ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -8

அதிகாலை விடிந்தது. பட்டாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வசிஷ்டர் செய்து முடித்தார். தசரத சக்ரவரத்தியை முடிசூட்டும் இடத்திற்கு அழைத்து வரச்சொல்லி சாரதி சுமந்தனிடம் வசிஷ்டர் தகவல் சொல்லி அனுப்பினார். கைகேயி இருக்கும் அந்தப்புரத்திற்கு வந்த சுமந்தன் தசரதரிடம் செய்தியை கூறினான். தசரதர் பேச இயலாமல் அமைதியாக இருந்தார். கைகேயி சுமந்தனிடம் ராமரை உடனே இங்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டார். தயங்கியபடியே தசரதரை பார்த்தான் சுமந்தன். ராமரை பார்க்க விரும்புகின்றேன் அவரை அழைத்து வா என்று வருத்தம் கலந்த குரலில் கூறினார் தசரதர். தசரதரின் முகவாட்டத்தை கண்ட சுமந்தன் ஏதோ விபரீதம் நடந்திருக்கின்றது என்று எண்ணி ராமருடைய மாளிகைக்கு ரதத்தை செலுத்தினான்.

பட்டாபிஷேகத்திற்கு சீதையுடன் தயாராக இருந்தார் ராமர். தங்கள் சிற்றன்னை கைகேயியின் மாளிகையில் தசரத சக்ரவர்த்தி தங்களை காணவேண்டும் என்று தங்களை அழைத்து வரச்சொன்னார் என்று சுமந்தன் ராமரிடம் கூறினான். அலங்காரத்துடன் இருந்த சீதையை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு ராமர் லட்சுமனனை அழைத்துக்கொண்டு சுமந்தனுடன் தசரதரை பார்க்க கிளம்பினார். செல்லும் வழி எங்கும் மக்கள் ராமரை பார்த்து போற்றினார்கள். ராமர் மாளிகைக்குள் நுழைந்ததும் ராமா என்று அலறிய தசரதர் கீழே விழுந்தார். மேற்கொண்டு அவரால் பேச இயலவில்லை. இக்காட்சி ராமரை திகிழடையச் செய்தது. தன் தந்தைக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் ஏதேனும் செய்து விட்டேனோ என்று பயந்தார் ராமர். தன் தந்தையை சாந்தப்படுத்தி அவர் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினார். பின்பு கைகேயியின் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினார். வழக்கமாக கைகேயியின் முகத்தில் இருக்கும் தாயன்பு தற்போது இல்லாததை ராமர் கவனித்தார்.

அம்மா எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் தந்தை என்னிடம் அன்பாக பேசுவார். ஆனால் இப்போது வாடிய முகத்துடன் இருக்கிறார். நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா. தங்கள் கோபம் அடையும்படி நடந்துகொண்டேனா எதுவாக இருந்தாலும் தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள். இங்கு இருக்கும் சூழ்நிலைகளை பார்த்து எனக்கு அச்சமாக இருக்கிறது என்றார். ராமரின் பேச்சைக்கேட்ட கையேயி தன் காரியத்தை நிறைவேற்ற நல்ல சந்தர்ப்பம் அமைந்துவிட்டது என்று எண்ணி பேச ஆரம்பித்தாள். அரசருக்கு யார் மீதும் கோபம் இல்லை. அவர் மனதிலுள்ள செய்தியை உன்னிடம் சொல்ல பயப்படுகிறார். அதனால் பேசாமலிருக்கிறார். அதனை நானே சொல்லுகிறேன். உன் தந்தை பல வருடங்களுக்கு முன்பு எனக்கு இரண்டு வரங்கள் தந்தார். அதனை இப்போது நான் கேட்டுப்பெற்றுக் கொண்டேன். அந்த இரண்டு வரத்தில் ஒரு வரத்தோடு நீ தொடர்பு கொண்டிருக்கின்றாய். அதனை சொல்லவே உன் தந்தை தயங்குறார் என்றாள் கைகேயி.

திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர்

திலீபச்சக்கரவர்த்தி காட்டுக்கு வேட்டைக்கு வந்தார். பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். அம்பு பட்டவுடன் மான் ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினியாக வடிவெடுத்தது. அந்தப்பெண் அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட திலிபச்சக்கரவர்த்தி அவளருகே ஓடிவந்தார். அம்மா மான் என்று நினைத்தே அம்பெய்தேன். அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே என்று கண்ணீர் வடித்தார். அதுகேட்ட ரிஷிபத்தினி மன்னா இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும் என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள் என்று அழுதாள். மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா என்ன செய்வேன் என் குலகுருவே வசிஷ்ட மகரிஷியே தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள். என்ன நடந்தது என்பதை அறியாத வசிஷ்டர் தீர்க்க சுமங்கலி பவ என அவளை வாழ்த்தினார்.

மாமுனிவரே இதோ இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு அபாக்கியவாதியாக நிற்கிறேன் தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே இதெப்படி சாத்தியம் என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது நிலைமை புரிந்தது. தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும். இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தார். பெண்ணே காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன் உனக்கு நிச்சயம் உதவுவான் கிளம்பு என்றார்.

மகிழ்ந்த ரிஷிபத்தினி உடனே கிளம்பினாள். அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும் சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி அன்னையே என்னைப் போலவும் ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல் நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும் என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும் முனிவரும் மீண்டும் திலீபச்சக்கரவர்த்தியை சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் கோவில் கட்டினான். அக்கோவிலே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -7

தசரதர் கொடுத்த உறுதிமொழியில் உற்சாகமடைந்த கைகேயி தனது வேண்டுதலை கேட்டாள். அரசே பஞ்ச பூதங்கள் சாட்சியாக கேட்கிறேன். சத்தியம் செய்திருக்கின்றீர்கள். எனக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுங்கள். ராமருக்கு பட்டாபிஷேகம் ஏற்பாடு செய்த அதே நேரத்தில் பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்து அரசனாக்குங்கள். ராமர் தவம் செய்யும் பொருட்டு பதினான்கு வருடங்கள் காட்டிற்கு இன்றே அனுப்புங்கள் என்றாள்.

கைகேயியின் வார்த்தையை கேட்ட தசரதன் தன் மேல் இடி இடித்ததை போல் உணர்ந்தார். தன் வலிமை அனைத்தும் அழிந்தவராக சோர்வுற்று கீழே விழுந்தார். புலி ஒன்று மானை பார்த்து நடுங்குவது போல் கைகேயியை பார்த்து தசரதர் நடுங்கினார். மன்னர்கள் அனைவரும் தசரதரின் காலில் விழுந்து வணங்குவார்கள் அத்தகைய சிறப்பு மிக்க தசரதர் கைகேயியின் காலில் விழுந்தார். ராமர் உனக்கு என்ன தீங்கு செய்தான் தன் தாயை விட உன் மீது மிகவும் அன்பாக இருந்து பணிவிடைகள் செய்கின்றான். ராமர் தன்னை அறியாமல் தவறு செய்திருந்தால் அவனை மன்னித்துவிடு.

பரதன் அரசனாக விரும்ப மாட்டான். அவன் விரும்பி ஏற்றுக்கொண்டாலும் இந்த உலகம் அதனை சரி என்று ஒப்புக்கொள்ளாது. மக்கள் இதனை கேட்டால் பொறுமை இழந்து உன்னை பழிப்பார்கள். இவ்வுலகில் மக்களால் பேசப்படும் புகழை நீ அடைய மாட்டாய். இந்த நிகழ்சியால் கொடிய பழி உன்னை வந்தடையும். இந்த பழியைக் கொண்டு என்ன பயனை அடையப்போகிறாய்.

ராமன் மூத்தவன் என்ற முறையில் அவனுக்கு அரச பட்டம் கொடுப்பதாக சொன்னதால் ராமன் அரசனாக முடிசூட்டிக்கொள்ள சம்மதித்தான். அவனிடம் நீ பரதனுக்கு இந்த பட்டத்தை கொடு என்று கேட்டால் ராமனே மனம் உகந்து பரதனை அரசனாக்கிவிடுவான். உன்னால் கேட்கப்பட்ட இரண்டாவது வரத்தை மட்டும் மறுபடியும் கேட்காதே. நீ கேட்ட முதல் வரத்தை இப்போதே தந்தேன். நீயும் பரதனும் இந்த உலகத்தை மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்யுங்கள். இனி அதனை மாற்ற மாட்டேன். என் உயிரான ராமன் எல்லா உயிர்களுக்கும் நல்லவனாக இருக்க கூடியவன். உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். என் உயிராக இருக்கும் ராமர் என்னை பிரிந்து காட்டிற்குள் சென்றால் உன் உயிர் என் உடலை விட்டு பிரிந்து விடும். நான் உன்னை யாசித்து கேட்கிறேன். ராமரை என்னிடம் இருந்து பிரித்து என்னை வருந்தும்படி செய்யும் இரண்டாவது வரத்தை கேட்காதே. ராமன் இந்த நாட்டை கடந்து செல்லாமல் இருக்க ஒரு நல்ல வார்த்தை சொல் உனது காலை பிடித்து கேட்கிறேன். அதர்மத்தை செய்ய என்னை தூண்டாதே என்றார்.

அனைத்தையும் கேட்ட கைகேயி கோபத்துடன் எனக்கு கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றா விட்டால் நீங்கள் சத்தியத்தை மீறியவர் ஆவீர்கள். கொடுத்த வாக்கை மீறியவர் தசரதர் என்ற பெயரை பெற்றுவிடுவீர்கள். நான் கேட்ட இரண்டு வரத்தை கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். நான் இன்றே என் உயிரை விட்டுவிடுவேன் என்று தீர்க்கமாக கூறினாள்.

புல் சாப்பிட்ட கல்நந்தி

கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை அறியாமலும் தெரியாமலும் ஒரு பசுக்கன்றின் மீது போட்டு விட்டார். அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது. பசுங்கன்றைக் கொன்றதால் அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அவரின் வீட்டுக்குள் நுழைந்தபோது வாசல்படி தலையில் இடித்து சிவ சிவா என்று கத்தினான். குரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர் தேவசர்மா பற்றியும் அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர் நீ சிவ என்று சொன்னதுமே பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் நீங்கிவிட்டது. இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப் போகிறது என்று தேவசர்மாவுக்கு ஆறுதல் கூறினார். ஆனாலும் ஊர்மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை. ஊரைவிட்டு விலக்கியே வைத்திருந்தார்கள். இதனால் வருத்தப்பட்ட தேவசர்மா ஹரதத்தரிடம் முறையிட்டான்.

ஹரதத்தர் கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும் அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர். அப்போது ஹரதத்தர் தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து நீ சிவ சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கிவிட்டதாக நான் கூறினேன். ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்பவில்லை. எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றார். கல் நந்தி எப்படி புல் சாப்பிடும் என்று கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். ஆனால் ஹரதத்தரோ இறைவன் மீதான நம்பிக்கையில் இறைவா உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால் கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும் என்று மனமுருக வேண்டினார். தேவசர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது. அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும் பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மனதார வழிபட்டனர்.

இந்த கல் நந்தி கும்பகோணம் அருகே கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கிறது.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -6

தசரதர் அரண்மணையில் ராமனுடைய பட்டாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் கைகேயியின் அந்தபுரத்திற்குள் நுழைந்தார். அந்தபுரத்தில் இருக்கும் பணிப்பெண் தசரதரிடம் கைகேயி நகைகளை அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு பழைய உடை உடுத்திக்கொண்டு விகாரமாக தரையில் படுத்திருப்பாக கூறினாள். இதனைக்கேட்டு திடுக்கிட்ட தசரதர் விரைவாக அந்தப்புரத்திற்குள் நுழைந்து கைகேயியை தேடினார். கைகேயியின் அறையில் அவள் தலை கலைந்து அலங்கோலமாக தரையில் படுத்திருந்தாள் அழுக்குப்படிந்த ஆடைகளை அணிந்திருந்தாள். அவளது நகைகள் தரையில் சிதறிக்கிடந்ததை கண்ட தசரதர் அவளிடம் சென்று பேச ஆரம்பித்தார். என் அன்புக்குறியவளே எதைக்குறித்து நீ துன்பப்படுகிறாய். அரண்மணையில் யாராவது உன்னை ஏதேனும் சொல்லிவிட்டார்களா என்ன காரணமாக இருந்தாலும் என்னிடம் சொல் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். உனக்கென்ன ஆயிற்று உடல்நிலை ஏதும் சரியில்லையா மருத்துவரை வரவழைக்கவா எதுவாக இருந்தாலும் பயப்படாமல் சொல் இப்போதே அதனை நிறைவேற்றுகின்றேன் என்றார்.

கைகேயி எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். நோய் எதுவும் எனக்கு வரவில்லை. யாரும் என்னை எதுவும் சொல்லவுமில்லை. தீங்கு எதுவும் எனக்கு வரவில்லை. எனக்கு ஆசை ஒன்று உள்ளது. அதனை தாங்கள்தான் நிறைவேற்றி வைக்கவேண்டும். தங்களால் மட்டுமே அது முடியும் தாங்கள் நிறைவேற்றுவதாக உறுதி மொழி தந்தால் அதனை பற்றி சொல்கிறேன். இல்லை என்றால் இப்பேச்சை இப்போழுதே விட்டுவிடலாம் என்றாள்.

தசரதர் கைகேயியிடம் எனது மகன்களில் மூத்தவனான ராமன் எனக்கு எப்படி பிடித்தமானவனோ அது போல் எனது மனைவியரில் நீ என் அன்புக்கு பாத்திரமானவள் அது உனக்கும் நன்றாக தெரியும். ராமனை யாராலும் வெல்ல முடியாது. நால்வரில் தலைசிறந்தவன் அவன். எனது உயிராக இருப்பவன் அவன். என்னை விட்டு பிரிந்தால் என் உயிரும் உடனே சென்றுவிடும். அந்த ராமரின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன் உன்னுடைய ஆசைகளை நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்று கைகேயியிடம் உறுதியளித்தார் தசரதர்.

அரசரே உங்களுக்கு நினைவிருக்கின்றதா பல ஆண்டுகளுக்கு முன்பு அசுரர்களுடன் போர் புரிந்தபோது யுத்த களத்தில் தாங்கள் மயக்கமடைந்தீர்கள். அப்போது ரதத்தை வேகமாக வேறு இடத்திற்கு எடுத்துச்சென்று தங்களை தங்களை காப்பாற்றினேன். அப்போது நீங்கள் எனக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தீர்கள். அந்த வரத்தை பிறகு பெற்றுக்கொள்வதாக தங்களிடம் கூறியிருந்தேன். அதனை இப்போது நான் கேட்கின்றேன். நீங்கள் உடனே எனக்கு அதனை தாருங்கள் என்றாள் கைகேயி. அந்த வரம் உனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றாள் இப்போதே தருகிறேன் உனக்கு என்ன வேண்டுமோ கேட்டு பெற்றுக்கொள் என்று தசரதர் கைகேயியிடம் உறுதி அளித்தார்.

நம்பிக்கை

ஞானி ஒருவரிடம் வந்த ஒருவன் இறைவனை நான் தினமும் வழிபடுகின்றேன். அவரை நம்புகின்றேன் ஆனால் எனக்கு ஏன் துன்பங்கள் மட்டும் வருகிறது என்று கேட்டான். அதற்கு ஞானி ஒரு கதை சொன்னார்.

ஒரு நபர் இரண்டு உயரமான கோபுரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்க ஆரம்பித்தார். அவர் கைகளில் ஒரு நீண்ட குச்சியை சமன் செய்துகொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார். அவர் தனது மகனை தோள்களில் அமர்த்தியிருந்தார். தரையில் உள்ள ஒவ்வொருவரும் அவரை மூச்சுமுட்ட பார்த்துக்கொண்டு மிகவும் பதட்டமாக இருந்தார்கள். அவர் மெதுவாக இரண்டாவது கோபுரத்தை அடைந்ததும் ஒவ்வொருவரும் கைதட்டி விசில் அடித்து பாராட்டினார்கள். அவர் கூட்டத்தினரிடம் கேட்டார் இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு இப்போது அதே கயிற்றில் நான் திரும்பி நடக்க முடியும் என்று நீங்கள் அனைவரும் நம்புகின்றீர்களா என்று கேட்டார்

அனைவரும் ஒரே குரலில் ஆம் ஆம் உங்களால் முடியும் என்று கத்தினார்கள். நீங்கள் என்னை நம்புகிறீர்களா என்று கேட்டார். அவர்கள் ஆம் ஆம் நாங்கள் உங்களை வைத்து பந்தயம் கட்டவும் தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்கள். அவர் சொன்னார் என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உண்மையானால் உங்களில் யாராவது ஒருவர் உங்கள் குழந்தையை என் தோளில் அமர வையுங்கள் என்றார். நான் உங்கள் குழந்தையை மறுபுறம் மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறேன் என்றார். அங்கு நின்ற அனைவரும் திகைத்தார்கள். அனைவரும் அமைதியாகி ஒவ்வொருவராக பதில் சொல்லாமல் கிளம்பிவிட்டார்கள். அனைவரும் கயிற்றின் மீது நடப்பவர் மேல் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் முழுமையான நம்பிக்கை வைக்கவில்லை.

இக்கதையை ஞானி சொன்னதும் தனக்கு புரிந்துவிட்டது. இறைவனிடம் சரண்டைய முயற்சிக்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

கருத்து:

நம்பிக்கை வேறு. சரணாகதி வேறு. சரணாகதி என்றால் எந்த கேள்வியும் கேட்காமல் யோசிக்காமல் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். இன்றைய உலகில் இறைவனிடம் நம்பிக்கை வைக்கின்றோம். ஆனால் சிறு துன்பம் வந்ததும் நமது நன்மைக்காகவே இறைவன் இத்துன்பத்தை கொடுத்திருக்கின்றார் என்று நம்ப மறுத்து சரணடைய மறுக்கிறோம்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -5

சத்தியம் தவறாத ராமரை மந்தரா சொல்லும் குணத்தில் கைகேயியால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. ராமரை தன் பிள்ளையாகவே பாவித்து வந்த கேகேயி இப்போது மந்தரையின் வலையில் சிக்கிவிட்டாள். மந்தரையின் கேள்விக்கு கைகேயி பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றாள். கைகேயின் மனதில் பரதனைப்பற்றிய பயம் குடிகொண்டது. பரதன் மீதிருந்த பாசம் அவளுக்கு மேலோங்கியது. மந்தரா சொல்வதில் உண்மை இருக்கிறது என்று எண்ணினாள். மனம் மாறிய கைகேயி என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமடைந்தாள். மந்தராவிடம் தஞ்சமடைந்து இதற்கு ஒரு வழி சொல் என்று ஆலோசனை கேட்டாள்

பல காலங்களுக்கு முன்பு தேவர்களுக்கும் சம்பரன் என்ற அசுரனுக்கும் போர் மூண்டது. தசரத சக்ரவர்த்தி தேவர்களுடன் இணைந்து போர் புரிந்தார். அப்போரில் சம்பரன் ஏய்த ஓர் அஸ்திரத்தில் தசரதர் சிறிது நேரம் மயக்கமடைந்தார். அப்போது நீ அவருக்கு பணிவிடைகள் செய்து உதவிகரமாக இருந்து அவர் அப்போரில் வெற்றி பெற உதவி புரிந்தாய். இதனால் மகிழ்ந்த தசரதர் உனக்கு இரண்டு வரங்கள் கொடுப்பதாக வாக்களித்தார். அப்போது அந்த வரத்தை தேவையான பொழுது பெற்றுக்கொள்வதாக நீ சொல்லிவிட்டாய். இப்போது அந்த வரத்தை உன் மகனுக்காகவும் உனக்காகவும் உபயோகப்படுத்திக்கொள்.

தசரதர் இங்கு வந்ததும் அவர் கொடுத்த வரத்தை அவருக்கு ஞாபகம் செய். தனக்கு இப்பொது அந்த வரம் வேண்டும் என்று கேள். அவர் சம்மதம் தெரிவித்த பிறகு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று அவரிடம் உறுதிமொழி பெற்றுக்கொள், அவர் சம்மதித்த பிறகு முதல் வரத்தில் ராமர் ராஜ சுகத்தைவிட்டு பதினான்கு வருடங்கள் காட்டிற்கு செல்லவேண்டும். 2 வது வரத்தில் ராமனுக்காக செய்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் அதை குறிப்பட்ட நேரத்தில் பரதனுக்கு முடிசூட்டி சிம்மாசனத்தில் அமர வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள். அவரால் மறுக்கமுடியாது அவர் மறுத்தால் தசரதர் சத்தியத்தில் இருந்து பிசகியவராவார். எனவே சத்தியத்தை காப்பாற்ற அவர் சம்மதிப்பார். உன் எண்ணம் முழுமையாக நிறைவேறும். பதினான்கு ஆண்டுகள் பரதன் ஆட்சி செய்தால் அவனது ஆட்சியில் பரதனை மக்கள் அன்புடன் நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பதினான்கு வருடங்கள் கழித்து ராமர் வரும் போது அவரை பலர் மறந்திருப்பார்கள். நிரந்தர அரசனாகி விடுவான் பரதன் என்றாள்.

இத்திட்டத்தில் மகிழ்ந்த கைகேயி மந்தராவுக்கு செல்வங்கள் பல கொடுத்தாள். என் மகன் பரதனுக்கு கடல் சூழ்ந்த இந்த உலகத்திற்கு அரசனாக்க நல்ல திட்டத்தை கொடுத்தாய். இத்திட்டத்தை அப்படியே செயல் படுத்துகிறேன் என்று மந்தராவை அனுப்பினாள். தன்னுடைய கூந்தலில் இருக்கும் பூவை தூக்கி எறிந்தாள். நகைகளை அனைத்தையும் கழற்றினாள். பழைய உடைகளை எடுத்து போட்டுக்கொண்டு தரையில் படுத்துவிட்டாள்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -4

கைகேயி மந்தரையின் பேச்சை பொருட்படுத்தவில்லை. மந்தரா ஒரு வேலைக்காரி இவளால் அரச குடும்ப விசயங்களை இவளால் புரிந்து கொள்ளமுடியாது என்ற எண்ணி மந்தரையிடம் பேச ஆரம்பித்தாள். ராமன் தசரத சக்ரவர்த்திக்கு முத்த குமாரன் அவனே இளவரசனாக பதவி எற்க உரிமையுள்ளவன். ராமர் மக்களின் அன்புக்கு பாத்திரமானவன். ஞானிகள் ராமரை தெய்வம் என்று எண்ணி போற்றுகின்றனர். சத்தியத்தின் சொரூபமான ராமன் அறநெறி பிசகாதவன். தன்னை பெற்றடுத்த கௌசலையை விட என் மீது அதிகமாக அன்பு வைத்து எனக்கு பணிவிடை செய்கின்றான். அவன் ஆட்சிக்கு வரும் போது அவனால் எனக்கு எந்த இடைஞ்சலும் வராது. தன் சகோதரர்களை தன் சொரூபமாகவே நேசிக்கின்றான். ராமனுடைய ஆட்சிக்கு பிறகு பரதனும் ஒரு நாள் அரசனாகி இந்நாட்டை ஆட்சி செய்வான். உன் கற்பனைகளை ஒதுக்கு வைத்துவிட்டு நீயும் நாளை பட்டாபிஷேக விழாவில் கலந்து கொள்வாயாக என்று கைகேயி மந்தராவிடம் கூறினாள்.

முன்பு இருந்ததைவிட இப்போது மந்தராவுக்கு முகவாட்டம் அதிகமானது. கைகேயிடம் மேலும் பேச ஆரம்பித்தாள். இப்போது ராமன் அரசனானால் அவனுக்கு பிறகு ராமனின் பிள்ளைகள் அரசனாவார்கள். ராமனுடைய சகோதரனான பரதன் ஒரு போதும் அரசனாக மாட்டான். அரச குமாரர்கள் அனைவரும் ஆட்சி புரிய எண்ணினால் சமுதாயத்தில் குழப்பமே உருவாகும். ராஜதந்திரம் அறிந்த அரசன் ஒருவன் தன் பிள்ளைகளேயே அரசனாக்கவே விரும்புவான். தனக்கு நிகரான உடன் பிறந்தவர்களை உடன் வைத்திருக்கமாட்டார்கள். ஏதேனும் சொல்லி கண்ணுக்கேட்டாத தூரத்திலேயே வைத்திருப்பார்கள். அதுபோல் ராமன் தனது ராஜதந்திரத்தால் பரதனை தூரத்திலேயே வைத்திருப்பான். இப்போதும் பரதன் பல தூரம் தள்ளி தனது தாத்தாவுடன் பல வருடங்களாக இருக்கின்றான். இதனால் மக்கள் பலருக்கு பரதனின் முகமே மறந்துபோயிருக்கும். அனைவரும் ராமரை பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றார்கள். பரதனை அனைவரும் மறந்து விட்டார்கள்.

ராமன் அரசனானால் பரதனை விரோதி போலவே பார்ப்பான். விரோதிகளை அரசர்கள் எப்போதும் விட்டுவைக்கமாட்டார்கள். பயத்தினால் கொன்று விடுவார்கள். பரதனை ராமன் சந்தேகமாகவே பார்ப்பான் ஒரு நாள் பயத்தில் கொன்று விடுவான். பரதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அவன் உயிருடன் இருக்கவேண்டும் என்றால் அவனின் தாத்தாவுடனேயே தங்க வைத்துவிடு. கௌசலை தசரதரின் முதல் மனைவியாக இருந்து அவரின் அன்புக்கு பாத்திராமாக இருந்தாள். உன்னை திருமணம் செய்ததும் அவரின் அன்புக்கு நீ பாத்திரமானாய். இதனை கௌசலை மறந்திருக்கமாட்டாள். உன் மீது கோபத்துடனே இருப்பாள். நேரம் கிடைக்கும் போது உன்னை பழி வாங்க காத்திருப்பாள். அதற்கான நேரம் இப்போது கௌசலைக்கு வந்துவிட்டது. உன்னை இப்போது பழிவாங்குவாள். உன்னை சிறு வயதில் இருந்து நான் உன்னை பேணி வருகிறேன் உன் நலனில் எனக்கு மிகுந்த அக்கரை உள்ளது. வேறு எந்த குறிக்கோளும் என்னிடம் இல்லை ஆகவே என் சொல்படி நடந்துகொள் இல்லை என்றால் ராமர் பட்டாபிஷேகம் முடிந்ததும் நீயும் பரதனும் வேலைக்காரர்களை போல இங்கு இருப்பீர்கள் என்று சொல்லி முடித்தாள்.