ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 683

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

சித்தர்கள் கணத்திற்கு கணம் உருவாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அப்படி உருவாக்கப்படுவது அப்படி சித்து நிலைக்கு போக நினைக்கிற ஆன்மாவிற்கு ஏதாவது ஒரு வழியில் வழி காட்டுவதற்காக. ஏற்கனவே சித்தத் தன்மை அடைந்த ஆத்மாக்கள் சித்தத் தன்மை அடைய அருகிலுள்ள ஆத்மாவிற்கு ஏதாவது ஒரு வழியை வழிகாட்டி கொண்டே தான் இருக்கின்றன இறைவன் கருணையால்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 682

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

அளவு பார்க்காமல் நாள் பார்க்காமல் திதி பார்க்காமல் நாழிகை பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் பிறர் குறிப்பறிந்து தந்து கொண்டே இருக்க வேண்டும். இது சித்தர்கள் வழி. எது அளவில் உயர்வோ அதை முதலில் தருவது சித்தர்கள் வழி. அதைப்போல் மனதளவிலே அணுவளவும் எந்தவிதமான தடுமாற்றம் இல்லாமல் கொடுப்பதும் கொடுக்கின்ற பொழுதிலே இந்த அளவா? அந்த அளவா? என்று எண்ண அலைகளின் ஏற்ற இறக்கம் இல்லாமல் கொடுப்பதும் சித்தர்கள் வழியில் வருபவர்களின் தன்மையாகும். சற்றும் அஞ்சற்க (பயம் வேண்டாம்) சலனம் வேண்டாம். இதுபோல் எதிர்காலத்தில் இன்னும் அதிகம் செய்ய செய்ய அதுபோல் நிலையை இறைவன் நல்குவார் அருளுவார் என்றெண்ணி தொடர்ந்து சராசரி மனித சிந்தனையிலிருந்து விடுபட்டு எமது வழியில் வருகின்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ள அனைவருக்கும் நன்மையாம்.

சிவதனுசை உடைத்த ராமர்

சுயம்வரத்தில் சிவதனுசை உடைத்த ஸ்ரீராமருக்கு மாலை அணிவிக்கும் சீதை. இடம்: பரிமளரங்கநாதர் கோவில். திருஇந்தளூர் மயிலாடுதுறை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 681

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

உலகியல் ரீதியான வெற்றியை ஒரு மனிதனுக்கு இல்லையென்றால் அத்தனை எளிதாக விட்டுவிடுகிறானா? போராடி போராடி அது வேண்டும் என்று அதன் பின்னால் செல்வது போல நல்ல காரியங்களை நல்ல அறச் செயல்களை நல்ல தர்மங்களை தொடர்ந்து செய்ய விதியே ஒரு மனிதனுக்கு தவறாக எழுதப்பட்டிருந்தாலும் அதாவது அவன் இந்தப் பிறவியில் தவறே செய்து வாழ வேண்டும் என்று இருந்தாலும் கூட அந்த விதி மெல்ல மெல்ல மாறத் துவங்கும்.

இதுபோல் ஒருவன் பருக வேண்டிய மோரிலே சிறிது உப்பை சேர்க்கலாம். தவறுதலாக அதிக அளவு உப்பை சேர்த்து விட்டால் இல்லை இது குடிக்க முடியவில்லை. உப்பின் சுவைதான் தூக்கலாக இருக்கிறது. என்ன செய்வது? என்று தெரியவில்லை. எனவே இதில் உள்ள உப்பை மட்டும் பிரித்துத்தா என்றால் அது கடினம். அதற்கு பதிலாக என்ன செய்யலாம். இன்னும் சிறிதளவு மோரை ஊற்றி உப்பின் அளவை அதன் மூலம் குறைக்கலாம். எனவே ஏற்கனவே செய்த பாவங்களின் அளவை ஒரு மனிதன் பிறப்பிலிருந்து பிரிப்பது கடினம். ஆனால் மேலும் மேலும் புண்ணியத்தை சேர்க்க பாவங்களின் அளவு குறையும் என்பதை புரிந்து கொண்டிட வேண்டும்.

இதற்குத்தான் ஜீவா அருள் ஓலையிலே புண்ணியம் புண்ணியம் புண்ணியம் புண்ணியம் என்று ஒவ்வொரு மனிதனையும் அறச் செயல் செய்ய நாங்கள் தூண்டிக் கொண்டே இருக்கிறோம். ஏனென்றால் அந்த புண்ணியத்தின் அளவு அதிகமாக அதிகமாக கரிக்கின்ற உப்பை போன்ற பாவங்களின் அளவு சரிவிகிதமாகி விடும் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.