் என்று சொன்னால் பெரிய உதவியாக இருக்கும் என்றான் குகனிடம்.

கங்கை கரையை கடக்க தங்களுக்கு உதவி செய்து ராமர் சென்ற பாதையை காட்டுகின்றோம். ஆனால் எனக்கு ஒரு சிறு சந்தேகம் இருக்கின்றது. இவ்வளவு பெரிய படையுடன் ராமரை தேடி வந்திருக்கின்றீர்கள். எதற்காக இவ்வுளவு பெரிய படை என்ற சந்தேகத்தை தாங்கள் தீர்த்து வைத்தால் காலதாமதமின்றி இப்போதே தங்களுக்கு தேவையானதே செய்து கொடுக்கின்றேன் என்றான் குகன்.

முக்தி

நாரதர் மிகப்பெரிய யோகி. அவர் எங்கும் சஞ்சரிப்பார். ஒரு நாள் அவர் ஒரு காட்டின் வழியாகச் செல்லும்போது ஒருவரைக் கண்டார். வெகுகாலம் ஓரிடத்திலேயே அமர்ந்து தவம் செய்ததால் அவனது உடலைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டிவிட்டன. அவன் நாரதர் அந்த வழியாகப் போவதைப் பார்த்ததும் நாரதரிடம் எங்கே செல்கிறீர்கள் என்றான். நான் கயிலாயம் செல்கிறேன் என்றார் நாரதர். அப்படியானால் இறைவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று கேட்டு நீங்கள் தெரிந்து கொண்டு எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நாரதர் சிறிது தூரம் சென்றார். அங்கே ஒருவன் பாடிக் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தான். அவன் நாரதரைக் கண்டு நாரதரே எங்கே செல்கிறீர் என்று கேட்டான். நாரதரோ நான் கயிலாயம் செல்கிறேன் என்றார். அப்படியானால் இறைவன் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று கேட்டு நீங்கள் தெரிந்து கொண்டு எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டான். நாரதர் சென்றுவிட்டார். சிறிது காலத்திற்குப் பின் நாரதர் அந்தக் காட்டின் வழியாகத் திரும்பி வந்தார்.

உடலைச் சுற்றிப் புற்று வளர்ந்திருந்த மனிதன் நாரதரே என்னைப் பற்றி இறைவனிடம் கேட்டீர்களா என்றான். ஆம் என்றார். நாரதர். இறைவன் என்ன சொன்னார் என்று ஆர்வத்துடன் கேட்டார். நீ இன்னும் நான்கு பிறவிகளுக்குப் பின்னர் முக்தி அடைவாய் என்று இறைவன் கூறினார் என்றார் நாரதர். அதைக் கேட்டதும் அவன் அழுது புலம்பி என்னைச் சுற்றிப் புற்று மூடும்வரை இவ்வளவு காலம் தியானித்தேன் இன்னும் நான்கு பிறவிகளா எல்லாம் வீணாகிப் போனதே என்று கூறி புற்றை உடைத்து எழுந்து சென்றுவிட்டார். நாரதர் அடுத்த மனிதனிடம் சென்றார். என்னைப் பற்றி இறைவனிடம் கேட்டீர்களா என்றான். ஆம் கேட்டேன் அந்தப் புளியமரத்தைப் பார் அதில் எத்தனை இலைகள் உள்ளனவோ அத்தனை பிறவிகளுக்குப் பின்பு உனக்கு முக்தி கிட்டும் என்றார் இறைவன் என்று நாரதர் கூறினார். அதைக் கேட்டதும் அவன் மகிழ்ச்சியால் குதித்தபடியே இவ்வளவு விரைவாக எனக்கு முக்தி கிடைக்கப் போகிறதே என்று கூறினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது மகனே நீ இறைவன் மேல் வைத்த நம்பிக்கையின் பயனாக இந்தக் கணமே உனக்கு முக்தி அளிக்கிறேன் என்று கூறியது.

என்றாவது ஒரு நாள் நிச்சயம் முக்தி அடைவோம் என்ற நம்பிக்கையுடன் தினமும் கடவுளை வணங்குவேன் எத்தனை துயர் வந்தாலும் கடவுளை நாம ஜபம் செய்யாமல் இருக்க மாட்டேன். கோவிலுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன் என வைராக்கியத்துடனும் நம்பிக்கையுடனும் இறைவனிடம் சரண்டைந்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -27

வசிஷ்டரும் மந்திரிகளும் அரச சபையை முறைப்படி கூட்டினார்கள். பரதனுக்கு தூது அனுப்பி பரதனை அரசவைக்கு வரவழைத்தார்கள். நாதம் சங்குகள் முழங்க பரதனை வரவேற்றார்கள். நிறுத்துங்கள் அனைத்தையும் என்று பரதன் கத்தினான். சத்ருக்கனனை பார்த்து ராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிவிட்ட பிறகு என்னை ஏன் இவ்விதம் துன்புறுத்துகிறார்கள். தாய் செய்த சூழ்ச்சியால் இந்த நாடு நல்ல அரசரை இழந்து தவிக்கிறது இதில் எனக்கு இந்த வரவேற்பு தேவையா என்று சொல்லி துக்கப்பட்டான். வசிஷ்டர் பரதனிடம் நாடு அரசன் இல்லாமல் இருக்ககூடாது நாட்டிற்கு அது நல்லது இல்லை. ராமரும் லட்சுமணனும் தற்போது இல்லை. ஆகவே தாங்கள் அரச பட்டத்தை ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. நீங்கள் அரசராக முடிசூட்டிக்கொள்ளுங்கள் அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் தங்கள் தந்தை இருக்கும் போதே ராமருக்காக செய்து வைத்திருந்தார். இப்போது அந்த ஏற்பாட்டின் படி நீங்கள் பதவி ஏற்றுக்கொண்டு இந்த நாட்டை காப்பாற்றுங்கள் என்று கூறினார். சபையோர்கள் இதனை ஆமோதித்தார்கள். அனைத்தையும் கேட்ட பரதன் பட்டாபிஷேகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாக குண்டம் மற்றும் யாக பொருட்களை வலம் வந்து அனைவரையும் வணங்கினான்.

சபையில் கூடியிருந்த அனைவருக்கும் ஒரு செய்தி சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். நான் நல்ல முறையில் வளர்க்கப்பட்டவன். இக்ஷ்வாகு வம்சத்தின் குலத்தின் பண்பாட்டை அறிந்து கொண்டவன். இந்த இக்ஷ்வாகு குல வழக்கப்படி மூத்தவரே அரசனாக மூடிசூடிக் கொள்ளவேண்டும். மூத்த குமாரனுக்கு உரிமையான ராஜ்யத்தை என்னை எற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துகின்றீர்கள். குல வழக்கத்திற்கு மாறாக நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு உரிமையற்ற பதவியை நான் ஏற்க மாட்டேன். இந்த ராஜ்யத்தை ஏற்க தகுதியானவர் ராமர் ஒருவரே. இக்ஷ்வாகு குல மூதாதையர்களான தீலிபன் நகுஷன் போன்ற பலருக்கு சமமானவர் இவர். இக்ஷ்வாகு குலத்தின் மூத்தவரான ராமர் மற்றும் சீதை லட்சுமணன் இப்போது வனத்தில் இருக்கிறார்கள். இங்கிருந்தே வனத்திலிருக்கும் ராமரை வணங்குகின்றேன். ராமருக்கு வனத்திலேயே முடிசூட்டி அயோத்திக்கு அரசனாக்கி அரண்மனைக்குள் அழைத்துவரவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். இதற்கு வேண்டிய பரிவாரங்களை திரட்டி வனத்திற்குள் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யுங்கள். இது உங்களுடைய கடமை. இதுவே என்னுடைய முடிவு என்று தீர்மானமாக சொன்னான். பரதன் கூறியதை கேட்ட அனைவரும் தங்களையும் அறியாமல் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

சுமந்திரனை பார்த்த பரதன் ராமர் சென்ற வனத்திற்கு செல்லும் ஏற்பாட்டை உடனே செய்வாயாக என்று கட்டளையிட்டான். பரதனுடைய யோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டு அதற்கான பணிகளை விரைவாக செய்ய ஆரம்பித்தார்கள். வனப்பிரதேசத்தை நன்கு அறிந்தவர்கள். காட்டு வழியில் மிருகங்களை தாண்டி செல்ல பயிற்சி பெற்றவர்கள். கரையை கடக்க படகு செய்யத்தெரிந்தவர்கள். ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக யாகம் செய்ய அந்தணர்கள். அனைத்து பொருட்களையும் சுமந்து செல்ல பணியாளர்கள் என்று பெரும் கூட்டத்துடன் பரதன் தலைமையில் புறப்பட்டார்கள். மக்கள் அனைவரும் ராமரை பரதன் எப்படியாவது அழைத்து வந்துவிடுவார் என்று நம்பினார்கள். ராமன் இப்போதே அயோத்திக்கு வந்துவிட்டதை போல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

உயர்ந்த தர்மம்

பூலோகத்தில் மரணத்துக்குப் பின் மேலுலகம் சென்ற கர்ணன் சூரிய லோகத்தில் உள்ள தன் தந்தை சூரியனின் இருப்பிடத்தை அடைந்தான். தந்தையே நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த தர்மத்தை காப்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தர்மத்திற்காக துரியோதனன் பக்கம் இருந்து போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கிருஷ்ணர் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டார் இதன் காரணம் எனக்கு புரியவில்லை என்று புலம்பினான். அதற்கு சூரிய பகவான் கர்ணா கிருஷ்ணரை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கிருஷ்ணர் உயர்ந்த தர்மமாக விளங்குபவன். உயர்ந்த தர்மம் செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மம் என்ற இரண்டு தர்மங்களில் எதை காப்பாற்ற வேண்டும் என்று வருகையில் உயர்ந்த தர்மத்தையே கிருஷ்ணன் காப்பாற்ற எண்ணுகிறான். நீ சாமானிய தர்மத்தை காப்பாற்ற எண்ணி உயர்ந்த தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய்.

தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தர்மம். அதற்காக இரண்யனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடக்கவில்லை. நரசிம்மர் என்ற உயர்ந்த தர்மத்தை பிரகலாதன் பிடித்துக்கொண்டான். பிரகலாதனை இறைவன் காப்பாற்றினான். தாயிற் சிறந்த கோவிலில்லை. தாய் சொல்லை கேட்பது தர்மம். ஆனால் பரதன் கைகேயியின் ஆசைக்கு உடன்படவில்லை. ராமர் என்னும் உயர்ந்த தர்மத்தை பற்றினான். விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி செய்யும் சாமானிய தர்மத்தை விட்டு உயர்ந்த தர்மமான ராமனை வந்து பற்றினான். கர்ணா சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும். ஆனால் உயர்ந்த தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில் உயர்ந்த தர்மத்தையே பிடித்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -26

பரதன் வந்துவிட்டான் என்ற செய்தி அரண்மனை முழுவதும் பரவியது. பரதன் வந்து விட்டதை அளிந்த கௌசலை சுமத்ரையை அழைத்துக்கொண்டு பரதனை பார்க்க புறப்பட்டாள். அப்போது பரதனும் சத்ருக்கனனும் அங்கு வந்து சேர்ந்தான். ராஜ்ஜியம் தனக்கு எளிதில் கிடைத்துவிட்டது என்று எண்ணி பரதன் கேகய நாட்டில் இருந்து பட்டாபிஷேகம் செய்து அரசனாக முடிசூட்டிக்கொள்ள விரைந்து வந்துவிட்டான் என்று கௌசலை எண்ணினாள். கோபத்தில் பரதனிடம் எந்த ஒரு இடையூரும் இல்லாமல் உனக்கு அரச பதவியை கைகேயி பெற்றுக் கொடுத்துவிட்டாள். அதனை ஏற்றுக்கொண்டு சுகமாக வாழ்வாய். உனது தந்தையை எரியூட்டும் நெருப்பில் வீழ்ந்து நானும் அவருடன் மேலுலகம் சென்றுவிடுகிறேன். இங்கு நீயும் உனது தாயும் மகிழ்ச்சியுடன் இருங்கள் என்று புலம்பினாள்.

கௌசலையின் கொடிய விஷம் போன்ற பேச்சைக்கேட்ட பரதன் வேதனையில் கௌசலையின் காலைப்பிடித்தான். தாயே நான் கேகய நாட்டில் வெகு தூரத்தில் இருந்தது தங்களுக்கு தெரியும். இங்கு நடந்த கொடூரமான சூழ்ச்சி நான் அறியாமல் நடந்துவிட்டது. நான் அண்ணன் ராமர் மேல் நான் வைத்திருக்கும் அன்பை தாங்கள் அறிவீர்கள். இந்த பாவச்செயலில் எள் அளவிற்கு என் பங்கு இருந்தாலும் நான் பெற்ற சகல அறிவும் ஞானமும் என்னை விட்டுப்போகட்டும். இந்த உலகத்தில் யார் எந்த பாவம் செய்தாலும் அதனுடைய கர்ம்பலன் என்னேயே வந்து சேரட்டும். சத்தியம் செய்கிறேன் தாயே. நடந்தவைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை பெற்ற தாய் செய்த சூழ்ச்சி எனக்கு தெரியாது. இந்த சூழ்ச்சிக்கு நான் உடன்பட மாட்டேன். அரச பதவியை ஏற்க மாட்டேன். அண்ணன் ராமரை மீண்டும் அழைத்து வந்து அவரையே அரசனாக்குவேன். ஒரு பாவமும் அறியாத என்னை துன்பப்படுத்தாதீர்கள் என்று சொல்லி மயக்கம் அடைந்தான்.

பரதனின் மயக்கத்தை தெளிவித்த கௌசலை பரதனின் உள்ளத்தை அறிந்தாள். பரதனைப்பற்றி தான் எண்ணியது தவறு என்பதையும் உணர்ந்தாள். பரதனைப்பார்த்து அன்புக்குரிய மகனே உன்னுடைய துக்கத்தை பார்த்து என் மனம் இரண்டு மடங்கு துக்கமடைகிறது. உன் எண்ணத்தை புரிந்து கொண்ட என்னுடைய துக்கம் எனக்கு சிறிதளவு குறைகிறது. நடந்தவைகளுக்கு நாம் ஒன்றும் செய்ய இயலாது. விதிக்கு வசப்பட்டவர்களாக இருக்கிறோம். புண்ணியவான்களுடைய பதவிகள் எல்லாம் உன்னை வந்து அடையட்டும் என்று ஆசிர்வதித்தாள்.

பரதன் வசிஷ்டரை சந்தித்து தன் தந்தைக்கான காரியங்களை விரைவில் செய்து முடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். தசரதரின் இறுதிக்காரியத்தை மன்னனுக்குரிய முறைப்படி செய்து முடித்தார்கள். தந்தையை எண்ணி அழுது புலம்பிய பரதன் சத்ருக்கனனை வசிஷ்டர் மற்றும் பல அறிஞர்கள் சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள்.

தொடரும்……..

இறைவன் திருவடி

ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. ஒரு மீனவன் வாரத்துக்கு ஒரு முறை அந்தக் குளத்தில் வலை வீசி மீன்களை பிடித்து சென்றான். மீனவன் வரும் போதெல்லாம் எல்லா மீன்களும் பயந்து நடுங்கின. ஒரு மீன் மட்டும் பயப்படாமல் சந்தோஷமாகவே இருந்தது. மற்ற மீன்களெல்லாம் இந்ந மீனிடம் மீனவன் வரும்போது நீ மட்டும் எப்படி மரண பயமில்லாமல் சந்தோஷமாக இருக்க முடிகின்றது என்று கேட்டன. அதற்கு அந்த மீன் சொல்லியது மீனவன் வலையை வீசுவற்கு முன் குளத்தில் இறங்கி தன்னுடைய ஒரு காலை குளத்துக்குள் வைத்து நின்றுதான் வலையை வீசுவான். நான் அவன் காலுக்கு அருகில் சென்று நின்று கொள்வேன். அதனால் அவன் வலையில் எப்பவுமே சிக்க மாட்டேன் என்றது.

அது போல இறைவனுடைய திருவடிக்கு அருகில் நின்று கொண்டால் எந்த கர்ம வினையும் நம்மை நெருங்காது.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -25

பரதனுக்கு என்ன நடந்தது என்று இப்போது புரிந்துவிட்டது. கோபத்தில் கைகேயியை பார்த்து கர்ஜிக்க ஆரம்பித்தான். பொல்லாத பாதகியே உனக்குரிய வரங்களால் என்ன காரியத்தை செய்துள்ளாய் தெரியுமா? இக்ஷ்வாகு வம்சத்தில் மூத்த மகன் அரசனாக முடிசூட வேண்டும் என்பது நம்முடைய பரம்பரை பாரம்பரியமாகும். புனிதம் வாய்ந்த அந்த பாரம்பரியத்திற்கு கேட்டை வரவழைத்திருக்கிறாய். பதவி மோகம் உன்னுடைய அறிவை பாழ்படுத்திவிட்டது. உன்னை அன்புக்குரிய மனைவியாக்கி எனது தந்தை பெரும் தவறு செய்துவிட்டார். அவர் உன் மேல் வைத்த அன்பிற்கு கைமாறாக அவரை கொன்றுவிட்டாய். ராமன் தன் தாயை விட உன்னையே அதிகம் நேசித்தான். உனக்கு பல பணிவிடைகளை செய்திருக்கின்றான். ராமரும் உனக்கு செய்த பணிவிடைகளுக்கு கைமாறாக அவனை காட்டிற்கு அனுப்பிவிட்டாய்.

உன்னை தங்கை போல் பாவித்த கௌசலைக்கு மாபாதக கொடுமையை செய்திருக்கின்றாய். ஒரு மகனைப்பெற்ற அவளை அனாதையாக்கிவிட்டு நீ உன் மகனுடன் சுகவாசியாக வாழலாம் என்று எண்ணுகிறாயா? உன் எண்ணம் கனவிலும் நிறைவேறாது. நீ செய்த பாவச்செயலுக்கு தண்டனையாக உன்னை கொன்று தள்ளுவதே முறை. ஆனால் உன்னை கொல்வதை எனது அண்ணன் ராமர் ஆமோதிக்கமாட்டான். அதனை முன்னிட்டு உனக்கு உயிர் பிச்சை தருகிறேன். நீ நாட்டுக்கும் வீட்டுக்கும் உதவாதவள். கெட்ட வழியில் சென்று தருமத்தை கைவிட்டவள். என் தந்தை சென்ற சொர்க்கம் உனக்கு கிடைக்காது. உனக்கு நரகமே கிடைக்கும். நீ பெரும் துக்கத்தை அடைந்து மரணத்தை பெருவாய் இது நிச்சயம்.

இந்த உலகத்தை ஆள்வதற்கு மகா பராக்கிரமசாலியான என் தந்தை ராமர் மற்றும் லட்சுமணனையே தனது பக்க பலமாக கருதினார். அவர்களை காட்டிற்கு அனுப்பிவிட்டு என்னை அரசனாக சொல்கிறாயே. இவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆள என்னால் முடியுமா. உன் ஆசை ஒரு நாளும் நிறைவேறாது. அதை நிறைவேற்றவும் மாட்டேன். எனக்கு ராஜ்யத்தை பெற்றுக்கொடுத்து விட்டதாக இன்பத்தில் மிதக்கிறாய். உன் முன்னிலையில் சபதம் செய்கிறேன் கேட்டுக்கொள். ராமன் இல்லாத அயோத்தியில் பரதன் இருக்க மாட்டான். ராமன் அரச உடையை களைந்து தபஸ்விகளுக்கான உடையை அணிந்து கொண்டிருப்பதை போல் நானும் அதே உடையை அணிந்து கொள்வேன். தந்தைக்கான கடமையை செய்து முடித்துவிட்டு ராமரை தேடிக்கொண்டு காட்டிற்கு செல்வேன். ராமரை அழைத்து வந்து அரசனாக்கி இந்த ராஜ்யத்தை அவரிடம் ஒப்படைத்து அவருக்கு அடிமையாக இருந்து நீ எனக்கு தேடித்தந்த பழியை போக்கிக்கொள்வேன். ராட்சசியே உன்னுடைய மகன் பரதன் என்ற எண்ணத்தை இப்போதே மறந்துவிடு. இவ்வளவு பெரிய பாவச்செயல் புரிந்த உன்னை என் தாயாக நான் ஏற்க முடியாது. தாய் என்ற ஸ்தனத்தில் இருந்து நான் உன்னை துறந்துவிட்டேன். கௌசலையும் சுமத்ரையுமே என் தாய் அவர்களை பார்க்க நான் செல்கிறேன். என்னை இனி நீ பார்க்கமுடியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் பரதன்.

தொடரும்…….

கிருபானந்த வாரியார் சொன்ன கற்பூர கதை

பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம் தேங்காய் கற்பூரம் இருந்தது.

தேங்காய் பேச ஆரம்பித்தது நம் மூவரில் நானே கெட்டியானவன் பெரியவனும்கூட என்றது. அடுத்து வாழைப்பழம் நமது மூவரில் நானே இளமையானவன் இனிமையானவன் என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது. பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் ஒளிவிசி பிரகாசித்து சிறிது நேரத்தில் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால் ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும் வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால் இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.

கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால் இருக்கும் வரை ஒளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -24

பரதன் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் தன் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலேயே கைகேயி பதில் சொன்னாள். ராமனும் லட்சுமணனும் சீதையும் திரும்பி வருவதை பார்ப்பவர்கள் பாக்கியவான்கள். எனக்கு அந்த கொடுப்பனை இல்லை என்று ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் இரவு நேரத்தில் தூக்கத்திலேயே இறந்து விட்டார். யாருக்கும் கடைசி காலத்தில் எதுவும் சொல்லவில்லை என்றாள். பரதன் பதறினான் பரதனின் துக்கம் இருமடங்கானது. தந்தையின் இறுதி காலத்தில் அண்ணன் இல்லையா எங்கே சென்று விட்டார். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று பதற்றத்துடன் கேட்டான். பரதனை சமாதானப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் நடந்தவைகளை சொல்ல ஆரம்பித்தாள் கைகேயி.

ராமனும் லட்சுமணன் சீதை மூவரும் உன் தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தவம் செய்யும் பொருட்டு வனத்திற்கு பதினான்கு ஆண்டுகள் சென்றுவிட்டார்கள். பரதன் மேலும் பதற்றமடைந்தான். என்ன தவறு செய்தார் அண்ணன். நிரபராதிகள் யாருக்கும் தண்டனை கொடுத்துவிட்டாரா? பிராமணர்கள் சொத்துகள் ஏதேனும் அபகரித்துவிட்டாரா? அண்ணன் சத்தியத்தை கடைபிடிப்பவர் அவர் தவறு செய்திருக்க மாட்டார். எதற்கான வனவாசம் போகவேண்டும். வேறு யாரோ தவறு செய்திருக்கிறார்கள் ஏதோ சூழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த அக்கிரம காரியத்தை செய்ய வைத்தது யார்? என்ன நடந்தது சொல்லுங்கள் என்று பதறினான்.

அதற்கு கைகேயி ராமர் எந்த தவறும் செய்யவில்லை. உன் தந்தை ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து அரசனாக்க முடிவு செய்தார். அதற்கான செயலிலும் விரைவாக ஈடுபட்டார். வசிஷ்டரிடம் ஆலோசனை செய்து பட்டாபிஷேகம் செய்ய நாள் குறித்தார். உன்னுடைய நலனை கருத்தில் கொண்டு உன்னை அரசனாக்க முடிவு செய்தேன். உன் தந்தை பல காலங்களுக்கு முன்பு எனக்கு இரண்டு வரங்கள் அளித்திருந்தார். அந்த வரத்தை இப்போது நான் கேட்டு பெற்றுக்கொண்டேன். ஒரு வரத்தின்படி ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய நிர்ணயித்த தினத்தன்று உனக்கு பட்டாபிஷேகம் செய்து உன்னை அரசனாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதனால் உனக்கு ராமரினால் பாதிப்பு ஏதும் வந்து விடக்கூடாது என்று எண்ணி நாடு கடத்தும் முயற்சியாக இரண்டாவது வரமாக ராமரை பதினான்கு வருடங்கள் வனவாசம் செல்ல வேண்டும் என்று கேட்டேன். இரண்டாவது சத்தியத்தை உனது தந்தை நிறைவேற்ற முடியாமல் தவித்தார். அதனை அறிந்த ராமர் தந்தை கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற வனம் செல்ல முடிவு செய்தான். ராமரை தொடர்ந்து சீதையும் லட்சுமணனும் வனத்துக்கு சென்றுவிட்டார்கள்.

இவை அனைத்தையும் உனக்காகவே செய்தேன் இப்போது என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்து செயலபடு. துக்கப்படாதே மனதை நிலையாக வைத்துக்கொள். நீ சத்திரிய வீரன். தந்தை கையினால் ராஜ்யத்தை பெற்ற அரசகுமாரன் நீ. இந்த நாடும் ராஜ்யமும் இப்போது உன்னுடையது. வசிஷ்டரின் ஆலோசனை பெற்று உன் தந்தையின் இறுதி காரியத்தை செய்து முடித்துவிட்டு பட்டாபிஷேகம் செய்துகொண்டு அரச பதவியை பெற்று சுகங்களை அனுபவிப்பாய் என்றாள்.