ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 59

கேள்வி: அம்மா (அகத்திய மாமுனிவரின் மனைவி லோபாமுத்திரா தேவி) எங்களுக்கு வாக்கு அருள வேண்டும்?

இறைவன் அருளால் அவள் தான் நான் (லோபாமுத்திரா தேவியே தான் அகத்தியர்) என்றும் நான் தான் அவள் (அகத்தியர் தான் லோபாமுத்திரா தேவி) என்றும் கூறிய பிறகு இங்கே எந்த நாமத்தில் யார் உரைத்தால் என்ன? என்பதே அவள் எம் மூலம் கேட்ட வினா.

இறைவன் அருளால் எழு ஜென்மம் என்பதே ஏழு ஜென்மம் என்று சித்தரிக்கப்படுகிறது. எழுந்து எழுந்து வருகின்ற ஜென்மம் என்பது இதற்கு பொருளாகும். ஏழு என்பது எண்ணிக்கையைக் குறிப்பதல்ல. எத்தனையோ எழுகின்ற ஜென்மம் மனிதனுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. மாணிக்கவாசகன் கூறியது போல் புல்லாகி பூண்டாகி என்று மனித ஆன்மா இந்த சட்டையை மாற்றிக் கொண்டே இருக்கிறது. சட்டையை மாற்றியது போதும் என்றும் மாறாமல் இருக்கின்ற பரம்பொருளோடு இரு என்று நாங்கள் வழிகாட்டுவதே இந்த ஜீவ அருள் ஓலையில் (ஜீவநாடி) இறைவன் எமக்கு இட்ட கட்டளையாகும். எனவே ஏழு பிறவி இல்லையப்பா. ஏழாயிரம் ஏழாயிரம் ஏழாயிரம் கோடி கோடி என்று உன்னால் எத்தனை பூஜ்யங்கள் சேர்த்துக் கொள்ள முடியுமோ அத்தனை பூஜ்யங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

அறியாமை விலகி தன்முனைப்பு (அகங்காரம்) அகன்று கர்வம் ஒடுங்கி இறைவனை உணரும் வரை தெய்வீக விழிப்புணர்வு கிட்டும் வரை ஒரு ஆன்மாவிற்கு பிறவி தொடரும் மனித சட்டைதான் என்றில்லை எல்லா வகையான சட்டைகளும் கொடுக்கப்படும். இந்தப்பிறவி துன்பம் போக வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு மகான்கள் ஞானிகளின் ஆசை. இந்த நிலையிலே ஆத்மா நல்ல நிலையிலே பிறவி எடுத்தாலும் கூட இந்த மனித சட்டைக்குள் வந்துவிட்ட பிறகு தான் யார்? என்பதை மறந்து தன்னுடைய சுயத்தை மறந்துவிட்டு தன் தேகத்தையே (உடல்) தானாக எண்ணுவது அதாவது ஒரு மனிதன் தன் மானத்தை மறைக்க ஆடையை போர்த்திக் கொள்கிறான். அவனுக்குத் தெரியும் அந்த ஆடை வேறு தான் வேறு என்று என்றாவது ஒரு நாள் ஆடை கிழிந்து விட்டால் நான் கிழிந்து விட்டேன் என்று கூற மாட்டான். என் ஆடை கிழிந்து விட்டது என்று தான் கூறுவான். அதைப் போல ஆன்மா என்பது இந்த மனித சட்டையை போட்டுக் கொண்டு இருக்கிறது. என்றாவது ஒருநாள் இந்த சட்டையை விட்டுவிட்டு அந்த ஆன்மா வேறு நல்ல சட்டைக்கு சென்று விடும். சட்டை மாற்றி சட்டை செல்லாமல் சற்றே ஒரே இடத்தில் இரு என்று ஆணையிடுவதே இறைவன் எமக்கிட்ட ஆணையப்பா. இதற்கு ஒரே வழி சத்தியம் தர்மம் சரணாகதி பக்தி.

விஷ்ணு

கர்நாடகாவில் உள்ள பதாமி குகைகளில் உள்ள விஷ்ணுவியின் கம்பீரமான சிற்பம். விஷ்ணு கருடன் இடப்பக்கம் உள்ளார். வலப்பக்கம் லட்சுமிதேவி உள்ளார்.

சுலோகம் -35

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #35

மதுசூதனா இவர்கள் என்னைக் கொல்வதற்கு விருப்பம் கொண்டாலும் எனக்கு இவர்களை கொல்ல விருப்பம் இல்லை. மூன்று உலகங்களை ஆளும் பதவியை கொடுத்தாலும் இவர்களை கொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இப்படி இருக்கும் போது இந்த ராஜ்யத்திற்காகவா இவர்களை நான் கொல்வேன்?

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: கிருஷ்ணரை மதுசூதனா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

மது எனும் அரக்கனை கிருஷ்ணர் அழித்ததால் அவருக்கு மதுசூதனன் என்று பெயர் பெற்றார். விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைப் பட்டியலிட்டுத் தோத்திர உருவில் பீஷ்மரால் யுதிஷ்டிரனுக்கு சொல்லப்பட்ட விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் 73 வதாக மதுசூதனன் பெயர் வரும். தவறு செய்த அரக்கனை அழித்து மதுசூதனன் என்ற பெயர் பெற்ற கிருஷ்ணரிடம் தவறு செய்து கொண்டிருக்கும் கௌரவர்களை கொல்ல நான் விரும்பவில்லை என்று சொல்வதற்காக மதுசூததன் என்ற வார்த்தையை அர்ஜூனன் பயன்படுத்தினான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 58

கேள்வி: ராமாயண காலத்தில் இருந்த இலங்கைதான் தற்போதும் உள்ளதா? அப்போது இராமனால் அமைக்கப்பட்ட பாலம் இன்னும் கடலுக்கடியில் இருக்கிறதா? சேது பாலம் தற்போது இடிக்கப்பட்டால் ஆஞ்சிநேயர் ராம பக்தர்களால் மக்களுக்கு துன்பம் நேருமா? இந்த திட்டத்தால் வணிக ரீதியாக ஏதேனும் நன்மை கிடைக்குமா?

இறைவன் கருணைக் கொண்டு கூறும் பொழுது ராமன் சென்ற பாதை என்ற பொருளிலே மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமபிரான் வாழ்ந்த சரிதம் என்பது காலம் முன்னர் காலம் முன்னர் நடந்தது என்பது மெய்யிலும் மெய். அடுத்ததாக அப்பொழுது இருந்த இலங்கையின் அளவு இன்னும் இன்னும் பெரியதப்பா. அதன் ஒரு சிறிய பகுதிதான் இப்பொழுது எஞ்சியிருக்கிறது. இன்னொன்று இப்பொழுது கடல் கொண்ட பூம்புகார் போக எஞ்சியுள்ள பூம்புகார் இருப்பது போலதான் இப்பொழுது இருக்கின்ற இலங்கை தேசம். அடுத்ததாக பாலம் எல்லாம் இருப்பது உண்மையென்றாலும் கூட மனித கண்ணுக்கு இப்பொழுது அது புலப்படாது. இன்னொன்று இவற்றை சிதைப்பதால் ராமபிரானுக்கோ மால் தூதனுக்கோ (ஆஞ்சிநேயர்) சினம் வந்துவிடாதப்பா. மனிதன் மனிதனாக வாழாமல் பிறருக்கு சதாசர்வகாலம் தொல்லைகள் தந்து கொண்டே தான் நன்றாக வாழ்வதற்கு பலரை இடர்படுத்தி வாழ்கிறானே? அந்த செயல் ஒன்று தான் இறைவனுக்கு வருத்தத்தையும் சினத்தையும் ஏற்படுத்தும். வருத்தமும் சினமும் இறைவனுக்கு இல்லை. இவன் கேட்பதால் நாங்கள் கூறுகிறோம். மற்றபடி நடந்த காலத்து எச்சங்கள் இப்பொழுது ஆங்காங்கே இருப்பது உண்மை. அவற்றை மனிதன் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை. அதில் ரணமண்டலம் என்கிற மலை ஒன்று இருக்கிறது. அது குறித்து முன்பே யாங்கள் கூறியிருக்கிறோம். இருந்தாலும் இன்னும் விஷயங்கள் பூமியில் புதையுண்டுதான் இருக்கிறது. அது தொடர்பாக சில கற்பனை கதைகள் கூறப்படுகின்றன. எப்படிக் கூறினாலும் எம்பிரான் ராமபிரானின் பெருமைகளைக் கூறுவதால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

இறைவன் அருளால் இது போன்ற விஷயங்களுக்கு எத்தனை விளக்கங்கள் தந்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு மனிதனுக்கு பக்குவம் இருக்க வேண்டும். அதற்கு அவன் கர்மவினை இடம் தர வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கூறுகின்ற விளக்கம் நாங்கள் கூறுகின்ற நோக்கிலே இல்லாமல் மனிதனால் வேறு விதமாக புரிந்து கொள்ளக்கூடிய நிலை வரும். இப்பொழுது ஒரு மனித உடலில் இருக்கின்ற ஆத்மாதான் ஏதாவது பாவத்தால் ஒரு விலங்கு தேகம் எடுக்கிறது அல்லது ஒரு சிறிய பூச்சியாகக்கூட பிறக்கிறது. இன்னொன்று தெரியுமா? ஒரே மனித ஆத்மா பல்வேறு பாவங்களின் காரணமாக பல கூறுகளாக பிரிக்கப்பட்டுகூட ஒரே சமயத்தில் பல்வேறு விதமான விலங்கு பட்சி இன்னும் புழு பூச்சி தேகத்தைக்கூட பெற வாய்ப்பு இருக்கிறது. ஆன்மாவை பிரிப்பதும் சேர்ப்பதும் இறைவனுக்கு மிகவும் கை வந்த கலையப்பா. ஆனால் அப்படியெல்லாம் பிளவுபட்டால் அது மிகப்பெரிய பாவ தோஷமுள்ள ஆத்மா எனலாம். அதே சமயம் மிகப்பெரிய புண்ணிய ஆத்மாக்களும் இறைவனின் அபரிமிதமான கருணையால் தன் ஆன்மாவை ஒரே சமயத்தில் பலநூறு கூறுகளாக பிரித்து பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் பிறவியெடுக்கின்ற நிலைமை ஏற்படும். இறைவன் அல்லது இறைவனுக்கு சமமான முனிவர்கள் இதனை செய்வார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள் செய்தும் இருக்கிறார்கள். பலராமர் பரசுராமர் கிருஷ்ணர் இவர்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியவரும்.

சுலோகம் -33 # 34

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #33

நாம் யாருக்காக ராஜ்யத்தையும் போகங்களையும் இன்பங்களையும் விரும்பினோமோ அவர்களே செல்வத்தையும் உயிர் மேல் உள்ள ஆசையையும் துறந்து யுத்தத்தில் நிற்கிறார்கள்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #34

குருமார்கள் பெரியப்பா சித்தப்பாக்கள் மகன்கள் அவ்விதமே பாட்டனார்கள் தாய்மாமன்கள் மாமனார்கள் பேரன்கள் மைத்துனர்கள் ஆகியோர் இங்கு கூடியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சுலோகத்திலும் அர்ஜூனன் சொல்ல வந்த கருத்து என்ன?

ராஜ்யம் போகம் இன்பம் செல்வம் அனைத்திலும் நிலையான ஆனந்தம் கிடையாது என்று அர்ஜூனனுக்குத் தெரியும். இருந்தாலும் சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்காகத்தான் அனைத்தையும் விரும்பி இருந்தான். ஆனால் அவர்களே போரில் தங்களின் உயிரைத் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் யுத்தத்தில் இறந்து விட்டால் அதன் பிறகு கிடைக்கும் ராஜ்யம் போகம் இன்பம் இதெல்லாம் யாருக்காக? ஆகவே யுத்தம் செய்வது சரியில்லை என்ற கருத்தில் அர்ஜூனன் அவ்வாறு கூறினான். சுலோகம் – 34 இல் சொல்லப்பட்ட உறவினர்கள் அனைவரும் யார் யார் என்று சுலோகம் – 26 இல் சொல்லப்பட்டுள்ளது.

சுலோகம் -32

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #32

கிருஷ்ணா நான் இந்த வெற்றியை விரும்பவில்லை ராஜ்யத்தையும் விரும்பவில்லை சுகங்களையும் விரும்பவில்லை கோவிந்தா நமக்கு இத்தகைய ராஜ்யங்களால் என்ன பயன்? இத்தனை சுகபோகங்களோடு உயிரோடு வாழ்வதில் என்ன பயன்?

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: அர்ஜூனன் உயிரோடு இருந்து பெறும் வெற்றியையும் ராஜ்யத்தையும் ஏன் விரும்பவில்லை?

வெற்றிக்குப் பிறகு கிடைக்கும் ராஜ்யத்தையும் சுகபோகங்களையும் உறவினர்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளாமல் தனியாக அனுபவிக்கும் போது இன்பம் இருக்காது துயரம் மட்டுமே இருக்கும். இந்த துயரம் இறுதிக் காலத்திற்கு பிறகு மேலுலகம் சென்றாலும் தொடரும் என்று அர்ஜூனன் நினைக்கின்றான். அதனால் உயிரோடு இருக்கும் போது இன்பத்தை பகிர்ந்து கொள்ள முடியாத வெற்றியும் ராஜ்யமும் சுகபோகங்களும் இருந்தும் பயனில்லாத காரணத்தினால் அர்ஜூனன் இவற்றை விரும்பவில்லை.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: இந்த சுலோகத்தில் கிருஷ்ணரை கோவிந்தா என்று அர்ஜூனன் ஏன் அழைக்கின்றான்?

கோவிந்தா என்ற சொல்லுக்கு இந்திரியங்களை அடக்கி ஆளுகின்றவன் என்று பொருள். அர்ஜூனன் மன குழப்பத்தில் இருக்கும் போது அவனது இந்திரியங்கள் அடங்காமல் இருக்கிறது. கிருஷ்ணர் குழப்பம் இல்லாமல் தன் இந்திரியங்களை அடக்கி அமைதியாக இருப்பதால் கிருஷ்ணரை கோவிந்தா என்று அர்ஜூனன் அழைக்கின்றான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 56

அகத்தியர் மாமுனிவர் பொது வாக்கு

வாய்ப்பும் வசதியும் இருக்கக் கூடியவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதகாலம் தமிழ் மண் எங்கும் தலயாத்திரைகள் செய்து எல்லா தலங்களுக்கும் சென்று அவர்கள் அவர்கள் வசதிக்கேற்ப நெய் தீபங்களை ஏற்றி வணங்கி வரலாம். நவகிரங்கள் தம்பதியராக இருக்கக்கூடிய ஆலயங்களை தேர்ந்தெடுத்து வாரம் ஒரு முறையோ மாதம் ஒரு முறையோ உயர்வான வழிபாடுகள் செய்யலாம். எதுவும் இல்லாதவர்கள் சுக்ர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை தோறும் இல்லத்திலே மகாலட்சுமி பூஜையை செய்வதோடு நவகிரக வழிபாடும் குறிப்பாக சுக்ர வழிபாடும் செய்யலாம். இது எதுவும் செய்ய இயலாதவர்கள் சுக்ர வாரம் அரங்க தலமாகிய ஸ்ரீரங்கத்திலே அதிகாலை விஸ்வரூப தரிசனத்தை பார்க்கலாம். அதுவும் இயலாதவர்கள் அமைதியாக ஒரு இடத்திலே அமர்ந்து மானசீகமாக இறைவா என் தேவையை நிறைவேற்றிக் கொடு என்று பிராத்தனை செய்யலாம். கட்டாயம் நல்ல வெற்றி உண்டாகும்.

கேள்வி: திருவையாறு பஞ்சநதீஸ்வரர் ஆலயம் எப்போது உருவானது?

அந்த இடத்தில் சுயம்புவாக ஐயன் எப்பொழுதே தோன்றிவிட்டார். ஏறத்தாழ கரிகாலன் காலத்தில்தான் (சுமார் 1800 வருடங்களுக்கு முன்) அந்த ஆலயம் மெல்ல மெல்ல பிரசித்தி பெற ஆரம்பித்தது. இந்த காலம் முன்னர் சிறியதாக இருந்த ஆலயம் பின்னர் ஒவ்வொரு மன்னர் காலத்திலும் விரிவாக்கப்பட்டு இன்றைய தினம் இவ்வாறு இருந்து இன்று பல்வேறு அனாச்சாரங்களுக்கு காரணமாக சராசரியான மலிவான மனிதர்களால் இவ்வாறு இருக்கிறது. இருந்தும் நல்ல பக்தர்களின் உள்ளங்களால் ஐயாரப்பன் அருள்புரிந்து கொண்டுதான் இருக்கிறார்.

திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோவிலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்