கேள்வி: கோதண்ட ராமரின் கோதண்டத்திற்கு மாலை போடுவதன் தாத்பர்யம் என்ன?
பொதுவாக இறை அல்லது நிலையோடு இருக்கின்ற ஏனைய உப பொருள்களுக்கும் இறைத்தன்மை வந்துவிடுகிறது என்பது மெய்தான். அதனால்தான் இறைவனின் வாகனங்கள் கூட பக்திக்குரிய வழிபாட்டுக்குரிய விஷயமாகப் போற்றப்படுகிறது. எனவேதான் விஷ்ணுவிடம் இருக்கக்கூடிய சங்கும் சக்கரமும் கூட அஃறிணைப் பொருள்களாக இல்லாமல் அதுவும் உயர் தெய்வ கடாக்ஷம் பெற்ற தெய்வீகமாகவே போற்றப்படுகிறது. அதேப் போலதான் இந்த கோதண்டமும். அது இறைவனின் கையிலே ஸ்ரீராமபிரானின் கரத்திலே இருப்பதால் அதுவும் தெய்வாம்சம் பெற்றதாகவே போற்றப்படுகிறது. எப்படி பகை குறைவதற்கு பகை கடிதலும் சத்ரு சம்ஹார யாகமும் எம்மால் உபதேசம் செய்யப்படுகின்றதோ அதைப் போல இங்கு ராமரையும் அந்த ராமரின் கரத்தில் இருக்கக் கூடிய வில்லையும் வழிபாடு செய்வதால் பகையைக் குறைத்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
கேள்வி: சிராத்தத்தில் 96 வகை இருப்பதாக சொல்லப்படுகிறது. மஹாவ்யதிபாதம் பற்றி சொல்லுங்கள்:
பின்னர் விளக்கமாகக் கூறுகிறோம். 96 அல்ல. 108 க்கும் மேலான வகைகள் உண்டப்பா. எல்லாவற்றையும் எல்லா மனிதர்களாலும் பின்பற்ற முடியாது. ஒரு எளிய பூஜை ஒரு எளிய தர்ப்பணத்தை செய்து ஒரு ஆவினத்திற்காவது (பசு) வயிறார உணவைத் தரலாம். ஏதும் இல்லாதவர்கள் சிறிய உயிரினங்களுக்கு உணவினைத் தரலாம்.
நான் பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருந்தும் கூட எல்லா உயிரினங்களுக்கும் ஈஸ்வரனாக இருந்தும் கூட என்னுடைய பிரகிருதியை வசப்படுத்திக் கொண்டு என்னுடைய யோகமாயையினால் வெளிப்படுகிறேன்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
எனக்கு ஆசைகளோ கர்மங்களோ எதுவும் இல்லை. ஆகையால் எனக்கு பிறப்பு என்பதும் அழிவு என்பதும் எப்போதும் இல்லை. ஆனாலும் மனிதர்களுடைய கண்ணுக்கு பிறப்பது போலவும் இறப்பது போலவும் தோன்றுகிறேன். இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனாக இருந்தும் கூட சாதாரண மனிதனைப் போலவே காட்சி அளிக்கிறேன். நான் இந்த உலகத்தில் பல வடிவங்களில் அவதாரம் செய்யும் போது மனிதர்கள் தான் பிறப்பதாகவும் அவதார நோக்கம் முடிவடைந்ததும் நான் இறப்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகின் அவதாரம் செய்து உலக நன்மைக்காக நான் செய்யும் லீலைகளை மனிதர்கள் பார்த்து அதிசயம் செய்கிறேன் என்று தான் எண்ணுகிறார்களே தவிர உலக நன்மைக்காக இதனை செய்கிறேன் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. ஏனெனில் நான் யோகமாயை என்னும் திரையில் ஒளிந்து கொண்டு வெளிப்படுகிறேன்.
இதுபோல் நல்விதமாய் மூத்தோனின் லீலைகளும் மூத்தோனின் தோற்றமும் மூத்தோன் வழிபாட்டால் கிடைக்கக் கூடிய அனைத்து விளைவுகளும் அற்புதத்தில் அடங்கும் என்பதின் சுருக்கமே இதுபோல் வாக்கியமாகும்.
கேள்வி: கோட்சார பலன்களை அறிந்து கொள்ள லக்ன பாவத்திலிருந்து பார்க்க வேண்டுமா? அல்லது சந்திர பாவத்திலிருந்து பார்க்க வேண்டுமா?
இரண்டிலிருந்தும் பார்க்க வேண்டுமப்பா. இருந்தாலும் கூட அடிப்படை ஜாதகம் வலுவானது. அதை பிரதிபலிக்கக் கூடியது திசா புத்தி அந்தர சூட்சுமம். அதன் பிறகுதான் கோட்சார பலன்கள்.
கேள்வி: கோச்சாரத்தில் சனியும் செவ்வாயும் துலாத்தில் சேர்ந்திருக்கிறார்கள். தீய விஷயங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
முருகப்பெருமான் வழிபாட்டில் கவனம் செலுத்துவதும் நவகிரக அபிஷேகம் செய்வதும் ஏற்புடையதாகும்.
கிருஷ்ணர் பதில் சொல்கிறார். எதிரிகளை வாட்டும் அர்ஜூனா எனக்கும் உனக்கும் பல பிறவிகள் கழிந்து விட்டது. அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய். நான் அறிவேன்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
அர்ஜூனா நீயும் நானும் இப்போது தான் பிறந்திருக்கிறோம் என்று எண்ணாதே. இதற்கு முன்பு பல முறை பிறந்திருக்கிறோம். அவை அனைத்தையும் நீ அறிந்து கொள்ளாமல் இருக்கிறாய். நான் அறிந்து வைத்திருக்கிறேன். நீ அறிந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் உனது அறிந்து கொள்ளும் தன்மையானது இந்த உலகத்தில் உள்ள பந்தங்களுடனும் பற்றுக்களுடனும் தர்மம் மற்றும் அதர்மங்களால் சூழப்பட்டு மாயையில் நீ சிக்கி இருப்பதினால் அறிந்து கொள்ளாமல் இருக்கிறாய். நான் எப்படி அறிந்து வைத்திருக்கிறேன் என்றால் எந்த விதமான பந்தங்கள் பற்றுக்கள் இல்லாமல் இந்த உலகத்தில் ஒட்டாமலும் மாயையில் சிக்காமலும் எனது ஞானம் தடைபடாமல் இருப்பதால் நான் அறிந்து வைத்திருக்கிறேன்.
கேள்வி: ஸ்ரீரங்கத்திலே சுக்ரவார கிருஷ்ணன் சன்னிதி இருக்கிறது. அதன் தாத்பர்யம் என்ன?
பொதுவாகவே அரங்க ஸ்தலம் (பெருமாள் ஆலயம்) என்பது சுக்ரனுக்கு உகந்த ஸ்தலம் என்று கூறலாம். ஜாதகத்தில் சுக்கிர பகவானின் அருள் குறைவாக இருக்கப் பெற்றவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் ஸ்ரீரங்கமும் ஒன்று. எனவே அந்த ஸ்ரீரங்கம் முழுவதுமே சுக்கிரனின் ஆட்சி இருக்கிறது. அதனால்தான் அது ஆதிகாலத்தில் இருந்த நிலை நாளுக்கு நாள் மாறி மாறி தற்காலத்திலே மிகப்பெரிய நகரமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அதுபோல் நிலையிலே அங்கு எந்த சன்னிதியிலே சென்று இறைவனின் எந்த வடிவத்தை வணங்கினாலும் கூட அது சுக்ர தோஷத்திற்கு பரிகாரமாக அமையும். எனவே மூலவரை வணங்கினாலும் வேறு உப சன்னதியில் சென்று வழிபாடு செய்தாலும் கூட அது சுக்ரன் தொடர்பான தோஷங்களை நீக்கும். எனவே அங்குள்ள எல்லா வகை சன்னதியிலும் ஒரு மனிதன் எந்த வகை பூஜை செய்தாலும் அதற்கு சுக்கிர பரிகார பூஜை என்று பொதுவாக கொள்ளலாம். எனவே அந்த அடிப்படையில் எழுந்ததுதான் இன்னவன் விடுத்த வினா.
கேள்வி: சக்கரத்தாழ்வாரின் பின் பக்கம் நரசிம்மரை பிரதிஷ்டை செய்வதன் தாத்பரியம் என்ன?
மகாவிஷ்ணுவும் மகாவிஷ்ணுவுடன் இருக்கக்கூடிய சங்கும் சக்ரமும் இணை பிரியாதவை என்பதை ஒரு குறிப்பாக உணர்த்துவதற்காகத்தான். இதுபோல் முற்காலத்திலே எங்கு சுதர்சனத்தை பிரதிஷ்டை செய்தாலும் அதன் பின்னால் மகாவிஷ்ணுவின் வடிவத்தை பிரதிஷ்டை செய்வதாக ஒரு ஐதீகம் இருந்தது. அது சுதர்சனம் என்பது தீமையை அழிக்கக் கூடிய பகையை வெல்லக் கூடிய ஒரு அம்சமாக இருப்பதால் மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரை பிரதிஷ்டை செய்யும் வழக்கமும் இருந்தது. எப்படியும் உப தெய்வங்களை வணங்குவதோடு பிரதான தெய்வத்தையும் வணங்குவதே சிறப்பு என்ற அடிப்படையிலேயே இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சுதர்சன பகவானை வணங்கினாலும் மகாவிஷ்ணுவை வணங்கினாலும் பலன் ஒன்றுதான்.
அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான். உங்களுடைய பிறப்பு அண்மையில் நிகழ்ந்தது. சூரியனுடைய படைப்பு வெகுகாலத்திற்கு முன்பு கல்பத்தின் ஆதியிலேயே நிகழ்ந்தது. நீங்கள் கல்பத்தின் ஆதியில் சூரியனுக்கு இந்த யோகத்தை கூறினீர்கள் என்ற இந்த விஷயத்தை எவ்வாறு புரிந்து கொள்வது?
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
அர்ஜூனனுக்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த யோகத்தை கிருஷ்ணர் சுலோகம் 163 இல் சூரியனுக்கு சொன்னேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அர்ஜூனன் நீங்கள் பிறந்து சில காலம் தான் ஆகிறது. ஆனால் உலகம் படைக்கப்பட்ட போது தோன்றிய சூரியனுக்கு உபதேசித்துள்ளதாக சொல்கிறீர்கள். இக்காலத்தில் பிறந்த தாங்கள் உலகம் படைக்கப்பட்ட போது தோன்றிய சூரியனுக்கு சொன்னீர்கள் என்பதை நான் எப்படி புரிந்து கொள்வது என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான்.
இறைவனின் கருணையைக் கொண்டு உரைப்பது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே விளையும் என்பது தான் மனிதன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய எளிய சூத்திரமாகும். வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் மனம் விரும்பாத சம்பவங்கள் நிகழ்வுகள் நிகழ்கிறதோ விரும்பாத உறவுகள் தொடர்கிறதோ விரும்பாத சூழலில் இருக்க நேரிடுகிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கோ எப்பொழுதோ எந்த ஊருக்கோ நகருக்கோ நாட்டிற்கோ ஒட்டுமொத்தமாக பிடிக்காத உயிர்கள் விரும்பாத பாதிப்பை தரக்கூடிய ஒன்றை அம்மனிதன் செய்திருக்கிறான் என்று. ஏற்படுத்திய விளைவு ஏற்படுத்திய மனிதனை மீண்டும் சென்று சேர்ந்த பிறகே அந்த விளைவு நேரமாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பழங்கால ஆயுதமான பூமராங்கு எப்படி எய்தவனிடமே திரும்ப வருமோ அது போல ஒவ்வொரு வினைக்கும் விளைவுகள் இருப்பதால் செய்கின்ற வினையை நல் வினையாய் செய்து விட்டு போனால் என்ன என்பதை தான் நாங்கள் காலம் காலமாக எம்மை நாடுகின்ற மனிதர்களுக்கு உணர்த்திக் கொண்டு இருக்கிறோம்.
ஒருவன் உலகியல் ரீதியாக தேடக்கூடிய செல்வங்கள் பொருள் ஆஸ்தி இவை அனைத்தும் உடலை விட்டு அவன் சென்ற பிறகு வருமா? உதாரணமாக நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல ஒரு விலை உயர்ந்த வாகனத்தை வாங்கி அதை இயக்கிப் பார்த்து சந்தோஷப்படுகிறான். நாங்கள் குறை கூறவில்லை. ஆனால் அந்த வாகனம் அவன் அந்த உடலை இங்கேயே விட்டு விட்டு அதாவது இழப்பு கண்ட பிறகு அந்த ஆன்மா அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தால் அந்த ஆன்மாவிற்கு அந்த வாகனம் பயன்படுமா? சுகம் தருமா உயர்ந்த வைர கனக அணிமணிகளை வாங்கிக் குவிக்கிறான். அவை எல்லாம் விலை உயர்ந்தது என்று. அவற்றை வாங்கி அவன் உடலோடு இருக்கும் போது கழுத்திலே அணிந்து சந்தோஷப்படுகிறான். இதை மற்ற மனிதன் பார்த்தால் தன்னை மதிக்க வேண்டும் என்கிறான். ஆனால் அதே சமயம் அந்த உடலை விட்ட பிறகு அந்த ஆன்மா அந்த அணிகலன்களை எல்லாம் அணிய இயலுமா? எனவே சுருக்கமாகக் கூறுவது சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆதியில் இருந்து தொகுத்து சுருக்கமாக மீண்டும் மீண்டும் கூறுவது என்ன என்றால் ஆன்மா எனப்படும் உயிர் அல்லது ஆத்மா எப்படி அழைத்தாலும் ஒரு மனித உடலில் அது இருந்தாலும் அல்லது விலங்கு உடலில் அது இருந்தாலும் அல்லது வேறு எந்த உடலில் இருந்தாலும் அந்த ஆத்மா சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் பாவங்களற்ற தன்மையை மனிதன் மேற்கொள்ள வேண்டும். புண்ணியத்தை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு ஆத்மா உடலோடு இருந்தாலும் உடலற்று இருந்தாலும் அதனுடன் இருப்பது பாவங்களும் புண்ணியங்களும். எனவே ஆத்மா நித்ய சந்தோஷமாக நித்ய நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் சதாசர்வ காலம் மனிதன் புண்ணியத்தை தேடித்தான் ஆக வேண்டும். ஒரு விலங்கு புண்ணியத்தை சேர்க்க இயலாது. பாவத்தையும் செய்ய இயலாது. அது செய்த பாவத்தை அந்த விலங்கு உடலுக்குள் அந்த ஆத்மா புகுந்து செயல்பட்டு அந்த விலங்காகவே வாழ்ந்து அந்த பிறவியை முடிக்க வேண்டும் என்பது விதியின் கட்டளை. ஆனால் மனிதன் நினைத்தால் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள முடியும். பாவத்தை குறைத்துக் கொள்ள முடியும். இந்த சுதந்திரம் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்படுகிறது. கொடுத்த சுதந்திரத்தை மனிதன் என்றுமே சரியாக பயன்படுத்தியதாக சரித்திரமில்லை. சரியாக பயன்படுத்தினால் இறைவனருள் அதிக தொலைவில் இல்லை ஆசிகள்.
பாவம் என்றால் என்ன? எண்ணத்தால் வாக்கால் செயலால் பிறருக்கு அணுவளவும் துன்பத்தைத் தராமல் வாழ எண்ணுவது. அப்படி இல்லாமல் செய்கின்ற அனைத்தும் பாவங்களே. எனவே பாவங்களே இல்லாத ஒரு நிலையை நோக்கி ஒரு மனிதன் சென்றால்தான் துன்பங்களே இல்லாத வாழ்க்கை கிட்டும். ஆனால் இருக்கிறது அதற்காக இந்த தவறை செய்ய வேண்டி இருக்கிறது என்னை விட பல மடங்கு தவறுகளை செய்யக் கூடிய மனிதன் நன்றாகத்தானே வாழ்கிறான். நான் சிறிய தவறைதானே செய்கிறேன் என்று எதையாவது தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டு தவறு மேல் தவறு செய்யும் செய்து கொண்டே போகிறான். இறைவனும் கருணையோடு எப்படியாவது இந்த மனிதன் திருந்துவான் என்று பல்வேறு வாய்ப்புகளை தருகிறார். ஆனால் அப்படி எல்லாம் திருந்தாமல் அதிக துன்பம் வரும் பொழுது ஏதாவது ஒரு நிலையிலே மெல்ல உணரத் தொடங்குகிறான். அப்படி உணரும் பொழுது அவன் சேர்த்த பாவங்கள் அவனைப் பாடாய் படுத்தத் துவங்குகிறது. எனவே தொடர்ந்து புண்ணிய செயலை செய்வதும் (புண்ணியம் என்றால் நிறைய செல்வம் இருந்தால் தான் செய்ய முடியும். தனத்தை வாரி வாரி வழங்கினால்தான் புண்ணியம் என்று எண்ண வேண்டாம்) தனம் உள்ளவர்கள் தனத்தை வைத்து புண்ணியம் செய்யட்டும். தனம் இல்லாதவர்கள் உடல் உழைப்பால் பிறருக்கு நன்மையை செய்து அதன் மூலம் புண்ணியம் சேர்க்கட்டும்.
உடலாலும் பிறருக்கு உழைத்து நன்மையை செய்ய முடியாதவர்கள் வார்த்தைகளில் இதம் இதமாக நல்ல சுகமாக ஆறுதலாக பிறரிடம் பேசிப் பேசி அனைவரையும் மனமார குளிர வைத்து அதன் மூலம் புண்ணியம் சேர்த்து கொள்ளட்டும். எனவே மனிதனாக பிறவி எடுத்தவன் இந்த உலக வாழ்விற்காக ஏதாவது ஒரு பணியை செய்தாக வேண்டும். அந்தப் பணியில் கூடுமானவரை நேர்மையை கடைபிடிக்க வேண்டும். தன் கடமையை தவறாது செய்ய வேண்டும். தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் காப்பாற்ற வேண்டும். அதன் பிறகுதான் அவன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எனவே இவற்றை எல்லாம் செய்து கொண்டே ஒருவன் நேர்மையாக வாழ்ந்து கொண்டே நீதியை தவறாமல் பின்பற்றி கொண்டே இறைவனை 100/100 அவன் அறிந்த வடிவத்தில் அவனுக்கு எப்படி இறைவன் இப்படிப்பட்டவர் இந்த வடிவில் இருக்கிறார் என்று போதிக்கப்பட்டு இருக்கிறதோ அந்த வடிவிலேயே இறைவனை நம்பி நல்லவனாக வாழ்ந்தால் வாழ்க்கை என்பது தொடர்ந்து அவனுக்கு அதிக சிக்கல் இல்லாமல் இருக்கும். ஆனால் வெறும் புறத்தே உள்ள மாயையிலே சிக்கி காண்பதெல்லாம் காட்சி காண்பதெல்லாம் வேண்டும் என்ற நோக்கில் அவன் பயணப்பட்டால் மிகவும் கடினம்தான் அவனுக்குத் தொடர்ந்து வரும்.