கேள்வி: சித்ரா பௌர்ணமிக்கும் சித்தர்களுக்கும் என்ன தொடர்பு ?
இறைவன் அருளாலே எதோடும் தொடர்பு வேண்டாம் என்றுதான் நாங்கள் சித்தர்களாக மாறியிருக்கிறோம்.

ஆதிசங்கரர் பலமுறை லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுத நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ரநாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும் சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம். இரண்டு மூன்று முறை இவ்வாறு நடக்க ஏன் இப்படி? என்று சிஷ்யரிடம் கேட்டார் ஆதிசங்கரர். சிஷ்யர் தான் சுவடிகளை எடுக்கச் செல்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளைத் தந்ததாகவும் அதனைச் சரி பார்க்காமல் தான் கொண்டு வந்து தந்து விட்டதாகவும் கூறினார். இவ்வாறு இரண்டு மூன்று முறை விஷ்ணு சஹஸ்ரநாமச் சுவடிகளை அன்னையே சிறுமி ரூபத்தில் வந்து தந்ததாக அறிந்து கொண்ட சங்கரர் அதுவே அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தார். சௌந்தர்ய லஹரி பவானி ஸ்தோத்ரம் எனப் பல விதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரரால் லலிதா சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் செய்ய இயலவில்லை.
பிற்காலத்தில் ஆசார அனுஷ்டானங்கள் நிரம்பப் பெற்ற வரும் சகல சாஸ்திரங்களில் பாண்டித்யம் கொண்டவருமான பாஸ்கர ராயர் என்பவரைக் கொண்டு லலிதா சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் எழுதிக் கொண்டாள் அம்பிகை.
அம்மாளு என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் கும்பகோணத்தில் 1906ல் அவள் பிறந்தாள். அந்த கால வழக்கப்படி சிறு வயதிலேயே அவளுக்கு திருமணம் நடந்தது. திருமணம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் கணவன் மரணம் அடைந்ததால் அவள் சிறு வயதிலேயே விதவையாகி விட்டாள். சமூகத்தில் ஒதுக்கப்பட்டு பெண் உருவத்தில் சிதைக்கப்பட்டு உள்ளத்தில் நொறுக்கப்பட்டு சமூகத்தில் அபசகுனமாக வெறுக்கப்பட்டு சபிக்கப்பட்ட ஒரு ஜீவனாக பசியிலும் அவமானத்திலும் வளர்ந்து வாழ்ந்தாள். நரசிம்மனிடம் நாராயணனிடம் கிருஷ்ணனிடம் அவள் கொண்ட பக்தி ஒன்றே அவளை உயிர் வாழச் செய்தது. நாட்கள் செல்ல செல்ல இந்த சமூகம் எனும் கொடிய உலக நரகத்திலிருந்து விடுதலை பெற தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாள். பக்கத்தில் ஒரு ஆழமான குளம். கண்களை மூடி ஒருநாள் பகவானே என்னை ஏற்றுக் கொள் என்று குதிக்கும் போது நில் என்று ஒரு குரல் தடுத்தது கண் விழித்தாள்.
உக்கிரமான நரசிம்மர் அவள் எதிரே சாந்த ஸ்வரூபமாக நின்றார். எதற்காக இந்த தற்கொலை முயற்சி உனக்கு. உனக்கு கடைசி நிமிடம் வரை உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க நிழலும் கிடைக்க போகிறதே என்றார் நரசிம்மர். அம்மாளு அவரை போற்றி வாழ்த்தி வணங்கினாள். பகவானே எனக்கு ஒரு வரம் தா என்றாள். என்ன வேண்டும் கேள் அம்மாளு என்றார். எனக்கு பசியே இருக்கக் கூடாது என்றாள். அம்மாளு இனி உனக்கு பசி என்றால் என்ன என்றே தெரியாது என்று நரசிம்மர் வரமளித்ததார். அன்று முதல் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு டம்பளர் மோர் பால் ஏதாவது ஒரு பழம் என்று கடைசி வரை வாழ்ந்த அம்மாளு அம்மாள் உணவை தொடவில்லை. ஏகாதசி அன்று அதுவும் கிடையாது. உற்சாகத்தோடு இருந்தாள். தினந்தோறும் கிருஷ்ண பஜனையில் தன்னை மறந்த நிலையில் ஈடுபட்டாள். அவளுக்கு குருவாக இருந்த ராமச்சந்திர தீர்த்தர் பலவற்றை கற்றுக் கொடுத்தார். இளம் விதைவையாக வாழ்ந்த அம்மாளுக்கு ஒரு நாள் பாண்டுரங்கன் கனவில் உத்தரவிட்டான். நீ பண்டரிபுரம் வா என்றான் பண்டரிநாதன்.
இந்த குரல் அவளை பொழுது விடிந்ததும் பண்டரிபுரம் போக வைத்தது. எப்படி தனியாக போவது என்று அவளது அம்மாவை நீயும் என் கூட வா என்று கூப்பிட்டாள். அம்மா வரவில்லை. தனியாக கட்டிய துணியோடும் தம்புராவோடும் பண்டரிபுரம் சென்றவள் பல வருடங்கள் அங்கேயே தங்கி விட்டாள். கோவிலை அலம்பினாள் பெருக்கினாள் கோலமிட்டாள் மலர்கள் பறித்து மாலை தொடுத்து இறைவனுக்கு சூட்டினாள் பாடினாள் நிறைய பட்சணங்கள் உணவு வகைகள் சமைத்து பாண்டுரங்கனுக்கு திருப்தியோடு அர்பணித்தாள். எல்லோருக்கும் அவற்றை பிரசாதமாக விநியோகித்தாள். ஆனால் அவைகளில் ஒரு துளியும் அவள் உட்கொள்ளவில்லை. அந்த ஊர் ராணி அம்மாளுவின் பூஜைக்காக வெள்ளி தங்க பாத்திரங்கள் நிறைய கொடுத்தாள். கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் அவற்றை அப்படியே விநியோகம் செய்து விட்டாள் அம்மாளு அம்மாள். பணத்தை தொட்டதே இல்லை. கீர்த்தனங்களை சாதாரணமாக அவள் பாடினாள். எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த கோவிலின் பெருமைகளை அப்படியே அவள் பாடலில் பாடினாள். அவள் அந்த கோவில்களுக்கு அதற்கு முன் சென்றதில்லை ஒன்றுமே தெரியாது என்றாலும் இந்த அதிசயம் பல கோவில்களில் நடந்திருக்கிறது.
மகா பெரியவா கும்பகோணத்தில் தங்கி இருந்த போது ஒருநாள் ஒருவர் தன் பெண்ணுக்கு திருமணம் பெரியவா ஆசீர்வாதம் ஆசி பெற வந்திருக்கிறேன் என்கிறார். என்கிட்டே எதுக்கு வந்திருக்கே. மரத்தடியில் ஒரு நித்ய உபவாசி இருக்காளே அவா கிட்டே போய் ஆசிர்வாதம் வாங்கிக்கோ. உனக்கு சர்வ மங்களமும் சித்திக்கும். வேண்டிக் கொண்ட எண்ணங்களும் நிறைவேறும் என்றார். மகாபெரியவா இவ்வாறு அம்மாளு அம்மாளின் பெருமைகளை எல்லோருக்கும் அறிவித்ததற்கு பிறகு நிறைய பக்தர்கள் அம்மாளுவை சூழ்ந்து கொண்டார்கள். மகாபெரியவா ஒரு தடவை அம்மாளு அம்மாள் புரந்தர தாசர் அம்சம் என்று கூறினார். பாகவத தர்மத்தின் உதாரணமாக நித்ய பஜனை ஆடல் பாடல் என்று அவள் வாழ்க்கை பூரணமாக கடந்தது. ஒரு பெரியவர் மரணத் தருவாயில் இருக்கும் போது உறவினர்கள் அம்மாளுவை அவரிடம் அழைத்து போனார்கள். அவரைப் பார்த்ததும் அவர் உயிர் பிரிந்து போவது தெரிந்தது. உடனே அம்மாளு தன்னை மறந்த நிலையில் கண்களை மூடி பாடினாள். அவரது உயிரை ராம நாமம் தூக்கி செல்வது அவளுக்கு தெரிந்தது. அதை பாடினாள். அருகே இருந்த உறவினர்களுக்கு அந்த மனிதர் ராம நாமம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தவர் என்பதே தெரியாது. பிறகு தான் தெரிந்தது.
ஒரு சமயம் சென்னை ஜார்ஜ் டவுனில் நாராயண முதலி தெருவில் நாராயண செட்டி சத்திரத்தில் அம்மாளு தங்கியிருந்தார். அப்போது சென்னையில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே பங்கேற்ற நாட்டியக் கலைஞர்கள் கோபிநாத் மற்றும் தங்கமணி தம் குழுவினருடன் இரவு நேரக் கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு அம்மாளு தங்கியிருந்த சத்திரத்தின் மேல் தளத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய நிலையில் சற்றே கண்ணயரும் நிலையில் கீழே தாள சப்தமும் நர்த்தனம் ஆடும் சப்தமும் கேட்டதும் இந்த நேரத்தில் யார் ஆடுவார்? பிரமையோ என்று நினைத்தார்கள். மீண்டும் மீண்டும் இன்னமும் சப்தம் அதிகரிக்க நாட்டியக் கலைஞர்கள் கீழே வந்து பார்த்த போது அம்மாளு அம்மாள் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தார். உடனே தாளத்தை வாங்கி நாட்டியத்தில் அனுபவம் மிக்க கலைஞர்கள் தாளம் போட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை மறந்து நாட்டியத்தில் லயித்தனர். கேதார ராகத்தில் பாலக் கடல சய்யா எனும் கீர்த்தனம் பிறந்தது. எல்லாம் முடிந்ததும் நாட்டியக் கலைஞர்கள் அம்மாளு அம்மாவை வணங்கி சில ஜதிகள் நாட்டிய சாஸ்திரம் நன்கு கற்றவர்களாலேயே ஆட முடியாது. அதைப் போன்ற எவராலும் சாதாரணமாக ஆட முடி யாத தெய்வீக நர்த்தனத்தை இன்று கண்டோம். இது யாரிடமும் பயின்று வருவதல்ல யாராலும் பயிற்றுவிக்க முடியாததும் கூட என்று கூறி பிரமித்து நின்றனர். இன்று இதைக் கண்டது நாங்கள் செய்த பேறு என உணர்ச்சி வசப்பட்டனர். இவள் புரந்தரதாஸரின் அவதாரம் என்று ஒருமனதாக புகழ்ந்து போற்றி வணங்கினார்கள்.
மதுராபுரி ஆஸ்ரமத்தில் 2002 இல் அம்மாளுக்கு 94 வயதில் நேரிலேயே கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் தரிசனம் கிடைத்தது. அந்த கணமே நாக்கு கால மூர்தியு நீனே நீ தானே நாலு கால மூர்த்தி என பாடினாள். அந்த நாலு கால மூர்த்திகள் யார்? விடியற்காலையில் ஸ்ரீமந் நாராயணன் காலை முடியும் நேரம் ஸ்ரீ ராமன் அந்தி நேரத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் இரவில் ஸ்ரீ வேணுகோபாலன். கடைசி காலங்களை கும்பகோணத்தில் கழித்தாள். வயதானாலும் கிருஷ்ணனை தூங்கப் பண்ணி எழுப்பி குளிப்பாட்டி சிங்காரித்து ஆடைகள் அணிவித்து பாடி உணவு சமைத்து நிவேதித்து தாயாக பாண்டுரங்கனுக்கு சேவை செய்தவள் அம்மாளு அம்மாள். ஒரு நாள் தன்னுடைய இறுதிக் காலம் நெருங்கியதை உணர்ந்த அம்மாளு பாடிக் கொண்டிருக்கும் போது அதில் வைகுண்டம் எப்படி இருக்கும் என விவரித்து பாடினாள். பங்குனி உத்தரம் நாளில் கௌரி சிவனை அடைந்தாள். சீதை ராமனை அடைந்தாள். ஆண்டாள் பரமனை அடைந்தாள். அதுபோல் அம்மாளு அம்மாள் 104 வயது வாழ்ந்து 2010 பங்குனி உத்திரம் அன்று சித்தி அடைந்தாள்.
ஸ்ரீதிரிபுவன சித்தர் தாமரை மலரில் உருவாக்கிய சிவலிங்கம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் என்ற சிறு கிராமம் உள்ளது. இந்த ஊரில் அருள்மிகு சோமநாதர் திருக்கோவில் உள்ளது. புராணபெயர் சதூர்வேதி மங்கலம் பெருமூள்ளுர் பேரூர். மூலவர் ஸ்ரீசோமநாதர். சதுர வடிவ பீடத்தில் சுயம்பு லிங்க பாணத்துடன் இறைவன் அருளுகின்றார். அம்பாள் சுந்தராம்பிகை குந்தளாம்பிகை. நின்ற கோலத்தில் அருள் காட்சி கொடுக்கின்றாள். தலவிருட்சம் செந்தாமரை கொடி. தீர்த்தம் லட்சுமி தீர்த்தம்.
இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது சிவனது தலையிலிருந்து விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்தத்திலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும். ஸ்ரீதிரிபுவன சித்தர் என்பவர் ஓர் அரிய தவத்தை மேற்கொண்டார். பூலோகம் புவர்லோகம் சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களிலும் அரிய ஒரு தெய்வீகத் தாமரைப் புஷ்பத்தை தன் தவத்தினால் லிங்கமாக உருவாக்கி வழிபட எண்ணம் கொண்டார். தன் எண்ணத்தின் படி பூலோகத்தில் இக்கோவிலின் தீர்த்தத்தில் இருந்து எடுத்த தாமரை மலரை தன் தவ வலிமையால் லிங்கமாக உருவாக்கி பிரதிஸ்டை செய்து வழிபட்டார். பாணலிங்கமே தாமரைத் தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப்போல் வேறு எங்கும் காண இயலாது.
கிழக்கு நோக்கிய திருவாயில். விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் நவக்கிரகம் பைரவர் சுப்பிரமணியன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலவர் விமானம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் ஆகியவற்றுடன் திருக்கோயில் விளங்குகின்றது. மகாமண்டபத் தூண்களில் அழகிய கலை வேலைப்பாடும் புராணக்கதைகளை விளக்கும் சிற்பக்காட்சிகளும் விளங்குகின்றன.
தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கும் முன் மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி தக்க இடத்தை தேர்ந்தெடுக்கு மாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை பெற்றுத் தருமாறு வசிஷ்டரை வேண்டியுள்ளார். வசிஷ்டர் கைலாயம் சென்று அகத்தியரை நாடி விளக்கம் வேண்டினார். திரிபுவன சித்தர் தவ செய்த இடமான பெருமகளூரே பூலோகம் பூவர்லோகம் சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களும் சோம யாகம் செய்ய சிறந்த இடமாகும். அத்துடன் அம்பர் மாகாளத்திற்கு ஈடான சிவதலமாகும். மேலும் இங்குள்ள மூலவர் இந்த யுகத்திலிருந்து சோமநாதர் என்ற திருநாமத்தை தாங்கி அச்சிவலிங்க மூர்த்தியாக அருள்பாலிப்பார் என்று அகத்தியர் விளக்கம் தந்திட தசரத மகாராஜா இப்பெருமகளூர் சிவாலயத்தில் பெரும் சோம யாகத்தை இயற்றினார். சேதுகரை செல்லும் போது ராமன் இத்தலத்தை பூஜித்துள்ளார்.
பல யுகங்களாக இருந்த இந்த சிவலிங்கம் இந்த யுகத்தில் வெள்ளத்தின் காரணமாக குளத்திற்குள் மூழ்கியது. பிற்காலத்தில் இந்த குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது. இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழ மன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித் தழுவிய போது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து வைரம் வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பானத்தின் மீது அடையாளங்கள் உள்ளன. இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.
ததீசி முனிவர் வேத காலத்தைச் சார்ந்தவர். இவர் பெரிய சிவபக்தர். இவருடைய பெற்றோர் அதர்வண முனிவர் சிட்டி தேவி ஆவர். இவருடைய தந்தையே அதர்வண வேதத்தை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார். ததீசி முனிவரின் மனைவி சுவர்ச்சா ஆவார். இவர் ஒரு சமயம் அரசன் ஒருவனுடன் கருத்து வேறுபாடு கொண்டார். இதனால் முனிவருக்கும் அரசனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. சண்டையின் முடிவில் ஏராளமான காயங்கள் முனிவருக்கு உண்டானது. ததீசி முனிவரும் சுக்ராச்சாரியாரின் உதவியால் காயங்கள் நீங்கப் பெற்றார். பின் சுக்ராசாரியார் ததீசி முனிவருக்கு ம்ருத்யுஞ்ச சஞ்சீனி மந்திரத்தை போதித்தார். மந்திர உபதேசத்தின் பலனாக முனிவரின் உடல் மின்னல் போன்று வலிமை மிக்கதாக மாறியது. பின் முனிவர் அரசனுடன் ஏற்பட்ட சண்டைக்காக மனம் வருந்தி சிவனை நோக்கி தவம் இருந்தார். இறுதியில் சிவபெருமான் முனிவருக்கு காட்சி தந்தார். பின் முனிவரை எவரும் துன்புறுத்த முடியாது. எவரும் முனிவரைக் கொல்ல முடியாது. முனிவரின் உடல் மற்றும் எலும்புகள் வஜ்ரம் (மின்னல்) போன்று உறுதியானவையாக இருக்கும் என வரங்களை வழங்கினார். பின் ததீசி முனிவரும் காட்டில் தவ வாழ்க்கையை மேற்கொண்டார்.
அப்பொழுது பாற்கடலில் அமுதம் கடைவதற்காக தேவர்களும் அசுரர்களும் முடிவு மேற்கொண்டனர். தேவர்களும் தங்களின் ஆயுதங்கள் தீய சக்திகளிடம் சிக்காமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தேவரிஷி நாரதர் தேவர்கள் தங்களின் ஆயுதங்களைப் ததீசி முனிவரிடம் கொடுத்து பாதுகாக்க சொல்வதே சிறந்தது என்று கூறினார். தேவர்களும் தங்களின் ஆயுதங்களை ததீசியிடம் கொடுத்து நாங்கள் திரும்பி வந்து கேட்கும் வரை ஆயுதங்களை பாதுகாக்க வைத்திருங்கள் என்று கூறினர். முனிவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து ஆயுதங்களை தன்வசம் வைத்துக் கொண்டார். பாற்கடலை கடைந்த பின்பு வந்த அமிர்தத்தை தேவர்கள் பருகி சீரஞ்சீவி ஆயினர். தங்களின் ஆயுதங்கள் குறித்து மறந்து போயினர். ததீசி முனிவரும் தேவர்களிடம் அவர்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தார் நாட்கள் நகர்ந்தன. தேவர்கள் திரும்பி வரவில்லை. ததீசி முனிவரும் தேவர்களின் ஆயுதங்களை பாதுகாக்க முடியாமல் தனது தவ வலிமையால் அவற்றை திரவமாக்கி குடித்து விட்டார். தேவ ஆயுதங்களின் சக்தி முழுவதும் முனிவரின் முதுகெலும்பில் போய் சேர்ந்தது.
சிலகாலம் சென்ற பின்பு விருத்தாசுரன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அவனுடைய தவத்தினைப் பாராட்டி பிரம்மதேவர் அவர் முன் தோன்றினார். அவரிடம் இருந்து அசுரன் எனக்கு உலகின் உலோகம் மற்றும் மரத்தால் ஆன ஆயுதத்தாலோ பஞ்சபூதத்தாலும் எந்த உயிரிகளாலும் ஆபத்து ஏற்படக் கூடாது என்ற வரம் வேண்டும் என்று கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அருளினார். வரத்தின் காரணமாக ஆவணம் தலைக்கேற உலக உயிர்களை விருத்தாசுரன் துன்புறுத்தினான். எந்த ஆயுதத்தாலும் அசுரனை கொல்ல இயலாது என்பதை அறிந்த இந்திராதி தேவர்கள் மிகவும் கவலையுற்றனர். அவர்கள் சிவபெருமானிடம் விருத்தாசுரனின் அழிவிற்கு வழிகூறுமாறு வேண்டினர். சிவபெருமானும் உங்களின் பிரச்சினைக்கு ததீசி முனிவர் தீர்வு சொல்வார். நீங்கள் அவரைச் சந்தியுங்கள் என்றார். அதன்படி இந்திராதி தேவர்கள் முனிவரை சந்தித்து விருத்தாசுரன் பற்றியும் அவனுடைய வரத்தினைப் பற்றியும் தெரிவித்தனர். அனைத்தையும் கேட்ட முனிவர் தியானத்தில் நடக்கப் போவதை அறிந்து பின் தனது உடலில் உள்ள சக்தி ஊட்டம் பெற்ற முது கெழும்பை இந்திரனிடம் ஆயுதமாக உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு கூறி தன் உடலை விட்டார். முனிவரின் முதுகெலும்பு இந்திரனின் வலிமை மிக்க வஜ்ராயுதம் ஆயுதமாகவும் விளங்கியது.
பலசாலிகளான கருட பகவானும் அனுமனும் இந்திரனின் வஜ்ராயுதத்தால் ஒரு முறை தாக்கப்பட்டனர். இந்த ஆயுதத்தை பெருமைப்படுத்த எண்ணி ஆயுதத்தை எதிர்க்காமல் பணிந்து நின்றார்கள். இதன் விளைவாக கருட பகவான் தனது ஒரு சிறகினை இழந்தும் அனுமன் மூர்ச்சை அடைந்தும் இவ்வாயுதத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர். தற்போது இந்திய அரசின் உயரிய விருதான பரம் வீர் சக்ராவின் மேல் ததீசி முனிவரின் முதுகெலும்பு படம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.