பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் உரிய சேனைகள் குருசேத்திரப் போர்க்களத்தில் சந்தித்து யுத்த நியதிகளை தங்களுக்கு தாங்களே நியமித்துக் கொண்டார்கள்.
சூரிய அஸ்தமனத்தில் அன்றைய சண்டை முடிவுக்கு வர வேண்டும். இரவில் விரோதத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். விருப்பப்பட்டால் அவர்களுக்கிடையில் நட்பு இணக்கும் வைத்துக்கொள்ளலாம். ஒரு போர்வீரன் மற்றொரு போர்வீரனோடு சண்டை போடும்போது அவர்களுக்கிடையில் ஆயுத பலம் சமமாக இருக்க வேண்டும். போர்க்கான அறநெறியில் இருந்து யாரும் பிசகலாகாது. போர்க்களத்திலிருந்து பயந்து ஓடுபவர்களை ஒருபோதும் கொல்ல கூடாது. ரதத்தில் ஊர்ந்து வரும் ஒருவன் எதிர்க்கட்சியில் உள்ள ரதத்தில் வருபவருடன் மட்டுமே சண்டை போட வேண்டும். குதிரையில் வருபவனுடன் குதுரையில் வருபவன் மட்டுமே சண்டை போட வேண்டும். இம்முறையில் யுத்தம் சம வல்லமை படைத்தவர்களுக்கு இடையில் நிகழ்தல் வேண்டும். தஞ்சம் புகுந்தவர்களை பாதுகாத்தல் வேண்டும். ஓர் எதிரியோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ஒருவனை யாரும் இடையில் புகுந்து தாக்க கூடாது. யுத்தத்திற்கு தயாராகாதவனையும் ஆயுதங்கள் இழந்து இருப்பவனையும் பின்வாங்கி ஒடுபவனையும் கொல்ல கூடாது. முரசு அடிப்பவர்களையும் சங்கநாதம் செய்பவர்களையும் தேரோட்டுபவர்களையும் குதிரைகளையும் போர்வீரர்களுக்கு ஆயுதங்கள் சுமந்து வருபவர்களையும் காயம் அடைந்த போர்வீரர்களுக்கு உதவி செய்பவர்களையும் கொல்ல கூடாது. இத்தகைய சட்டதிட்டங்களை இரு தரப்பினரும் சேர்ந்து தங்களுக்கு தாங்களே யுத்த நியதிகளை அமைத்துக்கொண்டனர்.
பயங்கரமான போர் துவங்கும் நிலைக்கு வந்துவிட்டது. அப்பொழுது அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் முன்னிலையில் வியாசர் பிரசன்னமானார். நடக்கும் யுத்தத்தை திருதராஷ்டிரன் காண விரும்பினால் அவனுக்கு கண் பார்வை தர வியாசர் முன்வந்தார். ஆனால் தன்னுடைய உற்றார் உறவினர் ஒருவரை ஒருவர் கொன்று அழித்துக்கொல்லும் காட்சியை காண கண் பெறுவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று திருதராஷ்டிரன் மறுத்துவிட்டார். ஆயினும் நடக்கும் யுத்தத்தை யாராவது எடுத்து விளக்கினால் அவற்றை கேட்டு அறிந்து கொள்வதில் தனக்கு தடையேதும் இல்லை என்று கூறினார். அப்பொழுது சஞ்சயனுக்கு ஞானக்கண்ணை அளித்து யுத்தகளத்தில் நடப்பவற்றை இருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொள்ள வியாசர் சஞ்சயனுக்கு அனுக்கிரகம் செய்தார்.
தன்னை எதிர்த்துப் போர் வந்த வீரர்கள் யார் என்று பார்க்க அர்ஜுனன் விரும்பினான். தன் விருப்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தான். அர்ஜுனனுக்கு சாரதியாக பணிபுரிய முன்வந்த கிருஷ்ணன் ரதத்தை பீஷ்மர் துரோணர் கௌரவர் படைகளுக்கு முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தினார். போற்றுதலுக்குரிய பாட்டனார் பீஷ்மரையும் ஆராதனைக்குரிய ஆச்சாரியார் துரோணரையும் பார்த்தபிறகு அர்ஜுனனுக்கு மனதில் குழப்பம் வந்தது. வந்தனைக்குரிய முதியோர்களை எதிர்த்துப் போர் புரிய அவன் விரும்பவில்லை. இந்த நெருக்கடியில் அர்ஜுனனுக்கு வாழ்க்கை தத்துவத்தை எடுத்து விளக்க கிருஷ்ணர் கடமைப்பட்டார்.