ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 95

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 95

விருத்தகிரீஸ்வரர் ஆலயம் பற்றி அகத்தியர் மாமுனிவரின் (குருநாதர்) பொதுவாக்கு

இறைவன் அருளால் கண்டராதித்தன் சோழன் காலத்திருந்தே பெருமை பெற்றது விருத்தகிரீஸ்வரர் ஆலயம். விருத்தம் என்றால் இலக்கணத்திலே விருத்தம் என்ற பா வகை இருக்கிறது. பழமை என்ற ஒரு பொருளும் இருக்கிறது. பழமறைநாதர் என்ற நாமத்தோடு அங்கு சிவபெருமான் அருள்புரிந்து கொண்டிருக்கிறார். காசி போன்ற இடங்களுக்கு செல்ல இயலாதவர்கள் இந்த விருத்தகிரிக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த ஸ்தலம் முழுவதுமே கிரிவலம் போல பிரகார வலம் வருவதும் குறிப்பாக மாத சிவராத்திரியன்று வணங்கினால் கடுமையான பிரம்மஹத்தி தோஷம் நீங்கக்கூடிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. மிக மிக உயர்வான ஆலயம். அங்கு ஆழத்து பிள்ளையார் இருக்கிறார். அந்த ஆழத்து பிள்ளையை ஒவ்வொரு மனிதனும் சதுர்த்தி மற்றும் மக நட்சத்திர தினத்தன்று சென்று நல்ல முறையிலே வழிபாடு ஏழைகளுக்கு அன்ன சேவை செய்தால் கேது திசையால் ஏற்படக்கூடிய சில எதிர் விளைவுகள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எல்லா ஆலயங்களும் சிறப்பான ஆலயங்கள்தான். அங்கு செல்லக்கூடிய மனிதனின் மனம் மனதிலே இருக்கக்கூடிய பக்தி அவன் செய்கின்ற செயல் இவற்றைப் பொறுத்து அவனவனுக்கு பலன் ஏற்படும்.

கேள்வி: வான மண்டலத்தில் பல மாற்றங்கள் உதாரணமாக உத்தராயணம் தட்சிணாயனம் வளர்பிறை தேய்பிறை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் விடியற்காலையிலே தோன்றும் விடிவெள்ளி மாறாமல் இருக்கிறதே அது எப்படி?

விடிவெள்ளியும் மாறிக் கொண்டுதான் இருக்கிறதப்பா. அதை கவனித்துப் பார்த்தால் புரியும்.

விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

சுலோகம் -67

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #20

இந்த ஆத்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. இந்த ஆத்மா பிறப்பற்றவன் நித்தியமானவன் எக்காலத்திலும் உள்ளவன் பழமையானவன். உடல் கொல்லப்படும் போது இந்த ஆத்மா கொல்லப்படுவதில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த ஒரு பொருளுக்கும் ஆறு விதமான செயல்கள் உண்டு. அவை 1. உருவாகுதல் 2. உண்டான பிறகு அதனது தன்மைக்கு ஏற்ப இருப்பது 3. வளர்வது 4. தன்மைக்கு ஏற்ப உருமாறி அதன் செயல்களை செய்வது. 5. தேய்வது 6. அழிவது. மேற்சொன்ன ஆறு விதமான செயல்களும் ஆத்மாவிற்கு இல்லை. ஆத்மா இறைவனிடம் இருந்து பிரிந்து வந்து பல பிறவிகள் எடுத்து பலவிதமான உடல்களில் வசித்து பின்பு உடல் அழிந்ததும் வேறு ஒரு உடல் எடுக்கின்ற ஆத்மாவனது தனது கர்மங்கள் அனைத்தையும் தீர்த்த பின்பு இறைவனிடமே சென்று சேர்ந்து விடுகிறது. ஆதி காலத்தில் இருந்தே இருக்கின்ற ஆத்மாவானது எப்போதும் நித்தியமாக இருக்கும். உடலில் சிறிது காலம் இருக்கும் இந்த ஆத்மா உடல் கொல்லப்பட்டாலும் அழிவதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 94

அகத்தியர் மாமுனிவரின் (குருநாதர்) பொதுவாக்கு

மனித வடிவிலே சிறந்த குரு வேண்டுமென்று பல மனிதர்கள் நாடுகிறார்கள். நன்றாக புரிந்து கொண்டிட வேண்டும். மனித வடிவிலே சிறந்த குருமார்கள் இல்லாமலில்லை. ஆனால் அதை ஒரு மனிதன் தன்னுடைய முன்ஜென்ம பாவங்களை குறைத்து குறைத்து குறைத்து அதனையும் தாண்டி ஆன்மீக தாகம் எடுத்து எடுத்து எடுத்து அதை நோக்கிய சிந்தனையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாத நிலையில் இறைவனாகப் பார்த்துதான் தக்க குருவை அனுப்பி வைப்பார். ஆனால் தன்னைப் பற்றி வெளியில் கூறிக்கொள்ளும் பெரும்பாலான குருமார்கள் அனைவருமே முழுமையான ஞானமோ முழுமையான இறையருளைப் பெற்றவர்களோ அல்ல. வெறும் ஒரு மடத்து நிர்வாகியாகவும் ஆன்மீகத்தைத் தொழில் போலவும் செய்யக்கூடிய மனிதர்களே அதிகம். எனவே மனித வடிவில் குருவைத் தேடி காலத்தை வியம் (விரயம்) ஆக்கிட வேண்டாம். சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு நல்ல விஷயம் இல்லாமலிருக்காது. அதைக் கற்றுக் கொண்டு தனக்குள்ளே பிரம்மத்தைத் தேடுகின்ற முயற்சியாக அமைதியாக முன் அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து அமைதியாக மிக மெதுவாக சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பத்தை செய்திடாமல் மெல்ல மெல்ல சுவாசப் பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து எது நடந்தாலும் சிந்தனை எத்தனை தடுமாற்றம் அடைந்தாலும் சிந்தனை எங்கு அலைந்து திரிந்து திளைத்து சென்றாலும் எத்தனை குழப்பம் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை கொண்டு பார்க்க பழக வேண்டும். ஒரு சிந்தனை தவறு என்றால் அந்த சிந்தனை இன்னொரு மனிதரிடம் அதிலும் ஆன்மீக வழியில் வரும் மனிதரிடம் இருந்தால் இவன் ஏற்றுக் கொள்வானா? என்று பார்த்து இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றால் பிறரிடம் இந்த சிந்தனையிருந்தால் அவனை மதிக்கமாட்டோம் என்றால் நம்மிடம் மட்டும் ஏன் இந்த சிந்தனை? என்று ஆய்ந்து பார்த்து பகுத்துப் பார்த்து இவனை இவன் சரிசெய்து கொண்டால் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்படும்.