ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 33

ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் நீண்ட நேரம் யுத்தம் நடந்தது. ராமரின் அம்புகளால் கும்பகர்ணனின் உடலை துளைக்க முடியவில்லை, இதனை உணர்ந்த ராமர் கூர்மையான அம்புகளால் கும்பகர்ணனின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமாக வெட்ட ஆரம்பித்தார். முதலில் கைகளை வெட்டிய ராமர் பின்பு கால்களை வெட்டி இறுதியாக தலையை வெட்டினார். ராமரின் அம்பின் வேகத்தில் கும்பகர்ணனின் தலை அம்புடன் பரந்து சென்று இலங்கை நகரத்திற்குள் ஒரு மலை விழுவதைப் போல் விழுந்தது. வானரப் படைகளை திணறடித்துக் கொண்டிருந்த கும்பகர்ணன் இறந்துவிட்டான். இதனைக் கண்ட ராட்சச படைகள் அலறியடித்துக் கொண்டு இலங்கை நகரத்திற்குள் ஓடினார்கள். வானர சேனைகள் ஆர்ப்பரித்து கோசங்கள் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்கள்.

ராமர் கும்பகர்ணனை அழித்துவிட்டார் என்ற செய்தியை கேட்ட ராவணனுக்கு தன் உயிர் செல்வதைப் போல் உணர்ந்து மயக்கமடைந்து விழுந்தான். சிறிது நேரம் கழித்து விழித்த ராவணன் கும்பகர்ணனை நினைத்து புலம்ப தொடங்கினான். யாராலும் வெற்றி பெற முடியாத உன்னை ராமர் எப்படி வெற்றி கொண்டார். உன்னுடைய பலம் எங்கே போனது. நீ இறந்த செய்தியை கேட்ட தேவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்களே. நீ இல்லாத இந்த உலகத்தில் நான் வாழ்ந்து பயன் இல்லை. உன்னைக் கொன்ற ராமரை சித்ரவதை செய்து கொன்ற பிறகு நீ இருக்கும் இடத்திற்கு நானும் வருவேன் கும்பகர்ணா என்று புலம்பினான் ராவணன். ஆரம்பத்தில் விபீஷணன் பேச்சை கேட்டிருக்கலாமோ அகங்காரத்தினால் அவசரப்பட்டு விட்டோமோ என்று சபையில் அனைவரின் முன்னிலையில் தனது புலம்பலை கொட்டித் தீர்த்தான் ராவணன். இதனைக் கேட்ட திரிசரன் என்ற ராட்சசன் இப்படி புலம்புவதில் எந்த பயனும் இல்லை. பிரம்மாவினால் கொடுக்கப்பட்ட சக்தியும் ஆயுதங்களும் நம்மை காக்கும் கவசங்களும் இருக்க ஏன் வருத்தப் படுகிறீர்கள் என்று ராவணனுக்கு தைரியம் சொல்லி தேற்றினார்கள். ஆனாலும் ராவணன் புலம்பியபடியே இருந்தான். இதனை கண்ட திரிசரன் நாராந்தகன் தேவந்தகன் அதிகாயன் என்ற நான்கு ராட்சசர்களும் ஒன்றாக யுத்தத்திற்கு செல்ல முடிவு செய்தார்கள். ராவணனிடம் சென்ற நால்வரும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து யுத்தம் செய்தால் எத்தனை வலிமையுடைய வீரனாக இருந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று உங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் நால்வரும் ஒன்றாக யுத்தத்திற்கு செல்ல அனுமதி கொடுங்கள் என்று ராவணனிடம் கேட்டுக் கொண்டார்கள். இதனைக் கேட்ட ராவணன் சிறிது ஆறுதல் அடைந்து அனுமதி கொடுத்தான்.

ராம லட்சுமணர்களை எங்களது அஸ்திரத்தினாலும் வலிமையினாலும் அழித்து விட்டு நாங்கள் உங்களை வந்து பார்க்கிறோம் என்று நால்வரும் அவர்களுடைய படைகளுடன் யுத்தகளத்திற்கு சென்றார்கள். நால்வரும் ஒன்றாக செல்வதால் இம்முறை வெற்றி அடைவோம் ராம லட்சுமணர்கள் அழிவார்கள் என்று ராவணன் நம்பினான். யுத்ததிற்கு வந்த நால்வரும் கடுமையாக போரிட்டு வானர வீரர்களை திணறடித்தார்கள். நால்வரும் பல வானர வீர்ர்களை கொன்று குவித்து தங்கள் வலிமையை காட்டினார்கள். அவர்களை லட்சுமணனும் சுக்ரீவனும் அனுமனும் எதிர்த்து யுத்தம் செய்தார்கள். இறுதியில் நாராந்தகனை சுக்ரீவன் கொன்றான். திரிசரனேயும் தேவந்தகனேயும் அனுமன் கொன்றார். அதிகாயனை லட்சுமணன் கொன்றான். நால்வரும் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை ராவணனுக்கு தெரிவித்தார்கள். ராவணன் கவலையின் உச்சத்திற்கு சென்று தடுமாற ஆரம்பித்தான். இதுவரை நடந்த யுத்தத்தில் யாராலும் வெல்ல முடியாத வலிமையுடன் இருந்த சேனாதிபதிகளும் வீரர்களும் ஒவ்வொருவராக இறந்து கொண்டே வருகின்றார்கள் என்று ராமரைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான் ராவணன். இந்திரனுக்கு நிகரான இந்திரஜித் அனுப்பிய நாக பாணத்தையும் எப்படியோ அறுத்து விட்டார் இந்த ராமர். மிகவும் பராக்கிரமம் நிறைந்தவராக இருக்கிறார். இவரது வலிமை புரிந்து கொள்ள முடியாத விந்தையாக உள்ளது. ராமர் நாராயணனின் சொரூபமாக இருக்குமோ என்று ராவணன் எண்ணினான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 32

ராமர் யுத்தகளத்திற்குள் ஒரு பெரிய மலையைப் போல் ராட்சச உருவம் வருவதை பார்த்து யார் இந்த ராட்சசன் என்று விபீஷணனிடம் கேட்டார். அதற்கு விபீஷணன் வந்து கொண்டிருப்பது ராவணனின் தம்பி கும்பகர்ணன் மிகவும் வலிமையானவன் இவனை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம். ராவணனுக்கு தர்மத்தை எடுத்துரைத்து சீதையை திருப்பி அனுப்ப வேண்டும் என்று சபையில் அனைவர் முன்னிலையிலும் தைரியமாக சொல்லி ராவணன் செய்த தவறை கண்டித்தவன். ராவணன் மீது உள்ள பாசத்தால் தவறு என்று தெரிந்தும் ராவணனுக்காக யுத்தம் செய்ய வந்திருக்கிறான் என்று ராமரிடம் விபீஷணன் சொல்லி முடித்தான். கும்பகர்ணன் யுத்த களத்திற்குள் நுழைந்ததும் ராட்சச வீரர்கள் அவன் மீது மலர்களை தூவி ஆரவாரம் செய்தார்கள். மலை போல் பெரிய உருவத்தை கொண்ட கும்பகர்ணனை கண்ட வானர வாரர்கள் அலறி அடித்துக் கொண்டு ராமரை நோக்கி ஒடினார்கள். வானர படைத் தலைவர்கள் அனைவருக்கும் தைரியத்தை சொல்லி படைகள் சிதறி ஓடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

ராமரிடன் வந்த அங்கதன் கும்பகர்ணனை நான் தாக்குகிறேன் என்று அனுமதி பெற்றுக் கொண்டு அவனை தாக்க பெரிய வானர படை கூட்டத்துடன் சென்றான். பெரிய மரங்களையும் பாறைகளையும் கும்பகர்ணன் மீது தூக்கிப் போட்டார்கள். எதனையும் பொருட் படுத்தாத கும்பகர்ணன் சிரித்துக் கொண்டே அனைத்தையும் தூசி தட்டிச் செல்வது போல் தட்டிவிட்டு வானர படைகளை அழித்துக் கொண்டு முன்னேறிச் சென்றான். கும்பகர்ணனின் தாக்குதலில் அங்கதன் மயக்கமடைந்தான். இதனைக் கண்ட சுக்ரீவனும் கும்பகர்ணனை எதிர்த்து தாக்கினான். சுக்ரீவனாலும் கும்பகர்ணனை ஒன்றும் செய்ய முடியவில்லை. சிறிது நேரத்தில் கும்பகர்ணனின் தாக்குதலில் சுக்ரீவனும் மயக்கமடைந்தான். இதனைக் கண்ட கும்பகர்ணன் சுக்ரீவனை தூக்கிக் கொண்டு இலங்கை நகரத்திற்குள் நுழைந்தான். வானரர்களின் அரசனான சுக்ரீவனை சிறை பிடித்து விட்டோம் இனி யுத்தம் நின்று விடும் என்று கும்பகர்ணன் மகிழ்ச்சி அடைந்தான். ராட்சச வீரர்கள் ஆரவாரம் செய்து தங்களின் வெற்றியை கொண்டாடினார்கள். சுக்ரீவன் சிறைபட்டு விட்டான் என்ற செய்தியை அறிந்து கொண்ட வானர வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ராமரை நோக்கி ஓடினார்கள். அனுமன் அனைவருக்கும் தைரியம் கூறினார். சுக்ரீவன் தற்போது மயக்கத்தில் இருக்கிறார். அதனால் தான் கும்பகர்ணனால் சுக்ரீவனை தூக்கிச் செல்ல முடிகிறது. விரைவில் சுக்ரீவன் விழித்து விடுவார். விழித்ததும் ஒரே தாவலில் அங்கிருந்து இங்கு வந்து விடுவார் எனவே யாரும் பயம் கொள்ளத் தேவையில்ல என்று சொல்லி வானர படைகளை ஒழுங்கு படுத்தினார். ராவணனின் மாளிகைக்குள் சுக்ரீவனை தூக்கிக் கொண்டு கும்பகர்ணன் நுழைய முற்பட்ட போது சுக்ரீவன் விழித்துக் கொண்டு தன்னுடைய சுய உணர்வை பெற்று இலங்கைக்குள் ராட்சசர்களுக்கு மத்தியில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டான். கும்பகர்ணனின் காதுகளையும் மூக்குகளையும் பற்களால் கடித்தும் அவனது உடலை தனது நகங்களால் கீரியும் கும்பகர்ணனின் பிடியில் இருந்து விடுபட்ட சுக்ரீவன் அங்கிருந்து ஒரே தாவலில் ராமர் இருக்கும் இடம் வந்து சேர்ந்தான்.

ராமரிடம் வந்து சேர்ந்த சுக்ரீவன் கும்பகர்ணனின் வலிமையை எடுத்துரைத்தான். மலை போல் இருக்கும் கும்பகர்ணனை எவ்வாறு தாக்கி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். சுக்ரீவனின் தாக்குதலில் தனது உடல் முழுக்க ரத்தத்துடன் இருந்த கும்பகர்ணன் பெரிய இரும்பு உலக்கையை எடுத்துக் கொண்டு மீண்டும் யுத்த களத்திற்குள் நுழைந்தான். கும்பகர்ணன் மீது தாவி ஏறிய வானரபடைகள் ஈட்டிகளால் அவனது உடம்பை குத்தி தாக்கினார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாத கும்பகர்ணன் அனைவரையும் உதறி விட்டு மேலும் முன்னேறிக் கொண்டே இருந்தான். லட்சுமணன் தனது அம்புகளால் கும்பகர்ணனை தாக்கினான் ஆனாலும் கும்பகர்ணனை லட்சுமணனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அனைவரது தாக்குதலையும் சமாளித்த கும்பகர்ணன் ராமரை நோக்கி முன்னேறிச் சென்றான்

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 31

ராமர் பற்றிய சிந்தனையில் தனியாக இருந்த ராவணனிடம் கும்பகர்ணன் எழுந்து அரசவைக்கு வந்து விட்டான் என்ற செய்தி சொல்லப்பட்டது. மகிழ்ச்சி அடைந்த ராவணன் அங்கிருந்து அரசவைக்கு வந்து சேர்ந்தான். ராவணனிடம் கும்பகர்ணன் பேச ஆரம்பித்தான். கம்பீரமாக பொலிவுடன் இருக்கும் தங்களின் முகம் ஏன் மிகவும் கவலையில் உள்ளது. உங்களுடைய கவலையை போக்குவதற்காக நான் என்ன செய்ய வேண்டும் அண்ணா எனக்கு உத்தரவிடுங்கள் இப்போதே செய்து முடிக்கிறேன் என்றான் கும்பகர்ணன். அதற்கு ராவணன் தம்பி நீ தூங்க ஆரம்பித்ததும் தேவர்களும் நெருங்க முடியாத நமது நகரத்தை கடல் போல் வந்த வானரசேனைகள் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். ராட்சசர்களுக்கும் இந்த வானரங்களுக்கும் நடந்த யுத்தத்தில் நம்முடைய பல தளபதிகளும் முக்கிய வீரர்களும் இறந்து விட்டார்கள். நேற்று நானே எனது படைகளுடன் யுத்தத்திற்கு சென்றேன். ராமர் தனது பராக்கிரமத்தால் என்னிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் அழித்து தர்மம் என்ற பெயரில் என்னை உயிரோடு விடுகிறேன் என்று அவமானப்படுத்தி அனுப்பி விட்டான். இந்த சம்பவத்தால் மிகவும் கவலையுடன் இருக்கிறேன். உன்னுடைய பலத்தை நான் அறிவேன். அதனால் இப்போது உன்னை மட்டுமே நம்பியிருக்கிறேன். இதற்கு முன்பாக நடந்த யுத்தத்தில் உனது பலத்தினால் தேவர்களையெல்லாம் சிதறி ஓட விரட்டி அடித்திருக்கிறாய். உடனே சென்று யுத்தம் செய்து ராம லட்சுமணர்களை அழித்து இழந்த எனது பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்து நமது ராட்சச குலத்தையும் நமது இலங்கை நகரத்தையும் காப்பாற்று என்று ராவணன் கேட்டுக் கொண்டான். கும்பகர்ணன் மிகவும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து மன்னிக்க வேண்டும் அண்ணா என்று கும்பகர்ணன் பேச ஆரம்பித்தான்.

ராமர் இலங்கைக்குள் வந்து விட்டார் என்ற செய்தி வந்ததும் சபையில் நாம் அனைவரும் செய்த ஆலோசனையில் பெரியவர்களும் அறிஞர்களும் என்ன சொல்லி எச்சரிக்கை செய்தார்களோ அதுவே இப்போது நடந்திருக்கிறது. அனைவரும் எச்சரிக்கை செய்ததை நீங்கள் கேட்கவில்லை. சீதையை ஏமாற்றி தூக்கி வந்த பாவத்திற்கான பயனை இப்போது அனுபவிக்கிறீர்கள். நீங்கள் முதலில் ராம லட்சுமணர்ளை அழித்து விட்டு பின்பு சீதையை தூக்கி வந்திருந்தால் உங்களது வீரம் அனைவராலும் பாரட்டப் பட்டிருக்கும். இப்போது என்னை தோற்கடித்து விட்டான் எனது வீரர்கள் இறந்து விட்டார்கள் என்று புலம்புகிறீர்கள். அரசன் ஒருவன் ஆசையினால் தூண்டப்பட்டு அதனைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல் செய்து முடித்துவிட்டு பின்பு ஆலோசனை சொல்பவர்களின் கருத்தையும் கேட்காமல் இருந்தால் இதுபோல் அவஸ்தை பட வேண்டியிருக்கும் என்று தனக்கு தெரிந்த நீதியை ராவணனிடம் சொல்லி முடித்தான் கும்பகர்ணன். கும்பகர்ணன் பேசிய பேச்சுக்கள் ராவணனுக்கு பிடிக்கவில்லை. ராவணனுக்கு கோபம் வந்தது. தனது கோபத்தை அடக்கிக் கொண்டு கும்பகர்ணனிடம் பேச ஆரம்பித்தான்.

ராமர் லட்சுமணர்களை முதலில் அழித்திருக்க வேண்டும் என்ற உனது வாதம் சரியானது தான் ஆனால் இப்போது காலம் தாண்டிவிட்டது. இப்போது இதைப்பற்றி பேசிப் பயனில்லை. நடந்து போன எனது தவறுகளினால் இப்போது இந்த சங்கடமான சூழ்நிலை அமைந்துவிட்டது. என் மீது நீ வைத்திருக்கும் பிரியம் உண்மையாக இருந்தால் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு தைரியம் சொல்லி உனது வல்லமை முழுவதையும் உபயோகித்து எனக்காக யுத்தம் செய்து ராம லட்சுமணர்களை அழித்து என்னை காப்பாற்று என்று ராவணன் கும்பகர்ணனிடம் கேட்டுக் கொண்டான். இதற்கு கும்பகர்ணன் நீங்கள் கவலைப்பட்டது போதும். என்னை யாராலும் வெல்ல முடியாது என்று உங்களுக்கு தெரியும். உங்களுக்கு பயத்தை உண்டாக்கி இருக்கும் எதிரிகளை அழித்து விட்டு வருகிறேன் என்று கும்பகர்ணன் யுத்தகளத்தை நோக்கிச் சென்றான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 30

ராமர் ராவணனிடம் பேச ஆரம்பித்தார். ராவணா நீ இன்று மிகவும் பயங்கரமாக யுத்தம் செய்து என்னுடைய படைகளில் உள்ள முக்கியமான வீரர்களை அழித்திருக்கிறாய். லட்சுமணனுடனும் என்னுடனும் நீண்ட நேரம் யுத்தம் செய்து மிகவும் களைப்புடன் இருக்கின்றாய். மேலும் இப்போது உன்னிடம் தேரும் இல்லை எந்த ஆயுதங்களும் இல்லை. அரசனுக்குரிய எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் சாதாரண வீரன் போல் தரையில் நின்று கொண்டு நிராயுதபாணியாக இருக்கிறாய். யுத்தத்தில் நிராயுதபாணியாக நிற்பவனை தாக்குவது தர்மத்திற்கு எதிரானது. எனவே இங்கிருந்து உயிருடன் செல்ல உன்னை அனுமதிக்கிறேன். நீ உன் நகரத்திற்குச் சென்று உனது களைப்பை போக்கிக் கொண்டு நாளை ஆயுதங்களுடன் உனது தேரில் வந்து மீண்டும் என்னுடன் யுத்தம் செய். அரசர்களுக்குரிய ரதம் இல்லாமல் உன்னுடன் நான் யுத்தம் செய்கிறேன். அப்போது மேலும் என்னுடைய ஆற்றலை நீ அறிந்து கொள்வாய் என்றார். ராவணன் மிகவும் அவமானத்துடன் தலை கவிழ்ந்தவனாய் தனது அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான். ராவணன் தோல்வி அடைந்து சென்றதை கண்ட தேவர்களும் முனிவர்களும் இனி நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தார்கள்.

ராமரை பற்றி ராவணன் பலவகையாக சிந்திக்க ஆரம்பித்தான். ஒரு மானிடனால் எப்படி நம்மை வெற்றி கொள்ள முடிந்தது? எந்த தேவர்களாலும் நம்மை வெல்ல முடியாது என்று வரம் வாங்கிய போது மனிதனால் தான் உனக்கு ஆபத்து என்று நம்மிடம் பிரம்மா சொன்னது இந்த ராமரை தானோ என்று பல வகையிலும் சிந்தனை செய்த ராவணன் அரசவையை கூட்டி அனைவரிடமும் பேச ஆரம்பித்தான். ராமரைப் பற்றி அனைவரும் சொன்னது உண்மையாகி விடும் போல் உள்ளது. என்னுடைய தவ வலிமைகள் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. இப்போது நம்மை பாதுகாக்க கும்பகர்ணன் ஒருவன் தான் இருக்கின்றான். கும்பகர்ணனை வெல்ல யாராலும் முடியாது. மிகவும் பராக்கிரமசாலி. கும்பகர்ணன் யுத்தத்திற்கு வந்து விட்டால் விரைவாக அனைவரையும் அழித்து விடுவான். நமது பிரச்சனைகள் அனைத்தும் முடிந்துவிடும். சாபத்தினால் ஆறு மாதம் தூங்கிக் கொண்டும் ஆறு மாதம் விழித்துக் கொண்டும் இருக்கும் கும்பகர்ணன் இப்போது தூங்க ஆரம்பித்து ஒன்பது நாட்கள் மட்டுமே ஆகிறது. கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து தானாக எழுந்து கொள்ள இன்னும் பல நாட்கள் ஆகும். அது வரை காத்திருக்க முடியாது. கும்ப கர்ணனை எப்படியாவது எழுப்பி யுத்தம் ஆரம்பித்த தகவலை சொல்லி இங்கே அழைத்து வாருங்கள். மேலும் நமது நகரத்தை காவல் காக்கும் காவலர்களை எச்சரிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள் என்று உத்தரவிட்டான் ராவணன்.

ராமரிடம் தோல்வி அடைந்த அவமானத்தை விட ராமர் சொன்ன வார்த்தைகள் ராவணனை மிகவும் காயப்படுத்தியது. தன்னை மிகவும் அவமானமாக உணர்ந்தான். இதனால் யாரையும் சந்திக்காமல் தனிமையில் ராமரைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தான். கும்பகர்ணனை எழுப்புவதற்கான காரியத்தில் ராட்சச வீரர்கள் இறங்கினார்கள். கும்பகர்ணன் எழுந்ததும் பசி என்று தனக்கு அருகில் கிடைத்ததை எல்லாம் விழுங்க ஆரம்பிப்பான். எனவே முதலில் அவனுக்கு தேவையான தண்ணீர் உணவுகளை அவனை சுற்றி வைத்தார்கள். சங்கு பேரிகை என்று அனைத்து வாத்தியங்களையும் வைத்து அவனது காதின் அருகில் சத்தம் எழுப்பினார்கள். யானைகளை வைத்து அவனது உடலை முட்ட வைத்தார்கள். நீண்ட கம்புகளாலும் ஈட்டிகளாலும் அவனது கால்களை குத்த ஆரம்பித்தார்கள். ஒரு வழியாக லேசாக தூக்கத்திலிருந்து கண் விழித்த கும்பகர்ணனுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது. பசிக்கு உணவு தேடி எழுந்த கும்பகர்ணன் தன்னை சுற்றி இருக்கும் உணவுகளை சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் தன்னை எழுப்ப முயற்சி செய்வதை கண்டு கடும் கோபமடைந்தான். கும்பகர்ணனிடம் ராட்சச வீரர்கள் ராவணனின் உத்தரவையும் யுத்தத்தில் நடந்தவற்றையும் கூறினார்கள். அனைத்தையும் கேட்ட கும்பகர்ணன் தனது தொடர் தூக்கத்தை விட்டு எழுந்து ராவணனை சந்திக்க சென்றான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 29

ராமர் நிலை தடுமாறி நின்ற அனுமனின் உடல் நலத்தை விசாரித்தார். சிறிது நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் யுத்தம் செய்ய தயாராகி விடுவேன் என்று அனுமன் ராமரிடம் தெரிவித்தார். பிரஹஸ்தனை கொன்ற நீலனிடம் சென்ற ராவணன் தன்னுடைய அம்புகளால் நீலனை தாக்கத் தொடங்கினான். இதனால் கோபமடைந்த நீலன் மிகப்பெரிய மரங்களையும் பாறைகளையும் ராவணன் மீது தூக்கி எறிந்தான். அனைத்தையும் தனது அம்புகளால் தூளாக்கிய ராவணன் நீலனின் மீது அம்புகள் விட்ட வண்ணம் இருந்தான். இதனை சமாளிக்க முடியாத நீலன் தன் விளையாட்டை ஆரம்பித்தான். மிகவும் சிறிய உருவத்தை எடுத்த நீலன் ராவணனின் கீரிடத்தின் மீதும் அவனுடைய தேர் கொடியின் மீதும் வில்லின் நுனி மீதும் தாவித் தாவி அமர்ந்து விளையாட்டு காட்டினான். ராவணனின் அம்புகளால் மிகவும் சிறிய உருவமாயிருக்கும் நீலனை ஒன்றும் செய்ய இயலவில்லை. இதனால் மனத்தடுமாற்றம் அடைந்த ராவணனையும் விளையாட்டு காட்டும் நீலனையும் கண்ட மற்ற வானர வீரர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். இதனை கண்டு கோபமடைந்த ராவணன் மந்திர அஸ்திரங்களை எடுத்து உபயோகப் படுத்தினான். மந்திர அஸ்திரத்தினால் தாக்கப்பட்ட நீலன் மயக்கமுற்று கீழே விழுந்தான். நீலனை அடக்கிய ராவணன் தன்னை நோக்கி வந்த லட்சுமணனை எதிர்த்து யுத்தம் செய்ய தயாரானான்.

ராமர் எங்கே லட்சுமணா நீ மட்டும் தனியாக வந்து என்னிடம் சிக்கி இருக்கிறாய்? ராட்சசர்களுக்கு அரசனான என் முன்பாக வந்தால் அழிந்து விடுவோம் என்று வராமல் இருக்கிறாரா ராமர்? என் முன் வந்த உன்னை சிறிது நேரத்தில் அழித்து விடுவேன் என்றான் ராவணன். அதற்கு லட்சுமணன் ராட்சச அரசனே வலிமை வாய்ந்தவர்கள் உன் போல் தன்னைத் தானே பெருமை பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். யுத்தத்தில் தன்னுடைய வீரத்தை காட்டுவார்கள். ராமரும் நானும் இல்லாத போது சீதையை வஞ்சகம் செய்து தூக்கி வந்த போதே உன்னுடைய வீரத்தை தெரிந்து கொண்டேன். இப்போது வில் அம்புடன் வந்திருக்கிறேன். முடிந்தால் என்னுடன் யுத்தம் செய்து உன்னை காப்பாற்றிக் கொள் என்ற லட்சுமணன் தன்னுடைய வில்லில் இருந்து அம்புகளை ராவணன் மீது அனுப்பத் தொடங்கினான். அனைத்து அம்புகளையும் தன்னுடைய அம்புகளால் தடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சிரமப்பட்ட ராவணன் பிரம்மாஸ்திரத்தினால் லட்சுமணனை தாக்கினான். பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு நின்ற லட்சுமணன் அஸ்திரத்தினால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்தான். மயக்கத்தில் இருக்கும் லட்சுமணனை சிறை பிடிக்க தூக்கிச் செல்ல முயற்சித்தான் ராவணன். இமயமலையையே தூக்கிய ராவணனால் மயக்கமாய் இருந்த லட்சுமணனை அசைக்கக் கூட முடியவில்லை. இதனைக் கண்ட அனுமன் ராவணனின் மீது தன் கைகளால் குத்தினார். அனுமனின் குத்தில் ரத்தக் காயமடைந்த ராவணன் சிறிது நேரம் உணர்வில்லாமல் இருந்தான். இந்நேரத்தில் அனுமன் லட்சுமணனை பாதுகாப்பான இடத்திற்கு தூக்கிச் சென்றார். இதனை அறிந்த ராமர் ராவணனுடன் யுத்தம் செய்ய முன்னேறிச் சென்றார்.

ராமர் ராவணன் மீது அம்பு மழை பொழிந்தார். ராவணன் தனது ரதத்தில் நின்று ராமரின் அம்புகளை தடுத்துக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட அனுமன் ராமரிடம் வந்து தாங்கள் ஏன் தரையில் நின்று யுத்தம் செய்ய வேண்டும்? நீங்கள் என் தோளின் மீது அமர்ந்து யுத்தம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ராமர் இதற்கு சம்மதம் கொடுக்கவே தன் உருவத்தைப் பெரியதாக்கிக் கொண்ட அனுமன் ராமரை தன் தோளின் மீது அமர வைத்துக் கொண்டு ராவணன் முன்பாக நின்றார். ராமர் முதலில் ராவணனின் தேரோட்டியையும் குதிரைகளையும் கொன்று தன் அம்புகளால் தேரையும் உடைத்தார். பின் ராவணனின் வில்லை உடைத்து அவனின் அனைத்து ஆயுதங்களையும் தாக்கி தூளாக்கினார். ராமரின் அம்புகளால் ராவணன் நிலை குலைந்தான். ராமரின் தாக்குதலில் காயங்களுடன் ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்றான் ராவணன்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 28

ராமர் லட்சுமணனிடம் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்ய உன்னை அனுமதிக்கிறேன். ஆனால் மிகவும் ஜாக்கிரதையாக இரு. ராவணன் மிகவும் பராக்கிரமம் நிறைந்தவன். பல யுத்தங்கள் செய்து மூன்று உலகங்களையும் வெற்றி பெற்றிருக்கின்றான். மிகவும் வலிமையானவன். உன்னால் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்து வெற்றி பெற முடியும் அதற்கான வல்லமை உன்னிடம் உள்ளது. ராவணனுடைய யுத்த கலையில் என்ன குறைகள் இருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் யுத்தம் செய். ராவணனுடைய மந்திர அஸ்திரங்களை நன்றாக கவனித்து அதற்கு ஏற்றார் போல் உன்னுடைய அஸ்திரங்களை உபயோகித்து உன்னை காத்துக் கொள். ஆனால் எந்த நேரமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் ராவணன் தோல்வியை சந்திக்கும் இறுதி நேரத்தில் மாயங்களால் வஞ்சகம் செய்து ஏமாற்றி வெற்றி பெற நினைப்பான். சென்று வா என்று அனுமதி அளித்தார். ராமரின் பாதங்களில் விழுந்து வணங்கிய லட்சுமணன் ராவணனை நோக்கி விரைவாக சென்றான்.

ராமரை எதிர்த்து ராவணன் யுத்த களத்திற்கு வந்திருக்கிறான் என்ற செய்தி அறிந்த முனிவர்களும் தேவர்களும் கந்தர்வர்களும் இந்த யுத்தத்தைப் பார்க்க ஆவலுடன் வந்திருந்தார்கள். லட்சுமணன் ராவணனை சுற்றி இருக்கும் ராட்சச படைவீரர்களை சமாளித்துக் கொண்டு ராவணனை நோக்கிச் சென்றான். ராவணனை சுற்றி பல அடுக்குகளாக பாதுகாப்பாக சுற்றி நின்ற ராட்சச படை வீரர்கள் லட்சுமணனை ராவணனின் அருகில் செல்ல விடாமல் தடுத்து யுத்தம் செய்தார்கள். அதற்குள் ராவணனின் முன்பு தாவி வந்து சேர்ந்த அனுமன் அவனை எதிர்த்து நின்று பேச ஆரம்பித்தார். தேவர்கள் தானவர்கள் கந்தர்வர்கள் யட்சர்கள் ராட்சசர்களால் உனக்கு மரணமில்லை என்று பல வரங்களை வாங்கியிருக்கிறாய். ஆனால் வானரங்களினால் மரணம் இல்லை என்ற வரத்தை நீ வாங்கவில்லை. எனவேதான் நீ வானரங்களை பார்த்தால் பயப்படுகிறாய் உன்னால் முடிந்தால் என்னுடன் யுத்தம் செய் என்று சத்தமாகச் சொன்னார். அதற்கு ராவணன் அனுமனிடம் உன்னால் முடிந்தால் தைரியமாக என்னைத் தாக்கு. உன்னுடைய வலிமையைப் பார்த்துவிட்டு அதற்கு ஏற்றார் போல் உன்னிடம் சண்டையிட நினைக்கிறேன் என்றான். அதற்கு அனுமன் இதற்கு முன்பாக தனியாக நான் அசோகவனம் வந்த போது பெரும் படையுடன் வந்த உனது மகனையே கொன்றிருக்கிறேன் இதிலிருந்தே எனது வலிமையை நீ தெரிந்து கொள்ள வில்லையா? இப்போது உன்னிடமும் எனது வலிமையை காட்டுகிறேன் பார் என்று ராவணனின் அருகில் தாவிச் சென்ற அனுமன் தனது கைகளால் ராவணனின் மார்பில் குத்தினார். அனுமனின் திடீர் தாக்குதலில் நிலை குலைந்து போன ராவணன் சிறிது நேரம் ஆடிப்போய் தனது ரதத்திலேயே அமர்ந்தான். இதனைக் கண்ட முனிவர்கள் தேவர்கள் கந்தர்வர்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்தார்கள்.

ராமர் அனுமனின் செயலைக் கண்டு ஆச்சரியமடைந்தார். ராவணன் சிறிது நேரத்தில் சுயநிலையை பெற்று அனுமனிடம் பேச ஆரம்பித்தான். வானரனே இது நாள் வரை என்னை எதிர்த்து நின்று தாக்கிய வீரன் யாருமில்லை. எதிரியாக இருந்தாலும் உன்னுடைய வீரத்தை நான் பாராட்டுகின்றேன் என்றான். அதற்கு அனுமன் என் வலிமை முழுவதையும் பயன்படுத்தி உன்னை அடித்திருக்கிறேன். ஆனாலும் நீ உயிரோடு இருக்கிறாய். என்னுடைய வலிமை அவ்வளவு தான் நீ பாராட்டும் அளவிற்கு வலிமையானவன் நான் இல்லை. எனது ராமர் உன்னை அடித்திருந்தால் அந்நேரமே நீ இறந்திருப்பாய் என்றார். ராமரின் பெயரைக் கேட்டதும் கோபம் கொண்ட ராவணன் தனது வலிமை முழுவதையும் பயன்படுத்தி அனுமனின் மார்பில் குத்தினான். இதில் அனுமன் கலங்கி நிற்கும் போது ராவணன் இரண்டாவது முறையாக குத்தினான். அனுமன் நிலை குலைந்து தடுமாறி நின்றார். அந்நேரம் பிரஹஸ்தனைக் கொன்ற நீலனை பார்த்த ராவணன் அனுமனை விட்டு நீலனை தாக்க சென்றான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 27

ராமரிடம் வந்த நீலன் தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டான். பிரஹஸ்தனை கொன்ற நீலனை ராமர் பாராட்டி வாழ்த்தினார். யுத்த களத்தில் சிதறி ஓடிய பிரஹஸ்தனின் படை வீரர்கள் ராவணனிடம் நடந்ததை தெரிவித்தார்கள். தேவலோகத்தில் உள்ள இந்திரனையும் அவனது படைகளையும் பிரஹஸ்தன் வெற்றி பெற்றிருக்கிறான். அனைத்து தேவர்களும் கந்தர்வர்களும் ஒன்றாக சேர்ந்து வந்தால் கூட தனியாக நின்று வெற்றி பெறக்கூடிய வலிமையான வீரன் பிரஹஸ்தன். அவன் வானரங்களால் கொல்லப்பட்டானா என்று ராவணன் கவலையின் ஆழ்ந்தான். சபையில் இருப்பவர்கள் அனைவரும் தரையை பார்த்தவாறு அமைதியுடன் இருந்தார்கள். சிறிது நேரத்தில் ராவணன் கோபத்தில் கர்ஜித்தான். இனி பொறுமையாக இருக்க முடியாது. அனைவரும் யுத்தத்திற்கு தயாராகுங்கள். யுத்தத்தில் அனைத்து படைகளுக்கும் நானே தலைமையேற்று வருகிறேன். சில கனங்களில் அந்த ராம லட்சுமணர்களையும் வானர வீரர்களையும் அழித்து விடுகிறேன் என்று ராவணன் யுத்த களத்திற்கு கிளம்பினான். யுத்த களத்திற்கு அனைத்து சேனாதிபதிகளுடன் வந்த ராவணன் ராட்சச படை வீரர்களிடம் சில படை தளபதிகள் இந்த யுத்தத்தில் இறந்து விட்டார்கள். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வானர கூட்டம் நமது நகரத்திற்குள் நுழைந்து விடுவார்கள். எனவே பயம் இல்லாதவர்கள் மட்டும் யுத்தத்திற்கு வாருங்கள். பயம் இருப்பவர்கள் நமது கோட்டை மதில் சுவர் மேல் நின்று கோட்டைக்கு பாதுகாப்பாக இருந்து வானரங்கள் யாரும் உள்ளே நுழையாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டான்.

ராமருக்கு இது வரை இல்லாத அளவு சங்கு பேரிகை நாதமும் ராட்சசர்களின் ஆரவாரமும் கேட்டது. ராட்சசர்களின் படை இது வரை காணாத கூட்டத்துடன் பெரிய தலைமையுடன் வருவதை அறிந்த ராமர் வந்து கொண்டிருப்பது யார் என்று விபீஷணனிடம் கேட்டார். அதற்கு விபீஷணன் ராவணன் தனது அனைத்து படை தளபதிகள் வீரர்களுடன் வந்து கொண்டிருக்கிறான். நடுவில் இருக்கும் தங்க ரதத்தில் பெரிய மலை போல் சூரிய பிரகாசமாக வந்து கொண்டிருப்பவன் ராவணன். அவனை சுற்றி வந்து கொண்டிருப்பவர்கள் அவனது முதன்மை தளபதிகளான அதிகாயன் பிசாசன் கும்பன் மற்றும் அவனது மகன்களான நாராந்தகன் இந்திரஜித் ஆகியோர் என்றான். அதற்கு ராமர் ராவணனைப் போல் பிரகாசமாக தேஜசாக தேவலோகத்திலும் யாரையும் காண முடியாது. சீதையை பிரிந்திருந்த எனது துக்கத்தையும் இத்தனை நாளாக சேர்த்து வைத்திருந்த எனது கோபத்தையும் மொத்தமாக சேர்த்து மகாபாவியான இவன் மேல் இப்போது காண்பிக்க போகிறேன் என்ற ராமர் தனது வில்லையும் அம்பையும் எடுத்து யுத்தத்திற்கு தாயாரானர்.

ராமர் தனது அம்புகளை ராட்சச படைகள் மீது விட்டு அவர்களை கொன்று குவித்துக் கொண்டு ராவணனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். ராவணன் தனது வில் அம்பை எடுத்தான். தனது கோட்டைக்குள் நுழைந்து தனது கீரிடத்தை தள்ளிவிட்ட சுக்ரீவன் மீது அம்பை எய்தான் ராவணன். சுக்ரீவனின் உடலை ராவணனின் அம்பு துளைத்துச் சென்றது. சுக்ரீவன் தனது உணர்வை இழந்து தரையில் விழுந்தான். இதனை கண்ட ராட்சச வீரர்கள் ஆரவாரம் செய்தார்கள். சுக்ரீவனின் தளபதிகளான வலிமையுள்ள வானரங்கள் ஒன்று சேர்ந்து பெரிய மலைகளையும் மரங்களையும் ராவணன் மீது தூக்கி எறிந்தார்கள். அனைத்தையும் ராவணன் தனது அம்பினால் துளாக்கி தனது அருகில் வரவிடாமல் பார்த்துக் கொண்டான். இந்நேரத்தில் சுக்ரீவனை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற வானரங்கள் அவருக்கு தேவையான உதவியை செய்தார்கள். ராவணன் வானர வீரர்களை கொன்று குவிக்கத் தொடங்கினான். அதனால் யுத்த களத்தில் பின் வாங்கிய வானர படைகள் ராமரிடம் வந்து செய்தியை கூறினார்கள். ராமர் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்வதற்காக அவனை நோக்கி முன்னேறிச் செல்ல முற்பட்டார். அப்போது லட்சுமணன் ராமரின் முன் வந்து ராவணனை எதிர்த்து யுத்தம் செய்ய தாங்கள் செல்ல வேண்டாம். நான் செல்கிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 26

ராம லட்சுமணர்கள் சாதாரண மானிடர்கள் என்று இது வரை எண்ணியிருந்த ராவணனுக்கு இப்போது அவர்களின் மேல் ஒரு பயம் வந்தது. அதனே வெளிக்காட்டிக் கொள்ளாமல் பிரஹஸ்தனிடம் பேச ஆரம்பித்தான் ராவணன். ராம லட்சுமணர்கள் சாதாரண மானிடர்கள் அவர்களுடன் வந்திருப்பது சாதாரண வானரங்கள் தானே என்று அவர்களை எதிர்த்து யுத்தம் செய்ய வேண்டாம் என்று எண்ணியிருந்தேன். எனவே அவர்களை நமது கோட்டைக்குள் நுழையாதவாறு பாதுகாத்தோம். அதனால் இப்போது பல ராட்சச வீர்ரகளை இழந்து விட்டோம். இனி நாமும் யுத்தம் செய்து நமது வலிமையை காட்ட வேண்டும். நான் இந்திரஜித் நிகும்பன் கும்பகர்ணன் பிரஹஸ்தனான நீயும் சேர்ந்து ஐவருமாக யுத்தத்திற்கு சென்றால் ராமரையும் லட்சுமணனையும் வானர வீரர்களையும் அழித்து நமது ராட்சச குலத்தின் பெருமையை நிலை நாட்ட வேண்டும். அதற்கான ஏற்பாட்டை உடனே செய்வாயாக என்று கட்டளையிட்ட ராவணன் உனக்கு இதில் ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதனை சொல் என்றான். அதற்கு பிரஹஸ்தன் அரசரே இது பற்றி அரசவையில் பல முறை விவாதித்து விட்டோம். ஆனால் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. தர்மம் தெரிந்தவர்கள் பெரியவர்கள் எதிர்காலத்தை பற்றி அறிந்தவர்கள் என அனைவரும் இந்த பிரச்சனைக்கு சொன்ன ஒரே தீர்வு மற்றும் அறிவுரை சீதையை திருப்பி அனுப்பி விட வேண்டும் என்பது தான். இதற்கு உடன்படாததால் விபீஷணனும் சென்று விட்டார். அனுபவசாலியான உங்கள் உறவினரான மால்யவான் முதியவரும் எச்சரிக்கை செய்துவிட்டு சென்று விட்டார்.

ராமரிடம் சீதையை திருப்பி அனுப்பி விடலாம் என்பது தான் என்னுடைய கருத்து. ஆனால் தாங்கள் எனக்கு நல்ல மதிப்பான பதவியை கொடுத்து மரியாதை செய்தும் பல பரிசுகளை கொடுத்தும் இனிய சொற்களாலும் என்னை கௌரவப்படுத்தி மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறீர்கள். எனவே தங்களுக்கு விருப்பமானதையே நான் செய்வேன். நம்முடைய ராட்சச குலத்தின் பெருமையை காப்பாற்றவும் தங்களுடைய பெருமையை காப்பாற்றவும் நானே இன்று எனது படைகளுடன் சென்று ராம லட்சுமணர்களுடன் யுத்தம் செய்கிறேன் என்று அங்கிருந்து பிரஹஸ்தன் கிளம்பி தன்னுடைய அனைத்து பிரிவு படைகளும் உடனடியாக வருமாறு உத்தரவிட்டான். சங்கு நாதம் பேரிமை முழங்க பிரஹஸ்தன் தன்னுடைய பெரும் படையுடன் யுத்தகளத்திற்கு கிளம்பினான். பிரஹஸ்தனுடைய ரதத்தை சுற்றி அவனுடைய ஆலோசகர்களான நராந்தன் கும்பஹனு மகாநாதன் ஸமுன்னதன் நால்வரும் பாதுகாப்பாக வந்தனர். அப்போது பிரஹஸ்தனுடைய தேர் கொடியின் மேல் அமர்ந்த கழுகு ஒன்று கொடியை கொத்தி உடைத்தது. யுத்த களத்தில் தேர் ஓட்டுவதில் சிறந்தவனான பிரஹஸ்தனின் சாரதி தன்னுடைய சவுக்கை தவர விட்டுக் கொண்டே இருந்தான். பிரஹஸ்தனை சுற்றி பல அபசகுனங்கள் நிகழ்ந்தது. மிகப்பெரிய படை ஒன்று தங்களை நோக்கி வருவதை அறிந்த வானர படை வீரர்கள் யுத்தத்திற்கு தயாரானார்கள்.

ராமர் விபீஷணனிடம் தோள் வலிமையுடன் மிகப்பெரிய உடலமைப்புடன் யுத்தம் செய்ய வந்து கொண்டிருப்பது யார் என்று கேட்டார். அதற்கு விபீஷணன் இவனது பெயர் பிரஹஸ்தன் ராவணனின் படைத்தலைவன். ராவணனிடம் இருக்கும் மொத்த ராட்சச படைகளில் மூன்றில் ஒரு பங்கு இவனது படைகள் இருக்கும். மிகவும் வலிமை உடைய இவன் மந்திர அஸ்திரங்களை நன்கு அறிந்தவன். இவனை வெற்றி பெற்றால் இலங்கையின் மூன்றில் ஒரு படைகளே வெற்றி பெற்றது போலாகும் என்றான் விபிஷணன். யுத்தம் ஆரம்பித்த்து. இரு படை வீரர்களுக்கும் கடுமையான சண்டை நடந்தது. பிரஹஸ்தனை நீலன் எதிர்த்தான். இருவருக்கும் கடுமையான சண்டை நடந்தது. இறுதியில் நீலன் பெரிய ஆச்சா மரத்தை பிடுங்கி பிரஹஸ்தன் மீது எறிந்தான். இதில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்ட பிரஹஸ்தன் அதிலிருந்து சுதாரிப்பதற்குள் நீலன் மிகப்பெரிய பாறையை அவன் மேல் போட்டான். பாறை பிரஹஸ்தனுடைய தலையை நசுக்கி அவனை கொன்றது. பிரஹஸ்தன் கொல்லப்பட்டதும் ராட்சச வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு திரும்பி ஓடினார்கள். நீலனை போற்றி வானர வீரர்கள் ஆர்ப்பரித்தார்கள்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 25

ராமரிடம் தூம்ராசன் மற்றும் வஜ்ரதம்ஷ்ட்ரன் என்ற இரண்டு வலிமை மிக்க ராட்சசர்கள் அனுமனாலும் அங்கதனாலும் கொல்லாப்பட்டார்கள் என்ற செய்தியை சொன்னார்கள். அதனால் மனம் மகிழ்ந்த ராமர் அனுமன் அங்கதன் இருவரின் வீரத்தையும் பாராட்டினார். வஜ்ரதம்ஷ்ட்ரன் அங்கதனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனுக்கு வந்து சேர்ந்தது. இந்திரனுக்கு நிகரான வீரன் வஜ்ரதம்ஷ்ட்ரன் அவனை சிறுவனான அங்கதன் கொன்றான் என்ற செய்தியை ராவணனால் நம்ப முடியவில்லை. மிகவும் அதிர்ச்சி அடைந்தான். பின்பு பிரஹஸ்தனை பார்த்த ராவணன் அஸ்திர சாஸ்திரத்திலும் யுத்தத்தில் நிபுணனாகிய அகம்பனை வரச்சொல் என்று உத்தரவிட்டான். அரசவைக்கு வந்த அகம்பனிடம் வலிமைமிக்க ராட்சச வீரர்களாக தேர்வு செய்து ஒரு சேனையை உருவாக்கிக் கொள். அவர்களுடன் சென்று ராமரையும் லட்சுமணனையும் அழித்து வெற்றியுடன் திரும்பி வா என்று கட்டளையிட்டான் ராவணன். மாயங்கள் தெரிந்த வலிமைமிக்க ராட்சச வீரர்களாக தேர்வு செய்த அகம்பன் யுத்தத்திற்கு கிளம்பினான். அப்போது அவனை சுற்றி அபசகுனங்களாக நிகழ்ந்தது. இதனை அகம்பனும் ராட்சச வீரர்களும் ஒரு பொருட்டாகவே கருதாமல் யுத்தத்திற்கு சென்றார்கள். ராட்சசர்கள் எழுப்பிய கர்ஜனை விண்ணை முட்டி எதிரொலித்தது.

ராமரை வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்து சென்ற அகம்பனும் அவனது படை வீரர்களுக்கும் வானர படை வீரர்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இருதரப்பிலும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். யுத்தகளம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது. வானர வீரர்கள் கைகளையே ஆயுதமாக வைத்து பெரிய பாறைகளை தூக்கிப் போட்டும் மரங்களே வேரோடு பிடுங்கி எறிந்தும் ராட்சசர்களை குவியல் குவியலாக கொன்றார்கள். அதனால் கோபமடைந்த அகம்பனன் வாரன வீரர்களிடம் தனது மாய அஸ்திர வித்தைகளை காட்டி அழிக்க ஆரம்பித்தான். அகம்பனின் மாய அஸ்திரத்தை எதிர்க்க இயலாமல் வானர வீரர்கள் ஓடத் துவங்கினார்கள். இதனை கண்ட அனுமன் வானர வீரர்களுக்கு ஆதரவாக அங்கு வந்து அகம்பனை எதிர்த்து யுத்தம் செய்தார். அனுமனுக்கும் அகம்பனுக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. அகம்பன் தனது மாயத்தினால் ஒரே நேரத்தில் பதினான்கு அம்புகளை அனுமன் மீது எய்தான். அம்புகள் உடலை துளைக்க ரத்தத்தினால் அனுமனின் உடல் நனைந்தது. இதனால் கோபம் கொண்ட அனுமன் தன் உடலை பெரிதாக்கிக் கொண்டார். மிகப்பெரிய மரத்தை வேரோடு பிடுங்கி தன் வலிமை முழுவதையும் பயன்படுத்தி அகம்பனின் தலையில் அடித்தார். அகம்பன் அங்கேயே இறந்தான். அகம்பன் இறந்து விட்டான் என்ற அறிந்த ராட்சச வீரர்கள் இலங்கை கோட்டைக்குள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அகம்பனை அழித்த அனுமனை வானர வீரர்கள் போற்றி வாழ்த்தி ஆரவாரம் செய்தார்கள். வெற்றிக்கு துணை நின்ற அனைத்து வானர வீரர்களையும் கௌரவப்படுத்திய அனுமன் பலத்த காயத்தினால் ஓய்வெடுக்க அமர்ந்தார். அனுமனின் உடம்பில் அகம்பனின் அம்புகள் தாக்கி ரத்தம் வழிந்த இடத்தில் எல்லாம் வானர வீரர்கள் துணியால் சுற்றினார்கள்.

ராமர் லட்சுமணன் சுக்ரீவன் விபீஷணன் அனைவரும் அனுமனின் அருகில் வந்து போற்றி வாழ்த்தினார்கள். தேவ கணங்களும் வானில் நின்று அனுமனுக்கு மலர் தூவி வாழ்த்தினார்கள். அகம்பன் அனுமனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனுக்கு மிகவும் துக்கத்தை ஏற்படுத்தியது. கவலை கொண்ட ராவணன் தனது கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கோபத்துடன் கத்த ஆரம்பித்தான். ராட்சசர்களின் சத்தத்தை கேட்டாலே பயந்து ஓடும் இந்த வானரங்களுக்கு இத்தனை வலிமையா என்று தன் கோட்டையின் பாதுகாப்பு சரியாக உள்ளதா என்று பார்ப்பதற்க்காக பிரஹஸ்தனுடன் கிளம்பி கோட்டையை சுற்றிப் பார்த்தான். அனைத்து பாதுகாப்புகளும் சரியாக உள்ளதில் திருப்தி அடைந்த ராவணன் இந்தப் பிரச்சணையை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 24

ராமரும் லட்சுமணனும் நாக பாணத்தில் இருந்து பிழைத்து விட்டார்கள். மீண்டும் யுத்தம் செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள் என்று மிகவும் பதறியபடி ராட்சச ஒற்றர்கள் ராவணனிடம் கூறினார்கள். இதனை கேட்ட ராவணன் நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது. நாக பாணத்தில் இருந்து இது வரை யாரும் தப்பித்தது கிடையாது. இந்த ராம லட்சுமணர்கள் எப்படி தப்பித்தார்க்கள். இந்திரஜித்தின் நாக பாணம் வீணாகப் போனது என்றால் நமக்கு ஆபத்து இருக்கிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் நாம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மிகவும் கவலையுடன் பேசினான். சிறிது நேரத்தில் ராவணனின் கர்வம் தலை தூக்கியது. நாம் ஏன் ராமரை பார்த்து பயப்பட வேண்டும் என்று தூம்ராசன் என்ற ராட்சசனை அழைத்தான் ராவணன். மகா பலசாலியான நீ இருக்க நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். உனக்கு தேவையான படைகளையும் ஆயுதங்களையும் திரட்டிக் கொண்டு போய் ராமரையும் இந்த வானர படைகளையும் அழித்து வெற்றியுடன் திரும்பி வா என்று உத்தரவிட்டான் ராவணன். தூம்ராசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அரசன் தனக்கு மிகப்பெரிய கவுரவத்தை அளித்திருக்கிறார் என்று பெருமைப் பட்டுக் கொண்டான். தனக்கு தேவையான படைகளை திரட்டிக் கொண்டு வானரங்களுடன் யுத்தம் செய்ய புறப்பட்டான்.

ராமரை எதிர்க்கப் புறப்பட்ட தூம்ராசன் முதலில் அனுமனை எதிர்த்து யுத்தம் செய்தான். யுத்தத்தில் இரு தரப்பில் இருந்தும் ஏராளமானவர்கள் இறந்தார்கள். அனுமனுக்கும் தூம்ராசனுக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. தூம்ராசன் தன்னுடைய முள்ளால் ஆன கதையில் அனுமனின் தலையில் தாக்கினான். அதனை பொருட்படுத்தாத அனுமன் பெரிய மலையை தூக்கி தூம்ராசன் மீது போட்டார். தூம்ராசன் மலையின் அடியில் உடல் பாகங்கள் நசுங்கி இறந்து போனான். இதனை கண்ட ராட்சச வீரர்கள் யுத்த களத்திலிருந்து பயந்து ஓடினார்கள். தூம்ராசனுடன் நடத்திய யுத்தத்தில் அனுமன் மிகவும் களைப்படைந்திருந்தார். அனுமனை வானர வீரர்கள் மிகவும் போற்றிக் கொண்டாடினார்கள். இதனால் மேலும் உற்சாக மடைந்த அனுமன் தனது களைப்பை பொருட்படுத்தாமல் மீண்டும் யுத்தம் செய்ய ஆரம்பித்தார். தூம்ராசன் அனுமனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மனம் கலங்கிய ராவணன் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிகவும் கோபத்துடன் பெரு மூச்சு விட்டு மாய வித்தைகள் செய்யும் வஜ்ரதம்ஷ்ட்ரனை அழைத்தான். மாய வித்தைகளில் வலிமையான நீ உனக்கு தேவையான படைகளையும் ஆயுதங்களையும் திரட்டிக் கொண்டு போய் ராமரையும் இந்த வானர படைகளையும் அழித்து வெற்றியுடன் திரும்பி வா என்று உத்தரவிட்டான் ராவணன். வஜ்ரதம்ஷ்ட்ரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனக்கு தேவையான படைகளை திரட்டிக் கொண்டு வானரங்களுடன் யுத்தம் செய்ய புறப்பட்டான்.

ராமரை எதிர்க்கப் புறப்பட்ட வஜ்ரதம்ஷ்ட்ரன் தெற்கு வாசல் வழியாக கிளம்பினான். அப்போது வானத்தில் இருந்து அவனுக்கு முன்பாக பெரிய நெருப்புக் கங்குகள் விழுந்தன. நரிகள் ஊளையிட்டன. கொடிய விலங்குகள் ஓலமிட்டன. பல ராட்சச வீரர்கள் கால் இடறி கீழே விழுந்தார்கள். பல அபசகுனங்களை கண்ட வஜ்ரதம்ஷ்ட்ரன் பயந்தாலும் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு முதலில் அங்கதனிடம் யுத்தம் செய்தான். யுத்தத்தில் வஜ்ரதம்ஷ்ட்ரன் மிகப்பெரிய மாயங்கள் செய்து வானர வீரர்களை பயமுறுத்திக் கொன்றாலும் வானர வீரர்கள் எதற்கும் அஞ்சாமல் யுத்தம் செய்து பல ராட்சச வீரர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். வஜ்ரதம்ஷ்ட்ரன் மாயங்கள் செய்து தன்னுடைய வில்லில் இருந்து ஒரே நேரத்தில் பல அம்புகளை அங்கதன் மீது எய்தான். அம்புகளால் தாக்கப்பட்ட அங்கதன் பெரிய மரங்களையும் பெரிய பாறைகளையும் இடைவிடாமல் வஜ்ரதம்ஷ்ட்ரன் மூது தூக்கிப் போட்டுக் கொண்டே இருந்தான். மரங்கள் மற்றும் பாறைகளுக்கு நடுவில் சிக்கிய வஜ்ரதம்ஷ்ட்ரன் மயக்கம் அடைந்தான். அவனது மயக்கம் தெளியும் வரை ஓய்வெடுத்த அங்கதன் அவனது மயக்கம் தெளிந்ததும் அவனை தனது கதை ஆயுதத்தால் தாக்கி கொன்றான். இந்திரனுக்கு நிகரான வலிமையுள்ள வஜ்ரதம்ஷ்ட்ரன் அங்கதனால் கொல்லப்பட்டு விட்டான் என்று வானரவீரர்கள் அங்கதனை போற்றி கொண்டாடினார்கள்.

தொடரும்………