தவ்வை என்னும் ஜேஷ்டாதேவி

ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை மூதேவி அலட்சுமி, சேட்டை, காக்கைக் கொடியோள் பழையோள் கரியசேட்டை கேட்டை மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு. இவள் 14 பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரி ஆவார். மூதேவி என்றால் மூத்த தேவி என்று பொருள். சைவ வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது. தவ்வையின் காக்கையை தனது கொடியாக கொண்டிருக்கிறாள். வாகனம் கழுதை. அவளின் கையில் துடைப்பம் உள்ளது. தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பல காலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை திகழ்கிறாள்.

பிரதி தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர் ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஏழாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் தொண்டரடிப் பொடியாழ்வார் தன் திருவாய்மொழியில்

கேட்டிரே நம்பிமீர்காள் கெருட வாகனனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே

திருமால் இருக்க சேட்டை என்று அழைக்கபடுகின்ற தவ்வையிடம் செல்வத்தை எதிர்பார்க்கிறீர்களே என்று இகழ்ந்து பாடுகிறார். இப்பாடலில் இருந்து தவ்வையிடமே அக்காலத்தில் செல்வத்தை வேண்டி வழிபட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சமஸ்கிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர். மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள் எதற்கும் உதவாதவள் சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருள்பட ஒரு தவறான கருத்து இருக்கிறது. பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவு சார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால் நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து தவ்வையை அமங்கலத்தின் அடையாளமாகவும் இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற தவறான எண்ணத்தில் உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்து விட்டனர். இப்படி அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் பிரதான தெய்வமாக இருந்திருக்கிறாள். மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டிருக்கிறாள்.

இயற்கையிலிருந்து நமது வழிபாடு தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு கந்தழி என்று பெயர். தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்த களத்திற்குச் சென்று உயிரிழக்கும் வீரர்கள் தலைவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக வழிபடுவார்கள். அதற்கு நடுகல் வழிபாடு என்று பெயர். இவை அனைத்தையும் விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரி தெய்வமாக மழையையும் நீர் மகளிராக நதிகளையும் தாய் தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது மரபு. கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. தவ்வை என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள். நம் முது தந்தையரை எப்படி மூதாதையர் என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்த தேவிக்கு மூதேவி என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான அக்கை என்கிற வார்த்தை எப்படி தமக்கை ஆனதோ அதேபோல் அவ்வை என்ற வார்த்தை தவ்வை ஆகியிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். அப்படியெனில் தவ்வை யாருக்கு அக்கா? செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்கு. நெற்கதிர்களின் அடையாளம் திருமகள். நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரத்தின் அடையாளமாக உரமாக திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாரிகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்களே அதற்குச் சான்று.

தவ்வை பற்றி திருக்குறளில் குறிப்பு இருக்கிறது. அதேபோல் தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன் சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கியதாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன. சேட்டை மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர் தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கிபி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 ஆம் ஆண்டு பழநியில் கண்டு பிடிக்கப்பட்டது. கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. தவ்வையின் சிலை எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு காரணாகமம் சுப்பிரபேதாகமம் போன்ற ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும் பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.

பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8 ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. அழுக்கு நாற்றம் துன்பம் புலம்பல் அடிக்கடி கொட்டாவி விடுதல் தலைவிரித்து போடுதல் எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல் அலங்கோலமாக இருத்தல் எதிர்மறையான எண்ணங்கள் தீராத மனக்கஷ்டம் இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும். தவ்வை என்னும் ஜேஷ்டாதேவியை வழிபட்டால் இவை அனைத்தும் நீங்கி விடும்.

வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா (தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல் வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு. வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள். தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள் கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும் கோயில்களும் உள்ளன. தவ்வைக்கு வாராணாசியிலும் அஸ்சாமின் கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள நீலாத்ரி மலையில் நீளா தேவிக்கு கோயில் அமைந்துள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலமுனி சித்தர் பீடம் நுழைவு வாயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை அமைந்துள்ளது. மயிலாடுதுறை வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்ததேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர். திருக்கொண்டீச்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதையாக அருள்பாலிக்கிறார்.

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. பல்லவன் இராச சிம்மன் கட்டிய காஞ்சி கயிலாசநாதர் கோயிலிலும் கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும் வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் உள்ளது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் (மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சிவபெருமானுக்கு இப்பெயர்) கோவிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. ஓரையூர் சிவன் கோயில் கடலூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனநாதர் கோயில் திருச்சுற்றில் உள்ளது. சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயில் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ மகாலட்சுமி சன்னதிக்கு அருகே தனிக்கல்லாக வைக்கப்பட்டுள்ளது. மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் சுற்றுசுவரில் பதியப்பட்டுள்ளது. திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில் திருச்சுற்றில் உள்ளது. சிறீராமசமுத்திரம் வாலீசுவரர் கோயில் கோயிலுக்கு வெளியே பிள்ளையார் நவக்கிரக சன்னதி அருகே உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 546

கேள்வி: திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் இருக்கும் இடுக்கின் வழியாக வந்தால் முக்தி கிடைக்குமா?

இறைவன் அருளால் இதே போல காஞ்சியிலே கைலாசநாதர் ஆலயம் இருக்கிறது. அங்கே தவழ்ந்து வந்தால் ஒரு பிறவி போய்விடும் என்ற வழக்கு இருக்கிறது. இன்னொரு ஆலயத்திலேயே தலவிருட்சம் இருக்கிறது. அதனை சுற்றி வந்தால் பல பிறவிகள் போய்விடுகிறது என்று கூறுகிறார்கள். இன்னொரு ஆலயத்திற்கு ஒருமுறை சென்று இறை நாமத்தை ஒரு முறை ஜெபித்தாலே கோடி முறை ஜெபித்த பலன் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இவையெல்லாம் இறைவனின் பெருமையை பறைசாற்றுவதற்காக மனிதர்களால் கூறப்பட்டது. பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் செய்துவிட்டு நீ கூறிய இடுக்கின் வழியாக ஒருவன் வெளியே வந்தால் அவனுக்கு என்ன முக்தி கிடைக்குமா? மோட்சம் கிடைக்குமா? முதலில் ஒருவனின் நடைமுறை வாழ்க்கையில் சாத்வீகமும் சத்தியமும் தர்மமும் பக்தியும் தான் இருக்க வேண்டும். மற்ற புற சடங்குகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 545

கேள்வி: விராலிமலைக்கு சென்றால் வாய்ப்புள்ளவர்களுக்கு அதிகாலையில் நாரதர் தரிசனம் தருவார் அதுபற்றி:

இறைவன் அருளாலே மோட்சம் முக்தி சாயுச்சியம் சாரூபம் சாமீபம் சாலோகம் என்கிற ஆன்ம உயர்வு நிலைகளுக்கெல்லாம் எத்தனையோ தெய்வீக சூட்சமங்கள் இருக்கிறது. இவளொத்து பலர் கேட்பது என்னவென்றால் மிகப்பெரிய ஞானிகளெல்லாம் ஒரு பிறவியிலே மகானாக ஞானியாக பிறந்து இறை தரிசனத்தை கண்டு இறையோடு இரண்டற கலந்த பிறகு மீண்டும் ஏன் பூமியில் பிறக்க வேண்டும்? என்று. இந்த இடத்தில் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் மருத்துவமனைக்கு நோயாளி செல்கின்ற விதம் வேறு. மருத்துவர்கள் செல்கின்ற விதம் வேறு. மருத்துவமனையில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் செல்கின்ற விதம் வேறு. நோயாளி நோய் குணமாவதற்காக செல்கின்றான். மருத்துவன் அந்த நோயாளியை குணப்படுத்தும் பணிக்காக செல்கிறான். இங்கே சராசரி மனிதர்கள் நோயாளியாக வருகிறார்கள். மகான்கள் பிறப்பது மருத்துவன் போல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

விராலி மலை

விராலிமலை முருகன் கோயில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இம்மலையின் புராண பெயர் சொர்ணவிராலியங்கிரி. மூலவர் சண்முகநாதர் ஆறுமுகம். முருகர் மயில் மீது வீற்றிருக்கிறார். இந்த மயில் தெற்கு பார்த்திருப்பதால் இதற்கு அசுர மயில் என்று பெயர். அம்மன் வள்ளி மற்றும் தெய்வானை. தலமரம் விராலிச்செடி காசிவில்வம். தீர்த்தம் சரவணப் பொய்கை நாக தீர்த்தம். நாகதீர்த்தம் நடுவே நாகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகரின் வாகனமான மயில்கள் அதிகமாக நடமாடும் கோயில் இது. இடும்பன் சன்னதி பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.

வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் அவரை விராலிமலை இருக்குமிடத்திற்கு வர கட்டளையிட்டார். விராலி மலைக்கு வழி தெரியாமல் தவித்த அருணகிரிநாதருக்கு விராலிமலைக்கு செல்லும் வழியை காட்ட முருகன் வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி தற்போது இக்கோவில் இருக்குமிடத்தில் உள்ள குரா மரத்தினுள் மறைந்து விட்டார். இந்த விராலிமலைத் தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு முருகர் அஷ்டமாசித்தி என்னும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வழங்கினார். திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இத்தலத்தின் பெருமைக்கு சான்று.

சிவன் பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக அவரது ஒரு தலையைக் கொய்தார். அப்போது நாரதர் தன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால் அவர் சிவநிந்தனைக்கு ஆளானார். இதனால் அவரது தம்புரா வளைந்தது. சிவநிந்தையை போக்குவதற்கு இத்தலத்தில் முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். இவரது தம்புரா இப்போதும் வளைந்து காணப்படுகிறது. கோயில் திருவிழாவின் போது சுவாமி முன்பாக இவரும் உலா வருகிறார்.

குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை. வெள்ளிக் கிழமை தோறும் முருகப்பெருமானை தரிசித்த பின்பே உண்ணும் வழக்கம் உடையவர். இவர் தீவிர முருக பக்தர். இக்கோவிலில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து ஈடுபட்டார். ஒருநாள் வெள்ளிக் கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. எப்படியாவது முருகனை தரிசிக்க வேண்டும் என்று முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா? எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். இருவருமாக ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது அவர் மறைந்து விட்டார். இதனைக் கண்டு வியப்புற்ற கருப்பமுத்து கோயிலை அடைந்ததும் அங்கு முருகனுக்கு முன்பாக தான் கொடுத்த சுருட்டு இருப்பதைக் கண்டு தம்மிடம் சுருட்டு பெற்றவர் முருகனே என உணர்ந்தார். கருப்பமுத்து அங்கிருந்த அனைவரிடமும் நடந்ததைக்கூற ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் உருவானது.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எந்த மருத்துவமும் பலன் தரவில்லை. அன்று இரவு முருகர் அவர் கனவில் தோன்றி எனக்கு சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும். பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தானே தவிர புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக் கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே என்றார். மேலும் நிவேதனமாக சுருட்டை வைக்க வேண்டாம் என்று கூறியதால் தான் அவருக்கு வயிற்று வலியை தோன்ற செய்தேன் என்று கூறினார். அடுத்தநாள் மன்னர் தான் போட்ட தடையை நீக்கினார். முதல் சுருட்டு நைவேத்தியமாக முருகனுக்கு வைத்தவுடன் மன்னரின் வயிற்று வலி குணமானது. அதன்பிறகு இன்று வரை இப்பழக்கம் இருக்கிறது. ஆறு கால பூஜையின் போது பாலும் பழமும் பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக செய்யப்படுகிறது. உச்சிகால வழிபாட்டின்போது மட்டும் சுருட்டு சேர்த்து நைவேத்தியம் செய்யப்படுகிறது

வசிஷ்டரும் அவரது துணைவி அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமியற்றி உள்ளார்கள். திருவாரூரில் இருந்த தட்சிணாமூர்த்தி என்னும் அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம். சனகர் சனந்தர் சனாதனர் சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும் முருகன் தோன்றி காட்சி தந்த திருத்தலம். இத்தலத்தின் மீது விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார். பங்குனி உத்திரம் கந்த சஷ்டி ஆகிய நாட்களில் இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பொதுவாக ஆலயங்களில் பிரமோச்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோச்சவம் நடைபெறுகிறது. விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கிபி1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன.

யானையின் ஆசிர்வாதம்

யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தெய்வீக ரகசியம் உள்ளது. மூலிகை தாவரங்களை மட்டும் சாப்பிட்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை. மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு.

நம்முடைய ஒரு நாசி வழியாகவே எப்போதும் சுவாசம் நடைபெறும். தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசம் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில் மாறிக் கொண்டே இருக்கும். இதற்கு சூரியகலை சந்திரகலை என்ற பெயரும் உண்டு. வலது நாசி வழியாக சுவாசம் நடைபெறும் போது சூரியகலை என்றும் இடது நாசி வழியாக சுவாசம் நடைபெறும் போது சந்திரகலை என்றும் பெயர். சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர். பிராணயாமம் வாசியோகம் போன்றவைகளும் நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றம் அடைய வைக்கும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும். யோகப் பயிற்சி செய்பவர்கள் வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் மேல் நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் திறமையை பெற்று விடுவார்கள். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.

இரண்டு நாசிகளாலும் சதாசர்வ காலமும் சுவாசிக்கும் தன்மையை பெற்றவர்கள் ஞானிகளாகின்றார்கள். ஞானிகளிடம் ஆசி பெற்றால் நன்மை நடைபெறுவது போலவே இயற்கையாகவே சுழுமுனை வாசியோகம் உள்ள யானை அதன் தும்பிக்கையை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வதால் ஆசிர்வாதம் பெற்றவர்களுக்கு அவர்களின் மூச்சுக்காற்று சீராக செயல்பட்டு மனதில் தீய எண்ணம் வராமல் தடுத்து நல்ல சிந்தனைகளை வளரச் செய்யும். நல்ல சிந்தனைகள் இறைவனை சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும். ஒழுக்கத்தை கொடுக்கும். தர்ம சிந்தனை வளரும். மனதில் அன்பு நிறைந்து இருக்கும். இறைவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எந்நாளும் துன்பம் இல்லை என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள தெய்வீக ரகசியம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 544

கேள்வி: காக புஜண்டருக்கு கோவில்கள் எங்கெங்கே இருக்கிறது?

உண்மையான பக்தர்களின் உள்ளம் அனைத்திலும் காக புஜண்டருக்கு கோவில்கள் இருக்கிறது.

மூச்சுக்காற்று

ஒரு மனிதன் உட்கார்ந்திருக்கும் போது 12 எண்ணிக்கை மூச்சும் நடக்கும் போது 18 எண்ணிக்கை மூச்சும் ஒடும் போது 25 எண்ணிக்கை மூச்சும் தூங்கும் போது 32 எண்ணிக்கை மூச்சும் உடலுறவின் போதும் கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 எண்ணிக்கை மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.

இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது. அதனால்தான் வள்ளற்பெருமான் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில் மெல்லென நடை பயில வேண்டும் என்று கூறுவார். அதாவது நமது மூச்சுக்காற்று வெளியில் அதிக அளவில் செல்ல அவர் அனுமதிக்கவில்லை. மேலும் நம்பெருமானார் ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உறங்க பழக்கப்படுத்திக் கொண்டால் அவன் 1000 வருடங்கள் வாழலாம் என்றும் கூறுவார். நாம் சும்மா உட்கார்ந்திருந்தால் 12 எண்ணிக்கை மூச்சுதான் செலவாகும். அதுவே உறங்கினால் 32 மூச்சு செலவாகிறது. அதாவது நாம் தூங்கும் போது 20 மூச்சு ஒரு நிமிடத்திற்கு விரையம் அடைகிறது. எனவே தூக்கத்தை குறைக்க வேண்டும். அதுபோல் ஒருவன் கோபப்பட்டால் 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு விரையமாகிறது. எனவே கோபம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60×24=1440)} மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன் சராசரியாக

100 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்.
93 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்.
87 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்.
80 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்.
73 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்.
66 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்.

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும் போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சராசரியாக

1 நிமிடத்தில் 2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு வாழலாம்.
1 நிமிடத்தில் 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு வாழலாம்.
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்).

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 543

கேள்வி: துறவு பற்றி

துறவு என்றால் என்ன என்று நீ எண்ணுகிறாய்? முற்றிலும் துறப்பதல்ல. முற்றிலும் உணர்வது தான் துறவின் இலக்கணம். உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்குரு யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் தன் கடமையை நேர்மையாக ஆற்றுவதுதான் உண்மையான துறவு. இல்லறத்தில் இருந்து கொண்டு நேர்மையாக சத்தியமாக தர்மத்தோடு பக்தியோடு வாழ்ந்தால் அதுவும் துறவுக்கு சமானம்தான்.

சங்கநிதி பதுமநிதி

பக்தர்கள் எவ்வளவு செல்வம் கேட்டாலும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமி தேவிக்கு உதவியாக சிவ பெருமானால் நியமிக்கப்பட்டவர் அழகாபுரிப் பட்டிணத்தைச் சேர்ந்த வைச்ரவணன். ஈஸ்வரன் பட்டம் பெற்ற இராவணனின் தம்பி. பல வருடங்கள் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ததின் பலனாக சிவபெருமானின் அருளைப் பெற்றார். லட்சுமி தேவியின் செல்வங்களை பாதுகாக்கும் காவலராக சிவபெருமானால் நியக்கப்பட்டு லட்சுமி தேவியால் குபேர பட்டம் பெற்றார். சிறந்த சிவபக்தர். ஈசனின் கட்டளைப்படியும் லட்சுமி தேவியின் ஆசியுடனும் வைச்ரவணன் ஒரு நல்ல நாளில் செல்வத்தை நிர்வகிக்கும் குபேர பதவி ஏற்றார். அதன்பின் இன்றளவும் அவர் பெயர் வைச்ரவணன் என்பது மாறி குபேரன் என்றே ஆயிற்று. குபேரப் பதவியை அடைந்ததனால் அவருக்கு திருமகளின் வெண்சங்கும் கலைமகளின் வெண்தாமரையும் வரமாகக் கிடைத்தன. அந்த இரண்டையும் இரு தேவகணங்களாக்கி தன்னுடைய நிர்வாகப் பணிக்கு துணையாக வைத்துக் கொண்டார் குபேரன். வெண்சங்காய் வந்த தேவகணத்திற்குப் பெயர் சங்கநிதி. செல்வத்தை அருள்பவர். வெண்தாமரையாய் வந்த தேவகணத்திற்குப் பெயர் பத்மநிதி. அறிவினை அருள்பவர்.

ஒன்பது வகையான நிதிகளுள் (நவ நிதிகள்) சங்க நிதிக்குரிய தெய்வமாக சங்க நிதி உள்ளார். இவரை சங்க லட்சுமி எனவும் அழைக்கின்றனர். சங்க நிதி தன்னுடைய கைகளில் செல்வச் செழிப்பினைக் குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கினை வைத்துள்ளார். கோயில்களின் வாயில்கள் சிலவற்றில் ஒருபுறம் சங்கநிதி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பதுமநிதி புடைப்புச் சிற்பம் உள்ளது.

சங்கம் பதுமம் மகாபதுமம் மகரம் கச்சபம் முகுந்தம் குந்தம் நீலம் வரம் ஆகியன ஒன்பது நிதிகளாகும். இவற்றை குபேர சம்பத்துகள் என அழைக்கின்றனர். இந்த ஒன்பது நிதிகளில் சங்கநிதி மற்றும் பதும நிதி இரண்டிற்கு மட்டுமே உருவங்கள் உள்ளன. சங்கநிதி பதுமநிதி என இருநிதிகளும் எப்போதுமே ஒருசேர இருக்கின்றனர். பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலுமே இந்த இருவரின் சிற்பங்களும் கோபுரத்திலோ சற்று உயரமான இடத்திலோ அமைக்கப்பட்டிருக்கும். அறிவுச் செல்வமாக இருந்தாலும் பொருள் செல்வமாக இருந்தாலும் கேட்டதை கொடுப்பவர் ஈசன். கோவிலுக்கு வந்து கேட்கும் பக்தர்களின் உணர்வுகளை மேலிருந்து கவனித்து பார்த்து பக்தரின் நடை உடை பாவணைகளை ஆராய்ந்து பக்தர்களுக்கு இறைவன் மீது உள்ள நம்பிக்கையையும் அந்த பக்தரின் தேவையையும் அளவிட்டு நிர்ணயம் செய்து எவ்வளவு அறிவுச் செல்வத்தையும் எவ்வளவு பொருள் செல்வத்தையும் பக்தர்களுக்கு அளிக்கலாம் என முடிவு செய்து குபேரனிடம் தருவதுதான் இவர்கள் பணி. அதன்பின் ஈசனின் வரப்படி அந்த பக்தர்களுககு செல்வங்களை அளிக்க வேண்டியதுதான் குபேரரின் பணி.

இவர்களின் முக்கியத்துவம் உணர்ந்துதான் கருவூர்த் தேவர் தன்னுடைய பிரியமான இராஜராஜ சோழனை, எப்போது பெரிய கோவிலுக்குச் சென்றாலும் மதிலின் வடமேற்கே உள்ள அணுக்கன் வாயில் வழியாக உள்ளே செல்லச் சொல்வாராம். அந்த வாயிலில் சங்கநிதி பத்மநிதி சிற்பங்கள் தவிர வேறு எந்த தெய்வத்தின் சிற்பமும் காண முடியாது. இதன் காரணமாகத்தான் கோவிலுக்கு வரும்போது குளித்து விட்டு தூய ஆடை அணிந்து வம்பு தும்பு பேசாமல் இறை சிந்தனையுடன் பக்தியுடன் கோவிலை வலம் வரவேண்டும் என்று முன்னோர்கள் வரையறை செய்திருந்தனர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 542

கேள்வி: கோயில் என்றாலே புண்ணியமான இடம் தானே. இராசி இல்லாத கோயில்கள் என்ற ஒன்று இருக்கிறதா?

இறைவன் அருளால் மனிதன் தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கு எப்பொழுதுமே பிறவற்றை அல்லது பிறரை குற்றம் சாட்டுவது என்பது இயல்பாகி விட்டது. ஆயிரக்கணக்கான ஆடு மாடுகளை கொன்று குவிக்கும் பொழுது வராத பாவம் ஆயிரக்கணக்கான மனிதர்களை போர் என்ற பெயரில் கொன்று குவிக்கும் போது வராத பாவம் ஒரு ஆலயம் சென்று தரிசித்தால் வந்துவிடுமா என்ன? ஆலயத்தில் இறைவனால் எந்த அனாச்சாரமும் நடப்பதில்லை. அவனவன் விதியின் படி நடக்க வேண்டியது நடந்து கொண்டே இருக்கிறது. அதற்கும் ஒரு ஆலயத்திற்கும் தொடர்பு இல்லை. இன்னொன்று காலத்தில் ஆலய கட்டுமான பணிகள் செய்யும்போது பல்வேறு மனிதர்கள் அந்த கட்டுமானத்தின் காரணமாக அந்த வேலையின் காரணமாக உயிரை துறந்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பூஜை நடந்திருக்கிறது. இன்னும் எமக்கு பிடிக்காத பலவும் நடந்திருக்கிறது. ஆலய வேலை பழுதுபடாமல் இருக்க உயிர் பலியெல்லாம் கூட தந்திருக்கிறார்கள். இவையெல்லாம் எக்காலத்திலும் மூடர்கள் செய்யக்கூடிய விஷயம்தான். அக்காலத்தில் அரசனும் சில மூட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி இப்படியெல்லாம் செய்ததுண்டு. ஆனால் அதற்கும் இன்னவள் கூறிய வினாவிற்கும் தொடர்பில்லை. அங்கு திரையை போட்டு மறைத்து விட்டால் மட்டும் ஒருவனின் கர்மாவையும் மறைத்து விட முடியுமா என்ன?