தமிழ்க் கடவுள் என போற்றப்படுபவர் முருகபெருமான். இவர் தேவர்களைத் துன்புறுத்தி வந்த சூரபத்மனை அழித்தார். முருகன் வேறு சிவசக்தி வேறல்ல. அவரே இவர். இவரே அவர். ஆறு எண்ணிற்கும் ஆறுமுகனுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஆறுமுகம் கொண்டவர். சரவணபவ என்ற ஆறு எழுத்து கொண்டவர். ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். வளர்பிறை 6 ஆம் நாள் வரும் சஷ்டி அவருக்கு உகந்த நாள். இப்படி அனைத்தும் ஆறு மயம் தான். ஒரு முறை கயிலைக்கு பிரம்மன் வந்தார். அப்போது அகந்தை மேலிட முருகரை வணங்காமல் சென்றார். முருகர் பிரம்மனை அழைத்து தாங்கள் யாரென்றும் தாங்கள் செய்யும் தொழில் என்னவென்றும் கேட்டார். தனது பெயர் பிரம்மா என்றும் நான் படைப்புத் தொழில் புரிபவன் என்றார். முருகரும் படைப்புத் தொழிலை எவ்வாறு செய்வாய் என்றார். வேதம் ஓதி செய்வதாகக் கூறினார் பிரம்மன். வேதம் ஓதுக என்றார் முருகர். பிரம்மனும் ஓம் என்று பாடித் தொடங்கினார். உடன் முருகர் பிரம்மனை நோக்கி இப்பொழுது நீர் கூறிய பிரணவத்தின் பொருள் கூறுக என்றார். பிரம்மர் பிரணவத்தின் பொருள் தெரியாது விழிக்க பிரணவத்தின் பொருள் தெரியாத நீயெல்லாம் எவ்வாறு படைப்பை மேற்கொள்வாய் என்றபடியே பிரம்மனை சிறையில் அடைத்தார் முருகர். இதனைக் கேள்வியுற்ற சிவபெருமான் முருகனிடம் வந்து முருகா நீ பிரணவத்தின் பொருளை அறிவாயா? அறிந்திருந்தால் எனக்கு கூறு என்றார். உடன் முருகரும் முறைப்படிக் கேட்டால் கூறுவதாகச் சொன்னார். உடனே சிவபெருமான் சீடராக மாறி கேட்க முருகரோ குருவாக மாறி உபதேசித்தார். தகப்பனுக்கே சுவாமியாக அதாவது குருவாக இருந்து பிரணவத்தின் பொருள் உரைத்ததால் முருகருக்கு தகப்பன் சாமி எனப் பெயர் உண்டானது. இம்மூர்த்தி சிஷ்ய பாவ மூர்த்தி ஆகும்.
அதன் பின்னர் பிரம்மன் சுவாமிமலை சென்று சிவபூஜை செய்து அவர் மூலமாக முருகப்பெருமான் பொருளுரைக்க பிரம்மன் அறிந்தார். சுவாமிமலை குடந்தையருகே அமைந்துள்ளது. இத்தலத்திலேயே தந்தைக்கு உபதேசக் காட்சி நடைபெற்றது. பெரியபுராணம் சிவமகாபுராணம் பாகவதம் ஆகிய நூல்களில் இந்த வடிவத்தைப் பற்றி கூறிப்பிடப்பட்டுள்ளது.



















































































