ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 205

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மூத்தோனை வணங்கு. (மூத்தோன் என்பவர் வினாயகர்) வணங்கி பின் பயணம் துவங்கு. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் தடைகளை அகற்று. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் பாவ கர்மாவை அகற்று. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் செயல் யாவும் ஜெயமாகும் என்ற நினைப்புக்கு ஆளாகு. மூத்தோனை வணங்கு. வணங்கி வணங்கி உன் குறையெல்லாம் அகற்றிக் கொள். மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு என்று நாங்கள் (சித்தர்கள்) எம் முன் அமர்பவன் இளையானோக இருந்தாலும் மூத்தோனை இருந்தாலும் கூறுகிறோமே ஏன்? மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு என்றால் அங்கு மூப்பை குறிப்பதல்ல. அது மூப்புக்கெல்லாம் மூப்பான அந்த மூத்தோனை இறையின் அந்த வடிவம் விக்கினங்களைக் களையக் கூடியது. தடைகளை களையக் கூடியது. எண்ணிய காரியத்தை ஜெயமாக்கக் கூடியது. எனவேதான் நாங்கள் எதையெடுத்தாலும் மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு என்று கூறுகிறோம்.

இந்த நிலையில் ஒருவன் வினவலாம் (கேட்கலாம்). நீக்கமற நிறைந்துள்ள பரம் பொருள் ஒன்றுதான். வடிவம்தான் வேறு. வேறு என்று கூறுகின்ற சித்தர்கள் ஏன் மூத்தோனை வணங்கு இளையோனை (முருகரை) வணங்கு அன்னை திரு வை (மகாலட்சிமி) வணங்கு என்று கூறவேண்டும்? பரம் பொருளை வணங்கு என்று கூறலாமே? கூறலாம்தான். ஆனால் இதுபோல் பலமுறை நாங்கள் (சித்தர்கள்) உதாரணம் கூறியிருக்கிறோம். சுவையான இனிப்பு பண்டங்கள் விற்கின்ற அங்காடியிலே (கடை) முன்பெல்லாம் ஒரு வகையான இனிப்பு பண்டங்கள் அதிலும் குறிப்பாக ஆலய திருவிழாக்களில் விற்பார்கள். அனைத்தும் சுவையான இனிப்பிலே விதவிதமான வண்ணங்களிலே செய்யப்பட்டிருக்கும். ஒன்று மிளகாய் பழம் போல் இருக்கும். இன்னொன்று பாகற்காய் போல் இருக்கும். ஒன்று சிங்கம் போல் இருக்கும். இன்னொன்று கிளி போல் இருக்கும். கடித்து சுவைத்தால் அனைத்தும் ஒரே சுவைதான். ஆனால் இதை அறியாத குழந்தை என்ன சொல்லும்? எனக்கு மிளகாய் பழம் மிட்டாய் வேண்டாம். அந்த சுவை நன்றாய் இராது. நாவிலே காரம் தாங்காது. கனி வடிவத்தில் இருக்கின்ற சுவையை வாங்கிக் கொடு என்று கூறும். வடிவம் தான் வேறு. ஆனால் சுவை ஒன்று என்பது குழந்தைக்கு தெரியாதது போல் அனைத்து விதமான தெய்வ வடிவங்களும் விதவிதமாக இருந்தாலும் இருக்கின்ற பரம் பொருள் ஒன்று. பிறகு ஏன் மூத்தோனை வணங்கு என்று கூறுகிறோம்? ஒரு மனிதன் அலுவலகத்தில் அதிகாரியாக அரசாட்சி செய்கிறான். இல்லத்தில் தாரத்திற்கு கணவனாக செயலாற்றுகிறான். பிள்ளைக்கோ தகப்பன் என்ற நிலையில் செயலாற்றுகிறான். நன்றாக கவனிக்க. அவன் அலுவலகத்தில் ஒரு கை சான்று (கையெழுத்து) இடவேண்டுமென்றால் அதற்கான விதிமுறை வேறு. அதே தருணம் பிள்ளையவன் வித்தை கூடத்திலிருந்து(பள்ளிக் கூடம்) ஒரு கைசான்று கேட்கிறார்கள் என்றால் அலுவலகத்தில் கடைப்பிடிக்கும் அதே விதிமுறையை பின்பற்ற இயலுமா? இயலாதல்லவா.

இப்படி ஒரே மனிதன் இல்லத்தில் ஒருவிதமாகவும் அலுவலகத்தில் ஒருவிதமாகவும் பொது இடத்தில் ஒருவிதமாகவும் ஆலயத்தில் ஒருவிதமாகவும் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பது போல் பரம் பொருளும் தடைகளை நீக்கும் பொழுது விநாயகர் வடிவத்திலும் அதுபோல் செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பொழுது முருகப்பெருமான் என்ற வடிவத்திலும் மனிதனுக்கு அன்பை போதிக்கும் பொழுது அன்னை (பராசக்தி) வடிவத்திலும் மனிதனுக்கு பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் பொழுது மகாலட்சுமி வடிவத்திலும் இறை மனிதனுக்காக தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறார். இதில் பேதங்கள் ஏதும் இல்லை. அதற்காக உருவத்தை மாற்றி வணங்கினால் கேட்டது கிடைக்காது என்ற தவறான பொருளை கொள்ள வேண்டாம். இல்லை எனக்கு பிடித்த ஒரே உருவத்தை நான் எப்பொழுதுமே வணங்கிக் கொள்கிறேன் என்றாலும் பாதகமில்லை. இருந்தாலும் நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம் என்றால் அதில் இறைவனின் சூட்சும காரணங்கள் இருக்கும் என்பதால் மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு மூத்தோனை வணங்கு பின் பயணம் துவங்கு ஆசிகள்.

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி தனது சின்முத்திரை காட்டும் திருக்கரத்தை மார்பின் மீது வைத்து கால் மாற்றி அமர்ந்த நிலையில் அருள்கிறார். அவரின் வலக் காலில் யோகப் பட்டயம் அமைந்துள்ளது. இந்த திருக்கோலத்திற்கு உத்குடியாசன திருக்கோலம் என்று பெயர். இலுமியன் கோட்டுர் என்ற ஊரில் உள்ள தெய்வநாதேஸ்வரர் சிவன் கோவிலில் இந்த தட்சணாமூர்த்தி அருள் பாலிக்கிறார்.

சுலோகம் -102

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-55

சுலோகம் -102

அர்ஜூனா ஒருவன் தன் மனதில் உள்ள ஆசைகள் அனைத்தையும் அறவே துறந்து தனது ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறானோ அவன் உறுதியான மன உறுதியுடையவன் என்று அழைக்கப்படுகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உலகப் பற்றுகள் மற்றும் தனது உறவு முறைகளால் வரும் பந்தம் பாசம் மற்றும் செல்வங்கள் மீது உள்ள பற்று என அனைத்து ஆசைகளையும் முற்றிலும் துறந்தவன். மற்றும் உலக ரீதியாக மகிழ்ச்சி வந்தால் உடனே மகிழ்ச்சி அடையாமலும் துக்கம் வந்தால் உடனே துக்கப் படாமலும் எது நடந்தாலும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவன். மற்றும் புகழ் ஏற்பட்டால் அதனால் மகிழ்ச்சி அடையாமலும் யாரேனும் இகழ்ந்தால் மனம் வருத்தப்படாமலும் மனதை ஓரே நிலையில் வைத்திருப்பவன் எவனோ அவன் ஆத்மா எது ஆத்மா இல்லாதது எது என்ற ஞானத்தை பெறுகிறான். அவனே அனைத்தையும் துறந்தவன் ஆகிறான்.

இன்பம் மகிழ்ச்சி இவை அனைத்தும் வெளியில் இருந்து வருபவையாகும். அவை வந்தவுடன் உடனே சென்று விடும். ஆனால் பேரானந்தம் என்று சொல்லப்படுவது தனக்குள்ளேயே கிடைப்பதாகும். அது உடனே செல்லாது. அந்த பேரின்பத்திலேயே தனக்குள்ளேயே பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பவன் எவனோ அவனே மன உறுதியுடையவன் என்று அழைக்கப்படுகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

திருமால்

ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும் போது அக்பர் பீர்பாலிடம் இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா? என்று கேட்டார். அதற்கு பீர்பால் அவருக்கு ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு அக்பர் ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததற்கு உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டுமா? நீர் கூறியது போல் ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே? அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்? இதற்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார். பீர்பால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று அக்பர் மகிழ்ந்தார். ஒரிரு நாட்கள் சென்றன.

அக்பரும் அவர் குடும்பத்தாரும் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் பட கோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டி விட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கிப் போட்டு விட்டார். பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார். அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான். படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிந்தாய் என்னால் நம்ப முடிலவில்லை. சொல் என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீரில் தூக்கி போட்டீர் சொல்லும்? என்றார் கோபமாக. அதற்கு பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக அப்படி செய்தேன் அரசே என்றார். அதற்கு அக்பர் நீ என் பேரனை தூக்கி தண்ணீரில் போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரிந்து கொள்வதற்கும் என்ன சம்மந்தம்? என்று கத்தினார்.

அரசே என்னை மன்னித்து விடுங்கள். அன்று ஒரு நாள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்ற வேண்டுமா என்று கேட்டீர்கள். அரசே சிறிது யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிறப்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே? உங்களை சுற்றி இருக்கும் சேவர்களான எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார். அதற்கு என் பேரன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். நீ திடீரென்று தண்ணீரில் அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார். பீர்பால் புன்னகையுடன் அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவ்வளவு அன்பு இருக்கும் போது அண்ட சாரசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு எவ்வளவு அன்பு உயிர்கள் மீது இருக்கும்? அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான். அரசே இப்பொழுது தங்களுக்கு புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று? என்று புன்னகைத்தார். நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார். அதற்கு அக்பர் பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திருமாலைப் பற்றி தவறாக எண்ணி இருந்தேன். திருமால் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

சுலோகம் -101

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-54

அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான். கேசவா சமாதியில் நிலைபெற்று பரமாத்மாவை அடைந்த உறுதியான அறிவுடையவன் என்ன சொல்வான்? அவன் என்ன செய்வான்? எவ்வாறு நடந்து கொள்வான்? எதனை அடைவான்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கிருஷ்ணர் கூறிய அறிவுரைகளை கேட்ட அர்ஜூனன் மேலும் தனது சந்தேகங்களை கிருஷ்ணரிடம் கேட்கிறான். உறுதியான மன வலிமையாலும் அறிவினாலும் சமாதி நிலை அடைந்தவர்கள் சுற்றி இருப்பவர்களிடம் என்ன பேசுவார்கள். தனது கடமைகளாக அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் இந்த உலகத்தில் எப்படி நடந்து கொள்வார்கள். இறுதியில் அவர்கள் எதனை சென்று அடைவர்கள் என்று கிருஷ்ணரிடம் அர்ஜூனன் கேள்வி கேட்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 204

கேள்வி: பெட்டவாய்த்தலை (திருச்சி அருகே) அருகே உள்ள தேவதானம் என்ற ஊரில் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்ய ஆசி:

இறைவன் அருளால் தாராளமாக செய்யலாம். அதை செய்வதற்கு முன்னால் இப்பொழுது சென்று வந்த மறைவனத்தில் (வேதாரண்யம்) உள்ள கலைவாணிக்கு (அன்னை சரஸ்வதி) பரிபூரணமான மிக உயர்வான அபிஷேகத்தை செய்ய நன்மை உண்டு. இறைவனருளால் சித்தர்கள் பார்வையிலே இது குற்றம் இது குற்றமல்ல என்று கூறும் பொழுது மனித பார்வையில் அது மாறுபடும். மனித பார்வையில் குற்றம் என்று கூறப்படுவது சித்தர்கள் பார்வையில் குற்றமாகாது. மனித ரீதியாகப் பார்த்தால் ஒரு கணவனும் மனைவியும் இருக்கக்கூடிய இடத்தில் கணவனின் உறவுகள் இருந்தால் அதை உலகம் தவறாகக் கொள்ளாது. ஆனால் மனைவியை சார்ந்த உறவுகள் இருந்தால் பாரப்பா இவன் தன் தாயை விட்டுவிட்டான் தன் சகோதரனை விட்டுவிட்டான். மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மனைவியின் உறவுகளை கொண்டுவந்து வைத்திருக்கிறான் என்று பேசுவார்கள். இது இயல்பு. ஆனால் எம்மை (அகத்திய மாமுனிவர்) பொருத்தவரை மனைவியின் பெற்றொர்களை பார்க்கக் கூடாது அல்லது இவர்களை பார்க்கவேண்டும். அவர்களை பார்க்க வேண்டாம் என்பதல்ல. யார் வேண்டுமானாலும் எந்த உறவையும் ஆதரிக்கலாம். அது குற்றமல்ல. அதுவும் கடமைகளில் ஒன்று. கணவனின் உறவுகளை ஆதரிக்கவேண்டிய கடமை மனைவிக்கும் மனைவியின் உறவுகளை ஆதரிக்கவேண்டிய கடமை கணவனுக்கும் இருக்கிறது.

கேள்வி: ஏன் இது போன்ற(மூடர்கள்) மனிதர்கள் வந்து தொல்லை கொடுக்கிறார்கள்?

எல்லா இடங்களிலும் எப்போதும் இது நடப்பதுண்டு. பிரகலாதனுக்கு அவன் தந்தையே தொல்லை தரவில்லையா? அதற்காக பிரகலாதன் தன் பக்தியை விட்டுவிட்டானா. ஒரு உயர்ந்த மலையில் ஏறுகிறாய் வழவழ என பாறை இருந்தால் உன் பாதம் வழுக்கும். கீழே விழுந்துவிடுவாய். அங்கே வழவழப்புக்கு மாறான தன்மை இருந்தால் உறுதியாக பற்றிக் கொள்ளலாம் மேலே ஏறலாம். எதிர்ப்புகளில் வளர்வதுதான் எளிது என்பதை புரிந்துகொள்.

அனந்த பத்மநாபசாமி குடைவரைக் கோவில்

உண்டவல்லி என்பது இந்தியாவில் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இங்கு ஒரே பாறையில் செதுக்கப்பட்ட 20 அடி நீளத்தில் விக்கிரகமாக அனந்த பத்மநாபசாமி காட்சி கொடுக்கிறார். இவர் கிரனைட் கல்லால் செதுக்கப்ட்டுள்ளார். இக் குடைவரை கோவில் கி.பி 4 முதல் 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும். இக்குடைவரைக் கோயில் 4 தளங்களை உடையது. அடித்தளம் முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகிறது. கூரைகளைத் தூண்கள் தாங்குமாறு குடையப்பட்டுள்ளன. அடித்தளத்தின் மண்டபம் ஏழு தலைவாயில்களைக் கொண்டுள்ளது. அடித்தளத்திற்கும் மேல் உள்ள முதல்தளம் அடித்தளத்தைவிட பெரியது. இங்கு காணப்படும் சிற்பங்கள் விஷ்ணுவின் வரலாற்றைப் பற்றி உள்ளது. இரண்டாம் தளம் 9 மீட்டர் அகலமும் ஏறக்குறைய 17 மீட்டர் நீளமும் உள்ள மண்டபத்தையும் தென்முனையில் 4 மீட்டர் சதுரமான சிறிய அறையையும் வட கோடியில் ஒரு நீண்ட சதுரமான கருவறையையும் கொண்டு விளங்குகிறது. இங்கு மூலவரான அனந்த பத்மநாபசாமி காட்சி கொடுக்கிறார்.

மூன்றாம் தளம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. முற்றம் ஒன்று கூரையற்று காணப்படுகிறது. இந்த குன்றிலேயே வேறு சில குடைவரைகளும் காணப்படுகின்றன. அவை அனைத்தும் முற்றுப் பெறாத நிலையில் உள்ளன. இந்த குடைவரை கோயில்களிலிருந்து தக்காணத்தை ஆண்ட கொண்டவீடு அரசர்களின் கோட்டைக்கும் மங்களகிரி மலைக்கும் விஜயவாடா கனகதுர்கா கோவிலுக்கும் ரகசிய பாதைகள் இருந்ததற்கான சுவடுகள் தெரிகிறது. இந்த பாதைகளைப் பயன்படுத்தி அரசர்கள் எதிரிகள் அறியாவண்ணம் தமது படை வீரர்களை போர்க்களங்களுக்கு அனுப்பினார்கள். தற்போது இந்தச் சுரங்கப் பாதைகள் பாழடைந்து மூடப்பட்டுள்ளன. முதல் தளத்தின் அமைப்பிலிருந்து இத்தளம் பல்லவ அரசர் மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 203

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நலமான எண்ணங்கள் நலமான வார்த்தைகள் நலமான செய்கைகள் இவைகள் கட்டாயம் நலத்தை சேர்த்துவிக்கும். நலம் எது? என்பதில்தான் மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) எப்பொழுதுமே ஐயமும் குழப்பமும் சமயங்களில் தெளிவற்ற சிந்தனையும் இருந்து வருகின்றது. யாங்கள் கூறுகின்ற நலம் என்றென்றும் தன்னலம் மட்டுமல்லாது பொது நலமும் ஆகும். பொது நலமின்றி எண்ணப்படுகின்ற எண்ணம் பேசப்படுகின்ற வார்த்தைகள் செய்யப்படுகின்ற செய்கைகள் இவைகள் யாவுமே அப்படி நோக்கம் கொண்ட மாந்தனுக்கு (மனிதனுக்கு) என்றும் துன்பத்தை அமைதியின்மையைத் தரும். எனவே யாம் இறைவனின் திருவடியை வணங்கி எமை (அகத்திய மாமுனிவர்) நாடும் மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) அடிக்கடி கூறுவதே பொது நலம் ஆகும். அதன் அடிப்படையில்தான் தர்மங்களையும் தர்மம் சார்ந்த செயல்களையும் இயம்பிக் கொண்டேயிருக்கிறோம். இறைவன் அருளாலே தர்மம் என்கிற சொல் வெறும் பரஸ்பரம் செய்கின்ற உதவிகளை மட்டும் குறிப்பிடாது. உதவி செய்யப்படுகின்ற தருணம் சூழல்,எண்ணம் இவையனைத்தையும் அடிப்படையாய்க் கொண்டே அது முழுமையான இறை வழி தர்மமா? அல்லது மனித வழி தர்மமா? என்று பார்க்கப்படுகின்றது. ஏனெனில் மேலெழுந்தவாரியாக பார்த்தால் அனைத்துமே தர்மமாக உதவியாகத் தெரியலாம். ஆனால் அனைத்தையும் இறை வழி தர்மமாக யாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த சுயநலமும் இல்லாமல் வேறு சூது எண்ணங்கள் இல்லாமல் திறந்த மனதோடு பெருந்தன்மையோடு செய்கின்ற செயலே உண்மையில் இறை சார்ந்த தர்மமாகும். இயம்பிடுவோம் மேலும் கோடை காலத்தின் வெம்மையை தணிக்க ஆங்காங்கே பொது இடங்களில் தென்னை ஓலையைக் கொண்டு பந்தல் இடுவது வழக்கம். நன்றாய் கவனிக்க வேண்டும். அது கூரைதான். ஆனால் அது கூரை வருணன் (மழை) பொழிவிற்கு தாக்குப்பிடிக்குமா? என்றால் பிடிக்காது. ஆனாலும் கூரை வேய்ந்தது போலிருக்கும். மனிதனை பார்த்துக் கேட்டால் சற்றே அனலை தணிக்க இந்த வழிமுறை என்பான். ஆனால் அனலையும் தணிக்க வேண்டும் வருணன் பொழிவையும் தாங்கவேண்டும் என்றால் எவ்வாறு கூரையிடல் வேண்டும்? பந்தலிட வேண்டும்? என்றால் மிக மிக மிக அடர்த்தியாக இடல் வேண்டும். பெரும்பாலும் மனிதர்கள் செய்கின்ற உதவி கோடைக்கால கூரை போல் இருக்கின்றது. யாங்கள் கூறுகின்ற தர்மவழி மழைக்கால கூரை போல் இருந்திடல் வேண்டும். இதில்தான் எப்பொழுதுமே வேறுபாடுகள் இருந்து கொண்டே வருகிறது மனிதர்களுக்கும் மகான்களுக்கும். இறைவன் அருளாலே இது போன்ற கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் இறை நோக்கி வருவது அல்ல அல்ல. ஒரு மனிதனை நோக்கி இறை வரும் வண்ணம் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளில் இதும் ஒன்றாகும். இறைவன் அருளால் இதுபோல் இங்கு அமர்ந்துள்ள சேய்களுக்கு (பிள்ளைகளுக்கு) யாம் நல்லாசிகளை இத்தருணம் இயம்புகின்றோம். நல்விதமாய் வாழ்வு நிலை செல்ல எம் வழி வருகின்ற சேய்களுக்கும் (பிள்ளைகளுக்கும்) எமது வழிமுறை என்று அறியாமல் எமது வழிமுறைகளை பின்பற்றிக் கொண்டிருக்கும் சேய்களுக்கும் கட்டாயம் நலம் நடந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று மீண்டும் இறை வழியில் நாங்கள் (சித்தர்கள்) இறையை எண்ணி இறைவனின் திருவடியை எண்ணி பிராத்தனை செய்து இதுபோல் நல்லாசிகளை மீண்டும் இதுபோல சேய்களுக்கும் அதுபோல் சேய்களுக்கும் இயம்புகின்றோம்.

சுலோகம் -100

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-53

சுலோகம் -100

பல வசனங்களை கேட்டு சஞ்சலமாகிய உனது புத்தி எப்போதும் பரமாத்மாவிடம் அசையாமல் மேலும் திடமாக நிலைபெறுகிறதோ அப்போது யோகத்தை அடைவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சொர்கத்தை அடையும் வழிகள் என்றும் இந்த உலகின் போகங்கள் செல்வங்கள் அவற்றை அடையும் வழிகள் என்றும் இங்கு பல செய்திகளை கேட்டு கேட்டு புத்தி நிலையில்லாமல் சிதறுகிறது. ஒரு செய்தியை படித்தோ அல்லது வேறு ஒருவர் சொல்வதை கேட்டோ அது நன்மையானதாக மனதிற்கு தோன்றுகிறது. சிறிது நேரத்தில் அதே செய்தி பற்றி வேறொன்றை படிக்கும் போதோ அல்லது வேறு ஒருவர் சொல்வதை கேட்கும் போதோ உடனடியாக அது தவறானது என்று தோன்றுகிறது. மனமானது திடமான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறது. இதையெல்லாம் விட்டு இறைவனின் மீது வலிமையான நம்பிக்கையும் இறைவனின் மீது சிந்தனையும் எப்போது திடமாக ஏற்படுகிறதோ அப்போது யோகத்தை அடைந்து விடலாம் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -99

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-52

எப்போது உன்னுடைய புத்தியானது மோகம் என்ற சேற்றை முற்றிலுமாக கடந்து விடுகிறதோ அப்போது நீ கேட்டவை பற்றியும் கேட்கப்படுகிறவை இவை இரண்டிலும் உனக்கு வேதனை ஏற்படுத்தாமல் இவ்வுலக போகங்களில் இருந்து விடுபடும் வைராக்கியத்தை அடைவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத கர்ம யோகத்தை கடைபிடித்து வாழ்ந்தால் தூய்மையான மனம் பிறக்கும். அப்போது உள்ள அறிவைக் கொண்டு மோகம் (மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி) என்னும் சேற்றை கடந்து விட்டால் பரம் பொருளை அறிந்து கொள்ளும் ஞானம் உண்டாகும். இதனால் இது வரை நீ கேட்டவை பற்றியும் இனி கேட்கப்படுபவை பற்றியும் உனக்கு கவலை இருக்காது. இந்த உலக போகங்களில் இருந்து விடுபடும் வைராக்கியத்தை அடைவாய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.