புன்னகையுடன் நரசிம்மர்

விஜயநகர காலத்து நரசிம்மரின் சிற்பம். கடிஹஸ்தத்துடன் புன்னகை தவழ காட்சி தருகிறார். அவரது பாதங்களுக்கு கீழே அஞ்சலி முத்திரையுடன் கருடபகவான் அமர்ந்துள்ளார். நரசிம்மரின் இருபுறம் சங்கு மற்றும் சுதர்சனம் இருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 518

கேள்வி: பொது நலவாதிகளை விட சுயநலவாதிகள் தான் சுகமாக வாழ்கிறார்கள் இன்றைய காலகட்டத்தில் ஏன் இந்த மாறுபட்ட நிலை?

பதில்: இறைவன் அருளால் சுகம் என்றால் என்ன என்று நீ எண்ணுகிறாய்? (மன நிம்மதி வறுமையில்லாத நோய் நொடியில்லாத வாழ்வு) ஒன்றைப் புரிந்து கொள். ஒரு மனிதனுக்கு எந்த சூழலும் நிம்மதியையோ சந்தோசத்தையோ தருவதில்லை. அவனுடைய மனநிலையை பொறுத்து தான் வாழ்க்கை நிலை என்பது. நிறைய தனம் தான் சந்தோசம் என்றால் தனவான்கள் அத்தனை பேரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். (இருக்கிறார்களா?) மிகப்பெரிய பதவிதான் நிம்மதி என்றால் பதவியில் இருக்கக் கூடியவர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும். (இருக்கிறார்களா?) ஆக ஒவ்வொரு மனிதனின் மனநிலை மனப்பக்குவம் மனமுதிர்ச்சி இதை பொறுத்துதான் சுகமும் துக்கமும் உன் மனதை நீ திடமாக வைரம் போல் உறுதியாக வைராக்யமாக பெருந்தன்மையாக நேர்மையாக நீதியாக சத்திய நெறியில் வைத்துக் கொண்டால் இறை வழியில் செல்வதற்கு உன்னை தயார்படுத்திக் கொண்டால் நீ எங்கு இருந்தாலும் சுகமாக இருக்கலாம். நலமாக இருக்கலாம். எனவே சுகம் என்கின்ற லோகாய விஷயத்தை பார்த்து அதை உன்னோடு ஒப்பிட்டுப் பார்த்து குழப்பம் கொண்டிட வேண்டாம்.

உன் தேவைகள் என்ன? என்பதை உன்னைப் படைத்த இறைவன் நன்றாக புரிந்திருக்கின்றான். நோயற்ற குழந்தைக்கு எதைத் தர வேண்டும்? ஆரோக்கியமான குழந்தைக்கு எதை தர வேண்டும்? என்பதை தாய் அறிவாள் என்பதைப் போலத்தான் உன்னுடைய துன்பம் அல்லது உன்னொத்து உள்ளவர்களின் துன்பத்திற்கு காரணம். முன் ஜென்ம பாவத்தின் தாக்கம். இந்த பாவத்தை குறைத்துக் கொள்ளத்தான் நாங்கள் விதவிதமான வழிபாடுகளை கூறுகின்றோம். கண்ணீர் மல்க எம் முன்னே அமருகின்ற ஒவ்வொரு மனிதனையும் பார்க்க பரிதாபமாக இருந்தாலும் அந்த மனிதன் செய்த செயலால் பாதிக்கப்பட்ட ஆத்மாவின் கதறல்கள் என் செவியின் விழும் சமயம் இறைவன் சரியாகத்தான் ஒவ்வொரு மனிதனையும் வைத்திருக்கிறான் என்று எமக்கு தெரிகிறது. அதையும் தாண்டி எத்தனையோ பிறவிகளில் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு இப்பொழுது நாங்கள் நல்லவர்களாக இருக்கிறோம் எங்களை வாழ விடுங்கள் என்று ஒவ்வொரு மனிதனும் மெய்யாக மெய்யாக மெய்யாக இறைவனை நோக்கி வேண்டினால் கட்டாயம் நன்மைகள் நடக்கும். ஒருவன் சுகமாக இருக்க வேண்டும் என்றால் பிறர் சுகத்தை கெடுக்கக்கூடாது. ஒருவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் பிறர் நிம்மதியை கெடுக்கக்கூடாது. ஒருவன் பிறரின் வார்த்தைகளால் காயப்படக்கூடாது என்றால் பிறறை வார்த்தைகளால் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். எனவே இதையெல்லாம் மனதிலே வைத்துக் கொண்டு உன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு நீ உன் பக்தி வழியில் தொடர்ந்து செல்ல செல்ல உன் வாழ்க்கையிலும் நிம்மதி வரும்.

இறைவனின் கருணையை கொண்டு சிறு வயது முதலே மனதை அடக்கி தக்க உணவை ஏற்பதும் வாய் பார்த்து உண்ணாமல் வயிறு பார்த்து உண்ணுகின்ற பழக்கமும் உடல் உழைப்பிற்கு ஏற்ப உணவை தேர்ந்தெடுக்கின்ற அறிவும் அதுபோல் அன்றாடம் சிறு சிறு உடற்பயிற்சியும் யோகாசனங்களையும் முறையாக செய்வதும் அனைத்தையும் ஒரு நெறிக்கி உட்படுத்தி காலாகாலத்தில் செய்து கொள்ள பழகிக் கொள்வதும் கட்டாயமாகும். இதனையும் தாண்டி பாவ கர்ம வினையால் நோய் பற்றும் பொழுது மனிதன் இறை வழிபாடு குறிப்பாக தன்வந்திரி வழிபாட்டை செய்வதோடு அதுபோல் நோயற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் அதாவது எந்த மனிதன் ஏழை நோயாளிகளுக்கு முடிந்த மருத்துவ உதவிகளை செய்கிறானோ அவன் நோயிலிருந்து காப்பாற்றப்படுவான். முன்னோர் காலத்தில் 300 ஜென்மத்திலே இலவச மருத்துவ மனைகளை கட்டி சேவை செய்தவன் மறு ஜென்மத்திலே முழுக்க முழுக்க ஆரோக்கியமானவனாக பிறக்கிறான் இதை மனதிலே கொண்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய ஏழை எளிய மக்களுக்கு எவனோருவன் மருத்துவ சிகிச்சைக்கு உண்டான செலவினங்களை ஏற்கிறானோ அவன் கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாகாமல் இறைவனால் ஆட்கொள்ளப்படுவான்.

தண்டாயுதபாணி

தண்டாயுதபாணி தன்னுடைய வாகனமான மயில் மீது சாய்ந்த தோரணையில் சுமார் 6 அடி உயரத்தில் நிற்கும் எழில்மிகு தோற்றம். மயிலின் வாயில் பாம்பு. இடம் ஆத்மநாத சுவாமி கோவில் ஆவுடையார்கோயில். புதுக்கோட்டை மாவட்டம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 517

கேள்வி: தர்மம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். யாருக்கு தர்மம் செய்ய வேண்டும்? இல்லாதவர்களுக்கா? நம் உடன் பிறந்தவர்களுக்கா? உறவினர்களுக்கா?

பதில்:: இறைவனின் கருணையை கொண்டு தர்மம் எனப்படும் வார்த்தையை நாங்கள் பயன்படுத்தும் பொழுது மிக மிக நுணுக்கமாக கவனிக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே ஒரு மனிதனுக்கு தர்மத்தின் அனைத்து சூட்சுமத்தையும் கூறிவிட இயலாது. பொதுவாக கூறுகிறோம். ஏனென்றால் செய்ய செய்யத் தான் தர்மத்தின் அத்தனை நுணுக்கங்களும் ஒரு மனிதனுக்கு புரிபடத் துவங்கும். இந்த நிலையில் நாங்கள் கூறுவது என்னவென்றால் யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் தேவை எறிந்து எந்த நிலையிலும் காலம் பார்க்காமல் திதி பார்க்காமல் நட்சத்திரம் பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் கிழமை பார்க்காமல் தாராளமாக தேவைப்படும் மனிதர்களுக்கு தேவைப்படும் உதவிகளை தேவைப்படும் தருணத்தில் தரலாம்.. யாருக்கு தந்தாலும் நன்மைதான். இருந்தாலும் ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு தருவது கட்டாய கடமை. அதை தர்மத்தில் நாங்கள் சேர்க்க மாட்டோம். ரத்த தொடர்பு இல்லாதவர்களுக்கும் பிரதிபலன் எதிர்பாராமல் செய்வதைத்தான் நாங்கள் தர்மத்தில் சேர்க்கிறோம்.

அதே தருணம் ஒருவனுக்கு ஒரு உதவியை செய்யும் பொழுது அவன் அதை முறைகேடாக பயன்படுத்துகிறான் எப்படி இதனை நாங்கள் ஏற்றுக் கொள்வது என்றால் ஒரு முறை செய்து பார்த்து விட்டு இது ஏற்புடையது இல்லை என்று மனதிலே பட்டுவிட்டால் நிறுத்திக் கொள்ளலாம். நாங்கள் அதை குறை கூறவில்லை ஆனால் ஒவ்வொரு மனிதனையும் பார்த்து இந்த உதவியை இவன் சரியாக பயன்படுத்துவானா? என்று ஆராய்ந்து கொண்டே போனால் கட்டாயம் தர்மம் செய்ய இயலாது. இறைவன் இவ்வாறு பார்த்து பார்த்து செய்தால் இங்கே மனிதனுக்கு பஞ்சபூதங்கள் கிட்டாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் காற்று வீசட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் சூரிய ஒளி கிட்டட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் நீர் கிடைக்கட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் நிலவொளி கிடைக்கட்டும் என்று இறைவன் ஒருபொழுதும் சிந்திப்பதில்லை செயல்படுவதில்லை. அந்த இறைவனின் மிகப்பெரிய பராக்கிரம சிந்தனைக்கு ஒவ்வொரு மனிதனையும் நாங்கள் அழைக்கிறோம். அந்த உயர்ந்த உச்ச நிலையிலிருந்து அள்ளி அள்ளி வழங்குவதே எம் வழியில் அவர்களுக்கு அழகாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 516

கேள்வி: சித்தர் அருட்குடிலை நோக்கி பல வருடங்களாக வருபவர்களுக்கு நோயிலிருந்து விடுதலையும் வறுமையிலிருந்து விடுதலையும் தராமல் எங்களை ஓட வைக்கிற ஓட வைக்கின்றீர்களே? இது தகுமா ஒரு தகப்பன் இடம் குழந்தைகள் ஏதாவது கேட்டால் கூடுமானவரை தகப்பன் மறுப்பதில்லை. ஏதோ ஒருவருக்கு மட்டும் நோயை நீக்கி விட்டால் மட்டும் போதாது எங்கள் எல்லோருக்கும் நோயை நீக்க வேண்டும். அப்படி ஏற்பட்டால் இன்னும் ஆன்மீக முன்னேற்றம் தர்மம் சத்தியம் நீங்கள் கூறியபடி நடக்கும். பின்னர் உரைப்போம் என்று ஏதோ முழு நிவாரணம் அளிக்காத மருந்துகளை எங்கள் ஞானத் தகப்பன் சொல்வது பொருந்துமா? இது தகுமா? நீங்கள் கொடுத்த உயிர்தான். நீங்கள் எங்களுக்கும் தர்ம சிந்தனை வைத்தால் தானே நாங்கள் பிழைக்க முடியும் சிறைச்சாலை இன்னும் இந்த பூமியிலே சித்தர் சித்தர் அருட்குடிலை நோக்கி வரும் எங்களுக்கு நன்னடத்தையில் பெயரிலே நோய் வறுமையில் இருந்து விடுதலையும் வானுலக சட்டங்களை தயவு செய்து மாற்றி கருணை செய்யுங்கள். நோய்களுக்கு உரிய மருந்துகளை சொல்லுங்கள் ஐயா இந்த தடம் தான் மெய்யான இடம் மெய்யான வழி மெய்யான கடவுள் உயிர் நடுக்கத்தோடு வேண்டுகிறோம் காத்தருள்வாய் ஈஸ்வரா உன்னிடம் உன்னை தானப்பா கேட்கிறேன் பதில் கூறப்பா.

பதில்: இறைவன் அருளால் நோய் நீக்க கூறுகிறான். இவன் மட்டுமல்ல. நோய் எங்கே இருக்கிறது என்று மனிதர்களுக்கு இன்னும் புரியவில்லையப்பா. அவனவன் மனதில் தான் நோய் இருக்கிறது. மனதிலே இருக்கின்ற நோய் நீங்கி விட்டால் உடலிலும் நோய் நீங்கிவிடும். நாங்கள் தான் ஆதியோடு அந்தமாக தர்மம் தர்மம் தர்மம் என்று கூறுகிறோம். ஆனால் கையிலே இருக்கின்ற தனத்தை எல்லாம் தனக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்கும் வரையில் ஒரு மனிதனுக்கு துன்பம் அத்தனை எளிதாக தீராது. இன்னொன்று சுருக்கமாக ஒருவனின் எதிர்கால விதி அறிந்து தான் நாங்கள் பல்வேறு தருணங்களில் மௌனம் கடைபிடிக்கிறோம். ஆக நோயாக இருக்கட்டும் வேறு பிரச்சினையாக இருக்கட்டும் அது வந்ததின் காரணம் அந்த பாதிப்பை பிறர் பார்க்கும் பொழுது ஆஹா இந்த மனிதனை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. நல்ல மனிதனாக இருக்கிறானே அவனுக்கு ஏன் இந்த சோதனை என்று கூறலாம். ஆனால் அந்த மனிதனின் பாலிய (முன்) காலத்தை அறிந்த இன்னொரு மனிதன் என்ன கூறுவான். இவனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவன் பால்ய (சிறு) வயதிலேயே என்னென்ன செய்தான் என்று எமக்கல்லவா தெரியும் என்று அவனைப் பற்றி அறிந்தவர்கள் கூறுவார்கள்.

அதைப்போலத் தான் இறைவனும் நாங்களும் நவகிரகங்களும் எம்முன்னே அமர்கின்ற மனிதனும் கோடானு கோடி பிறவிகளின் பாவகர்மங்களை பார்க்கிறோம். அதனால் தான் மீண்டும் மீண்டும் நாங்கள் கூறுகிறோம். தர்மத்தை வலியுறுத்தி அது ஒன்றுதான் எளிது என்று. ஆனால் அதை நோக்கி வரமாட்டேன் என்று அவன் விதி அவனை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எதுவும் தீர்வுக்கு வராதது போல் தான் இருக்கும். அதனையும் தாண்டி இறைவனிடம் மன்றாடி நாங்கள் பலருக்கு தீர்வை தந்து கொண்டிருக்கிறோம். இல்லை இங்கு வந்து இந்த ஓலையிலே வாக்கை கேட்டு ஒரு பிரச்சனை கூட எமக்கு தீரவில்லை என்று கருதக்கூ டியவர்கள் தாராளமாக வேறு ஒரு நிலையை நோக்கி செல்லலாம் என்று பலமுறை நாங்கள் கூறியிருக்கிறோம்.

ஆதியிலேயே கூறிவிட்டோம் நோய் என்றால் என்ன? அந்த நோய்க்கு என்ன நிவாரணம்? என்று அதன் பிறகு வறுமே நீங்க என்ன வழி? என்றும் கூறிவிட்டோம். மீண்டும் சுருக்கமாக கூறுகிறோம். ஒருவனிடம் இருக்கக்கூடிய துன்பங்கள் இறைவனை வணங்கியும் தர்மம் செய்தும் தீரவில்லை என்றால் ஒன்று இன்னும் பாவம் இருக்கிறது என்று பொருள். இரண்டு அவன் செய்ய வேண்டிய கடமைகள் அதாவது ஆன்மீக ரீதியான செயல்பாடுகள் போதவில்லை என்பது பொருள். இதை மனதிலே வைத்துக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தனிமையிலே தம்மைத்தான் குற்றவாளியாக தம்மைத்தான் நீதிபதியாக எடை மேடையிலே நிறுத்தி ஏன் இது வந்தது? நாம் என்ன செய்தோம்? நமக்கு ஏன் இப்படி? என்று பார்த்தால் கட்டாயம் அவன் தவறு அவனுக்கே தெரியும். தன்னிடம் எந்த தவறும் இல்லை ஆனால் அநியாயமாக தண்டிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று எண்ணுவது மனிதனின் இயற்கை சுபாவம். காரண காரியம் இல்லாமல் இந்த உலகில் எதுவும் நடப்பதில்லை. எனவே ஒரு பிரச்சனை தீரவில்லை என்றால் இன்னும் வலுவான பிரார்த்தனை. இன்னும் வலுவான தர்மம். இன்னும் சரியான முறையில் சத்தியத்தை பயன்படுத்துதல். இவையெல்லாம் குறைவாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு இறை வழியில் இன்னும் உறுதியாக செல்ல வேண்டும் என்பதே பொருளாகும்.

யோகினி கோயில்

யோகினி கோயில் அல்லது சௌசதி யோகினி கோயில் என்று அழைக்கப்படும் இக்கோவில் ஓரிசா மாநிலத்தின் கோர்த்தா மாவட்டத்தின் ஹிராப்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழைமையான சாக்த சமயக் கோயில் ஆகும். இக்கோயிலில் காளி பிரதான தெய்வமாக இருக்கிறாள். இக்கோயிலின் உட்புறச் சுவரில் 64 கலைகள் 64 நோய்களுக்கு காரணமாக 64 யோகினி தேவதைகளின் சிற்பங்கள் உள்ளதால் இக்கோயிலை 64 யோகினி கோயில் என்றும் அழைப்பார்கள். இந்த யோகினி பெண் தெய்வங்களின் பெயர்கள் அவற்றின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோவில் கிபி 9ம் நூற்றாண்டில் கலிங்க இராணி ஹிராவதியால் கட்டப்பட்டது.

யோகினி கோயில் மணற்கல்லால் கட்டப்பட்டுள்ளது. யோனி அமைப்பில் வட்ட வடிவில் இக்கோயிலின் கட்டிட அமைப்பு உள்ளது. கோயிலின் மூலவரான காளி தேவி அரக்கனின் உடல் மீது ஏறி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் ஏகபாத மூர்த்தி பார்வதி பிள்ளையார் ரதி சாமுண்டி பைரவர் கிருஷ்ணர் சிற்பங்கள் உள்ளது. கோயிலின் உட்புறச் சுவர்களில் 64 யோகினி தேவதைகளின் கருங்கல் சிற்பங்கள் உள்ளது. இக்கோயில் சூரிய ஒளி படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் துவாரபாலகர் வடிவங்கள் உள்ளன. வெளிச்சுவரில் ஒன்பது காத்யாயினி வடிவங்கள் உள்ளன. கோயிலின் மையப்பகுதியில் உள்ள மண்டபம் சண்டி மண்டபம் எனப்படுகிறது. இக்கோவிலில் சாக்த சமய தாந்திரீகர்கள் தாந்திரீகச் சடங்குகள் செய்து வழிபட்டுள்ளனர். தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை நிர்வகித்து பராமரிக்கிறது.

செண்பகாதேவி அம்மன் கோவில்

செண்பகாதேவி அம்மன் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால ஸ்தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது. இங்கு நாகம் மற்றும் புற்று அமைந்துள்ளது. செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலை சுற்றி விநாயகர் அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களின் சிலை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கம் போன்றவையும் உள்ளது. செண்பகாதேவி அம்மன் பெயரிலேயே இங்குள்ள அருவி செண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றது. அகத்திய மாமுனிவர் செண்பகாதேவி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார்.

இந்த ஆலயத்தில் கருவறை அர்த்தமண்டபம் மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் உள்ளது. இங்கு லட்சுமி சரஸ்வதி தேவியருடன் இணைந்து செண்பகாதேவி அம்மன் கருவறையில் காட்சியளிக்கின்றனர். அம்மனுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழா நேரத்தில் சில ஆண்டுகள் முன்பு வரை ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று மழை பெய்யும். செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி பொழுது மட்டும் அதுவும் மதியம் வரை மட்டுமே தற்போது மக்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். மற்ற நேரங்களில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 515

கேள்வி: செண்பகாதேவி அம்மனை பற்றியும் அங்கே வாழும் பெண்மணியை பற்றியும் விளக்குங்கள்:

இறைவன் அருளால் பொதுவாக மனித சஞ்சாரமற்ற இடங்களில் மகான்களும் ஞானிகளும் ரிஷிகளும் சென்று குறுக்கீடுகள் இல்லாமல் தவம் செய்ய வேண்டும் என்பதற்காக அதுபோன்ற இடங்களை தேர்ந்தெடுப்பது உண்டு. இன்னவன் கூறிய இடத்தில் இன்றும் அரூப நிலையிலேயே பல்வேறு ரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற இடங்களுக்கு மனிதர்கள் செல்வதை நாங்கள் குற்றம் என்று கூறவில்லை. ஆனால் அநாகரீகமான செயலை செய்யாமல் அந்த இடத்தின் புனிதத்தை களங்கப்படுத்தாமல் அமைதியான முறையில் வணங்கி விட்டு வருவது நன்மையை தரும். ஒருவேளை ஆர்வத்தின் காரணமாக இது போன்ற மலைப் பகுதிக்கோ அருவிப் பகுதிக்கோ அல்லது உட்புற வனாந்திரத்திற்கோ திரளாக மனிதர்கள் செல்லும் பொழுது அங்கே பக்தி குறைந்து ஒருவகையான பொழுதுபோக்கு நிலை உருவாகி விடுகின்றது. அதுபோன்ற நிலை அங்கு வந்துவிட அனாசாரமான வார்த்தைகள் அங்கு பெருக பெருக அங்குள்ள மகான்கள் சூட்சுமமாக இடம் பெயர்ந்து விடுவார்கள். இதை மனதிலே வைத்து இது போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் மற்றபடி எந்தவொரு தனிப்பட்ட மனிதர் குறித்தும் இத்தருணம் எம்மிடம் வினவ வேண்டாம்.

சேனாதிபதி ஆறுமுகன்

சேனாதிபதி ஆறுமுகனின் அழகிய கற்சிலை. ஆறு முகத்தில் ஐந்து முகம் மட்டுமே முன்னால் தெரிகிறது. முருகரின் வலது பக்கத்தில் ஆறாவது முகம் மறைவாக இருக்கிறது. இடம்: ஸ்ரீ கண்டேஸ்வரர் கோயில். நஞ்சன்கூடு. கர்நாடக மாநிலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 514

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ராம பாதம் வணங்கியே ராம நாமம் சொல்லியே
ராம ஜெபம் செய்துமே ராம் ராம் என்றுமே
ராம ஓசை எங்கனும் நல்ல ஓசை அஹ்ததாம்
ராம நாமம் தவிரவும் வேறு நாமம் ஏததாம்
ஏது வழி கடைத்தேற ராமன் இன்றி
ஏது பயன் வாழ்ந்துமே ராம நாமம் சொல்லாமல்
ஏது இன்பம் வாழ்ந்துமே ராம நாமம் சொல்லாமல்
ஏது மோக்ஷம் என்றுமே ராம நாமம் இன்றியே
ராம நாமம் ஓட்டுமே காம நாமம்
ராம ஜனனம் மனிதர்க்கும் மோக்ஷ ஜனனம்
ராம பிறப்பு என்றென்றும் உயர் பிறப்பு
ராம நெறி வாழும் வழி தவிர ஏது நெறி வாழும் வழி
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம நாமம் அண்ட வாழ்வை நல்கிடும்
ராம நாமம் ஆயுளைத் தந்திடும்
ராம நாமம் அன்பையே வளர்த்திடும்
ராம நாமம் ஆசையைத் தகர்த்திடும்
ராம நாமம் அகிலத்தை வென்றிடும்
வென்றிட புலன்களை ராம நாமம் உதவிடும்
வேதனை தீர்ந்திட ராம நாமம் உதவிடும்
வெறுப்புதனை மாற்றிடும் ராம நாமம்
நாமம் என்றால் நாமம் அது ராம நாமம்
நன்மை என்றால் நன்மை அது ராம நாமம்
நல்லெண்ணம் நல் செய்கை தந்திடும் ராம நாமம்
நல்வழியில் நாளும் நடத்தி உயர்த்தி வைக்கும் ராம நாமம்
ராம ராம ராம ராம ராம எந்தை ராம் ராம் ராம்.