சுலோகம் -82

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #35

இந்த போரில் உள்ள மகாரதர்கள் இது வரையில் உன்னை மிகவும் உயர்வாக மதித்து வந்தார்கள். இப்போது நீ யுத்தம் செய்யாமல் சென்று விட்டால் நீ பயம் காரணமாக யுத்தத்தை விட்டு சென்று விட்டாய் என்று எண்ணுவார்கள். அவர்கள் முன்பு நீ தாழ்ந்த நிலையை அடைவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த குருசேத்திரப் போரில் யுத்தம் செய்வதற்காக பல மகாரதர்கள் என்று சொல்லக்கூடிய வீராதி வீரர்கள் இரண்டு பக்கமும் வந்திருக்கிறார்கள். அவர்கள் இதற்கு முன்பாக நீ செய்த யுத்தத்தில் உனது வீரத்தை பார்த்து உன்னை மிகவும் உயர்வாக மதித்து வந்தார்கள். இப்போது யுத்தகளத்திற்கு நீ வந்ததும் பாசத்தின் காரணமாக யுத்தம் செய்ய மாட்டேன் என்று திரும்பி சென்று விட்டால் உயிர் பயத்தின் காரணமாகவே நீ சென்று விட்டாய் நீ கோழை என்று உன்னை தாழ்த்திப் பேசுவார்கள். அனைவரின் முன்னிலையிலும் நீ தாழ்ந்த நிலையை அடைவாய். இது உன் உயர்ந்த நிலைக்கு சரியானது இல்லை என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 149

கேள்வி: கோவில் வழிபாடு பற்றி?

முதலில் கோவில் கோபுரங்களை வணங்க வேண்டும் கோவில் படிக்கட்டுகளில் பெரும்பாலும் முனிவர்கள் தவம் செய்து கொண்டிருப்பார்கள் அவர்களிடம் மானசீகமாக நான் மனிதனாய் பிறந்துவிட்டேன் வேறு வழி இல்லாமல் உங்களை மிதித்துக் கொண்டு செல்கிறேன். மன்னித்து ஆசி கூறுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். (வேறொரு வாக்கில் கோவில் படிக்கட்டுகளுக்கு பால் அபிசேகமே செய்யலாம் தெரியுமா என்று உரைத்திருந்தார்). கோவில் புண்ணிய தீர்த்தங்கள் இருந்தால் அவற்றில் நீராடி இயலவில்லை என்றால் அவற்றில் பாதம் நனைத்து அந்த தீர்த்தத்தை தெளித்துக் கொள்ளவேண்டும். கருவறை உள்ளே செல்லும் முன்னர் துவார பாலகர்களை வணங்கி விட்டு உள் செல்ல வேண்டும். நிறைய வாசனை மிக்க மலர்களை சாற்றி அந்த ஆலயத்தில் உள்ள நம்பிக்கையின்படி நிறைய நெய் தீபங்களை ஏற்றிட வேண்டும். ஆலய அர்ச்சகர் மற்றும் மிக முக்கியமாக கோவில் சுத்தம் செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு அவர்கள் வாழ்நாளில் இதுபோல் இன்னொரு முறை தர்மம் கிடைக்குமா என்று என்னும் அளவுக்கு நிறைய தர்மம் செய்து விட வேண்டும். பின்னர் ஆலய பிரகாரங்களை வலம் வந்து கொடி மரத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். பின்னர் தனிமையில் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து பிராத்தனை செய்து கொள்ள வேண்டும். மேலே சசொன்ன விஷயங்களில் மிக முக்கியம் செய்கின்ற பிராத்தனை ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும்.

கேள்வி: மந்திரங்களை உறு ஏற்ற:

மனம் திடம் பெறத்தான் மந்திரம். நலம் பெறத்தான் மந்திரம். மந்திரத்தை உதடு சொன்னாலும் மனமும் சேர்ந்து சொல்ல வேண்டும். மனதை ஒரு நிலை படுத்தி உறு ஏற்றுவது நலம். பல வகையான மந்திரங்களை உறு ஏற்ற முடியாத நிலையில் ஏதேனும் தெய்வ வடிவத்தின் ஒரே வகையான மூல மந்திரங்களை அதிகம் அதிகம் உறு ஏற்றலாம். உடல் சுத்தம் உள்ள சுத்தத்துடன் சினம் இன்றி பதற்றமின்றி விரக்தி இன்றி அகமும் முகமும் மலர மந்திரம் உறு ஏற்றப்பட வேண்டும். இல்லத்தில் அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ உறு ஏற்றலாம். பூஜைக்கு பிறர் இடர் செய்ய கூடாது என்று எப்படி நாம் எண்ணுகிறோமோ அப்படியே நாம் செய்யும் பூஜையும் பிறருக்கு இடையூறு செய்ய கூடாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 148

கேள்வி: மும்மூர்த்திகளில் (பிரம்மா சிவன் விஷ்ணு) மூவரும் ருத்ரன் தான் சிவனா அல்லது இவர்கள் மூவருக்கும் மேலே உள்ள சக்தியா?

ஒரே பசுவின் கால் கண் வால் மடியைக் காட்டி இதுதான் பசுவா? இதுதான் பசுவா? என்றால் எப்படி இருக்குமோ அப்படிதான் நீ வினவிய வினாவும். அனைத்துமே பரம்பொருள்தான். பரம் பொருளை நீ பிரம்மா விஷ்ணு ஏன் சிறிய தேவதையாக அன்னை பராசக்தியாக வணங்க விரும்பினால் அப்படியே செய். இறையை வணங்க ஒரு வுருவம் தேவை. அதை வைத்துதான் ஒரு மனிதன் தன் கவனத்தை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதற்காக தான் ஒரு புற தோற்றம். அதையும் தாண்டிய ஒரு நிலைதான் இறை உணர்வு. அந்த இறை உணர்வை நீ உணரும் போது நீ வினவிய அனைத்து வினாக்களும் ஏன் அனைத்து ஐயங்களும் அடிப்பட்டுப் போய்விடும். பரிபூரண நிசப்தம் சாந்தம் சாந்தி ஒரு இனம் புரியாத இன்ப உணர்வு அதாவது கடுமையான குளிர் வாட்டி கொண்டிருக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் போது ஏற்படும் அனுபவம் போல் வைத்துக் கொள். எனவே இது அதுவா? அது இதுவா? ஏன் நான்முகனுக்கு (பிரம்மன்) ஆலயம் இல்லை? இது எல்லாம் இறையோ பரம் பொருளோ எடுத்த முடிவு அல்ல. இன்று எப்படி தன்னை புத்திசாலி என்று கூறிக்கொண்டு முட்டாள்தனமான மனிதர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்களோ அப்படி ஒரு முட்டாள் பின்னால் பல முட்டாள்கள் போய் கொண்டிருக்கிறார்கள்.

வெறும் பகட்டு மயக்கு வாரத்தைகளை கேட்டு அவன் பின்னால் செல்லும் கூட்டம் எக்காலத்திலும் இருக்கிறது. அப்படிதான் கால ஓட்டத்தில் அனைத்து ஆலயங்கள் வழிபாடுகள் இருந்தது போய் சில தெய்வ வழிபாடுகள் மறைந்து போயிருக்கிறது. எனவே இதற்கும் இறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனக்கு இப்படித்தான் ஆலயம் வேண்டும் என்று தெய்வம் கூறியதே இல்லை. மனிதர்கள் பாமர நிலையில் உணர வேண்டும் என்பதற்காக ஒரு சில வழிபாட்டு முறைகளையும் உச்ச நிலையில் தியானம் போன்ற முறைகளையும் மகான்கள் வகுத்து கொடுத்தார்கள். ஆனால் இவன் ஏதாவது ஒரு நிலையில் நின்று கொண்டு அதுதான் உச்ச கட்டம் என்று வாதாடுகின்ற பரிதாபத்திற்குரிய மனிதர்களாக கால போக்கிலே ஒவ்வொருவரும் மாறிவிட்டது தான் வேதனை.

சுலோகம் -81

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #34

இந்த உலகத்தில் உள்ளவர்கள் நீண்ட காலம் உன்னைப் பற்றி நீங்காத பழியை பேசுவார்கள். பல புகழை உடைய உன்னைப் போன்றவனுக்கு இப்படிப்பட்ட அவச்சொற்கள் மரணம் போன்றது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த தர்ம யுத்தத்தை நீ செய்யவில்லை என்றால் இந்த உலகத்தில் உள்ளவர்கள் நீண்டகாலம் உன்னை இகழ்ந்து கொண்டே பேசிக் கொண்டிருப்பார்கள். தர்மத்தின் வழி நிற்பவன். யாராலும் செய்ய முடியாத பல மேலான தவங்கள் செய்து பல அஸ்திர சாஸ்திரம் கற்றவன். தைரியம் மிகுந்தவன் என்றெல்லாம் பெரும் புகழ் பெற்ற உனக்கு உலக மக்களின் இந்த இகழ்ச்சியான அவச் சொற்களும் பழிச் சொற்களும் மரண அவஸ்தையை கொடுக்கும். ஆகவே இந்ந பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் இந்த யுத்தத்தை செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 147

கேள்வி: வேல் வழிபாடு பற்றி:

வேல் வழிபாடு என்பது துவக்க காலத்தில் இருந்தே இருக்கிறது. இடையிலேதான் வேல் வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. வேல் யார் தெரியுமா? அன்னை தான் (பராசக்தி). அன்னையின் (பராசக்தி) அம்சம்தான் வேல். வேலை வணங்குவதும் அன்னை பராசக்தியை வணங்குவதும் ஒன்றுதான். எனவே முருகனின் ஆயுதமாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட விஷயம் வேல் என்பதால் மனிதனுக்கு அதைத் தாண்டிய விஷயங்கள் தெரியாமல் போய்விட்டது. எதிர்ப்புகளும் தோஷங்களும் கடுமையான கர்மாக்களும் குறைவதற்கு இந்த வேல் வழிபாடு உதவும். வேலை பவித்ரமாக வைத்து அதை வணங்கினால் பல்வேறு வேதனைகள் தீரும். அது மட்டும் அல்லாது மனிதன் ஆசைப்படுகிறானே வைரம் வைடூரியம் முத்து கனகம் (தங்கம்) போன்ற கற்கள் எங்காவது தனக்குதானே மதிப்பு வைத்திருக்கிறதா? மனிதன்தான் அவற்றின் மீது மதிப்பு வைத்திருக்கிறான். இந்த நவரத்னங்கள் உலோகங்களில் வெளிப்படும் கதிர்வீச்சுகள் எல்லாம் மனிதனுக்கு நன்மையைத் தரும். அதனால் பலருக்கு நன்மை தரும் நோக்கிலேதான் சுவாமிக்கு வைரக் கிரீடம் தங்கக் கவசம் வைள்ளிக் கிரீடம் நவரத்னம் பதிக்கப்பட்ட வேல் வைப்பதன் காரணம் இதுதான். இவற்றை தரிசனம் செய்தாலே கற்கள் உலோகங்களின் தோஷம் குறையும். சில தோஷங்களை தரிசனம் நயன (பார்வை) தீட்சயாலே ஒரு குரு நீக்குவது போல நீக்கிக் கொள்ளலாம். அது போல ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேல் செம்பால் பித்தளையால் செய்யப்பட்ட வேல் – எதுவாயினும் உரு ஏற்றி பூஜை செய்தால் கடுமையான எதிர்ப்பு முக்கியமாக காவல் துறை ரணகளத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு நன்மையைத் தரும்.

சுலோகம் -80

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #33

இந்த தர்மத்தோடு கூடிய யுத்தத்தை நீ செய்யவில்லை என்றால் அப்போது குல தர்மத்தையும் புகழையும் இழந்து பாவத்தை பெறுவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த தர்ம யுத்தத்தை அர்ஜூனனாகிய நீ செய்யவில்லை என்றால் இத்தனை வருடங்களாக தர்மத்தை காத்து நிற்கும் உனது குல தர்மத்தை நீ விட்டவன் ஆவாய். நீ இத்தனை நாட்கள் பல நல்ல காரியங்கள் மற்றும் பல யுத்தங்கள் செய்து சேர்த்து வைத்த புகழையும் இழந்து விடுவாய். நீ உனது கடமையில் இருந்து விலகியவன் ஆவாய். இதனால் நீ நீங்காத பாவத்தை பெறுவாய் ஆகவே யுத்தம் செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 146

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 146

கேள்வி: ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்கள் பற்றி:

அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. தன்னாலும் முடியும் என்றால் தன்னம்பிக்கை. தன்னால் மட்டும்தான் முடியும் என்றால் அது ஆணவம். ஒரு தொழில் ரீதியாக புகழ் ரீதியாக ஒரு பதவி ரீதியாக மட்டும் ஆணவம் வருகிறது என்பதல்ல. நான் எப்படி செய்வேன்? என்னைப் போய் இப்படி கூறிவிட்டானே? நான் எப்பேற்பட்ட மனிதன்? என்னை ஒருவன் இப்படி பேசிவிட்டானே? நான் எப்படியெல்லாம் வாழ்ந்தேன்? என்னை எப்படியெல்லாம் வளர்த்தார்கள்? இப்படி பேசிவிட்டானே? என்று ஒருவன் எண்ணினால் அதுவும் ஆணவத்தின் ஒரு பகுதிதான். நாம் இந்த அண்ட சராசர பிரபஞ்சத்திலே வெறும் தூசியிலே தூசி. இந்தக் காற்றிலே கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ பூச்சிகள் உயிரினங்கள் அலைந்து கொண்டு இருக்கின்றன. அது போல இந்த அண்ட சராசரங்களை எல்லாம் பார்க்கும் போது எத்தனையோ கிரகங்கள் உயிரினங்கள். அனைத்திற்கும் அதனதன் வழியில் அதனதன் போக்கில் துன்பங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. எனவே துன்பம் ஒருவனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மனதை தெளிவாக வைத்துக் கொண்டால் எல்லாம் மாயை என்பது புரியவரும்.

கேள்வி: நவகிரகங்கள் பற்றி?

கையூட்டு வாங்காத நேர்மையான காவல் அதிகாரிகள்.

கேள்வி: என்றாவது நவகிரங்கள் தங்களால் இவ்வளவு ஆத்மாக்கள் துன்பப்படுகிறார்களே என்று எண்ணி வருத்தப்பட்டதுண்டா?

எதற்காக வருந்த வேண்டும்? ஒரு குழந்தை பிற்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தடுப்பு ஊசி போட வேண்டும் ஊசி போடுவது என்பது குழந்தைக்கு வலியை உண்டாக்கும் என்பதால் அந்த குழந்தைக்கு அந்த தடுப்பு பூசி போட வேண்டுமா வேண்டாமா?

சுலோகம் -79

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #32

அர்ஜூனா தர்ம யுத்தம் என்ற இந்த அபூர்வமான நிகழ்வு உனக்கு தானகவே அமைந்துள்ளது. இது போன்ற தர்ம யுத்தங்கள் மோட்சத்தின் கதவுகளை திறக்கவல்லவை ஆகும். இத்தகைய தர்ம யுத்தத்தை பாக்கியமுடைய ஒரு சில க்ஷத்திரர்கள் மட்டுமே பெற முடியும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பேராசைக்காகவோ சுய நலத்திற்காகவோ அல்லது நாட்டையும் அதிலுள்ள சுகங்களையும் அடைந்து புகழ் பெற வேண்டும் என்பதற்காகவோ இந்த யுத்தத்தை பாண்டவர்களாகிய நீங்கள் செய்யவில்லை. தர்மம் நிலை பெற வேண்டும் என்று அதர்மத்திற்கு எதிரான யுத்தம் இது. இந்த யுத்தம் நீ தேடிச் சென்றோ நீ விரும்பியோ வரவில்லை. தானாகவே உனக்கு அமைந்திருக்கிறது. இந்த யுத்தத்தில் உன்னைப் போலவே பேராசைக்காகவும் சுய நலத்திற்காகவும் இல்லாமல் தர்மத்திற்காக யுத்தம் செய்து இறந்து போகும் வீரர்கள் நேரடியாக சொர்க்கம் செல்வார்கள். இத்தகைய தர்ம யுத்தங்கள் பாக்கியமுடைய க்ஷத்திரர்களுக்கு மட்டுமே அமையும். உனக்கு அதற்கான பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆகையால் யுத்தம் செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

குப்தர் கால விஷ்ணு கோவில் மற்றும் வராக மூர்த்தி

குப்தர் கால விஷ்ணு கோவில் மற்றும் வராக மூர்த்தி

இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் சாகர் நகரத்தின் வடமேற்கே 75 கி மீ தொலைவில் வீணா தாலுகாவில் பீணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஏரான் என்ற இடம். இங்கு விஷ்ணு கோவில் வராக மூர்த்தியுடன் கோவில் உள்ளது. தற்போது சிதிலப்பட்டு காணப்படும் இக்கோவில் கிபி 510 ம் நூற்றாண்டை சேர்ந்த்தாக இந்த கோவில் கருதப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையால் இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. குப்தப் பேரரசின் நிர்வாகத் தலைமையிட நகரமாக ஏரண் விளங்கியது. ஏரண் நகரம் நாக குலத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது என மகாபாரத்தின் ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது. மௌரியர்கள் சுங்கர்கள் சாதவாகனர்கள் சாகர்கள் நாகர்கள் குப்தர்கள் ஹூணர்கள் காலச்சூரிகள் காலத்திய பழந்தொன்மை மிக்க நினைவுச் சின்னங்கள் ஏரணில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோவில் சிதிலமடைந்து விஷ்ணுவின் சிலை உள்ளது. எதிரில் வராக மூர்த்தி சிலை திறந்த வெளியில் மேற்கு நோக்கி உள்ளது. இச்சிலை சுமார் 14 அடி நீளம் 5 அடி அகலம் மற்றும் 11 அடி உயரம் கொண்டது. இந்த சிலை இந்தியாவின் மிகப்பெரிய வராக சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சிலை 1185 முனிவர்களின் தலை முதல் கால் வரை முழுமையான உருவங்களை பன்னிரண்டு வரிசைகளில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு வரிசை உருவங்கள் யூ வடிவில் வராகத்தின் உடலில் செதுக்கப்பட்டுள்ளன. பன்னிரண்டு வரிசைகளிலும் இரண்டு ஆயுதம் ஏந்திய முனிவர்களின் உருவங்கள் உள்ளன. மற்றவர்கள் ஒரு கையில் தண்ணீர் பாத்திரத்தையும் மற்றொரு கையில் அபய முத்திரை அல்லது விஸ்மயா முத்திரையுடன் உள்ளார்கள். வராக மூர்த்தியின் வலது தந்தத்தில் பூதேவியின் உருவம் உள்ளது. வராக மூர்த்தியின் முகத்தில் சரஸ்வதி சமபங்க தோரணையில் இடுப்பில் கைகளை ஊன்றியபடி நிற்கிறாள். காதுகளில் வித்யாதரர்கள் உள்ளார்கள். வராக மூர்த்தியின் கழுத்தில் இருபத்தெட்டு வட்டங்கள் கொண்ட மாலை உள்ளது. இருபத்தேழு வட்டங்களுக்குள் ஒரு ஆண் மற்றும் பெண் உருவம் உள்ளது. ஒரு வட்டத்தில் மட்டும் தேள் உருவம் உள்ளது. தொண்டை மற்றும் மார்புப் பகுதியில் நான்கு வரிசையில் ஆண் உருவங்கள் உள்ளது. மொத்தம் தொண்ணூற்றாறு வகையான உருவங்கள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாவது வரிசைக்கு இடையில் மேலிருந்து நடுவில் தாமரையின் மீது விஷ்ணு நிற்கும் உருவம் உள்ளது. அவர் இரண்டு கைகளுடன் இருந்திருக்கிறார். தற்போது இரண்டு கைகளும் சிதிலமடைந்திருக்கிறது. மார்பின் மூன்றாவது வரிசையில் ஏழு கோள்களைக் குறிக்கும் ஏழு ஆண் உருவங்களும் இடதுபுறம் 2 கோள்களை குறிக்கும் வகையில் இரண்டு உருவங்கள் தாமரைகளை கையில் ஏந்தியவாறும் மீதமுள்ளவர்கள் தண்ணீர் பாத்திரத்தை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கின்றனர்.

வராகத்தின் தோள்களில் துருத்திக் கொண்டு இருப்பது போன்ற ஒரு கட்டை உள்ளது. அதன் நான்கு பக்கங்களிலும் மேற்கில் வாசுதேவரும் தெற்கில் சிவனும் வடக்கே பிரம்மாவும் கிழக்கில் விஷ்ணுவும் உள்ளார். வராகத்தின் கால்கள் மற்றும் வால் பகுதியிலும் முன்கால்களில் ஆறு வரிசைகளிலும் பின்னங்கால்களில் மூன்று வரிசைகளிலும் முனிவர்கள் வரிசைகளாக உள்ளார்கள். வராகத்தின் கால்களுக்கு இடையில் பாம்புகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் செதுக்கப்பட்டுள்ள கடலின் சித்தரிப்பு உள்ளது. வராகத்தின் கழுத்தின் கீழ் சமஸ்கிருதத்தின் 8 வரிகளில் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் இந்த வராக மூர்த்தி அவதாரம் புனிதர்கள் மற்றும் அறிஞர்களைப் பாதுகாப்பதைக் குறிக்கும் படி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

சுலோகம் -78

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #31

அவ்வாறே தன்னுடைய சுயதர்மம் என்று பார்த்தாலும் நீ பயப்படக்கூடாது. ஏனெனில் க்ஷத்திரியன் ஒருவனுக்கு தர்மத்தின் வழி நடக்கின்ற போரைக் காட்டிலும் வேறு ஒரு நன்மை தரும் கடமை கிடையாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இப்போது தொடங்கியுள்ள இந்த யுத்தத்தில் உயிர்களை கொல்வது என்பது தவிர்க்க இயலாது. இவ்வாறு கொல்வது அந்த உயிர்களை வதை செய்வது போன்றதாகும் என்று எண்ணி உனக்கு விதிக்கப்பட்ட கடமையை நீ விடக்கூடாது. இறப்பவர்களைப் பற்றி நீ கவலைப்படாதே. ஏனெனில் அவர்கள் இந்த உடலை விட்டாலும் வேறு உடலுக்குள் சென்று விடுவார்கள். உனது வாழ்வில் யுத்த தர்மம் என்பது க்ஷத்திரியனுக்குரிய தர்மமாகும். யுத்த தர்மத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நீ வருந்துவது உனக்கு தகாது. க்ஷத்திரியனுக்கு தர்மத்திற்காக நடைபெறும் யுத்தம் என்பது இயற்கையாகும். இந்த யுத்தங்கள் தர்மத்தை நிலைநாட்டவும் மக்களை காக்கவும் ஆகும். அதன் விளைவாக நாட்டை கைப்பற்றுதல் நிகழ்கிறது. இது தர்மமான செயலே ஆகும். க்ஷத்திரியன் ஒருவனுக்கு இப்படிப்பட்ட தர்ம யுத்தத்தை விட வேறு எதுவும் நன்மை தராது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.